2020 இன் ஆரம்பத்தில் ‘சர்வதேச பரம்பல்’ நிலையை எட்டியிருந்த கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி, 2021 இன் ஆரம்பத்தில் தயாராகி விட்டதாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ரஷியாவை சேர்ந்த நிறுவனங்கள் அறிவித்தன. இவற்றிற்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டு தடுப்பூசிகள் போடும் திட்டமும் பல்வேறு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதே தருணம் தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சாரமும் உலகெங்கிலும் மிகவும் முனைப்பு பெற்று இருக்கிறது.
முதல்முறையாக 1796 ஆம் ஆண்டு அம்மை தொற்று நோய்க்கு தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர்(Edward Jenner) கண்டுபிடித்தார். அன்று தொட்டு தடுப்பூசிகள் மனித குலத்துக்கு அழிவைத் தருபவை என்ற பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது. 20ஆம் நூற்றண்டின் ஆரம்ப பகுதிகளில் மத கோட்பாடுகளுடன் பின்னிப் பிணைந்தே தடுப்பூசிகளுக்கு எதிரான அதிகளவிலான பிரச்சாரங்கள் இடம்பெற்றன. இந்த பிரச்சாரங்களை நம்பிய மக்கள் மிக சொற்ப அளவினராகவே காணப்பட்டனர். ஆனால் 21ஆம் நூற்றண்டில் நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.
Kantar நிறுவனம் நாடத்திய ஆய்வின் அடிப்படையில் பிரித்தானியா, பிரான்ஸ் அமெரிக்கா , ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் கோவிட்_19 ற்கான தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டுகிறார்கள். பிரித்தானியாவில் 43% , பிரான்சில் 21% பேர்களே தடுப்பூசியை போட உறுதியாக இருப்பதாக கணிப்பீடு கூறுகிறது. இவ்வாறு உறுதியாக தடுப்பூசி போடுவோம் என்பவர்களில் அது பாதுகாப்பானது என நம்புவோர்கள் பிரித்தானியாவில் 34% மும், பிரான்சில் 14% ஆகவுமே காணப்படுகிறார்கள். நிச்சயமாக தடுப்பூசி போட்டு கொள்வோம் என்பவர்களின் தொகை கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்கிறது Kantar நிறுவனம். அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் நிச்சயமாக தடுப்பூசி எடுப்போம் கூறியவர்கள் எண்ணிக்கை 47% இல் இருந்து தற்போது 30% ஆக குறைந்துள்ளது. தடுப்பூசி இன்றியே கோவிட்_19 நோய் தொற்றாமல் தற்காத்து கொள்ள முடியும் என 42% அமரிக்கர்களும், 28% பிரித்தானியர்களும் உறுதியாக நம்புவதாக Kantar நிறுவனம் தெரிவிக்கிறது.
மக்கள் மத்தியில் அரச நடவடிக்கைகள் மேல் நம்பிக்கை குறைந்து இருப்பதை இது சுட்டிக் காட்டுகிறது. பல்வேறு அரச பிரச்சாரங்களை மக்கள் நம்ப தயாராக இல்லை. கொரோனா வைரஸ் பற்றியும் தடுப்பூசி பற்றியும் தெளிவான முழுமையான தகவல்கள் மக்கள் முன் வைக்கப் படவில்லை. மாறாக மக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற பிரச்சாரங்ளும் கட்டுப்பாடுகளும் நிரம்பி இருக்கும் இத்தருணம் மக்கள் நம்பிக்கை இழந்து இருப்பது ஆச்சரியமானது அல்ல.
சமூக வலைத்தள செல்வாக்கு
மத கட்டுப்பாடுகள் இறுக்கமாகவும், மூட நம்பிக்கைகள் பரவலாகவும் இருந்த காலத்தே ஏற்படாத நிலைமை இன்றைய நிலையில் ஏற்பட காரணம் தகவல் தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி என்கிறார்கள் ஒருசாரார். இலுமனாட்டி கதைகள் போன்ற பல்வேறு பட்ட கோட்பாடுகளும் போலி செய்திகளும் காலகாலமாக இருந்து வந்தவை தான். ஆனால் இவற்றை நம்புகின்ற மக்கள் தொகை பெருக்கமடைய சமூகவலைத்தளங்களே காரணம் என்கிறார்கள். அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் நடாத்திய ஆய்வின் பிரகாரம் தடுப்பூசி நிராகரிப்புக்கு சமூக வலைத்தளங்கள் தாக்கம் செலுத்துகின்றன என்கிறது YouGov.
