சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல

341 . Views .

திவாலாகியிருக்கும் இலங்கையை மீட்டெடுப்பதற்காக IMF இலங்கைக்கு $3 பில்லியன் டொலர்களை கடன் மறு சீரமைப்பு தொகையாக வழங்கியுள்ளது. இப்பிணை எடுப்பு தொகையானது எதிர்வரும் நாலு ஆண்டுகளில் பகுதி பகுதியாக  வழங்கப்படும். திவால்நிலையை அறிவித்தபின்னரும்கூட, இலங்கை அரசாங்கம் தனது பாரிய கடனை (35 பில்லியன் டொலர்களுக்கு மேல்) திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்து வருகிறது. இலங்கை எதிர்கொள்ளும் ஆழமான நெருக்கடியைத் தீர்க்க இந்த ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் நிதி போதுமானதாக இருக்காது. ஏனெனில் இது ஒரு கடன் மறுசீரமைப்பு தொகையே தவிர பொருளாதார சீரமைப்பு அல்ல. கடன் கொடுத்த நாடுகளால் திருப்பிச் செலுத்துதலின் சில பகுதிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எனினும் கடனை திருப்பி செலுத்துவதானால் ஒவ்வொரு ஆண்டும் IMF கடனாக வழங்கியதை விட அதிகமாகவே அரசாங்கம் செலவிட வேண்டியிருக்கும்.

இது நான்கு வருட செயல்திட்டம்- 2026 இல் முடிந்துவிடும் என்கிறார் ரணில். கடனை மட்டுமே நம்பி வாழும் இலங்கை நான்கு வருடத்தில் கடனை அடைத்து பொருளாதார மீட்சி பெற்றுவிடும் எனக் கூறுவது வெறும் கற்பனையில் மட்டுமே சாத்தியம். இதன் ஆழம் புரியாமல், கடன் பெற்றதை பெருமையாக நினைக்கிறார்கள் இந்த அரசும் அதன் சிறு ஆதரவாளர்களும். அதற்கேற்றாற் போல் பட்டாசு வெடித்தும் கொண்டாடுகிறார்கள் அரச ஆதாரவாளர்கள். முன்னர் IMF இற்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர்கள் பலர் தற்பொழுது ரணிலுடன் இணைந்து அதற்கு தமது முழு ஆதரவையும் வழங்குகிறார்கள். இவர்கள் எதன் அடிப்படையில் முதலில் எதிர்த்தார்கள் பின்னர் எதன் அடிப்படையில் தற்பொழுது ஆதரிக்கிறார்கள்? இது அவர்தம் சொந்த அரசியல் சுயலாபம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

அரசாங்கம், வலதுசாரி எதிர்க்கட்சி மற்றும் இடது என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினரால் IMF ஒப்பந்தம்  “முழுமையான தீர்வு” என்று முன்வைக்கப்படுகிறது. IMF உடன் இணைந்து “உட்கட்டமைப்பு சீர்திருத்தம்” என்ற பெயரில் அரசு செயற்படுத்தும் நடவடிக்கைகளே  இதற்கு காரணமாகும். ஏற்கனவே நடைமுறைப்படுத்தத் தொடங்கிய இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு பெரும் நெருக்கடிகளை உருவாக்கி வருகிறது. ஊதிய முடக்கம் மற்றும் குறைப்புக்கள், கூடுதல் நேர கொடுப்பனவுகளை குறைத்தல், அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரிப்பது, வரி அதிகரிப்பு போன்றன அச்சீர்திருத்தத்தின் சில பகுதிகளாகும். 

லங்கா ஹாஸ்பிடல், டெலிகொம் மற்றும் பிற சேவைகளை விற்பனை செய்வதற்கான திட்டங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. IMF இடமிருந்து ஒத்துழைப்பை பெறவேண்டுமாயின் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும் எனக் கூறிய அரசு தற்பொழுது லாபத்தில் இயங்கும் நிறுவனங்களைக் கூட மறு சீரமைப்பு என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கின்றது. பொருளாதார சீரமைப்பு என்ற பெயரில் இவ்வரசு யாருக்கு சேவகம் செய்கின்றது? மக்களுக்கா? தனியார் நிறுவனங்களுக்கா?.

இந்த நடவடிக்கைகள் அதிக கஷ்டங்களை மக்களுக்கு உருவாக்குவது மட்டுமல்லாமல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கும். IMF ஒப்பந்தங்கள் உண்மையில் மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்குப் பதிலாக நிலைமைகளை மோசமாக்கும் என்பதையே அதன் வரலாறு சுட்டி நிற்கிறது. அர்ஜென்டினாவில் IMF இன் ஈடுபாடு,  எப்படி அம்மக்களின் வாழ்க்கை நிலைமைகளை தொடர்ந்து சிதைக்கிறது என்ற வரலாறு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

IMF உடனான கடந்த ஆறு மாத பேச்சுவார்த்தைகள் மற்றொரு முக்கிய அம்சத்தை மையமாகக் கொண்டிருந்தன. சீனா மீதான புவிசார் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல் அது. இந்த ஒப்பந்தத்திற்கு சீனாவின் ஆதரவைப் பெற்றதாக அரசாங்கம் இப்போது கூறினாலும், அவர்கள் சீனாவுடன் என்ன ஒப்பந்தம் செய்தார்கள் என யாருக்கும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வெளிப்படைத்தன்மை இல்லாமை இலங்கை அரசியலில் ஒன்றும் புதிதல்ல. தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பெற்றுக்கொண்ட இன்னுமொரு முக்கிய அரசியல் பண்பு இதுவாகும். 

