இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் வரலாற்றுப் பின்னணியும் இன்றைய நெருக்கடியும்

1,396 . Views .

part 1

1997ம் ஆண்டு மே மாதம் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த டோனி பிளேயர் அமோக வெற்றியடைந்து இங்கிலாந்தின் பிரதம மந்திரியாகியது பலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம். நீண்ட காலத்திற்குப் பிறகு வலதுசாரிய கன்சர்வேட்டிவ் கட்சி – பழைமைவாதக் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்தது.

இங்கிலாந்தில் பலர் இரவிரவாகக் கண்முழித்துத் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்த வேளை உறவினர் ஒருவர் பிரான்சில் இருந்து லண்டனுக்கு வருவதற்காக எல்லையைக் கடந்து கொண்டிருந்தார். அவர் அடிக்கடி லண்டனுக்கு வந்து போகிறவர். டோனி பிளேயர் வென்றுகொண்டிருப்பது பற்றி அவர் எல்லைக் காவலர்களிடம் விசாரித்திருக்கிறார். எல்லைக் காவலில் நின்ற பெண் காவலர் காறித்துப்பிக் காட்டித் தன் அருவருப்பை இவருக்குத் தெரிவித்ததாகவும் தன்னைத் துருவித் துருவி கேள்வி கேட்டதாகவும் அவர் பின்பு தெரிவித்திருந்தார். 18 வருட காலம் ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் வீழ்ச்சியைப் பலர் கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளை பல வலதுசாரிகளுக்கு லேபரின் வெற்றி அருவருப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இவ்வாறு சமூகத்தில் இருந்த வலம்- இடம் பிளவுகள் தேர்தற்காலங்களில் வெளிப்பட்டுக்கொண்டுதானிருந்தது.

அச்சமயத்தில் நிகழ்ந்த டோனி பிளேயரின் வெற்றியை இடதுசாரிகளின் வெற்றியாகவும் சிலர் பார்த்தனர். சிலருக்கு, இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டு வந்த தொழிலாளர்களுக்கு எதிரான தட்சரிஸக் கொள்கைகள் நிறுத்தப்பட்டு அரச கொள்கை திசை மாறும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. சோவியத் யூனியன் சரிவுக்குப் பிறகு கோலோச்சிய தட்சர் – ரேகன் காவலத்தில் வேலை செய்வோருக்கு எதிராகவும் -தொழிற் சங்கங்கள் உட்பட பல்வேறு தொழிலாளர்களின் அமைப்புகளுக்கு எதிராகவும் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன. அரச குடும்பத்துக்கும், நிலப் பிரபுகளுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் ஆதரவாக உருவாக்கப்பட்டு இன்றுவரை அவர்களின் பிரதிநிதிகளாக இயங்கிவரும் இக்கட்சி எல்லாக் காலங்களிலும் மிக மோசமான வலதுசாரியக் கொள்கைகளையே தமது கொள்கைகளாக முன்வைத்து வருபவை. தனியார் மயப்படுத்தல் தொடங்கி –ஊழியத்தைக் குறைத்தல், சேவைகளை வெட்டுதல், வேலையாட்களின் வரியை அதிகரித்தல், பெரும் வியாபார நிறுவணங்களுக்கு வரியை குறைத்தல், சந்தையின் விருப்புக்கு ஏற்ப வரிப்பணத்தைச் செலவிடல் என பல்வேறு பிற்போக்குத்தனமான முதலாளித்துவ கொள்கைகளை முன்னெடுப்பதே இவர்களின் அடிப்படை அரசியல். எக்காலத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து இவர்கள் கொள்கைகளை முன் வைத்த வரலாறு கிடையாது. இவர்கள் வெளிநாட்டார் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான துவேசங்களை பரப்புபவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.

