You are here
துனிசியப் போராட்டம் – ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு ஒப்பீடு கஜமுகன் கட்டுரைகள் 

துனிசியப் போராட்டம் – ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு ஒப்பீடு

53 . Views .

பொதுவாக அனைத்து நாடுகளிலும் எழும் மக்கள் எழுச்சியின் பின்னால் அரசின் மீதான கடும்

கோபமும் வெறுப்பும் காணப்படும். நீண்டகாலமாக அரசின் ஒடுக்குமுறைகளாலும்

அடக்குமுறைகளாலும் வஞ்சிக்கப்படும் மக்கள் திரள் ஒரு கட்டத்தில் வெடித்து கிளம்பி

புரட்சியை ஏற்படுத்தும். எந்தப் பிரச்சனையின்போது மக்கள் திரள் வெடிக்கும் என

திட்டவட்டமாக எதிர்வு கூற முடியாது. நூறு பாகை ஆனவுடன் கொதித்துக் கொண்டிருக்கும்

நீரில் முதலில் எங்கு குமிழ் தோன்றும் என எதிர்வு கூறமுடியாது, அது போலத்தான் எந்தப்

புள்ளியில் மக்கள் புரட்சி வெடிக்கும் என நிச்சயமாகக் கணிக்க முடியாது, ஆனால் ஒரு

இடத்தில் அது நிச்சயமாக வெடிக்கும் என்பதே கடந்த கால வரலாறுகள் சுட்டிக்

காட்டுகின்றன.

வட ஆபிரிக்க நாடான துனிசியாவில் அவ்வாறுதான் 2010 இல் ஒரு புரட்சி ஏற்பட்டது.

பொதுவாக அனைத்து நாடுகளிலும் நடைபெறும் மக்கள் போராட்டங்களின் பின்னால் ஒரு

சில பொதுவான பண்புகள் காணப்படும். அதனை மையமாகக் கொண்டே 2010 இல்

துனிசியாவில் நடைபெற்ற புரட்சிக்கும், அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிகாட்டு

எழுச்சிக்கும் இடையில் காணப்படும் ஒரு சில பொதுவான பண்புகளை இக்கட்டுரை

ஆராய்கிறது.

அண்டை நாடுகளில் நடைபெறும் அரசியல் மாற்றங்களும் குறித்த ஒரு நாட்டில் மக்கள்

போராட்டம் உருவாகக் காரணமாக அமைகிறது. அதவாது ,மத்தியகிழக்கு மற்றும் அதற்கு

அண்மையில் அமைந்துள்ள நாடுகளின் எழுச்சியில் முக்கிய பங்கு வகிப்பதில் பாலஸ்தீன

பிரச்னையும் ஒன்றாகும். மதமும் அரசியலும் கலக்கப்பட்டு, இஸ்ரேலும் மேற்கத்தைய

நாடுகளும் சேர்ந்து பாலஸ்தினத்தை வஞ்சிப்பது, துனிசியா, எகிப்து உட்பட அதனை

சுற்றியுள்ள நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது.சுதந்திரத்தின் தேவை நோக்கி

அந்நாடுகளை உந்தித் தள்ளுகிறது. துனிசியா பாலஸ்தீனதுக்கு அண்மையில் உள்ள ஒரு நாடு

என்பதால் அதன் தாக்கமும் இங்கு காணப்பட்டது. அதே போல் தமிழ்நாட்டைப்

பொறுத்தவரை அதன் அண்மைய நாடான இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்க

சக்திகளால் நசுக்கப்பட்ட ஈழப் போராட்டம், அதற்கு மறைமுகமாக இந்தியா உதவியமை

என்பனவும் இப்போராட்டத்தின் பின்னணிக் காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது.

