
அகண்ட திராவிட நாடு பற்றிப் பேசியவர் அண்ணா. அவர் ஒரு காலத்தில் பேசிய அகண்ட திராவிட நாட்டின் பகுதியாக ஈழத்தை இணைத்துப் பார்த்த வரலாறு இல்லை. அவர் சிங்களவர்களை தாக்கிப் பேசியது கிடையாது. சிங்கள அரசை தாக்கி பேசி இருக்கிறார் கருணாநிதி. சிங்கள மக்களுக்கு எதிராக இனவாதம் கக்கியது இல்லை.
தமிழ் நாட்டு தமிழ் தேசியம் வேறு – ஒடுக்குமுறையில் இருந்து எழுந்த ஈழ தேசிய கோரிக்கை வேறு. தமிழ் நாட்டில் நடந்த சமூக மாற்றங்களை தெற்கு இடது சாரிகள் கண்டுகொண்டதில்லை. பெரியாரின் சுய மரியாதை இயக்கம் செய்த சமூக புரட்சிகளை இலங்கை தெற்கு இடதுசாரிகள் என சொல்லிக் கொள்வோர் பலர் இன்றுவரை புரிந்துகொள்ளத் தயாராக இல்லை.
அதேபோல் தமிழ் நாட்டு கம்யுனிச கட்சிகள் இலங்கையில் என்ன நடக்கிறது என்று பொருட்படுத்தியது இல்லை. சில மாவோயிச குழுக்கள் மட்டும் ஈழ அரசியலில் ஈடு பட்டிருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலும் சிங்கள எதிர்ப்பு இருந்ததில்லை. புலிகளின் தலைமை கூட சிங்கள அரசு என பேசி இருக்கிறார்களே தவிர ஒருபோதும் சிங்கள மக்களின் எதிரியாக தம்மைக் காட்டிக் கொண்டதில்லை.
தமிழ் தேசியம் சமன் சிங்களவர்கள் எதிர்ப்பு என்ற பார்வை முன்பு ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் ஈழ மக்கள் மேலான இனவாத தாக்குதல்கள்தான் தமிழ் நாட்டில் ஈழ ஆதரவு அலையை வலுப்படுத்தியது. தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் இன்று ஈழ அரசியலை வாக்கு வங்கி நிரப்ப பயன்படுத்திக் கொள்கிறார்கள் என விமர்சிக்கிறோம். அது உண்மைதான். ஆனால் இதன் பின்னால் இன்னொரு உண்மை உண்டு. ஈழ விடுதலை – அல்லது ஈழ மக்களுக்கான உரிமைக்குரலை தாம் தூக்கினால் தமக்கு ஆதரவு கூடும் என ஏன் அரசியல் வாதிகள் நம்புகிறார்கள் ? தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் பரந்து கிடக்கும் ஈழ மக்கள் பற்றிய ஆதரவு நிலைப்பாடுதான் அதன் அடிப்படை.
இதை தவிர்த்து – அதாவது ஈழ மக்கள் மேலான வன்முறை நடவடிக்கை பற்றிய பார்வை தவிர்த்து- தமிழ் நாட்டுக்கும் ஈழத்துக்குமான உறவைப் புரிந்து கொள்ள முடியாது. தமிழ் நாட்டில் தேசிய கோரிக்கை வளர்ச்சி அடைந்த கோரிக்கை அல்ல – ஈழ கோரிக்கையின் மேல்தான் அது நிற்கிறது. இது சிறுபான்மை.
தமிழ் நாட்டு அரசியல் அதிகார சக்திகளிடம் இலங்கையை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை – திட்டமிடல் ஒருபோதும் இருந்ததில்லை. திராவிட இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் கூட அந்த நிலைப்பாடு இருந்ததில்லை. ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு என்ற அடிப்படையில்தான் இந்த தேசியங்களுக்கிடையிலான உறவு மேலும் வலுப்பட்டது என்பதை மீண்டும் சுட்டிக் காட்டுவோம்.