கோவிட்_19 தொற்றின் காரணமாக தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் மிகப்பெரும் அளவில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. சமூகவலைத்தளத்தில் ஆங்கில மொழியில் மட்டும் நிர்வகிக்கப்படும் 410 தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சார கணக்குகளை ஆய்வு செய்த போது அவை 58மில்லியன் பின்தொடர்பவர்களை(Followers) கொண்டுள்ளது என தெரிவிக்கிறது Centre For Countering Digital Hate (CCDH). அதோடு கடந்த ஒரு வருடத்தினுள் மட்டும் (டிசம்பர் 2019 – சனவரி 2020) 19% வளர்ச்சியை இந்த கணக்குகள் அடைத்திருக்கின்றன என்கிறது CCDH. Facebook, Instagram மற்றும் YouTube ஆகிய ஆகிய தளங்களே இதில் முன்னணி வகிக்கின்றன.
தடுப்பூசி தொடர்பான சமூக வலைத்தளங்களில் இடப்பெறும் உரையாடல்களை ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் நீல் ஜோன்சான் (Neil Johnson) தலைமையிலான குழு ஆய்வு செய்து வரைபு ஒன்றை உருவாக்கினார்கள்.அந்த வரைப்பின் தகவல்களின் அடிப்படையில் தடுப்பூசியை போடுவதற்கு தயக்கம் காட்டுபவர்களின் எண்ணிக்கையே அதிகமாக காணப்படுகிறது. இவ்வாறு தயக்கம் காட்டுபவர்கள் பெருபாலும் குழந்தை வளர்ப்பு, விலங்குநல ஆர்வலர்கள், இயற்கை விவசாயம், மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு போன்ற குழுக்களுடன் தங்களை இணைத்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். வரைப்பின் அடிப்பைடயில் தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரத் தளங்களுக்கு நெருக்கமாக தான் இவர்கள் இருக்கிறார்கள். பெரும்பான்மையான மக்கள் எதிர்வரும் காலத்தில் தடுப்பூசிகளை முற்றுமுழுதாக மறுப்பவர்களாக மாறும் அபாயம் இருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் நீல் ஜோன்சன்.
இந்த தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் சமூக வலைதளகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு பில்லியன் அமரிக்க டொலர்களுக்கு குறையாத வருவாயை ஈட்டி கொடுக்கிறது. 2020 ஆண்டு வருவாய் கணக்கின் படி Facebook மற்றும் Instagram இணைவாக $989 மில்லியன்களையும், Twitter $5.6மில்லியன்களையும், மற்றும் YouTube 797,000 அமெரிக்க டொலர்களையும் வருவாயாக தடுப்பூசி பிரச்சார கணக்குகள் மூலம் பெற்றிருக்கிறது.
தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சமூக ஊடகங்களை தவிர்த்து, பாரம்பரிய வெகுஜன ஊடகங்களை பயன்படுத்துவோரிலும் 63% பிரித்தானியர்களும், 56% அமெரிக்கர்களுமே கட்டாயம் தடுப்பூசி எடுத்து கொள்வோம் என தெரிவிக்கிறார்கள் என்கிறது YouGov ஆய்வுத் தகவல்.
ஆகவே இது வெறும் சமூக வலைத்தளப் பிரச்சாரம் மாட்டும் சார்ந்த ஓன்று அல்ல. இந்த ஆய்வுகள் அனைத்தும் அரசு முன்னேடுக்கும் கொள்கை மற்றும் ஆளும் தரப்புகளின் மேல் குறையும் நம்பிக்கை பற்றி கருத்தில் எடுக்கவில்லை. பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கும் பீதி மற்றும் நம்பிக்கை இன்மைக்கு அரசு பொறுப்பெடுக்க வேண்டும். மாறாக இதனை மக்கள் மத்தியில் இருக்கும் போதாமையாக சுருக்க முற்படுபவத்தை ஏற்கமுடியாது.