துனிசிய நகரான சிடி பூசித் என்ற இடத்தில் காவல்துறையின் துன்புறுத்தலுக்கு ஆளான

முகம்மது அசீசி என்ற இளைஞன் தீக்குளிக்கிறான், அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பின்

காரணமாகவே மக்கள் வீதியில் இறங்கிப் போராட போராட்டம் வெடிக்கின்றது. அதே போல்

தமிழ்நாட்டிலும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தடை போடப்படுமிடத்தே போராட்டம்

வெடிக்கின்றது. இவ்விரு போராட்டங்களிலும் குறித்தவொரு சம்பவத்தால் மக்கள் திரட்சி

கிளர்ந்து எழுந்தாலும் அதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.

துனிசிய எழுச்சியும் தமிழ்நாட்டைப் போன்றே பல்வேறுபட்ட காரணங்களின் தொகுப்பு

ஆகும். அதவாது வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பன்னாட்டு நிறுவனங்களின்

அதிகரித்த ஆக்கிரமிப்பு, அதனால் உள்ளூர் தொழில்கள் பாதிக்கப்பட்டமை, எதிர்ப்புக்

குரல்களை மோசமாக அடக்குதல், இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த போன்றே பென்

அலியின் குடும்ப அரசியல் – துனிசியாவின் ஐம்பது வீதமான தொழில்கள் பென் அலியின்

குடும்பத்துக்கு சொந்தமானவை-, பென் அலியின் சர்வாதிகார ஆட்சி ,போன்றன துன்சிய

புரட்சியின் பின்னணிக் காரணங்களாகும். அதேபோல் தமிழ்நாட்டைப் பொருத்தவரை,

வெள்ளப் பேரழிவு, கறுப்புப் பணத்தை ஒழித்தல் என்ற பெயரில் நோட்டுக்களை மதிப்பிழக்கச்

செய்தமை, பொங்கல் விடுமுறையை ரத்து செய்தமை, காப்ரேட் நிறுவனங்களின்

அடியாட்களாக மத்திய அரசு செயல்படுகின்றமை, முல்லைப் பெரியாறு,காவேரி போன்றன

மறுக்கப்பட்டமை,அதன் நீட்சியாக ஏற்படும் விவசாயிகளின் தற்கொலை,நீட் பரீட்சை,

கூடங்குளம் அணு மின்நிலையம், கல்ப்பாக்கம் அணு மின்நிலையம் போன்றன பின்னணிக்

காரணங்களாக் காணப்பட்டன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போரட்டத்தின் உள்ளடக்கம் ஜல்லிக்கட்டாகவும்,

துனிசியாவைப் பொறுத்தவரை அதன் உள்ளடக்கம் இளைஞனின் தீக்குளிப்பாகவும் இருந்த

போதிலும் அதன் பின்னணிக் காரணங்களாக பலவிருந்தன என்பதே வெளிப்படையான

உண்மையாகும்

ஜல்லிக்கட்டுப் போராட்டதைப் போலவே துனிசியப் போராட்டமும் மக்களை மட்டும் நம்பி

மக்களாலேயே நடத்தப்பட்டது. எதுவித வன்முறையோ ஆயுதங்களோ இரண்டு

போராட்டங்களிலும் மக்களால் பயன்படுத்தப்படவில்லை. நியாயமான கோரிக்கைகளை

முன்வைத்து வெறும் அறவழிப் போராட்டமாகவே இரண்டும் நிகழ்ந்தது. எனினும் இரண்டு

போரட்டங்களையும் அதிகார வர்க்கம் தனது இரும்புக்கரம் கொண்டு நசுக்கியது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மக்கள் தாக்கப்பட்டு, காவல்துறையினராலேயே மக்களின்

சொத்துக்கள் எரித்து நாசம் செய்யப்பட்டன. துனிசியப் போராடத்தில் முண்ணூறுக்கும்

மேற்பட்டோர் இறந்து இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயப்பட்டனர்.

துனிசிய முஸ்லிம் இன மக்களிடையே மதம் சார்பான பிரிவினைகள் காணப்பட்ட போதிலும்,

மத அடிப்படைவாதத்தைக் கடந்து அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து போராடினர்.