மிக விரைவிலேயே திராவிட கட்சி இந்திய வெளிவிவகார கொள்கையுடன் கலந்து விட்டது. கருணாநிதி கால கட்டத்தில் இந்திய அரசின் கையாகவே தமிநாடு அரசு இயங்கியது. இலங்கைக்குள் இருக்கும் தமிழ் அரசியலை தமது சார்பில் கட்டுப்படுத்த தமிழ்நாட்டை வாகனமாக பாவித்தது இந்திய அரசு. இந்திரா காந்தி காலத்தில் இவ்வாறுதான் தமிழ் நாட்டில் ஆயுத பயிற்சி முகாம்கள் உருவாகின.
இதை வைத்துக்கொண்டு இந்திய அரசின் விஸ்தரிப்பை எதிர்க்க தமிழ் ‘பிரிவினை வாதத்தை’ எதிர்க்க வேண்டும் என்ற முடிவுக்குத் தாவி விட முடியுமா? தமிழ் இயக்கங்கள் பிரிவினை வாத இயக்கங்களாக உருவாகவில்லை. முப்பதிற்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் வடக்கிலும் கிழக்கிலும் தோன்றின. அவை அனைத்தும் தமிழ் மக்களின் விடுதலை பற்றிப் பேசின. இதற்கும் ஜே வி பி சொல்லும் பிரிவினை வாதத்திற்கும் ஏராளாமான வேறுபாடு உண்டு. நாட்டைப் பிரிப்பதற்காக இந்தியாவால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட குழுக்கள் அல்ல அவை. இந்தியா தமிழ் விடுதலை கோரிக்கையை தமது சொந்த நலனுக்காக அன்றும் இன்றும் பாவிக்க முயன்று வருவது அனைவரும் அறிந்ததே. அதற்காக தமிழர் விடுதலை இயக்கம் ஒட்டுமொத்தமாக இந்திய கைக்கூலி இயக்கம் என்று அரசியல் பேசி அவை எதிர்க்கப்பட வேண்டும் என்று செயற்திட்டம் போடுவது இனவாதமின்றி வேறென்ன ? தமிழ் தேசியக் கோரிக்கை தேசிய , மொழி , கலாச்சார ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்தவை. இவை பற்றி இந்த ஒடுக்குமுறைகளுக்கு தீர்வாக ஜே வி பி என்ன நிலைப்பட்டை முன்வைத்தது? திராவிட முன்னேற்ற கழகம் எவ்வாறு அமெரிக்காவுக்கு வேலை செய்ததது என இன்றுவரை அவர்கள் விளக்கவில்லை.
தமிழ் இயக்கங்கள் எவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைகூலிகளாக இயங்கினர். பாலஸ்தீனிய போராட்டத்தால் கவரப்பட்டு பி எல் லோ வை மாற்றி ரி எல்ல லோ என தமிழ் இளையோர் ஆயுதம் தாங்கிய இயக்கம் கட்டிக் கொண்டிருந்த காலத்தில் -கியூபாவில் நடந்த இளையோர் மாநாட்டுக்கு ஆதரவு அறிக்கை விட்டுக் கொண்டிருந்த காலத்தில் – விஜயவீர இத்தகைய ஆய்வைச் செய்கிறார்.
சிங்கள தோழர்களுக்கு பச்சை பொய்யை அவர் படிப்பிக்கிறார்.
அவர்கள் மத்தியில் இருந்த இனவாத போக்கை மாற்றும் படிப்பினை உருவாக்குவதற்குப் பதிலாக -பிற்போக்குத் தனத்தின் மேல் இருந்து சவாரி செய்கிறார்.
ரோகன விஜவீரவின் ஆய்வின் அடிப்படையே பிழை.
ரோகன விஜயவீரவுக்கு தமிழ் தெரியாது. அது குற்றமில்லை.
மார்க்சியம் தெரியாததுதான் குற்றம்.