அறிவின் போதாமை என்ற பிரச்சாரம்
படிப்பறிவு போதாமையாக இருப்பதே இவ்வாறான பிரச்சாரங்கள் பெருகுவதற்கு காரணம் என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கபடுகிறது. இதற்கு காரணம் ஆதரமற்ற தகவல்களை நம்பி பெரிதும் பாதிக்கபடுவது நடுத்தரவர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த மக்களே என்கிறார்கள். ஆனால் இத்தகைய பிரச்சாரத்தைத் தூண்டி விடுவது அறிவுப் போதாமை உள்ள பெரும் செல்வந்தர்களாகவே இருக்கறார்கள். தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சார அமைப்புக்குள் முக்கியமானதொன்று Children’s Health Defence. 2016 இல் சூழலியலாளர் Robert F. Kennedy Jr ஆல் தொடங்கப்பட்டதே இந்த அமைப்பு. இவர் முன்னாள் அமரிக்க சனாதிபதி John F. Kennedy இன் சகோதரன் மகன். கோவிட்_19 தொற்று காலத்தில் வெளிவந்த 38மில்லியன் ஆங்கில செய்திகளையும் கட்டுரைகளையும் ஆய்வறிந்த கோர்னெல் பல்கலைக்கழகம், தனியொருவராக தவறான தகவல்களை வழக்குபவராக சனாதிபதி டொனால்ட் ட்ரெம்ப் முன்னிலை பெறுகிறார் என்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள மாணவர்களில் 35% மாணவர்களே உறுதியாக தடுப்பூசியினை எடுபோம் என்கிறார்கள். ஒப்பீட்டளவில் கல்வி அறிவு மட்டம் குறைவாக இருந்த முந்திய காலப்பகுதியில் கூட மக்களுக்கு இவ்வளவும் நம்பிக்கையின்மை இருந்ததில்லை.மக்களுக்கு அறிவின்மை என்ற லிபரல் குற்றச் சாட்டு மிகத் தவறானது. அரச கொள்கைகள் எவ்வாறு மக்களைப் பாதிக்கிறது – எத்தகைய அனுபவத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்பதை அவதானிப்பது அவசியமானது. இந்த அடிப்படையில் இருந்து எழும் அனுபவ ரீதியான முடிவுகளை நோக்கி மக்கள் நகர்வது இயல்பானதே. விஞ்ஞான ஆலோசனையின் அடிப்படையிலா அரசுகள் இயங்குகின்றன? இலாப நோக்கிற்காக எத்தகைய சமூக விரோத கொள்கைகளையும் முன்னெடுக்க தாயார் என்பதையே எல்லா அரசுகளும் காட்டி வந்திருக்கின்றன. அப்படி இருக்க மக்கள் மட்டும் ‘அறிவு பூர்வமாக’ இயங்க வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி?
அனைத்து விசயங்களிலும் அறிவுபூர்வமாக இயங்கக் கூடிய ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்ப வேண்டுமானால் இலாப நோக்கை மட்டும் முதன்மை படுத்தி இயங்கும் அரசு மாற வேண்டும் – புதிய சமூக ஒழுங்குமுறை நடைமுறைக்கு வர வேண்டும். முதலாளித்துவ அமைப்பு முறை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். சமூக அறிவை முழுமையாக உள்வாங்கிய – அனைத்து மக்களின் நலன்களையும் முதன்மைப் படுத்தும் திட்ட மிட்ட பொருளாதார சமூக அமைப்பு முறை நடைமுறைக்கு வர வேண்டும். அரச – மற்றும் அதிகார சக்திகள் தாம் முன்வைக்கும் நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கும் வேளைகளில் அவர்களுக்கு அறிவில்லை எனக் குற்றம் சுமத்துவது புதிய விடயம் இல்லை. இது காலம் காலமாக நடப்பதுதான்.
வலதுசாரி தேசியவாதத்தின் எழுச்சி
பெரும்பாலான டிரம்ப் ஆதரவாளர்கள் தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு பெரும் நிதிஉதவி அளித்தார்கள். பிரித்தானியாவில் 2016 இல் பிரெக்ஸிட் வாக்கெடுப்பின் போதே தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சாரமும் முடுக்கிவிடபட்டிருந்தது. பாதிக்கபடும் மக்களை பொப்புலிச இனவாத கருத்துக்கள் மூலம் கவர்ந்திழுக்கும் அரசியல் உலகெங்கிலும் கூர்மையடைந்து இருக்கிறது. கோவிட்_19 வைரஸ் ஆனாது சீனாவில் (அல்லது அமெரிக்காவில்) பரிசோதனை கூடத்தில் உருவாக்கபட்டது என இவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் தடுப்பூசி வியாபாரம் உலகெங்கிலும் நடைபெறும் எனவும் எமது நாட்டினை நாம் தான் அந்நிய சக்திகளிடம் இருந்தது காத்திட வேண்டும் எனவும் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். நாம் தன்னிறைவு பெற வேண்டும் என்ற ரீதியில் இந்த வலதுசாரி தேசியவாதம் இனவாத அரசியலைப் பரப்புகிறது.