அதேபோல் தமிழ்நாட்டைப் பொருத்தவரையிலும் மதச் சார்பற்று இந்துக்கள் முஸ்லிம்கள்

கிறிஸ்தவர்கள் என அனைத்து மத மக்களும் இணைந்து போராடியதைக் கானக்கூடியதாக

இருந்தது.

மேலும் “ஏப்ரல் 6” என்னும் முகநூல் பக்கம், இணையதளங்கள், பிளாக்குகள், ட்விட்டர்,

மெசேஜ்கள் போன்றனவே துனிசியப் போராட்டத்தை ஒருங்கிணைக்க முக்கிய பங்காற்றின.

அதே போல் ஜல்லிக்கட்டுப் போராடத்தை ஒருங்கிணைக்கவும் முகநூல், வாட்சப் போன்றன

முக்கிய பங்கு வகித்தன. இரண்டு எழுச்சிகளும் முகநூல் புரட்சி அல்லது இணையதள புரட்சி

என்று சொல்லத்தக்க வகையில் அமைந்தன எனலாம்.

மக்கள் வேர்வைத்துளி சிந்தி தொடங்கும் போராட்டங்களை, இரத்தத்துளி சிந்தவைத்து

முடித்து வைப்பதே அதிகாரசக்திகளின் பொதுவான இயல்பு. அந்தவகையில் மிகப் பெரிய

அரசியல் அலையை ஏற்படுத்தி, புதிய அரசியல் களத்தை நோக்கி நகர்ந்திருக்க வேண்டிய

ஜல்லிக்கட்டுப் போராட்டமானது ஆட்சியாளர்களினால் வன்முறை பிரயோகிக்கப்பட்டு

அடக்கப்பட்டுவிட்டது. ஏனெனில் ஜல்லிகாட்டைத் தாண்டிய கிளர்ச்சியாக இது விஸ்வரூபம்

எடுக்கக்கூடாது என்பதில் மத்திய மாநில அரசுகள் குறியாக இருந்தன. எனினும் அவசரச்

சட்டம் இயற்றப்பட்டமை, கர்நாடகாவில் கம்பள எனப்படும் காளை விளையாட்டுக்கு தடை

நீக்கக் கோரி போராட்டம் நிகழ்ந்தமை,திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் போன்றோர்

பங்களித்து புதிய பண்பாட்டுப் புரட்சியை ஏற்ப்படுத்தியிருந்தமை போன்றன போராட்டத்தின்

சிறு வெற்றி எனலாம். ஆனால் துன்சியப் போராட்டமானது மிகப் பெரும் விளைவுகளை

ஏற்படுத்தியிருந்தது. பென் அலியின் சர்வாதிகார ஆட்சி தூக்கி எறியப்பட்டமை, பிரதமர்

ராஜினமா செய்தமை, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படமை, பென் அலியின் RCD

கட்சி திவாலானமை என பெரும் மகத்தான வெற்றிகளை இப்போராட்டமானாது

ஏற்படுத்தியிருந்தது.

துனிசியப் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல மக்களுக்கான போராட்டங்களை

மக்களே கொண்டு நடாத்தும்போது மகத்தான வெற்றிகளைப் பெறலாம் என்பதனையே

இப்போராட்ட வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதைத்தான் அம்பேத்கரும் “இழந்த

உரிமைகளைப் பிச்சை கேட்க முடியாது, போராடித்தான் பெறவேண்டும்” என்கிறார். கடந்த

கால வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்று அதன் அடிப்படையில் போராட்டங்களை

நகர்த்தும்போது எமது உரிமைகளை நாமே வென்றெடுக்கலாம். ஆட்சியாளர்களுக்காக மக்கள்

நலன் என்ற நிலை விடுத்து மக்கள் நலனுக்காக மக்கள் ஆட்சி உருவாக வேண்டும். மக்களின்

போராட்டத்தால்தான் அதைச் சாதிக்க முடியும்.

Wrote By Gajan

Related posts