கன்சர்வேட்டிவ் பிரதமரான மார்கிரட் தட்சர் காலம் பிரித்தானிய வரலாற்றில் இருண்ட காலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுரங்கத் தொழிலாளர்கள் மேலான தாக்குதலும் அதற்கு எதிராக நடந்த போராட்டமும் தட்சர் காலத்தை ஞாபகப் படுத்தும் கொடிய நினைவுகள். சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளும், வேலையின்மையும், வறுமையும் வளர்ச்சியடைந்த காலம் அது. இதே போல் துவேச நடவடிக்கைகளும் சிறுபான்மையர் மேலான தாக்குதல்களும் அதிகரித்த காலப்பகுதியது. இன்று மார்கிரட் தட்சர் என்ற பெயர் மிகப் பெரும்பான்மை மக்களால் கடுமையாக வெறுக்கப்பட்ட பெயராக இருக்கிறது. கன்சர்வேட்டிவ் கட்சியினர் கூட தட்சரின் ஆதரவாளர் எனச் சொல்லுவதில்லை. அப்படிச் சொல்லி தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலை தான் இருக்கிறது. 2013ல் தட்சர் இறந்த பொழுது தெருத் தெருவாகக் கேளிக்கை கொண்டாட்டங்களை மக்கள் ஒழுங்கு செய்யுமளவுக்கு வெறுப்பு சமூகத்தில் ஊறிக்கிடக்கிறது.

தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தால் இந்த நிலை மாறும் என்ற அவாவில் பல தொழிற் சங்கங்களின் தலைவர்களும் அமைப்புகளும் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தன.
அத்தகைய எதிர்பார்ப்புக்கும் நடைமுறைக்கும் நிறைய இடைவெளி இருந்ததை அன்று பலர் புரிந்திருக்கவில்லை. பெரும் தொழிற் சங்கங்களின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றி வைத்திருந்த தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள் வலJசாரியச் சரிவு கொண்டவர்களாக இருந்ததால் அவர்கள் தமது உறுப்பினர்களுக்கு வரப்போகும் ஆபத்து பற்றிச் சரியாக அறிவித்திருக்கவில்லை.

கன்சர்வேட்டிவ் கட்சியின் வரலாற்றில் இருந்து தொழிலாளர் கட்சியின் வரலாறு மாறுபட்டதாக இருந்தமையால் இத்தகைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. 1800களின் கடைசிப் பகுதியில் இடது சாரி அமைப்புகள் மற்றும் தொழிற் சங்கங்கங்கள் வேகமாக வளரத் தொடங்கியிருந்தன. இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து தொழிலாளர்களுக்கான ஒரு அரசியற் பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அக்காலத்தில் வலுப்படத் தொடங்கியிருந்தது. இதற்கு ஆதரவாகப் பல்வேறு தொழிற் சங்கங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1900 பெப்பிரவரியில் நடந்த தொழிற்சங்கங்களின் மாநாட்டில் தொழிலாளர் பிரதிநிதித்துவத்தை நிறுவுவதற்கான ஒரு கமிட்டி உருவாக்கும் முடிவெடுக்கப்பட்டது. ஏறத்தாழ 70 அமைப்புகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு ஆதரவை வழங்கியிருந்தன. மூன்று பேரைத் தவிரக் கலந்துகொண்ட பிரதிநிதிகள் அனைவரும் இதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அதன்படி தொழிலாளர் நலன்களைப் பாராளுமன்றத்தில் முன்னெடுப்பது என்பது முக்கிய குறிக்கோளாகக் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் பிறகு இக்கட்சி மக்கள் மத்தியில் ஆதரவைத் திரட்டப் படாத பாடு படவேண்டியிருந்தது. எல்லா மக்கள் தொடர்பு சாதனங்களும் முதலாளிகள் கையிலேயே இருந்தன. இவர்களிடம் அள்ளி வீசப் பெரும் பண வசதியும் இருக்கவில்லை. மக்கள் மத்தியில் சென்றடைவதற்கு ஏராளமான தடைகள் சிரமங்களை இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் இந்நிலைமை முதலாம் உலக யுத்த காலப் பகுதியில் வேகமாக மாறிவிட்டது. யுத்தத்தின் போது முதலாளித்துவத்தின் – அதன் அமப்புகளின் பண்பு பற்றி மக்களுக்குத் துரித கதியில் கற்றுக்கொடுத்தது வரலாறு. தமது உண்மையான நோக்கங்களை மறைத்து மக்கள் சார்பான கதைகள் மூலம் பூசி மெழுகும் கதை பேசி, பின்பு அவர்தம் முதுகில் குத்தும் வேலையைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை வலதுசாரிகள் செய்து வருகிறார்கள். யுத்தம் அவர்களை நிர்வாணமாக்கியது. தொழிலாளர்களுக்கும் வறிய மக்களுக்கும் அவர்களின் உண்மையான முகத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. இதைத் தொடர்ந்து வேகமாக வளர்ந்தது தொழிலாளர் கட்சி.

