நின்றுகொண்டே பின்புறமாக பெல்டி அடிக்கும் ஜே.வி.பி
இன்னும் சில தினங்களில் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்போம், தொழிலாளர்களை நசுக்காதே என்ற பதாகைகளை ஏந்திய வண்ணமும், கோஷங்களை எழுப்பிய வண்ணமும் மே தின ஊர்வலத்தில் ஜே.வி.பி யினரின் மேதினப் பங்களிப்பை எதிர்பார்க்கலாம். உழைப்பவர்களுக்கிடையே வேறுபாடுகள் இல்லை, அனைவரும் சமமானவர்களே எனக் கூறும் ஜே.வி.பியினரை தமிழ் மக்கள் எந்தளவுக்கு நம்பலாம் என்பதே நம் முன்னேயுள்ள முதற் கேள்வியாகும்.ஏனெனில் அவர்களின் நடவடிக்கைகள் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதையே எடுத்துக் காட்டுகின்றன
ரணில், ராஜபக்சக்களின் சரிவினைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தி- ஜே.வி.பி மீது மக்களின் ஆதரவு ஓரளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுவும் குறிப்பாக ஜே.வி.பி மிகக் குறுகிய காலத்தில் கணிசமான வெகுஜன ஆதரவைப் பெறுள்ளது.எனினும் ஜே.வி.பியினை ஒரு மாற்று சக்தியாக கருத முடியாது. ஜே.வி.பி ஒரு போராட்ட சக்தியா என்பது கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டியிருக்கிறது. ஏனெனில் கடந்த வெகுஜனப் போராட்டத்தின் போது ஜே.வி.பி மக்களை தீவிரமாக அணிதிரட்டும் பாத்திரத்தை வகிக்கவில்லை. அவர்கள் போராட்டத்தை வேடிக்கை பார்ப்பவர்களாகவும், ஓரங்கட்டியவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்பவோ அல்லது முன்னோக்கி செலுத்தவோ அவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடவில்லை.
மாறாக ஜே.வி.பி தொழிலாளர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதில் முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்தது. வெகுஜனப் போராட்டம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நாளில் (9 மே 2022), ஜே.வி.பி போக்குவரத்து வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, கொழும்பில் வெகுஜனக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்குத் சிரமத்தை ஏற்படுத்த முயற்சித்தது. மற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் சோசலிஸ்டுகளின் கடுமையான அழுத்தம் காரணமாக அவர்கள் அப் போராட்டத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் வேலைநிறுத்தம் ஒரு பொது வேலைநிறுத்தமாக வளர்ந்தபோது, பல போர்க்குணமிக்க தொழிற்சங்கங்கள் வெகுஜன இயக்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் வேகத்தைத் தொடரவும் வேலைநிறுத்தத்தைத் தொடரத் தயாராக இருந்தன. ஆனால் ஜே.வி.பி தமது கட்டுப்பாட்டில் இருக்கும் தொழிற்சங்கங்கள் மூலம் பிரயோகித்த அழுத்தம் காரணமாக அவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட நேர்ந்தது.
ஜே.வி.பியினர் தற்பொழுது தமது அடிப்படை ‘போலி’ இடதுசாரி அரசியல் கொள்கைகளை கூட சந்தர்ப்பவாதமாக கைவிட்டுவிட்டனர். நகர்ப்புற நடுத்தர வர்க்க மற்றும் குட்டி முதலாளித்துவ வட்டங்களுக்கு ஜே.வி.பி கவர்ச்சிகரமானதாக மாறுவதற்கு இது மற்றொரு முக்கிய காரணம். இப்போது, ஜே.வி.பி “சோசலிசம்” என்ற சொல்லை அதன் சொற்களஞ்சியத்தில் இருந்து முற்றாக நீக்கியுள்ளது, அது குறைந்தபட்சம் சம்பிரதாய சொற்றொடராக இதுவரை பேணி வரப்பட்டது. இப்போது அதுவும் இல்லை. ஜே.வி.பி சோசலிசத்தை கைவிட்டது மட்டுமல்ல, இடதுசாரி இயக்கமாக அதன் கடந்த காலத்திலிருந்து மரபுரிமையாக இருந்த சிவப்பு சட்டை மற்றும் சிவப்பு நிறத்தையும் அவர்கள் அகற்றியுள்ளனர். அவர்கள் மிக விரைவாக வலது பக்கம் நகர்ந்து முதலாளித்துவ பாராளுமன்ற அரசியலை ஏற்றுக்கொண்டு விட் டனர் என்பதன் வெளிப்பாடே இது. ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிமல் ரத்நாயக்க ‘அனித்தா’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறினார்: “இப்போது சமூகத்தில் சோசலிசத்திற்காக பிரச்சாரம் செய்யும் எந்த சமூக சக்தியும் இல்லை. சில முதலாளித்துவ சீர்திருத்தங்களை வரைவதன் மூலம் இந்த நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டறிய வேண்டிய நேரம் இது. நாடு விழுந்துள்ள மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டால் , இது ஒரு மோசமான விஷயம் அல்ல. (2018.09.09. அனிட்டா செய்தித்தாள்).
