பொது வேட்பாளரா ? பொது செயற்திட்டமா?

பொது வேட்பாளரா ? பொது செயற்திட்டமா?

1 பொதுச்சபை உருவாக்கம்

தமிழ் மக்கள் சார்பாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற உரையாடல் தற்போது பல தளங்களில் நடந்து வருகிறது. சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்கள் ஆரம்பத்தில் முன் வைத்த கருத்து இன்று சூடு பிடித்து பல தளங்களில் முன் வைக்கப்பட்டு வருகிறது. ஏப்பிரல் மாதம் 30 தகதி வவுனியாவில் 30க்கும் மேற்பட்ட  (எண்ணிக்கை சரியாக தெரியவில்லை) சிவில் சமூக அமைப்புக்கள் ஓன்று கூடி சில தீர்மானகளை முன்வைத்துள்ளன. (மேலதிக விபரங்களுக்கு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவரும் தொடர்ந்து இந்த விவாதத்தை முன்னெடுப்பவருமான நிலாந்தன் எழுதிய கட்டுரையைப் பார்க்க – https://www.nillanthan.com/6743/ ). இதன் பின் யூன் மாதம் யாழில் கூடிய இக்குழுவினர் தாம் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பொதுச்சபை (Tamil people’s Assembly) என்ற பெயரில் இயங்குவது என முடிவு செய்துள்ளனர்.

 2 பொதுச்சபை முன்வைக்கும் புள்ளிகள்

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது சார்ந்து தமிழ் மக்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற கேள்வி இந்த பொதுச்சபை உருவாக முக்கிய காரணம்.ஜனாதிபதி தேர்தலை தமிழரின் தேசிய கோரிக்கையை முன்னெடுக்கும் ‘ஒரு களமாக’ பாவித்தல் என்பதே இவர்கள் முன்வைக்கும் கருத்தின் சாராம்சம். அவர்கள் ஏற்றுக் கொண்ட தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது

‘’ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.’’

இதை நடைமுறைப்படுத்த ஒரு பொது கட்டமைப்பை கட்டுவது என அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

3 பொதுச்சபை மேல் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்

 ஏற்கனவே 2019 ல் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவைக்கு என்ன நடந்தது? பொதுச்சபை என்பது இன்னொரு பேரவை – இதற்கும் அதே கதிதான் எனச் சிலர் பேசுகின்றனர். கட்டமைப்புக்கள் உருவாக்கப்படுவதும் பின்பு அவை எதையும் சாதிக்காமல் கலைந்து போவதும் மக்கள் பார்வையில் இந்த முயற்சிகள் சார்ர்பாக ஒரு தொய்வான பார்வையை உருவாக்கி வைத்திருக்கிறது. இதனாலும்தான் இத்தகைய பேச்சுக்கள் எழுகின்றன.