இந்திய அரசு வலது சாரிய அரசு என அவர்கள் விளக்கினார்களா ? இல்லை. தி மு க வலது சாரிய கொள்கைகளுடன் இயங்குகிறது எனவோ அல்லது திராவிட இயக்கம் எவ்வாறு எழுந்தது – அதன் நன்மை தீமைகள் பற்றி விளக்கினார்களா ? இல்லை. கறுப்பு வெள்ளை தர்க்கம் தாண்டி விரியாமல் தட்டையாக நின்று விட்டது அவர்கள் மார்க்சிய அறிவு.
தமது தர்கத்தில் இருக்கும் முரண்களை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இந்தியாவை எதிர்க்க வேண்டும் – ஏன் என்றால் அவர்கள் இலங்கையை உடைக்கும் பிரிவினை – மற்றும் விஸ்தரிப்பு நிலைப்பாடு கொண்டவர்கள். அமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவை பாதுகாக்க வேண்டும் – ஏன் என்றால் இலங்கையை உடைக்க ஈழக் கோரிக்கையை உபயோகிக்கிறது அமெரிக்கா. இப்படித்தான் முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் வாதங்கள் அன்றும் இன்றும் விரிவடைகிறது. ஒன்றினைந்த இலங்கை – சிங்கள தேசத்தை பாதுகாத்தல் என்ற அடிப்படை மட்டுமே மாறாதிருக்கிறது.
தேசியக் கோரிக்கை – தேசிய இனங்களின் உரிமைகள் – பற்றி மார்க்சியவாதிகள் மத்தியில் ஏராளமான உரையாடல்கள் நடந்துள்ளன. ஏரளாமானவை சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழ் தெரியாத பல இடதுசாரிய ஆய்வாளர்கள் தெற்காசிய நிலவரங்கள் பற்றி எழுதி இருக்கிறார்கள். லங்கா சம சமாஜ கட்சியைச் சேர்ந்த பலர் இந்தியாவில் சோஷலிச கட்சி கட்டும் வேலை செய்தவர்கள். அவர்களும் எழுதி இருக்கிறார்கள்.
தெளிவான கொள்கை மற்றும் திட்டமிடல்களை முன்வைத்து அதற்கு மக்களை வென்றெடுப்பதற்கு போராடுவதா அல்லது மக்கள் மத்தியில் இருக்கும் பயம் மற்றும் பிற்போக்குத் தனங்களின் மேல் சவாரி செய்து ‘ஆள் திரட்டுவதா’?
இரண்டாவது முறையைத்தான் ஜே வி பி பயன்படுத்தியது.
இலங்கையில் சிங்கள மக்கள் பெரும்பானமையாக இருந்த போதும் கலாச்சார ரீதியாக அவர்கள் சிறுபானமையாக உணரும் நிலை இருந்தது. கலை, இலக்கியம், இசை என்பதில் இருந்து பல்வேறு தளங்களில் இந்திய காலாச்சார – குறிப்பாக தென் இந்திய கலாச்சார விழுமியங்கள் மேலோங்கி இருந்தன. ஈழ தமிழர் மத்தியிலும் இது விசனத்தை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை. இது தெற்கில் இருந்தவர்களுக்கு பெரிதளவு தெரிந்திருக்கவில்லை. இருப்பினும் ஈழ மக்கள் மொழியாலும் கலாச்சாரத்தாலும் தமிழ்நாட்டோடு இணைந்து இருந்தமையால் அவர்கள் மத்தியில் சகோதர பார்வை- உறவு இருந்தது. தமிழ் நாட்டில் பெரியார் தலைமையில் எழுந்த சுய மரியாதை இயக்கம் – அதன் பின்பான திராவிட கட்சிகளின் எழுச்சி ஆகியன ஈழத்திலும் செல்வாக்கு செலுத்தியது. அனைத்து ‘புரட்சி’ படங்களும் ஈழத்திலும் – பல சமயம் தெற்கிலும் ஓடின. தமிழ் பாடல்கள் எங்கும் ஒலி பரப்பாகின. இதனாலும்தான் சிங்கள கலாச்சார கூறுகள் முழுமையாக ஈழ தமிழ் மக்கள் மத்தியில் கலக்க முடியாமல் போயிற்று.
எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருத்த தமிழர் காலாச்சார ரீதியில் பெரும்பான்மையாக பார்க்கப்பட்ட நிலை இருந்தது. சிங்கள மக்கள் மத்தியில் நிலவிய ‘சிறுபான்மை தாழ்வு மனப்பாங்கு’ போக்கு பற்றி சம சமாஜ கட்சியினர் குறிப்பிட்டு பேசி இருக்கின்றனர்.
இந்த கூட்டு மண நிலையை பாவித்து ஆள் திரட்டுவதுதான் இனவாதம். தமிழ் மக்கள் தமது உரிமைகளை கோருவதற்கு ஆள் திரட்டுவது இனவாதம் அல்ல.
மலையாக மக்களக்கு எதிராக ஜே வி பி செய்த பிரச்சாரம் – மற்றும் வன்முறை வரலாற்றில் ஒருபோதும் மறக்க கூடாத ஓன்று.
இனச் சுத்திகரிப்பு வாதம் – அல்லது இன அழிப்பு வாதம் என ஜே வி பி யின் வாதத்தை வரையறை செய்வது பொருத்தமாக இருக்கும்.
மலையக மக்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இருந்து அவர்கள் வாதம் தொடங்குகிறது. இவர்கள் இலங்கைக்குள் இருந்து கொண்டு இந்திய கைகூலிகளாக இயங்குகிறார்கள் என ஜே வி பி பிரச்சாரம் செய்தது. எதிரிக்கு வேவு பாக்கும் கூட்டம் – ஐந்தாவது அணி என மலையக மக்களை வர்ணித்தனர். இதனால் அனைவரையும் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு அவர்கள் ஆதரவு வழங்கினர். அவர்கள் உண்மையில் தொழிலாளர்கள் என்றால் இந்தியா போய் அங்கு புரட்சியை நடத்தட்டும் என பேசினர். ஜே வி பி யின் பாடத்திட்ட பிரச்சாரத்தில் இருக்கும் இன்னொரு விசயத்தை ஒரு சிங்கள எழுத்தாளர் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
‘மலைநாட்டில் உள்ள தமிழ் தொழிலாளர்களின் மீட்பர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை வகிக்கிறார். அவர் எம்.ஜி. ராமச்சந்திரன். சிலோனில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிறந்த தமிழக தமிழ் சினிமாவின் நாயகன்.
இலங்கையில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் காணிக்கை பெறும் வரிசை அறைகளில் ராமச்சந்திரனின் படம் தொங்குகிறது.’
ராமச்சந்திரன் தான் அவர்கள் தலைவர் என கதை தொடர்கிறது. இதுதான் அவர்களின் மார்க்சிய வர்க்க ஆய்வு.
எம் ஜி ஆர் கண்டியில் நாவலபிட்டியாவில் பிறந்தவர்.
பாலக்காட்டைச் சேர்ந்த மலையாள பெற்ற்றோர் தற்காலிகமாக அங்கு தங்கி இருந்தபோது அவர் பிறந்தார். ஆண்டு 1917. பிறந்த ஆண்டையும் திகதியையும் எம் ஜி ஆர் தானே பின்னாளில் தேர்ந்தெடுத்துக்கொண்டார். பிறப்புப் பதிவு எதுவும் கிடையாது.
பாடசாலை அதிபராக நாவலபிட்டியாவில் வேலை செய்து வந்த அவரது தகப்பனாரின் மறைவிற்கு பின் வறுமைக்குள் வீழ்ந்த குடும்பம் இந்தியா திரும்பியது. வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணாக கும்பகோணம் வந்து சேர்ந்தார் எம் ஜி ஆரின் தாயார். அப்போது எம் ஜி ஆருக்கு மூன்று நான்கு வயதிருக்கலாம் எனக் கணிக்கப் படுகிறது. அவர் ‘ஒரிஜினல்’ தமிழ் நாட்டுத் தமிழராக வளர்ந்தார்.
எம் ஜி ஆர் மலையாளியுமில்லை – மலையகமும் இல்லை. அவர் தமிழ் நாட்டுத் தமிழர்.