ஒரு இடதுசாரிய – முற்போக்கு – சமூக நலன் கட்சி அரச அதிகாரத்தைப் பிடிக்குமளவுக்கு வேகமாக வளரும் பொழுது அது பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். அவர்கள் தமது கொள்கைகளை “தேசிய நலன்” என்ற பெயரில் விட்டுக்கொடுக்கவேண்டும் என்ற அழுத்தம் முதலாளித்துவ வர்க்கத்தால் திணிக்கப்படும். முதலாளித்துவம் சார்ந்த மென்மைப் போக்குள்ள தலைவர்களை முதன்மைப்படுத்தி அவர்களை உள்வாங்கும் முயற்சியும் எடுக்கப்படும். இது தவிர அதிகாரம் ஆசைகளுக்கு ஆசைப்பட்டவர்களும் வரப்போகும் அதிகாரத்தை சுவைக்க, கட்சிக்குள் நுழைந்து தலைமைப் பதவிகளைப் பிடிக்க முயல்வர். இவற்றை எதிர்கொண்டு சமூகம் சார்ந்த நலன்களை ஒரு கட்சி விடாப்பிடியாக முன்னெடுக்க வேண்டுமாயின் அக்கட்சியின் செயற் திட்டம் தூரப் பார்வை கொண்ட திட்டவட்டமான கோரிக்கைகளை முன்வைப்பதாக இருக்கவேண்டும். அக்கொள்கைகள் சமூகம் சார்ந்த தெளிவான விஞ்ஞான அறிதலை முன்வைப்பவையாகவும் – மக்களின் சமகாலத்து முக்கிய தேவைகளை முதன்மைப்படுத்துபவையாகவும் அதைக் கட்சியின் முக்கிய குறிக்கோளுடன் இணைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதாவது குறைந்த பட்ச கூடியபட்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு சமகாலத்து பிரக்ஞைகளால் அவை இணைக்கப்பட வேண்டும். தவிர வெவ்வேறு அலைகளில் அடிபட்டு இழுபடாத புரட்சிரத் தெளிவுள்ள தலைமையும் கட்சிக்கு அவசியம். கட்சியின் உறுப்பினர்களைக் கட்டாயத்தின் பேரில் கட்டி வைத்திருக்க முடியாது. அவர்கள் கொள்கைரீதியாகக் கட்சியை கொண்டு செல்வது தலைமையின் தெளிவிலும் உறுதியிலும் கூடத் தங்கியிருக்கிறது. இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் தனது ஆரம்பகால வளர்ச்சியின் போதே எதிர்கொள்ளத் தொடங்கி விட்டது தொழிலாளர் கட்சி.

தொழிலாளர் கட்சியின் வளர்ச்சியும் அதன் மூலம் பலமடைந்த தொழிலாளர் நலன்களும் பல்வேறு நலன்களை மக்களுக்கு வென்றெடுக்கச் செய்தது உண்மையே. இலவச் கல்வி, இலவச வைத்திய சேவை போன்ற பல்வேறு சேவைகள் வென்றெடுக்கப்படுவதற்குப் பின்னால் இருந்த போராட்டங்களில் தொழிலாளர் கட்சியின் வளர்ச்சியின் பங்கும் உண்டு. அக்காலத்தில் முதலாளித்துவத்துக்கு முழுமையான ஆதரவு கொடுத்தவர்கள் கட்சிக்குள் தலைவர்களாகவோ முக்கிய பதவிகளிலோ இருக்கவில்லை. இதனால் பல்வேறு தொழிலாளர் அமைப்புகள், சோசலிஸ்டுகள், தொழிற் சங்கவாதிகள் இக்கட்சிக்குள் ஒன்று திரளும் வாய்ப்பு இருந்தது. ஏராளமான தொழிலாளர்கள் கட்சிக்குள் திரண்டார்கள். இக்கட்சிக்கு வெளியில் இருந்த சோசலிஸ்டுகளும் கட்சிக்குள் நுழைந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