தமிழ் தேசிய கோரிக்கையை முதன்மைப்படுத்தும் எந்த நடவடிக்கையும் விமர்சிக்கும் பகுதியினர் இந்த முன்னெடுப்பை உடனடியாக நிராகரிப்பதையும் நாம் பார்க்கலாம். பொதுச்சபை தமிழ் மக்களைப் பிடிக்கும் “கொள்ளை நோய்” எனச் சாடி இருக்கிறார் ரட்னஜீவன் கூல் (பார்க்க – https://www.colombotelegraph.com/index.php/the-thamil-thesiya-kootani-a-plague-on-the-tamil-people/). ‘நீங்கள் யார் உங்களுக்கு என்ன தகுதி’ என்ற பார்வையில் இருக்கிறது கூலின் விமர்சனம். ஒன்றும் இல்லாதவர்கள் தாம் முக்கியஸ்தர்களாக மாறப் பார்க்கிறார்கள் என்பதுதான் அவரது வாதத்தின் சாரம்சம். பொங்கு தமிழை ஒழுங்கு செய்த புலி ஆதரவாளர்கள் இதற்குள் இருக்கிறார்கள் என்பது  இவர்களின் முக்கிய ஆதங்கம். புலி எதிர்ப்பை மையமாகக் கொண்டு இயங்கும் சிறு குழுவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் இன்றுவரை எந்த ஆதரவும் இருந்ததில்லை. மக்களைத் திரட்டும் எந்த சக்தியும் இவர்களிடம் கிடையாது. தமிழ் தேசிய கோரிக்கையை பேராபத்தான ஒன்றாக கட்டமைப்பு செய்வது தவிர வேறு முக்கியத்துவம் இவர்கள் வாதங்களில் இருப்பதில்லை. இந்த ‘ஆபத்து தவிர்’ அறிக்கைகளின் பின் இருப்பது தனிப்பட்ட ஆதங்கம் மட்டுமே. தமிழ் மக்கள் சார் கள நிலவர அறிதலை இவை உள்வாங்கவில்லை. இருப்பினும் புலி எதிர்ப்பு – தேசிய மறுப்பு என்ற நிலைப்பாடு தெற்கில் தம்மை ‘முற்போக்காளர்’ எனக் கூறிக் கொள்ளும் லிபரல்களுக்கு உவப்பாக இருகிறது. இதனால்தான் இவர்களின் வாதங்களை சுட்ட வேண்டி உள்ளது. கொழும்பு ‘முற்போக்கின்’ பொதுவான நிலை இதுதான்.

இது தவிர அரச ஆதரவு சக்திகள் – ராஜபக்ச அரசுடன் கூட்டாக இயங்கிய சக்திகள் போன்றவர்களும் கடுமையான எதிர்ப்பை வைக்கிறார்கள் – வைப்பர். அரசியல் – கொள்கை அடிப்படையில் வாதிடும் முறைமை இவர்களிடம் இருந்ததில்லை. தமிழ் தேசியம் – கிழக்கு மக்களுக்கு எதிர் என பொத்தாம் பொதுவாக சொல்வது – முஸ்லிம் மக்களை எதிர் திசையில் நிறுத்துவது – தேசியம் சமன் வெள்ளாளியம் என்பது – புலி பாசிசத்தின் ஆதரவாளர் என்பது போன்ற கருத்துக்களை தவிர இவர்களிடம் வேறு கருத்துக்கள் கிடையாது. பொது மேடையில் விவாதிக்கவும் இவர்கள் முன்வரப் போவத்தில்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆதரவுடன் இயங்கி வரும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (TNPF) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) ஆகிய கட்சிகள் பொதுச்சபைக்கோ அல்லது பொது வேட்பாளர் திட்டத்துக்கோ ஆதரவு தர முன்வரவில்லை. கூட்டமைப்பு என சொல்வதைவிட தமிழரசுக் கட்சி எனச் சொல்வதே பொருந்தும். ஏனெனில் கூட்டமைப்பாக இயங்கிய பலர் பொதுச்சபைக்குள் இருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியும் உடைந்து நிற்கிறது. கட்சியின் தலைமையில் இருக்கும் சிறிதரன் பொது வேட்பாளர் கோரிக்கைக்கு முற்றான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. அவரது பிரிவு முடிவெடுக்க முன்பே கட்சிக்குள் இருக்கும் சுமந்திரன் பிரிவினர் தமது நிலைபாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ் மக்கள் வாக்கை ‘பகடைக்காயாக’ பயன்படுத்தலாம் என்பதுதான் சுமந்திரன் வாதத்தின் சாராம்சம் என கூறுவது மிகையில்லை. ஜனாதிபதி பதவியை வெல்ல தமிழ் மக்கள் வாக்கு மட்டும் போதாது – ஆனால் தமிழ் மக்களின் வாக்கு வெல்பவரை தீர்மானிக்க உதவ முடியும் என்பது சுமந்திரனின் வாதம். எந்த வேட்பாளர் தமிழர்களுக்கு தீர்வை முன்வைக்கிறார் என்ற அடிப்படையில் ஒரு வாக்குறுதியை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிறார்.