இறையாண்மை கொண்ட தேசமாக மாறுகிறோம் என்று வெற்று கூச்சல் போடும் வலதுசாரிகளின் பித்தலாட்டங்கள் பிரெக்ஸிட் இன் போது அப்பட்டமாக தெரிந்தன. மாற்று அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தாமல் ஓர் நாட்டிற்குள் எல்லாவற்றையும் மாற்றி விடுவோம் என்ற அவர்களின் பொய்கள் அம்பலப்பட்டு கிடக்கின்றன. இதற்குள் மாநிலத்தில் ஆட்சியை பிடித்து நமது நிலத்தை நாமே ஆளுவோம் என்று பொப்புலிச இனவாத அரசியலை முன்னெடுக்கிறது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி. இயற்கை மருத்துவம், தடுப்பூசி எதிர்ப்பு, இயற்கை விவசாயம் , வீட்டில் மகப்பேறு போன்ற மக்கள் உயிருக்கு உலை வைக்கும் பிரச்சாரங்கள் பலவும் நாம் தமிழர் கட்சி மேடையில் ஒலிக்கின்றன. இந்த குரல்களின் வீச்சும் நாம் தமிழர் போன்ற அமைப்புகளின் வளர்ச்சியும் பின்னிப்பிணைந்தே இருக்கின்றன. தமிழ் சமூகத்தில் இந்த குரல்களின் வீச்சம் முன்னேப்போதும் இல்லாதவாறு இப்போது அதிகரித்து இருப்பது வெளிப்படையானது.
ஆதாரமற்ற பிரசாரங்களுக்கான எதிர்வினை
ஆதாரமற்ற தகவல்களை நீக்குவதற்கும், அவற்றைப் பிரச்சாரம் செய்யும் தளங்களை முடக்குவதற்கும், இந்த பிரச்சாரங்களை செய்பவர்களை கைது செய்வதற்கும் முயற்சி செய்கிறது ஆளும் தரப்புகள். இதன் மூலம் இவ்வாறான பிரச்சாரங்களை தடுத்தது விடலாம் என அவர்கள் நம்புகிறார்கள்.
1998 இல் பிரித்தானிய மருத்துவர் Andrew Wakefield பாரம்பரியம் மிக்க The Lancet மருத்துவ இதழில் தனது ஆய்வு தொடர்பான கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அம்மைத் தொற்று நோய்க்கான தடுப்பபூசியின் பின்விளைவுகளுக்கும் Autism நோய் ஏற்படுவதற்கும் தொடர்பிருப்பதாக கூறியது அவரது ஆய்வு. மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய அந்த ஆய்வுக்கட்டுரையை நீக்கியது The Lancet இதழ். 2010 ஆம் ஆண்டு Andrew Wakefield பிரித்தானிய மருத்துவர் பதிவில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனால் அம்மை தடுப்பூசிக்கு எதிரான அவரது பிரச்சாரங்கள் இல்லாமல் ஆக்கப்படவில்லை. முடக்குதலும் நீக்குதலும் மூலமாக எந்தவொரு விடயத்தினையும் முற்றாக இல்லாமல் செய்ய முடியாது. தற்போது கூட கோவிட் வைரஸ் பரவுவதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு உண்டு என சிலர் சொல்லுகிறார்கள். இது பற்றிய விஞ்ஞான ஆய்வுகள் தேவையே தவிர தடைகள் அல்ல.
மேலும் இந்த சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆளும் வர்க்கம் மக்களை உளவு பார்க்கிறது. பிரெக்ஸிட்க்கு ஆதரவான பிரச்சாரத்துக்கு ஆதரமற்ற தகவல்களை பரப்ப துணை போனது சமூக வளைத் தளங்கள் என்பதை அறிவோம். அமெரிக்க சனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்காக பொய்யான பரப்புரைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. இவ்வாறு பல்வேறு பட்ட தருணங்களில் தவறான தகவல்களை பரப்பி தமக்கான அரசியல் இலாபத்தை மேற்கொள்வது இந்த ஆளும் தரப்புகள் தான். சமூக வலைத்தளங்களின் வருகை சாமானிய மனிதர்களுக்கான பேச்சுரிமையை ஓரளவு அதிகரித்து இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. தமது கட்டுப்பாடுகளுக்குள் இருந்த ‘ஊடக வெளி’ இன்று தமது முழு கட்டுப்பாடுகளுள் இல்லை என்பதுவும் ஆளும் தரப்புக்கு குடைச்சல் கொடுக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தி தமது கட்டுக்குள் கொண்டுவர முயல்கிறது ஆளும் வர்க்கம்.
ஆளும் வர்க்கம் போடு தடைகள் மக்கள் நலன்களை முதன்மைப் படுத்தியது அல்ல – மாறாக அவர்கள் தமது கட்டுப்பாட்டை அதிகரிப்பது பற்றியது. அதனால் தான் அத்தகைய நடவடிக்கைகளை நாம் ஆதரிக்க முடியாது. அமெரிக்காவில் காங்கிரஸ் கட்டிடத்தில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து Twitter மற்றும் Face Book சனாதிபதி டிரம்பின் கணக்கை தற்காலிகமாக தடை செய்தன. ட்ரம்ப் எவ்வாறு ஒரு பகுதி அதிகார சக்திகளின் ஆதரவை இழந்து விட்டார் என்பதை இது காட்டுகிறது. அதே சமயம் இத்தகைய ‘பிரபல’ தடை நடவடிக்கைகள் பெரும்பாலும் தற்காலிகமானவை என்பதை அவதானிக்க வேண்டும். இதே சமயத்தில் பல்வேறு இடது சாரிய போராட்டச் சக்திகளது கணக்குகளும் அடித்து மூடப்படுகின்றன. அவற்றில் பெரும்பான்மை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளான. அதிகார சக்திகளின் ‘தடை’ நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது போராட்ட சக்திகளே.