தொழிலாளர் கட்சி இதன் பிறகு பல ஏற்ற இறக்கங்களைக் கண்டது. கட்சி அரசைப் பிடிக்கும் வக்குள்ள கட்சியாக இருந்தமையால் அதிகார ஆசை கொண்டவர்களும் இதற்குள் வளரத் தொடங்கினர். இந்த வரலாறை முழுமையாகப் பார்ப்பதாயின் ஒவ்வொரு தேர்தல் காலத்தையும் நாம் அலச வேண்டியிருக்கும். அதனால் அதைவிட்டு கட்சி எதிர்கொண்ட முக்கிய வரலாற்றுக் கட்டம் பற்றி மட்டும் சுருக்கமாக நாம் பார்க்கலாம்.

60களில் இருந்து கட்சிக்குள் மிலிட்டன் என்ற பெயரில் பல சோசலிஸ்டுகள் இயங்கி வந்தனர். இவர்கள் இளையோர் அமைப்பாக இயங்கிய இளம் சோசலிஸ்டுகள் என்ற அமைப்பில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்டவர்களாக இருந்தனர். இவ்வமைப்பின் முக்கிய தலைமையில் இருந்த பீட்டர் டாவ், அடட் கிரான்ட் ஆகியோது சோசலிச அடிப்படையில் இயங்குவதற்குக் கட்சி உறுப்பினர்களைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தனர். இச்சமயத்தில் இடதுசாரிகளாகப் பாவனை செய்துகொண்டிருந்த சந்தர்ப்பவாதிகள் கையிற்தான் தலைமை இருந்தது. அதே சமயம் அதையும் தாண்டிக் கட்சியை முழுமையான முதலாளித்துவக் கட்சியாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வந்தவர்களும் இருந்தனர். இதனால் கட்சிக்குள் பல்துருவ நடவடிக்கைகள் நிகழ்ந்துகொண்டிருந்தது.

முதலாளித்துவப் பிரதிநிதிகளாக இயங்கினாற்தான் தேர்தலில் வெல்லலாம் என்ற அடிப்படையில் இயங்கிய முக்கிய தலைவர்களும் அவர்கள் ஆதரவாளர்களும் கட்சிக்குள் இருந்த இடதுசாரிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தனர். இருப்பினும் அவர்களால் முழுமையான ஆதரவை உறுப்பினர்கள் மத்தியில் திரட்ட முடியாத நிலையிருந்தது. குறிப்பாக கட்சிக்குள் இருந்த சில சனநாயகக் கட்சிச் சாசனங்களும் -கட்சிக் கிளைகளுக்கான உரிமைகளும் இவர்கள் முழுக் கட்டுப்பாட்டையும் எடுக்கத் தடையாக இருந்தது. கட்சிக் கிளைகள் சில தீர்மானங்களை நிறைவேற்றி கட்சியின் காங்கிரசில் விவாதித்து அதை அமுல்படுத்தும் வாய்ப்புக்கள் இருந்தது. அதே போல் தொழிற்சங்கங்களுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செலுத்தும் விசேட உரிமைகளும் இருந்தன. இது தவிர சாசனத்தின் உட்பிரிவு 4 என்பது தனியார் மயமாக்கலை முற்றாக எதிர்ப்பதாகவும் இருந்தது. கட்சி ஆட்சிக்கு வந்தால், மின்சாரம், போக்குவரத்து, வங்கி முதற்கொண்டு முக்கிய சில வியாபார நிறுவனங்களையும் தேசியமயமாக்க வேண்டும் எனச் சாசனத்தின் நாலாம் பிரிவு ஏற்றுக்கொண்டிருந்தது. முதலாளிகளின் முழுமையான ஆதரவை கட்சிக்குப் பெற்றுக்கொள்ள இத்தகைய நிலவரங்கள் தடையாக இருந்தன. அதனால் இத்தகைய இடதுசாரியக் கொள்கைகளைத் துடைத்தெறிய வேண்டும் என்ற அவா முதலாளித்துவ ஆதரவாளர்கள் மத்தியில் பலப்பட்டிருந்தது. இதைக் குறிக்கோளாகக் கொண்டு கட்சிக்குள் ஒரு குழு வேலை செய்யத் தொடங்கியது. அவர்களுக்கு முதலாளித்துவ ஆதரவு சக்திகளும் முதலாளித்துவ ஊடகங்களும் ஆதரவு கொடுத்து வளர்த்து விட்டது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லை.