இது நடைமுறைக்கு உகந்த வாதம் அல்லது யதார்த்த வாதம் என சிலரால் கூறப்படுகிறது. இந்த வாதத்தின் அடிப்படையில்தான் கடந்த ஜானாதிபதித் தேர்தல்களில் தெற்கின் இனவாதிகளுக்கு வாக்களிக்குமாறு மக்களைத் திரட்டியது கூட்டமைப்பு. தமிழ் மக்களுக்கு வேறு வழி இல்லை என்பதே இவர்கள் கருத்து. எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருப்பவர்கள் பெரும்பான்மை முன்வைக்கும் தேர்வின் ஒரு பகுதியாக இருபதன் மூலம் மட்டுமே உரிமைகளை பெற முடியும் என வாதிப்பதே இந்த நடைமுறை வாதம். தமிழ் மக்கள் வாக்கு தனிமைப்படுவதால் எந்த பலனுமில்லை. அதை ஒரு தொகுதியாக பாவிப்பது சலுகை பெற உதவும் என வாதிடும் சுமந்திரன் கடந்த தேர்தல்களில் இது பயனை தந்தது எனவும் கூறுகிறார். பொன்சேகா மற்றும் மைத்திரிக்கு வாக்கு வழங்கியதால் கிடைத்த பயன்கள் பற்றி அவர் பேசுவது நடைமுறை வாதமல்ல – பிரட்டல் வாதம். ஒரு வலது சாரிய அரசு செய்ய வேண்டிய அடிப்டை விசயங்களைக் கூட வழங்கப்பட்ட ‘சலுகைகளாக’ சொல்வதை வேறு எவ்வாறு சொல்வது?

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (TNPF) தேர்தலைப் புறக்கணிக்க கோரி வருகிறது. விடுதலைப் புலிகள் முன்பு எடுத்த இத்தகைய நிலைப்பாடு  எத்தகைய மோசமான வரலாற்று நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றது என்ற புரிதலை இவர்கள் இன்னும் உள்வாங்கவில்லை. தமிழ் மக்களின் புறக்கணிப்பு அவர்களுக்கு எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என்ற கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் என அவர்கள் வாதிடுகிறார்கள். மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது எவ்வாறு கவன ஈர்ப்பை ஏற்படுத்தாது என அவர்கள் விளக்கவில்லை. அவர்கள் விமர்சனம் யார் அந்த பொது வேட்பாளர் என்பதுடன் சம்மந்தப்பட்டது என்றே தோன்றுகிறது. ஆனால் இது பற்றி வெளிப்படையான கருத்துக்களை அவர்கள் இன்னும் முன்வைக்கவில்லை.

4 போதாமைகளும் தேவைகளும்

தமிழ் பொது வேட்பாளர் என்பது அடிப்படையிலேயே தவறான ஓன்று எனப் பேசுவது தவறு. இந்த உரையாடலில் கவனிக்க வேண்டிய புள்ளி ஓன்று உண்டு. ஒரு தமிழ் வேட்பாளருக்கு ‘சிங்கள வாக்கு’ விழுவது சாத்தியமில்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்ட நிலை இருப்பதை நாம் அவதானிக்க வேண்டும். தமிழ் தரப்பில் இருக்கும் எவருமே இதை மறுத்துப் பேசவில்லை. இலங்கை எவ்வாறு தேசிய அடிப்டையில் உடைந்து நிற்கிறது என்பதை இதுவும் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஏன் சிங்கள மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டார்கள்? ஒட்டு மொத்த சிங்கள மக்களும் தமிழ் மக்களின் தேசிய கோரிக்கையை எதிர்ப்பவர்கள் என்ற முன் தீர்மானம் தவறு. தமிழ் மக்களின் தேசிய கோரிக்கை என்பது இலங்கையை உடைக்கும் கோரிக்கை, அதனால் சிங்கள மக்களுக்கு ஆபத்து என அனைத்து சிங்கள கட்சிகளும் வாதிடுகின்றன (தம்மை இடது சாரிகள் எனக் கூறிக்கொள்ளும் ஜே வி பி போன்றவர்களும் இதில் அடக்கம்). ஐக்கிய இலங்கை பாதுகாப்பை ‘முற்போக்கான’ நிலைப்பாடாக காட்டும் தமிழ் குழுக்களும் உண்டு. அவர்களும் கூட தமிழ் வேட்பாளர் என்ற பேச்சுக்கு இடமில்லை என்ற பார்வை கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆழ்மன உணர்வு சில சமயம் புறத்தைச் சரியாக பிரதி பலிப்பதாக இருக்கிறது.