இனவாத முறையில் அவரைத் தாக்குவதற்கு எம் ஜி ஆரை பலர் மலையாளி ஆக்குகிறார்கள். தமிழ் நாட்டில் பிறந்து வளரும் பெரும்பான்மை ‘மலையாளிகள்’ தமிழ் நாட்டு அடையாளத்தை எடுத்தே வாழ்கிறார்கள். அவர்களாக மறுக்கும் வரை அதுவே அவர்கள் அடையாளம். எம் ஜி ஆர் அரசியலுக்கு வரும் முன்பே தன்னை தமிழகத் தமிழராக அடையாளப்படுத்திக் கொண்டவர். திராவிட அரசியலில் கலந்து கொண்டவர். எம் ஜி ஆரை மலையக மக்கள் பலர் தங்கள் குழந்தையாக கொண்டாடினார்கள். தங்களில் ஒருவராக பார்த்தார்கள் பலர். அவரை தலைவராக ஏற்றுக் கொண்டு இயங்கவில்லை -அரசியல் இயக்கமாகத் திரளவில்லை. ஆனால் அவரைத் ‘தோட்டக்காட்டான்’ எனத் தாக்குவது இனவாதம். அதைச் செய்தது ஜே வி பி. அந்த இந்தியனை தலைவராக ஏற்றுக் கொண்ட மலையக வாசிகளை இந்தியாவுக்கு அனுப்பவேண்டும் என்பது அவர்கள் பிரச்சாரம்.
எம் ஜி ஆர் ஆதரவு சங்கங்கள் இருந்தன. அவை அவரது சினிமா கவர்ச்சி சார்ந்த விசிறி சங்கங்கள். அங்கு பெரிய அமைப்பாக இருந்தது தொழிலாளர் சங்கம். அங்கு அதிக செல்வாக்காக இருந்த அமைப்பு லங்கா சம சமாஜ கட்சி. மலையக மக்கள் மத்தியில் இடது சாரிகளுக்கு பெரும் ஆதரவு இருந்தது. இனவாதத்தால் குருடாகிய ஜே வி பி க்கு அது தெரியவில்லை.
மலையக மக்களின் வயிற்றில் அடிக்கும் திட்டம் ஜே வி பி இடம் இருந்தது பற்றி இன்னுமொரு எழுத்தாளர் சடகோபன் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார்.
‘“தேயிலைப் பயிர்ச் செய்கையானது நெற் பயிர்களைக் கொன்று குவித்து அழித்துவிட்டு அதன் இடத்தை தான் பிடித்துக்கொண்டது. அதே போல் றப்பர் பயிர்ச்செய்கையானது குரக்கன் பயிர்ச்செய்கையை கொன்று குவித்து அழித்துவிட்டு, அதன் இடத்தை தான் பிடித்துக் கொண்டது. அதன் காரணமாக தேயிலைத் தொழில்துறையை முற்றாக அழித்துவிட்டு அது இருந்த இடத்தில் சுயதேவைப்பூர்த்தி பொருளாதாரமுறை ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டும்.”
இவ்விதம் ரோகண விஜயவீர குறிப்பிட்டபோது அது தொடர்பான கேள்வி நேரத்தில் ஒரு சிலர் “தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்கூட பாட்டாளி வர்க்கத்தினர் என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கும் குழுவினரே. அப்படி இருக்கும்போதுஅவர்களை எப்படி விரட்டி அடிப்பது?” என்று கேள்வி எழுப்பினர். அதற்குபதிலளித்த விஜயவீர “அவர்கள் வேண்டுமென்றால் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நமது நாட்டைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினர் அல்லர். அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள எம். ஜி. ஆர் போன்ற தலைவர்களையே தமது தலைவர்களாகக் கருதுகிறார்கள். அவர்கள் உண்மையான பாட்டாளி வர்க்கத்தினராக இருந்தால் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கேயுள்ள முதலாளித்துவத்துக்கு எதிராக அவர்கள் போராட வேண்டும்” என்று கூறி அவ்விதம் கேள்வி கேட்டவர்களின் வாயை அடக்கிவிட்டார்.’