தீவிர வலது சாரிகள் – சமூக விரோத கொள்கை உள்ளவர்கள் ஆகியோரை ‘முடக்குகிறோம்’ என்ற பெயரில் முன் வைக்கப்படும் இந்த தடை நடவடிக்கைகள் உண்மையில் சொல்லப்படும் அந்த வேலையைச் செய்வதில்லை. மாறாக அந்த தடை நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவை பெறுவதற்கும் – அதை உபயோகித்து தமக்கு எதிரான சக்திகளை முடக்குவதுமே அதிகார சக்திகளால் நோக்கமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்டிடத்தில் நடந்த அத்து மீறலை தொடர்ந்து ‘தீவிரவாத நடவடிக்கைகளுக்கு’ எதிரான சட்டத்தை கொண்டு வர இருப்பதாக புதிய சனாதிபதி பைடன் அறிவித்து இருக்கிறார். அவ்வாறு கொண்டுவரப்படும் சட்டம் ‘தீவிரவாதத்தை’ முடிவுக்கு கொண்டு வரப் போவதில்லை என்பது நிச்சயம். மாறாக இலங்கையில் நடப்பதுபோல் இது போராட்ட சக்திகளை – எதிர்ப்பை முடக்கவே பயன்படும். நிறவெறிக்கு எதிரான போராட்டங்களும் தீவிரவாதம் என முத்திரை குத்தப்பட்டு முடக்கப்படும். வரும் காலங்களில் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும் என நன்கறிந்த அரசுகள் அதை எதிர் கொள்ள எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
இவ்வாறு வலதுசாரிய தீவிரவாத சக்திகளை முடிவக்கு கொண்டுவர முடியாது. டானல்ட் டிரம்ப் தொடர்ந்து பல்வேறு பொய்களை பரப்பி வந்திருக்கிறார். இவ்வளவு காலமும் கண்டும் காணாமல் இருந்தவர்கள் அவர் பதவி பறிபோகும் தருணம் ‘நடவடிக்கை’ எடுப்பதாக காட்டுவது மற்றவர்களை முடக்குவதை நியாயப்படுத்தவே. ஆனால் ட்ரம்பின் பொய்கள் நின்று விட்டதா? ‘எமக்கான ஊடகத்தை நாமே உருவாக்குவோம்’ என அவர் சவால் விட்டு இருக்கிறார். மில்லியன் கணக்கானவர்கள் அத்தகைய ஊடகத்தில் பங்கு பற்ற போவதுவும் – டுவிட்டருக்கு குறிப்பிட்ட வருவாய் இல்லாமல் போவதும் சாத்தியமே. இதைப் பயன்படுத்தி பில்லியனர் டிரம்ப் மேலும் இலாபம் காண்பதும் சாத்தியமே. இதனால் அவரது ‘தீவிர கருத்துக்கள் மேலும் பலப்பட வாய்ப்பு உள்ளது. டிரம்ப் போன்ற பொப்புலிஸ்டுகள் தாம் அதிகார சக்திகளுக்கு எதிர் என்ற மாயை காட்டி கவர்ச்சி ஏற்படுத்த முனைகின்றனர். அவர்களும் அதிகார சக்திகளின் ஒரு பகுதியே என்பது மறைக்கப் படுகிறது. இதனால் பல மில்லியன் கணக்கானோர் அவர்களை நோக்கி இழுக்கப் படுவது நிகழ்கிறது. அதற்கான பிரச்சாரங்களைச் செய்து ஆதரவு பலத்தைக் கட்டமைக்க அவர்களிடம் பெரும் வளங்கள் உண்டு.