அண்மையில் சுதந்திர புத்திஜீவிகள் குழுவுடனான கலந்துரையாடலில் ஜே.வி.பி.யின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்து இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. அந்த விவாதத்தில், அவர்கள் இப்போது சோசலிச சமுதாயத்திற்கான போராட்டத்தை கட்டியெழுப்புவதை கைவிட்டுவிட்டதாக அவர் தெளிவாக கூறினார். ஊடகவியலாளர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர், அநுரா சந்திப்பில் கலந்து கொண்டவர்களை கையடக்கத் தொலைபேசிகளை அணைக்கும்படி கேட்டுக் கொண்டார். அப்போது அவர் அவர்களிடம், “இலங்கையில் முதலாளித்துவ வர்க்கம் இல்லை, எனவே ஊழலற்ற முதலாளித்துவ அமைப்பைப் பேணுவதே அவர்களின் நிகழ்ச்சி நிரல்” என்று கூறினார். தமது கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை கைவிட்டுவிட்டு பெல்ட்டி அடிப்பதில் ஜே.வி.பி யினர் விண்ணர்கள் என்பதை நிரூபித்துவிட்டார்கள்.
மற்றொரு பாராளுமன்ற முதலாளித்துவ கட்சி
ஜே.வி.பி.யின் மற்றுமொரு தலைவரான நளிந்த ஜயதிஸ்ஸஒரு படி மேலே சென்று, ஜே.வி.பி (என்.பி.பி.) அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் கல்வியை – குறிப்பாக பல்கலைக்கழகங்களை – தனியார்மயமாக்குவதற்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று அண்மையில் ரூபவாஹினி தொலைக்காட்சி விவாதத்தில் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜே.வி.பி படிப்படியாக மற்றுமொரு பாராளுமன்ற கட்சியாக மாறியுள்ளது என்பது தெளிவாகின்றது
ஜே.வி.பி.யின் மற்றொரு முக்கியமான மற்றும் மோசடியான நடவடிக்கை சர்வதேச நாணய நிதியம் (IMF) பற்றிய அவர்களின் நிலைப்பாடாகும். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்குவது குறித்து அவர்கள் இதுவரை தெளிவான அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. மார்ச் 2022ல், பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, நாடு கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடாது என்ற முடிவுக்கு ஆளும் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் தள்ளப்பட்டன. அப்போதும், நாடு திருப்பிச் செலுத்துவதைத் தொடர வேண்டும் என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தினார். புதிய தாராளமயக் கொள்கைகளை நோக்கி அவர்கள் எவ்வளவு தூரம் சீரழிந்திருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜே.வி.பி தயாராக உள்ளது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பி முதலாளித்துவ அமைப்பை பொருளாதார ரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் ஏற்றுக்கொண்டுள்ளது. சிங்கள பௌத்த சித்தாந்தத்தை முன்னிறுத்தும் இயக்கமாக இது மாறியுள்ளது. ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார, பௌத்த பிரதானியான மல்வத்து அஸ்கிரி மகாநாயக்கரை கண்டியில் சந்தித்து, ஜே.வி.பி.யின் விஞ்ஞாபனத்தை வழங்கினார். “தேசயே அப்க்ஷ” (நாட்டின் எதிர்பார்ப்பு) என்ற விஞ்ஞாபத்தின் தலைப்பே ஜேவிபி என்ற சிங்கள இனவாதிகளின் உண்மையான வடிவத்தை காட்டுகிறது.
அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், “இலங்கை தேசத்தை” உருவாக்குவது பற்றி பேசுகிறார்கள். மேலும் அவர்கள் “தேசிய பாதுகாப்பிற்காக” நிற்கிறார்கள். உண்மையில், அவர்களின் ஆவணத்தில் கூறப்பட்டிருப்பது உண்மையல்ல – இலங்கையில் அப்படியொரு தேசம் இதற்கு முன் இருந்ததில்லை. மேலும் அத்தகைய ஒரு தேசக் கோட்பாட்டை அமுல்படுத்துவது தொழிலாள வர்க்கத்தின் பிளவுக்கான செய்முறையாக இருக்கும். “இலங்கை தேசம்” என்று சொல்லப்படும் போதெல்லாம், அது உண்மையில் பெரும்பான்மை சிங்கள பௌத்த அடையாளத்தை மட்டுமே குறிக்கிறது என்பது மறைக்க முடியாத ஒரு உண்மை. புதிய அரசியலமைப்புக்கான தமிழ் மக்களின் கோரிக்கை பற்றி அவர்களின் ‘தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம்’ என்ற சிறு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களின் தேர்தல் முன்னணியால் முன்வைக்கப்பட்ட அந்தக் கையேட்டில், அவர்கள் “தேசிய ஒற்றுமை – ஒரே நாடு, வேற்றுமை மற்றும் சமத்துவத்தில் ஐக்கியம் – இலங்கை தேசம்” என்று வாதிடுகின்றனர். இது ஒரு வகையில், ஜனநாயக உரிமைகள் மற்றும் தங்களுடைய சொந்த அடையாளத்தைக் கோரும் தமிழ்த் தொழிலாளர்களுக்கு எதிரானது.
மேலும், “தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்கமும்” என்ற அவர்களது சிறிய கையேட்டில் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் அல்லது படைமுகாம்களுக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கோரிக்கை உட்பட தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகளுக்கு தீர்வு காணத் தவறிவிட்டது. இந்த புறக்கணிப்பு ஜே.வி.பி.யின் தேசிய பிரச்சினை பற்றிய புரிதலின் வரம்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஜனதா விமுக்தி பெரமுன அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் 2020இல் அதிகாரத்தை பிடிப்போம் என்று முன்பு பிரகடனம் செய்திருந்தார்கள். எப்பாடுபட்டாவது சமரசம் செய்து அதிகாரத்தை கைப்பற்றுவதே அவர்களது தற்போதைய கொள்கையாக உள்ளது. ஜே.வி.பி இன்னொரு இடதுசாரிய முலாம் பூசப்பட்ட பௌத்த இனவாதக் கட்சி. அவர்கள் சொல்லும் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைச் சாத்தியமாக்கும் எந்தச் செயல் திட்டங்களும் அவர்களிடம் இல்லை. அவர்களின் செயல் திட்டம் அனைத்தும் இலங்கையின் ஒருமைப்பாட்டை பேனுவதிலேயே இருக்கின்றது. இடதுசாரியக் கவர்ச்சி பல தமிழ் பேசும் இளைஞர்களை தன்பால் இழுக்க அவர்களுக்கு உதவி இருக்கிறது.
போராட்ட ஆர்வம் கொண்ட தமிழ் இளையோரை ஜே.வி.பி ஒருபோதும் உள்வாங்கி கொள்ள முடியாது. சிங்கள இனவாதத்தை ஏற்றுக் கொண்டு ஐக்கிய இலங்கைக்காக பாடுபடுவதை முதன்மை நிலைப்பாடாக எடுத்த பின்னர்தான் இந்த இளையோர் இடதுசாரிய இயக்கத்தில் இருக்க முடியும் என்ற நிலைப்பாடு அவர்களை இவர்தம் இயக்கத்திற்கு வெளியேதான் நிறுத்தி வைக்கும். இவர்கள் குறைந்த பட்சம் தமது கட்சிக்குள் இருக்கும் இனவாதத்தை ஒழிப்பதற்காகவாவது முயல வேண்டும். தமிழ் சிங்கள மக்களை வேறுபாட்டுடன் கருதும் நிலையை முதலில் கைவிட வேண்டும். அதன் பின்னர் அவர்கள் சமத்துவம் பற்றி பேசலாம்.