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில்,  இந்த ஒப்பந்தங்கள் தற்காலிகமானவை மட்டுமே என்பது தெளிவாகிறது.  அவர்களது  ‘கற்பனை வளர்ச்சி’ எங்கிருந்து வரப் போகிறது என்பதைக் குறிப்பிடாமல் எதிர்காலத்தில்  “வளர்ச்சி” உருவாகும் என்ற பார்வையுடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிப்பது ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. IMF கடனின் மூலம் பழைய கடன்கள் ஒத்திவைக்கப்படுகிறதே தவிர இலங்கை பொருளாதாரத்தில்  எந்தவொரு உறுதியான மேம்பாடுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படவில்லை. மேலும், கடந்த ஆண்டு நாட்டின் திவால் நிலைக்கு வழிவகுத்த பொருளாதார பிரச்சனைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. கடன் வழங்கத் தயாராக இருக்கும் எந்த நாட்டிலிருந்தும் கடனை வாங்குதல் மற்றும் உதவி தொகை பெறுதல்  மூலம் மட்டுமே இலங்கைப் பொருளாதாரம்  தொடர்ந்து உயிர்வாழ்கிறது. இதுதவிர, வளரும் உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கூர்மையாகி வரும் புவிசார் அரசியல் பதற்றம் ஆகியவை மேலும் சிக்கல்களை அதிகமாக்கின்றன. வங்குரோத்து அடைந்த நாடு தற்பொழுது மீண்டும் எழுந்து விட்டதாக ரணில் உட்பட ஒரு சாரார் பேசி வருகின்றனர். நிலைமைகள் எல்லாம் அப்பிடியே இருக்க அல்லது மிக மோசமாக சென்று கொண்டிருக்க எதன் அடிப்படையில் இவ்வாறு ஒரு பொய்யை கட்டமைக்கிறார்கள். 

இந்தக் கொள்கைகளின் விளைவாக, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், நாடு இதற்கு முன் சந்தித்திராத நெருக்கடியான வாழ்க்கைத் தரத்தை எதிர்கொள்கின்றனர். பட்டினி ஒருபுறமும் விலைவாசி உயர்வு மறுபுறமும் நெருக்குவதால், எந்தக் குழந்தைகள் கல்வி பெறுவது ,எந்தக் குழந்தை வேலைக்கு செல்வது என்பதைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு பல குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளது. 

ரைஸ் குக்கரில் அரிசி 

வேகும் நேரம் –  மனம் நொந்து நூடில் ஆகிறது!” 

என்று அப்துல் ரஹீம் எழுதிய கவிதை நிலைமையை படம்பிடித்துக் காட்டுகிறது(அடுத்த லைட்பில்லுக்கா நான்! (http://ethir.org/?p=8640).  

இந்த ஆண்டு பிப்ரவரி மாத நடுப்பகுதியில் மின்கட்டணம் மேலும் 65% ஆல்  அதிகரித்ததால், பணம் செலுத்த முடியாமல் மின்சாரத்தை முழுவதுமாக அணைப்பதைத் தவிர பலருக்கு வேறு வழியில்லை. மேலும்,  எரிபொருள் மற்றும் இதர முக்கிய பொருட்களின் விலை உயர்வுடன் மின் கட்டண உயர்வும் மக்களை மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கின்றது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து நுகர்வோர் விலை பணவீக்கம் சுமார் 50% ஆக அதிகரித்தமையின் வெளிப்பாடுகளே இவையாகும். எதிர்காலத்தில் சுபீட்சமான இலங்கையை உருவாக்க வேண்டும் என்றால் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் தற்பொழுது சில கஷ்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து பிரசங்கிக்கிறது. “இந்த நாட்டு மக்கள் படும் இன்னல்களை நான் அறிவேன். அரசாங்கம் என்ற ரீதியில் அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகின்றோம்” என்று ரணில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூறினார். இந்த போலி மன்னிப்பு பட்டினியால் வாடுபவர்களுக்கு என்ன ஆறுதலை வழங்கப் போகிறது. இன்னும் முதலாளிகள் ஈட்டும் அபரிமிதமான லாபத்தைக் குறைக்க அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தொழிலாளர்கள் தங்கள் பெல்ட்டை இறுக்கிக் கொள்ளுமாறு கேட்கும் அதே வேளையில், அரசாங்கம் லாபத்தைப் பெருக்கவும், முதலாளிகளின் வயிற்றைக் கொழுக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. நாட்டை சூறையாடி வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் சுக போக வாழ்க்கையில் திளைக்க வெட்டுக்கள் என்ற பெயரில் மக்கள் மீதுதான் சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன.

பெருமளவில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்த தொழிலாளர்கள் மறுக்க வேண்டும். ஏழை விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் தங்களிடம் உள்ள பெரும் கடனை செலுத்த மறுக்க வேண்டும். அத்தகைய பணம் செலுத்தாததை ஒழுங்கமைக்க பிரச்சாரங்கள் கட்டமைக்கப்பட வேண்டும். அரசாங்கம் கடனை செலுத்த மறுத்து, அந்த பணத்தை உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் அத்தியாவசியத் தொழில்களில் முதலீடு செய்யவும், போதுமான, ஜனநாயகக் கட்டுப்பாட்டில் உள்ள விநியோக பொறிமுறையை நிறுவவும் நாம் கோர வேண்டும். IMF ஒப்பந்தம் விதித்துள்ள நிபந்தனைகளை நாம் நிராகரிக்க வேண்டும். பொருளாதாரா மீட்சி பெற நமக்கு முன்னாள் உள்ள தெரிவுகள் இவையாகும்.