ஆனால் போராட்ட சக்திகளின் நிலை வேறு. மனித வளம் தவிர வேறு வளம் அவர்களிடம் இல்லை. அவர்கள் முடக்கப்படுவது இலகுவானது. அவர்கள் மீண்டு எழுவது கடினம். அவர்களின் குரல் அனைத்து பெரும்பான்மை ஊடகங்களிலும் திட்டமிட்டு முடக்கப் பட்டிருப்பது நாம் அறிந்ததே. இடது சாரிய கருத்துக்கள் – போராட்ட சக்திகளின் நடவடிகைகள் பெரும்பான்மை மக்களுக்கு சென்றடையக் கூடாது எனபதில் மிக கவனமாக இருக்கின்றன அதிகார சக்திகளும் அவர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரும் ஊடகங்களும். குரல் முடக்கப்பட்டு செயல் ஒடுக்கப்பட்டு இருக்கும் இந்த சக்திகள் மனித வளம் மூலம் எழுச்சி அடைந்து விடாமல் இருக்க இந்த தடைகள் அவர்களுக்கு உதவுகிறது. இதனால் தான் இத்தகைய நடவடிக்கைகளை போராட்ட சக்திகள் எதிர்த்து வருகின்றன. இதனால்தான் ‘எமக்கான ஊடகத்தை நாமே உருவாக்க வேண்டும்’ என நாமும் சொல்லி வருகிறோம். எம்மிடம் வளம் இல்லை. அதனால்தான் மனித வளத்தின் ஆதரவை கோரி நிற்கிறோம். மாற்று ஊடகம் பலப்படுவதானது மக்களின் குரலை பலப்படுத்தும். கார்பரேட் – அதிகார சக்திகளின் கட்டுப் பாட்டில் இருக்கும் ஊடகங்கள் ஒருபோதும் மக்களின் குரலை பலப் படுத்தப் போவதில்லை. போராட்ட சக்திகளை முடக்குவது – அவர்கள் குரலை ஒடுக்குவது/ஒதுக்குவது சமூகத்தை பின் நோக்கி தள்ளும் நடவடிக்கை. இதை நாம் எதிர்க்க தான் வேண்டும்.
சர்ச்சைகள் பெருக்கமடைய முக்கிய காரணம்
இன்றைய மக்களின் இந்த நிலைப்பாட்டுக்கு மேலே பேசப்பட்ட பல்வேறு காரணகள் சொல்ல பட்டாலும், மக்கள் அரசின் மீதும் இந்த கட்டமைப்பின் மீதும் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதே இதற்கான அடிப்படை காரணம். இன்று சொல்லப்படும் காரணங்களில் பலவும் தொன்றுதொட்டு இருந்தது வருபவை. நம்பிக்கை இழப்பது எவ்வாறு நடக்கறது என்பதை நாம் அவதானிக்க வேண்டும். கோவிட்_19 பற்றிய தகவல்களை வழங்கியமை தொடர்பில் பிரித்தானிய அரசினை 2019 ஏப்ரல் இல் நம்பியவர்கள் 67 சதவீதமாகவும் ஆகஸ்ட் இல் அது 40 சதவீதமாகவும் வீழ்ச்சி அடைந்தது. ஏற்கனேவ அரசுகளின் மீது நம்பிக்கை குறைந்து வந்த மக்களுக்கு கோவிட்_19 தொற்றுக்காலம் அதனை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. மக்களிற்கு விஞ்ஞானம், அறிவியல், நவீன மருத்துவம் மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என்று கொள்ள முடியாது. ஆனால் இந்த துறைகள் யார் கைகளில் இருக்கிறது என்பதே மக்களின் பிரச்னையாக இருக்கிறது.தற்போது தடுப்பூசிக்கு எதிராக நடக்கும் பிரச்சாரங்களில் பெருபாலும் வில்லனாக இருப்பவர் பில் கேட்ஸ் ஆவர்.
எல்லோரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று சொல்ல பில்லியனர் பில் கேட்ஸ் என்ன மருத்துவரா? என்பதே சாதரண மக்களின் கேள்வி. தடுப்பூசி ஆராச்சிகளுக்கு பில் கேட்ஸ் இன் தொண்டு நிறுவனம் நிதியதாரம் அளிக்கிறது. ஒரு தனியார் நிறுவனம் ஏன் இதனை செய்கிறது. அதனை ஏன் அரசால் செய்ய முடியவில்லை என்பதில் இருந்தே மக்கள் இந்த கட்டமைப்பு மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள். மக்கள் தேவையை நிறைவு செய்ய முதலீடு செய்யத் தயங்கும் அரசு பெரும் பண நிறுவனங்களை முன் நிறுத்துவது மக்களின் நம்பிக்கையை உடைக்கிறது. 35 பில்லியன் டாலர்களுக்கும் மேற்பட்ட வருவாய் உள்ள சந்தை தடுப்பூசி சந்தை என கொரோனா காலத்துக்கு முன்பே கணித்து விட்ட சில நிறுவனங்கள் இந்த சந்தையை தமது கைகளில் வைத்திருப்பதற்காக கடும் போட்டி போட்டு வருகின்றன. பிரித்தானிய கம்பனியான GlaxoSmithKline பிரான்சுக் கம்பனியான Sanofi அமெரிக்க கம்பனியான Merck and Pfizer முதலியன இந்த சந்தையின் பெரும் பகுதிய தமது கட்டுப்பாட்டில் வைத்து வந்திருக்கின்றன.
