ஐ. நா எனும் வருடாந்திர படையெடுப்பு

880 . Views .

ஐ. நா மூலம் தமிழ் ஈழம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பெற்று விடலாம் என மக்களுக்கு நம்பிக்கை ஊட்டப்படுவது தொடங்கி  ஒன்பது வருடங்கள் முடிவடைகிறது. ஆனால் எதுவும் நடந்தபாடில்லை. நடந்து முடிந்த 37வது ஐக்கிய நாட்டின் அமர்வு கூட்டத்தில் ஐ. நா வின் விம்பம் மேலும் உடைந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஏதோ ஒரு முறையில் தாம் விசாரணை நடத்த இருப்பதாக இலங்கை அரசு பாசாங்கு காட்ட அதை ஒரு காரணமாக காட்டி அவர்கள் தப்பிச் செல்ல விடப்பட்டனர். தீர்மானம்(30/1) /34/L1) ஆகியன மிகப் பெரும் வெற்றியாக சிலர் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரித்தனர். ஆனால் உண்மையில் இந்த பாசாங்கு இரண்டு வருட கால தவணை வழங்க மட்டுமே உதவியது. இந்த இரு வருட கால முடிவில் இலங்கை அரசுக்கு ஒரு முடிவு வரும் என லொபி செய்தவர்கள் பலர் மக்களை நம்ப வைத்தனர். ஆனால் அந்த ஒரு வருட காலம் முடிந்த நிலையில் தீர்மானாம் வருகின்ற 2019 ஆம் ஆண்டிற்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில் இன்னொரு அநியாயம் என்னவென்றால் ஐக்கிய நாடு சபை நிறைவேற்றி உள்ள அனைத்து தீர்மானங்களிலும் ‘தமிழ்’, ‘தமிழ் மக்கள்’, ‘தமிழ் இனம்’ என்கிற வார்த்தைகள் வராதவாறு மிகவும் கவனமாக கையாளப்பட்டுள்ளது.  ‘இனப் போர்’, ‘இனப் படுகொலை’ ஆகிய கோணங்கள் வராதபடி கவனமாக பார்த்துக் கொள்கிறார்கள். மத அடிப்படையிலும் கொலைகள் நிகழ்ந்ததாகவும் இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் பாதிக்கபட்டாதகவும் முழு நாடுமே மறு நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், பயங்கரவாத செயல் தடுப்பு சட்டத்தை நீக்கும்படி முன் வைத்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியே நிறைவேற்றப்பட்டாலும் புதிய பயங்கரவாத செயல் சட்டத்தில் பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. ஜனநாயக முறைப்படி அரசிற்கு எதிராக குரல் எழுப்புவோரும் அச்சட்டப்படி தண்டிக்க படுவர். இந்த மோசமான சட்டத்துக்கு பெயர் மாற்றம் மட்டுமே இலங்கை அரசு பேசுகிறதே தவிர சட்டத்தை இரத்து செய்வது அவர்கள் நோக்கமாக இல்லை.

இவ்வருடம் நடந்து முடிந்த 37வது ஐ.நா பாதுகாப்பு சபை அமர்வு கூட்டமே அனைவரினதும் கடைசி முயற்சியாக இருந்திருக்க வேண்டும்.. மக்கள்  இதற்கு பிறகாவது ஐக்கிய நாட்டின் மூலம் தீர்வு மற்றும் உரிமைகள் கிடைத்து விடும்  என்ற கனவில் இருந்து வெளி வர வேண்டும்.

ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் போராட்டமே நமக்கு வெற்றியை ஈட்டித் தரவல்லது. அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றினைந்து ஈழ மக்களின் கோரிக்கைகள் ஆன சுய நிர்ணய உரிமையை முன் வைத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், காணமல் போனோர் பற்றிய விவரம் வெளியிடுதல், இராணுவ மயமாக்குதலை நிறுத்தல், சுதந்திரமான சர்வதேச பொது விசாரணை நடத்துதல் ஆகியவற்றை மிகவும் வலுவாக முன்னெடுக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் பத்தாம் நினைவேந்தைலை ஒற்றி இது நாம் எடுக்க வேண்டிய முக்கிய முடிவாகும். இந்நினைவேந்தைலை காரணம் காட்டி அனாவசியமாக பணம் விரைவு செய்வதிலும் ஐக்கிய நாடு சபைக்கு ஏதுவாக பரப்புரை செய்வதிலும்  கால விரைவு மட்டுமே மிஞ்சும். அது மட்டுமில்லாமல் ஐக்கிய நாடு சபையை நாம் நம் நீதிக்காக முன்னிறுத்துவது மக்களை மிகவும் பலமற்று காட்டுவதாகவும் எதோ ஒன்றின் மேல் பாரத்தை போட்டு விட்டு நம் அன்றாட வாழ்வை வாழ்ந்து விட்டு போவதாகவும்  அமைந்துவிடும் .