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவையும் வென்றெடுக்கும் நோக்கம் தெற்கின் இனவாதிகளுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இலங்கையில் தேர்தலை வெல்ல – ஜனாதிபதியாக தமிழ் வாக்குகள் தேவை இல்லை என்பதை தான் நிருபித்து இருப்பதாக முன்பு கோட்டாபய ராஜபக்ச பேசியது அறிவோம். இனவாத அணிதிரட்டல் குறைந்த அளவில் நிகழ்ந்த போதுகூட தமிழ் மக்களின் அபிலாசை முதன்மை வகிக்கும் நிலை இருந்ததில்லை. தமிழ் பேசும் மக்களின் ஒரு பகுதியினரை தமது பக்கம் எடுப்பது மட்டும் அவர்களுக்கு போதுமானதாக இருந்து வந்திருக்கிறது. இதனால்தான் முஸ்லிம் வாக்குகள் பிரிக்கப்படுவதும் பின்பு கிழக்கு தமிழ் வாக்குகள் உடைக்கப்படுவதும் அவர்களுக்கு உவப்பான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. புலிகளை எதிர்த்தல் என்பது ஐக்கிய இலங்கையை பாதுகாத்தல் மற்றும் தமிழ் தேசிய கருத்து மற்றும் கட்சிகளை எதிர்த்தல் என நிறுவப்பட்டு வருகிறது. இவாறு பிரிக்கப்பட்ட வாக்குகள் – குறிப்பாக கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் – இனவாத வேட்பாளரின் பகுதிகளாக மட்டுமே இயங்கி வரும் வரலாற்றை நாம் அறிவோம். உடைந்த தமிழ் வாக்கு போதும் தெற்கில் தலைமையப் பிடிக்க என்பதுதான் இனவாதிகளின் கணக்கு.

 ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் வாக்கு என்ற தனிப்பட்ட அல்லது ஒன்றுபட்ட வாக்குத்தொகுதி என்ற நிலை இன்று இல்லை. தெற்கின் அரசியல் போக்கை நிலை நிறுத்தும் பலம் தமிழ் வாக்குகளுக்கு இல்லை. சுமந்திரன் முன் வைக்கும் வாதத்தின் அடிப்படைத் தவறை இதில் இருந்துதான் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் பெரும் தொகையாக திரண்டு கூட்டமைப்புக்கு வாக்கு வழங்கிய காலத்தில் இணைந்து கொண்ட சுமந்திரன் அந்த வாக்கு சிதறுவதற்கு என்ன காரணம் என விளக்க வேண்டும். இதில் கூட்டமைப்புக்கும் பங்குண்டு. சுமந்திரனுக்கும் பங்குண்டு. தங்களுக்கான உரிமைகளைப் போராடி வெல்லக் கூடிய சக்தி கூட்டமைப்புக்கு இல்லை என மக்கள் உணர்வதும் இதற்கு காரணம்.