சீன மற்றும் ரஷ்யா தாம் தடுப்போசி கண்டு பிடித்து விட்டதாக முதன் முதல் அறிவித்த பொழுது இந்த மேற்கு நாடுகள் எதுவும் அவற்றை கண்டு கொள்ளவில்லை. அவை தவறான தகவல்கள் என்பது போலவும் – முழுமையாக பரிசோதிக்கப் படாதவை என்றும் மக்களுக்கு சொல்லப் பட்டது. இதைத் தொடர்ந்து பிரித்தானியா தான் முதன் முதலாக தடுப்பூசியை கண்டு பிடித்திருப்பதாக அறிவிக்கப் பட்டது. பிரபலமாக உலகெங்கும் பரப்பப் பட்டது. ஆனால் இந்த தடுப்பூசியின் நம்பகத் தன்மை பற்றி நடந்த சர்ச்சை பலருக்கு தெரியாது. ‘ஆக்ஸ்போர்ட் சர்ச்சை’ என பலராலும் அழைக்கப்படும் இந்த விவகாரம் தடுப்பூசி (Oxford-AstraZeneca vaccine)- பற்றி பல கேள்விகள் சார்ந்ததாக இருக்கறது. தாம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனவும் – இந்த தடுப்பூசி முழுமையாக பரிசோதிக்கப் படவில்லை எனவும் பேராசிரியர்கள் சிலர் கார்டியன் பத்திரிகைக்கு செவ்வி கொடுத்துள்ளார்கள்.
இந்த சர்ச்சை கிளம்புவதை தொடர்ந்து தமது தடுப்பூசி 62% செயலூக்கம் மட்டுமே கொண்டது என ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள். Pfizer and BioNTech ஆகிய கம்பனிகளின் தடுப்பூசி 90% செயலூக்கம் கொண்டது என சொல்லப் படுகிறது. இது தவிர பிரித்தானியாவில் அனுமதி வழங்கப் பட்ட மூன்றாவது தடுப்பூசியாக இருக்கும் Moderna 95% செயலூக்கம் கொண்டதாக சொல்லப்படுறது. மேலும் பல்வேறு தடுப்போசிகள் பல்வேறு கம்பனிகள் அறிமுகப் படுத்தப்படுத்த உள்ளன (GSK/Sanofi, Novavax, Valneva, Janssen, Gamaleya ஆகியனவற்றை குறிப்பிடலாம்). இந்தியாவில் தயாரிக்கப் படும் Covaxin தடுப்பூசி பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. Bharat Biotech என்ற இந்திய கம்பனி தயாரிக்கும் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப் பட்டிருப்பது தமக்கு அதிர்ச்சி தருவதாக கூறி இருக்கிறது All India Drug Action Network.
பிரித்தானியாவுக்கு தேவையான Oxford-AstraZeneca vaccine – தடுப்பூசி தயாரிக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. இந்தியா தமக்கு தேவையான தடுப்பூசியை தயாரிக்காமல் ஏற்றுமதிக்காக – இலாபத்தை முதன்மைப் படுத்தி இயங்குவதும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. உலகின் முதன்மை தடுப்பூசி தயாரிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது என வீண் பெருமை பேசும் இந்திய அரச சக்திகள் இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கொத்து கொத்தாக மரணித்து கொண்டு இருப்பது பற்றி பேசுவதே இல்லை. அவர்களை காப்பாற்றுவதற்கு முதலீடோ – நடவடிக்கையோ முன்னெடுக்கப் படவில்லை. உலகிலேயே அதிக பதிப்பை சந்தித்து இருக்கும் இந்தியாவில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மெதுவாகவே நடக்கிறது.
தடுப்போசி பற்றி பெரும் கம்பனிகளுக்கும் – அந்த கம்பனிகள் இருக்கும் நாடுகளுக்கும் முரண்கள் – சச்சரவுகள் நிகழத் தொடங்கி விட்டது. இந்த தடுப்பூசி யுத்தம் இலாபத்தை திரட்டுவது தொடர்பானது. முதன் முதலாக ஜேர்மன் கம்பனியான CureVac தடுப்பூசி கண்டு பிடிப்பதை நெருங்கி விட்ட செய்தி வந்த போது அந்தக் கம்பனியை அமேரிக்கா வாங்க முயன்றதை அறிவோம். ஜேர்மனிய அரசு தலையிட்டு இந்த விற்பனையை தடை செய்ததையும் அறிவோம். இலபத்தை மட்டுமே குறியாக கொண்டு இயங்கும் நடைமுறையால் யாரிடம் தடுப்பூசி இருக்கிறது என்பது பெரிய பிரச்சினையாகிறது.