இத்தகைய குழுவின் செயற்பாட்டின் மூலம் பலம் பெற்றவர்கள்தான் ஜோன் மான். டீடானி பிளேயர், அலிஸ்டர் காம்பல், டேவிட் பிளங்கட் ஆகியோர். டோனி பிளேயரின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிளேயரிஸ்ட் என்று அழைக்கப்பட்ட இவர்கள் கட்சியை முற்றான முதலாளித்துவக் கட்சியாக்குவதற்கான திட்டங்களோடு ஆரம்பத்தில் இருந்தே இயங்கினார்கள்.

1984-85களில் நடந்த சுரங்கத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தப் போராட்டமும் அதற்கு எதிராகத் தட்சர் எடுத்த கடும் நிலைப்பாடும் கன்சர்வேட்டிவ் கட்சியைக் கடுமையாகப் பலவீனப்படுத்தியிருந்தது. மிலிட்டன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் முக்கிய பங்களித்திருந்தனர். அவர்களும் லேபர் கட்சிக்கூடாக இயங்கியமையால் அவர்கள் மூலமாக லேபர் கட்சிக்கு தொழிலாளர்கள் மத்தியில் நற்பெயரும் ஏற்பட்டிருந்தது. அதே சமயம் லேபர் கட்சிக்குள் இருந்து பல பாராளுமன்றவாதிகளையும் நடைமுறை நோக்கி இந்தப் போராட்டம் சிறு காலத்துக்காவது திருப்பியிருந்தது என்பது மிகையில்லை. ஆனால் 1989 – 90 களில் நடந்த கடும் போராட்டம்தான் தட்சரின் ஆதிக்கத்தை முழுமையாக உடைத்தது.

தொழிலாளர்களின் வருவாயில் இருந்து அவர்களிடம் அறவிடப்படும் வரிக்கு மேலாக ஒவ்வொரு வீட்டுக்கும் எனத் தனி வரியை அறிமுகப்படுத்த தட்சர் முயன்றது அனைவராலும் கடுமையாக எதிர்க்கப்பட்டது. போல் டாக்ஸ் என்றழைக்கப்பட்ட இந்த வரிக்கெதிரான போராட்டத்தை மிலிட்டன் உறுப்பினர்கள் முன்னின்று நடத்தினர். மில்லியன் கணக்கான மக்களும் தொழிற் சங்கங்களும் பங்கு பற்றிய இந்தப் போராட்டம் தட்சர்அதிகாரத்தின் முதுகெலும்பை உடைத்தது. அவர்கள் இந்த வரியை அறிமுகப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். மக்கள் யாரும் இந்த வரியைச் செலுத்தவேண்டாம் என மிலிட்டன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஏராளமானோர் வரி செலுத்த மறுத்துவிட்டனர். வரி செலுத்தாத ஆயிரக்கணக்கானவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்தது அரசு. மிலிட்டன் உறுப்பினர்களாக இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை இந்த வரி செலுத்தாமைக்காக சிறையிற் போட்டது அரசு. பிராங் பீல்ட், என்ற மிலிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சிறையில் அடைக்கப்பட்டார். டேவிட் நெல்லிஸ்ட் என்ற இன்னுமொரு உறுப்பினரும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளானார்.