மக்கள் போருக்குப் பின் அரசியல் ரீதியாக சோர்வுற்ற நிலையில் இருக்கையில் அவர்களை அரசியல்மயமாக்குதல் மிகவும் அத்தியாவசியம். இதன் அடிப்படையிலே தமிழ் சொலிடரிட்டி மக்கள் போராட்டத்தை கட்டி எழுப்புவதையும், மக்களை அரசியல் மயமாக்குதலின் இன்றியமையாமயையும் வலியுறுத்திக்கொண்டு இயங்குகின்றது.

ஐ.நாவை அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையை ஏதோ ஒரு சமாதான புறாவாக கருதும் பலருக்கு ஐ.நாவை பற்றிய புரிதல் வேண்டி இருக்கிறது. முதலில், ஐ.நா கிட்டத்தட்ட உலகின் பல  நாடுகளைக் கொண்ட பன்னாட்டு அமைப்பு. ஆனால் அனைத்து நாடுகளும் ஒரே மாதிரியான அங்கீகாரம் அளிக்கப்பட்டவை அல்ல. இரண்டாம் உலக போரில் வெற்றி பெற்ற நாடுகள் மிகுந்த பலமானவையாக இருந்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா முதலிய 5 நிரந்தர உறுப்பினர்களையும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் கொண்டது ஐ.நா. நிரந்தர நாடுகளுக்கு தடுப்புரிமை ஆணை (Veto Power) உண்டு. முக்கிய விவகாரங்களுக்கு 5 நிரந்தர உறுப்பினர்களின் வாக்குகளையும் பெற்றாக வேண்டும். ஒரு உறுப்பு நாடு ஆதரவாக வாக்களிக்காவிட்டாலும் தீர்மானம் முடங்கிப்போகும். ஒரு நிரந்தர உறுப்பு நாடு எந்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாமல் செய்யமுடியும்.

இவை உலகின் மற்ற நாடுகளுக்கு எவ்வளவு பாதிப்பாக அமையும் என சொல்ல வேண்டியதில்லை. அப்படி இருக்க புவிசார் அரசியலுக்கு  பலியான இலங்கை எம்மாத்திரம். கூறு கூறாக இலங்கையை பல நாடுகள் ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டின் உட்பட அனைத்து நாடுகளின் செல்வாக்கும் இலங்கை மேல் உள்ளது. ஆக தங்களின் வணிகம் மற்றும் அரசியல் நலன் கருதி இலங்கை மேல் உள்ள போர் குற்றங்களை விமர்சிப்பதாக அவர்களால் பாசாங்கு செய்ய முடியுமே தவிர உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்று தர முடியாது. இது மிக வெளிப்படையாக இந்த வருட ஜெனீவா அமர்வில் பிரதிபலிக்கப்பட்டது. இலங்கை அரசுக்கு பல உலக நாடுகளிடம் இருந்து பல்வேறான பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் இலங்கை அரசு தானாகவே முன் வந்து உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டது. ஆனால் இது எவ்வாறாக நிறைவேற்றப்படும் என்பது பற்றி ஐ. நா விடம் எந்த கண்காணிப்பும் இல்லை.

இவர்களின் பாசாங்குகளுக்கு பலி போகாமல் நமக்கான தீர்வை நோக்கி நாம் பயணிப்பதே பலன் தரும். ஈழத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களும் புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மக்களும் இணைந்து மிகவும் பலமான ஒரு போராட்டத்தை சர்வதேச தொழிலாளர் இயக்கங்களோடு கட்டுவதே நமக்கான உரிமைகளை மீட்டு எடுக்க ஒரு வழியாக அமையும். பல உலக நாடுகளில் அடிப்படை உரிமைகள் வெல்லப்பட்டது ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் புரட்சியால் மட்டுமே சாத்தியமானது. அவ்வாறான ஒரு புரட்சி நோக்கி நகராமல் தமிழ் மக்களின் உரிமைகளை நிரந்தரமாக வெல்ல முடியாது.

சத்யா ராஜன்