பேரவை, பொதுச்சபை என உருவாகும் கட்டமைப்புக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் இருக்கும் முக்கிய பலவீனம் அரசியற் பலவீனம். எந்த அரசியல் அடிப்படையில் இயங்குகிறார்கள் என கேள்வி கேட்டால் பதில் தருவது கடினம். குழப்பமான எழுந்த மானமான நிலைப்பாடுகளின் கலவையாக இயங்குவது இதற்கு காரணம். தமிழ் மக்கள் தாமாக தீர்வை எடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்ற முடிவு மிதவாத கட்சிகளின் – அதன் தலைமைகளின் உள்ளார்ந்த முடிவாக இருக்கிறது. தீர்வு- வெளியில் இருந்து வர வேண்டும். இந்தியா – மேற்கு மாறும் மேற்கத்தேய அமைப்புக்கள் தான் தீர்வை வழங்க முடியும் என பெரும்பான்மையானவர்கள் நினைக்கிறார்கள். சர்வதேசத்தை எமது பக்கம் திருப்புவது எவ்வாறு என்ற பேச்சின் பின்னால் செறிந்து நிற்பது இந்த அவநம்பிக்கையுமே. சர்வதேசத்தின் கவனக் குவிப்பு என்பதை முதன்மைபடுத்திய திட்டமிடல் மிக தவறான பாதைக்கே எடுத்துச் செல்லும். தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு வாக்குகளும் ஒட்டு மொத்தமாக திரண்டு ஒரு இடத்தில் பதிவு செய்த போதுகூட சர்வதேச உறவுகளை மீறி – இலங்கை அரசை மீறி தீர்வு திரளப்போவதில்லை. சர்வதேச உறவுகள் மற்றும் தெற்காசிய மாற்றங்களை கறுப்பு வெள்ளை முறையில் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆழமான அரசியல் அறிதல் நோக்கி நாம் நகராமல் மக்களின் உரிமைக் கோரிக்கையை முன்னகர்த்த முடியாது. இது தமிழ் சமூகம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரும் தொய்வாக இருக்கிறது. தமிழ் மக்களின் உரிமைக் கோரல் கட்டமைப்பு பலமாக நிற்க வேண்டியது சர்வதேச சக்திகள் நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ என்பதை பொறுத்து இருக்க கூடாது. 

சுருக்கமாக சொல்வதானால், உலக மற்றும் பிராந்திய அரசியல் தெளிவின்மை, அரசியல் கொள்கை வகுக்கும் தெளிவின்மை ஆகியன சரியான செயற்திட்டம்/திட்டமிடல் இல்லாத நிலவரத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. தூர நோக்குள்ள செயற்திட்டம் இல்லாமல் பலமான கட்டமைப்பை உருவாக்க முடியாது. 

பொதுவான செயற்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். இன, மத, பிராந்திய, பால் அடிப்படையில் வேட்பாளரை தெரிவு செய்வது தவறு. வேட்பாளர் என்ன செயற்திட்டத்தை முன் வைக்கிறார் என்பதுதான் முக்கியம். இந்த அறிதல் இன்று பரவி வருவதையும் நாம் பார்க்க கூடியதாக இருக்கிறது. தமிழ் தலைமையிடம் இருக்கும் போதாமை பற்றி நாம் பேசுவதும் மற்றவர்கள் தமிழ் தலைமை பற்றி திட்டுவதும் வேறு வேறான ஓன்று என இங்கு குறிப்பிடுவது அவசியம். அரச ஆதரவு சக்திகள் – ஐக்கிய இலங்கையை காவுவதை தலையாய கடமையாக செய்து கொண்டு தம்மை இடதுசாரிகள் எனச் சொல்வோர் – புலி எதிர்ப்பை மட்டும் தலையாய தொழிலாக செய்யும் கும்பல் – என ஒரு கூட்டம் தமிழ் அரசியலை திட்டி வருவதை அறிவோம். இவர்கள் திட்டுவார் – பின் நின்று குத்துவார் – முடக்குவதற்கான குறுக்கு வழிகளைத் தேடுவர். தமக்கு ஆதரவற்ற அனைவரையும் இவர்கள் முட்டாள்கள் எனத் திட்டுவர். குறிப்பாக கொழும்பு லிபரல்கள் தாம் வடக்காரைக் காட்டிலும் கூடிய அறிவு கொண்டவர்கள் என்ற பாவனையில் இயங்குவதைப் பார்க்கலாம். அதற்கும் நாம் வைக்கும் போதாமை பற்றிய புள்ளிக்கும் சம்மந்தமில்லை.