“மக்களின் நலனை உடைப்பதற்குப் பதிலாக நாங்கள் சட்டத்தை உடைக்கத் தயாராக இருக்கிறோம்” என்றும் சட்டம் என்பது மக்களை மீறிய ஒன்றல்ல மாறாக மக்களின் நலனுக்காக இயங்க வேண்டியது என்றும் இவர்கள் பிரச்சாரித்தனர். அதே சமயம் கட்சித் தலைவராக இருந்த நீல் கின்னொக் “சட்டம் இயற்றுபவர்களே சட்டத்தை உடைக்கக்கூடாது” என தட்சர் சார்பில் நின்று பேசிக்கொண்டார். இப்படியிருந்தும் அவர்களுக்கு ஆதரவு கிட்டவில்லை. தட்சர் தோற்கடிக்கப்பட்டார். வரி நிறுத்தப்பட்டது. மக்களுக்கு வெற்றி கிடைத்தது. தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு வளர உதவியது. இதைத் தொடர்ந்து அடுத்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெல்லுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பது தெரிந்த கையோடு பிளேயரிஸ்டுகள்களின் வேலை ஆரம்பித்து விட்டது.

இதற்கு முன்பே மிலிட்டன் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் களையெடுப்பதில் ஐhன் மான் மற்றும் பிளங்கட் ஆகியோர் கடுமையான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு கட்சிக்குள் வலதுசாரிகளால் தாக்கப்படுவது மிலிட்டனின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. இது சில குறிப்பிடத்தக்க தொழிலாளர் செறிந்த இடங்களில் மிலிட்டனுக்குப் பெரும் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. குறிப்பாகத் தொழிலாளர் நகர் என அறியப்பட்ட லிவர்பூலில் அவர்கள் செல்வாக்கு பல மடங்காகப் பெருகியது. அங்கு பாராளுமன்றத் தேர்தல் மற்றும் கவுன்சில் தேர்தல்களில் மிலிட்டன் உறுப்பினர்கள் அமோக வெற்றியீட்டினர். 12 மிலிட்டன் கவுன்சிலர்கள் தலைமையில் லிவர்பூல் கவுன்சிலை 1982ல் கைப்பற்றிய தொழிலாளர் கட்சி தட்சரின் அதிகாரத்தை நேரடியாக எதிர்த்து நின்றது. மத்திய அரசு மேலதிக முதலீட்டைச் செய்யவேண்டும் எனவும் – மக்களிடம் இருந்து – கவுன்சிலிடம் இருந்து களவெடுத்த காசை மீளத்தரவேண்டும் எனவும் அவர்கள் தட்சர் அரசைக் கேட்டுக்கொண்டனர். இதை மறுத்து அந்தக் கவுன்சிலுக்கு வழங்கும் பணத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது அரசு. இதை எதிர்கொள்ள மிலிட்டன் கவுன்சில் “பற்றாக்குறை பட்ஜெட்டை” உருவாக்கி மேலதிக முதலீட்டைச் செய்தனர். புதிய கவுன்சில் வீடுகளைக் கட்டி வீடுகளுக்கான தட்டுப்பாட்டைக் குறைத்தல், புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தல், சிறுபான்மையினருக்கான சலுகைகளை கொடுத்து அவர்களை ஊக்குவித்தல் ஆகிய வேலைகளை அவர்கள் செய்தனர். 1200 பேர் வேலை நிறுத்தம் செய்யப்படவிருந்தமை தடுக்கப்பட்டது மட்டுமின்றி, மேலதிக 1000 வேலையையும் அவர்கள் உருவாக்கினர். 5000க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டினர். இந்த நடவடிக்கைகள் இன்றும் லிவர்பூல் மக்களின் மனதில் பசுமையாக இருக்கும் நினைவுகள். அக்காலத்தில் அங்கிருந்த தொழிலாளர்கள் கடும்வறுமைக்குள் தள்ளப்பட்டுத் தங்க வசதி – சாப்பிட வசதியின்றி வாழ்ந்து வந்தனர். இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்துதான் லிபர்பூல் சிறந்த நகரமாக வளரத் தொடங்கியது.

