Views: 0
மாவீரர் நாள்: தங்கள் உறவுகளை நினைவுகூரும் உரிமை மக்களுக்கே
இன்று நவம்பர் 27, தமிழீழத் தேசிய மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் நாள் இது. இன்று தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முதலில் உயிரிழந்த போராளியான சங்கர், 1982 நவம்பர் 27 அன்று மறைந்தார். அவர் மறைந்த தேதியைத் தேர்ந்தெடுத்து, 1989ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் முதலாவது மாவீரர் நாளை அனுசரித்தனர்.
ஒரு தாய் தன் மகளுக்காக விளக்கேற்றுகிறார். ஒரு தங்கை தன் அண்ணனின் படத்துக்கு மலர் வைக்கிறார். ஒரு நண்பர் தன்னுடன் படித்த தோழனை நினைவுகூர்கிறார். போராளிகள் என்று நாம் அறிந்தவர்கள், தங்கள் குடும்பங்களுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும், அண்ணனாகவும் தங்கையாகவும் இருந்தவர்கள். அவர்களின் பெயரைப் பொதுவெளியில் சொல்லவும், அவர்கள் ஏன் போராட்டத்தில் இணைந்தார்கள் என்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லவும் அந்தக் குடும்பங்களுக்கு முழு உரிமை உண்டு.
அந்த உரிமையை ஏன் இன்றும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது? 2023ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் பங்கேற்ற சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கிடைத்த முறைப்பாடுகள் குறித்து ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் இலங்கை அரசிடம் விளக்கம் கேட்டனர். குடும்பங்கள் தங்கள் உறவுகளை நினைவுகூரத் தடையில்லை என்று அரசு பதிலளித்தது. அடுத்த ஆண்டு மன்னாரில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குக் கட்டுப்பாடு விதிக்குமாறு காவல்துறை நீதிமன்றத்தைக் கேட்டது. நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. தங்கள் பிள்ளைகளுக்காக விளக்கேற்றும் முன், இந்த ஆண்டு காவல்துறை என்ன செய்யும் என்று குடும்பங்கள் கவலைப்பட வேண்டுமா?
விடுதலைப் புலிகளின் அரசியல் முடிவுகளையும் போராட்ட முறைகளையும் விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. இயக்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அனுபவங்களைப் பேசவும், அவர்களின் குரல் கேட்கப்படவும் வேண்டும். அந்த விவாதத்தை ஆண்டு முழுவதும் நேர்மையாகவும் ஆதாரங்களுடனும் நடத்தலாம். ஆனால், குடும்பங்கள் அஞ்சலி செலுத்தும் நாளைத் தேர்ந்தெடுத்து உயிரிழந்தவர்களை இழிவுபடுத்துவதையும், அவர்களுக்காக விளக்கேற்றுவோர் மீது அவதூறு சுமத்துவதையும் தமிழ் சொலிடாரிட்டி கண்டிக்கிறது. இயக்கத்தின் ஒவ்வொரு முடிவுக்கும் பதில் சொல்லும் பொறுப்பைத் தன் பிள்ளையை இழந்த ஒரு தாயின் மீது சுமத்த முடியாது.
மாவீரர் நாள் நம் முன்னுள்ள அரசியல் பணியையும் நினைவூட்டுகிறது. தமது மண்ணில் அச்சமின்றி வாழவும், தமது அரசியல் எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்கவும் ஈழத்தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. அந்தச் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்பதும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டு நிற்கும் குடும்பங்களுடன் தோள் கொடுப்பதும் நமது பொறுப்பு. போர்க்கால மீறல்களுக்கு நீதி கோரித் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் மக்களை ஒன்றிணைக்கும் பணி தொடர வேண்டும்.
இந்த மாவீரர் நாளில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உயிர்நீத்த போராளிகளுக்குத் தமிழ் சொலிடாரிட்டி அஞ்சலி செலுத்துகிறது. தங்கள் உறவுகளை நினைவுகூரும் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம்.