பொதுச்சபை பற்றிய உரையாடல் ஒருவகையில் அரசியல் ஆழம் தமிழ் மக்கள் மத்தியில் வளர்வதையும் சுட்டி நிற்கிறது. வாக்குகள் முக்கியமில்லை – நாம் பலத்தைத் திரட்ட வேண்டும் என பலரும் இன்று பொதுவாக பேசுகிறார்கள். இது ஒரு சாதாரண பேச்சாக இருந்த பொழுதும் ஒருவகையில் அரசியல் பிரக்ஞை வார்ச்சியை குறித்து நிற்கிறது. கொள்கை அடித்தளம் இல்லாமல் கட்சிகளை ஒருங்கிணைப்பது தற்காலிகமானது என்ற அறிதலும் மேலோங்கி வருகிறது. எத்தகைய கொள்கை, என்ன செயற்திட்டம் என்ற உரையாடல் பலப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

செயற்திட்டம் தமிழ் பேசும் மக்களின் உரிமை மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்படும் மக்களின் கோரிக்கைகளையும் உள்வாங்க முடியும். தெற்கில் சிங்கள மக்களின் பிரதிநிதி என சொல்லிக் கொள்ளும் எந்த கட்சியிடமும் கொள்கை கோதாரி எதுவும் கிடையாது. வெளிநாட்டு கடன் மட்டும்தான் அவர்கள் அனைவருக்கும் வைக்கும் தீர்வு. தம்மை இடது சாரிகள் எனச் சொல்லிக் கொள்ளும் ஜே வி பி யின் முன்னனி செயற்திட்டம் என்ற பெயரில் முன்வைத்திருப்பது மற்றைய இனவாத கட்சிகள் முன்வைக்கும் நிலைபாட்டின் இன்னொரு வடிவம் மட்டுமே. சோஷலிச கட்சி போன்ற சிறிய கட்சிகள் தவிர மற்றைய எவரும் தமிழ் மக்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதில்லை. குறிப்பாக தேசிய கோரிக்கை. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்பது வெறும் ‘நிர்வாக’ சலுகைகளாக சுருங்கி நற்கிறது. இந்த லட்சணத்தில் அதை ‘இடதுசாரிய’ /மார்க்சிய கொள்கையாக காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.

இவற்றை தாண்டிய நிலைப்பாட்டை தமிழ் தலைமைகள் முன் வைக்க வேண்டும். தமிழ் மக்களின் தேசிய உரிமைக் கோரிக்கையை எந்த விதத்திலும் சமரசம் செய்யாமல் இதைச் சாதிக்க முடியும். அனைத்து ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கையை முன்னெடுக்க வேண்டும். ஒடுக்கப்படும் மக்கள் என குறிப்பதற்கு காரணம் ஒன்றுண்டு. அரச சக்திகளை காவித் திரியும் – மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் சக்திகள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். பல்வேறு கீழ்மையான மற்றும் பொய் பிரச்சாரங்கள் மூலம் அவர்கள் தமக்கான ஆதரவைத் திரட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். மக்களைச் சுரண்டிப் பிழைப்பவர்கள் ஒருபோதும் மக்கள் நலன் சார் கொள்கை நோக்கி வரப் போவதில்லை. இவர்களை இணைக்க முடியாது. பாதிக்கப்படும் – உரிமை கோரிக்கை நோக்கி வரும் அனைவரையும் ஒன்றிணைப்பதுதான் அவசியம்.