ஆனால் இந்த நடவடிக்கைகள் தட்சராலும் லேபர் கட்சித் தலைமைகளாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டது. மிலிட்டன் பத்திரிகையின் ஆசிரியர்களாக இருந்த பீட்டர் டாவ், கிளாய டொயில், கீத் டிக்கின்சன், லின் வால்ஸ், முதலானோர் கட்சியில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கடும் தீவிர இடதுசாரிகளை வெளியேற்றி கட்சியைத் தூய்மைப்படுத்துவதாக லிபரல்களும் வலதுசாரியச் சரிவுள்ளவர்களும் பிரச்சாரித்துக்கொண்டனர். அதே சமயம் இடதுசாரிகள் ஒதுக்கப்படுவது கட்சியைத் தொழிலாளர் சார்பில் பலவீனப்படுத்துகிறது என்ற தெளிவும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இருந்தது. ஏராளமான தொழிற்சங்கவாதிகள் இதை எதிர்த்தனர். முக்கிய தலைவர்கள் வெளியேற்றப்பட்டபோதும் கூட மிலிட்டன் தொடர்ந்தும் கட்சிக்குள் வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களைத் தொடர்ந்து வேட்டையாடுவதில் குறியாக இருந்தனர் வலதுசாரிகள்.

தட்சருக்கு மேலான கடுமையான எதிர் நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கு வளர வளர கட்சிக்குள் வலதுசாரிகள் தமது செல்வாக்கை வளர்த்துக்கொண்டிருந்தனர். 1992ல் தொழிலாளர் கட்சி வெல்வதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களும் இருப்பதால் அக்காலத்துத் தலைவராக இருந்த கின்னொக்கின் பின் பிளெயரிஸ்ட் வலதுசாரிகள் திரண்டார்கள். தட்சரின் செல்வாக்கை உடைத்தது தெருவில் கொதிக்கும் வெறுப்பு என்பதை அறியாத பிளேயரிஸ்டுகள் தேர்தலில் வலதுசாரியத்துக்கு ஆதரவான பிரச்சாரமாக முடுக்கினர். இந்தத் தேர்தலில் லேபர் தோல்வியடைந்த போதும் கட்சி பலம்பெற்றுவிட்டதும் அடுத்த தேர்தலில் வெல்லும் என்பதும் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதைத் தொடர்ந்துதான் பிளேயரிஸ்டுகள் கட்சியைக் கைப்பற்றினர்.

தான், கின்னக் பேலவே ஒருவகை மென்மை சோசலிஸ்ட் என்ற பாவனையில் பிரச்சாரம் செய்து தொழிலாளர் கட்சியின் தலமையைக் கைப்பற்றிய டோனி பிளேயர் தலைவரான கையோடு தனது வேலையைத் தொடங்கி விட்டார். சிவப்பு டோரி என இன்று வெறுக்கப்படும் டோனி பிளேயரின் முழுப் பண்புகளையும் அன்று பலர் அறிந்திருக்கவில்லை. தலைமையை எடுத்த கையுடன் இடதுசாரிகளைக் கட்சியில் இருந்து களையெடுக்கத் தொடங்கினார். அலிஸ்டர் காம்பல் என்ற ஸ்பின் டொக்டர் முதற்கொண்டு அவரைச் சுற்றி உருட்டுப் பிரட்டு வேலைகள் செய்வதில் கில்லாடிகளான பலர் இணைந்து கொண்டனர். ஒரு வருடத்துக்குள் கட்சிச் சாசனம் நான்கு கைவிடப்பட்டது. “தீவிரத் தன்மையான கட்சி செத்துவிட்டது. இனி நீங்கள் பார்ப்பது புதிய லேபர் கட்சி” என அவர்கள் அறிவித்துக்கொண்டனர். இதிலிருந்துதான் நியு லேபர் –புதிய லேபர் கட்சி என அழைக்கப்படத் தொடங்கியது இக்கட்சி.