அதே போல் Pfizer and BioNTech ஆகிய கம்பனிகள் அவர்தம் தடுப்பூசி மூலம் குறைந்த பட்சம் $13 பில்லியன் டாலர்கள் லாபத்தை எடுக்கும் என மோர்கன் ஸ்ரான்லி வங்கி கணித்துள்ளது. ஒரு தடுப்போசி $19.50 டாலர்கள் (கவனிக்க 20 அல்ல 19.50!) என்ற அறாவிலைக்கு விற்கின்றன இந்தக் கம்பனிகள். செயலூக்கம் அதிகமாக உள்ள Moderna தடுப்பூசி $32 to $37 டாலர்களுக்கு விற்கப் படுகிறது. இவர்கள் குறைந்தது £30 பில்லியன் டாலர்கள் லாபம் எடுப்பார்கள் என சொல்லப் படுகிறது. செயலூக்கம் குறைந்த Oxford-AstraZeneca தடுப்பூசி $3 to $5 என குறைந்த விலையில் இருப்பதால் அதையே மக்களுக்கு வழங்க அதிகளவில் தயாரிக்க முயற்சிக்கிறது அரசு. அவர்கள் மக்கள் நலன் கொண்டு முதலீடு செய்வதாக காட்டும் முகத்தின் கோர வடிவம் இதுதான். Oxford-AstraZeneca தடுப்பூசியின் மூலம் தாம் எந்த லாபமும் எடுக்க மாட்டோம் என AstraZeneca கம்பனி கூறியிருப்பதாக ஒரு பிரச்சாரம் நடக்கிறது. ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகளை தம் வசம் வைத்திருக்க இவ்வாறான ஒப்பந்தத்துக்கு அவர்கள் உடன்பட்டது உண்மை தான். ஆனால் யூலை 2021 உடன் அவர்கள் கூறும் பெரும்பரவல் காலம் முடிவுக்கு வருகிறது என்பதை Financial Times பத்திரிகை வெளிக்காட்டி உள்ளது. அவர்களும் மில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டுவார்கள் என கணிக்கப் பட்டுள்ளது. அதே சமயம் இந்த இலாபத்தில் 6% ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் எடுக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. கல்வி கூடங்கள் உட்பட எவ்வாறு எல்லா ‘நிறுவனங்களும்’ இலாபத்துக்கு சேவை செய்ய திருப்ப படுகின்றன என்பதற்கு இது நல்ல உதாரணம்.
இந்த நிலையில் மக்களுக்கு சந்தேகம் வருவது இயற்கையே. ஆனால் தடுப்பூசி பற்றி எந்த கேள்விகளுக் கேட்க முடியாத முறையில் கடுமையான கட்டுப் பாடுகளை அரசு உருவாக்கி வருகிறது. தடுப்பூசியை கேள்வி கேட்டோ அல்லது விமர்சித்தோ எழுத்தப்படும் சமூக வளத் தளங்கள் அடித்து மூடப் படுகின்றன. இந்த நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமான உரையாடலைத் தடை செய்கிறது. மேலும் மேலும் மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
இதே சமயம் எல்லோரும் தடுப்பூசி எடுத்துத்தான் ஆகவேண்டும் அரசு வற்புறுத்துவதற்க்காக அன்றி சமூக அக்கறை காரணமாக நாம் அதைச் செய்துதான் ஆகவேண்டும். தடுப்பூசி இலவசமாக வழங்கப் படும் என்றுதான் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் சொல்லி வருகின்றன. ஆனால் இது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. இருப்பினும் தடுப்பூசி தயாரிக்கும் பெரும் நிறுவனங்களுக்குள் இலாபமாக திரளும் அரச பணம் மக்களின் பணமே. இந்த கொடிய காலப் பகுதியில் கூட மக்களின் பணத்தை சூறையாடல் செய்வதில் குறியாக இருக்கின்றன சுரண்டும் வல்லூறுகள்.
மக்களின் அடிப்படை தேவைகளுக்கான கட்டமைப்பை கூட தன்னகத்தே வைத்துக்கொள்ளாத அரசுகள் மக்களின் நம்பிகையை இழந்து நிற்பது முதலளித்துவதின் வீழ்ச்சியையே காட்டுகிறது. மக்களின் இந்த நம்பிக்கையின்மையை போக்க மருத்துவம் போன்ற துறைகள் தேசியமயமாக்கப்படல் வேண்டும். அத் துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் மேம்படுத்தபடல் வேண்டும். அறிவியல் மற்றும் மருத்துவ ஆராச்சிகளும் கண்டுபிடிப்புகளும் மனித குல மேம்பாட்டுக்கானதாக இருக்க வேண்டுமே ஒழிய பல்தேசிய கம்பெனிகளின் இலாப வேட்டைக்கானதாக இருக்க கூடாது.