செயற்திட்டம், ஒடுக்கப்படும் சிங்கள மக்களின் கோரிக்கைகளையும் உள்வாங்க முடியும். தமிழ் தலைமை என்பது தமிழருக்கான தலைமை என்று இல்லாமல் – பொது செயற்திட்ட அடிப்படையில் உருவாகும் பொழுது சிங்கள மக்களையும் கவர முடியும். சிங்கள மக்களுக்கு தீர்வை வழங்கும் – வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் கொள்கையை வைக்கும் கட்சிகள் இல்லாத வெற்றிடத்தை, முன்வைக்கும் செயற்திட்டம் நிரப்ப முடியும். கொள்கை அடிப்படையிலான திரட்சி சிங்கள இனவாத – சுரண்டல் கட்சிகளின் வாக்கை உடைக்க உதவும். தமிழ் பேசும் மக்களின் வாக்கை – இனவாத, மதவாத, சாதிய அட்டிப்படையில் உடைக்கும் அரச சக்திகளுக்கு எதராக கொள்கை அடிப்படையில் திரட்டல் பலத்தைக் கூட்டும்.

சனாதிபதி பதவி கூடுதல் அதிகாரம் கொண்டது என்றும் – இந்தமுறை சர்வாதிகார தன்மை கொன்டது என்றும் – இதை இலங்கை முழுக்க அனைவரும் எதிர்க்கிறார்கள். இந்த சனநாயகமற்ற முறையை ஒழித்துக்கட்ட வேண்டும் என அனைத்து தமிழ் தலைமைகளும் கோர வேண்டும். தமிழ் மக்களின் நலனுக்கு எதிர் திசையில் இருக்கும் ஐந்தே ஜனநாயக மறுப்பை எதிர்ப்பதில் என்ன தயக்கம். பொது வேட்பாளார் இத்தகைய நிலைபாட்டை உள்வாங்குவது, அவர்களுக்கு பரந்த ஆதரவை ஏற்படுத்தும். உறுதியான உருப்படியான செயற்திட்டம் தான் முதன்மைப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில் கட்டமைக்கப்படும் கட்டமைப்பு சமூகத்தில் இயங்கும் சிவில் அமைப்பக்களின் கூட்டாக மட்டும் சுருங்கி நின்றுவிட முடியாது. சமூகத்தின் நரம்பு மையங்களாக இருக்கும் தளங்கள் அனைத்தும் உள்வாங்கப் படவேண்டும். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொடர்பாடல் என மையப்புள்ளிகளை நோக்கி திரள்வோரை அமைப்பு ரீதியாக இணைக்காமல் சமூகம்சார் பலமான அமைப்பைக் கட்ட முடியாது. எல்லா பகுதிகளிலும் சனாநாயக முறையில் மக்கள் பங்களிக்கும் கிளைகள் கட்டப்பட வேண்டும். மக்களிடம் அதிகாரம் வழங்காமல் மக்களின் பலத்தைக் கட்ட முடியாது.

இத்தகைய பலம்தான் மக்களை அதிகாரத்துக்கு இட்டுச் செல்லும் – அவர்கள் உரிமையை வெல்லும். அரசியல் பலத்தைக் கட்டுவது எவ்வாறு என்ற கலையை நாம் கற்க வேண்டும். அதிகாரத்தின் அருகில் நின்று பிச்சை எடுப்பதை மக்களுக்கான செயற்திட்டமாக நாம் முன்வைக்க கூடாது. அதிகாரத்தை உள்வாங்கும் அமைப்பை கட்டி நிறுத்துவதா அல்லது அதிகாரத்தை நம்பி வாழும் இரண்டாம் பட்ச தன்மையை ஏற்றுக்கொள்வதா என்பது எம்முன் உள்ள முக்கிய கேள்வி. நாம் சிறுபான்மை என்பதை ஏற்றுக் கொண்ட – அந்த பலவீனம் முதன்மை படுத்திய விளிம்பு அரசியலில் நாம் முடங்கி விடக்கூடாது. எண்ணிக்கையில் சிறுப்பான்மை என்பது யதார்த்தம். அதற்காக அதிகாரத்தை முகர்தல் செய்வது மட்டுமே சிறுபான்மைக்கு சாத்தியம் – தொடுதல் சாத்தியமில்லை என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் அதிகாரத்தைப் பிடிப்பது நோக்கி நகரும் பலத்தை கட்டாமல் நாம் எந்த உரிமையையும் நிரந்தரமாக வென்று விட முடியாது.