இதே எம் ஜி ஆர் தான் பின்னாளில் பிரபாகரனை தலையில் தூக்கினார்.
இதே எம் ஜி ஆர் புலிகளிடம் இருந்து இந்திய அரசு பறித்த ஆயுதங்களை திருப்பி வழங்க ஏற்பாடு செய்தார் – நாலு கோடி இந்திய ரூபாவை பொது இடத்தில் வைத்து -பலருக்கும் முன்னால் புலிகளுக்கு வழங்கினார்.
இதே எம் ஜி ஆரை தலைவன் எனச் சொல்பவர்கள் மலையகத்தில் மட்டும் இல்லை – வடக்கு கிழக்கிலும் இருக்கிறார்கள் – தமிழகம் எங்கும் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
அவரது வலது சாரிய அரசியல் – பொப்புலிச அரசியல் மற்றும் நடவடிக்கைகள பற்றி விமர்சிப்பது – எதிர்ப்பது அவசியம். அது தோழர்களை அரசியல் மயப்படுத்தும். ஆனால் அவரை வைத்து ஓட்டு மொத்த மக்களையும் இனச் சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என பிரச்சாரிப்பது இனவாதத்தைத்தான் வளர்க்கும்.
ஜே வி பி தமது பிரச்சாரங்களை சிங்களத்தில் மட்டுமே செய்தனர். அவர்கள் எத்தகைய கேவலமான பிரகுச்சாரங்களைச் செய்தனர் என்பதை சிங்கள எழுத்தாளர்கள் – சிங்களம் தெரிந்த தமிழ் எழுத்தாளார்கள் – முன்னால் ஜே வி பி உறுப்பினர்கள் -ஊடாக மட்டுமே தமிழ் பேசும் மக்கள் அறியக் கூடியதாக இருக்கிறது. இவர்கள் செய்த அவதூறு -அவதூறுக்கு உள்ளாகிய மக்களிடம் சென்றடயவில்லை. மலையக மக்கள் எல்லா அடக்குமுறைகளையும் அமைதியாக உள்வாங்க பணிக்கப்பட்டனர்.
கேவலமாக மலையக மக்கள் பற்றிய பொய் பிரச்சாரங்களையும் பரப்பினர் ஜே வி பி யினர். இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த தேயிலைத் தோட்டத்தில் தமது முதுகெலும்பை முறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பற்றித்தான் இத்தகைய விமர்சனத்தை போலி மார்க்சிய ஜே வி பி வைத்தது என்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக்கொள்வோம்.
இந்த மக்கள் செல்வச் செழிப்பாக வாழ்கிறார்கள் என்றும் மலையக செல்வந்தங்களை இந்தியாவுக்காக சூறையாடுகிறார்கள் எனவும் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தது ஜே வி பி.
மலையக மக்களின் வாழ்வாதார நிலை மிகக் கேவலமாக இருந்த காலப்பகுதியில் நடந்த பிரச்சாரம் இது. கழிப்பிடம் இன்றி – பாடாசாலை இன்றி – நிம்மதியாக தூங்க இடம் இன்றி – குளிரில் போர்க்க துணி இன்றி – எந்த தேவைகளும் நிறைவேற்றப் படாமல் இந்த மக்கள் தகரத்தால் அடைக்கப்பட்ட சிறு அறைக்குள் குளிரில் துடித்துக் கொண்டு படுத்திருந்த காலத்தில் ஜே வி பி செய்த பிரச்சாரம் இது. ஆண்களும் பெண்களுமாக தேயிலைத் தொழிலாளர்கள் கடுமையான கொழுந்தெடுக்கும் வேலை செய்து -தேயிலை சுமையை முதுகில் சுமந்து மலை ஏறி நடந்து – முறிந்து- பாடுபட்ட போதும் அவர்கள் பாட்டாளிகள் இல்லையாம். அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் வறுமை மட்டுமே. அவர்களுக்கு ‘பிச்சைக்கார ஊதியத்தை’ வழங்கினர் தேயிலை தோட்ட துரைகளும் இலங்கை அரசும். அந்த ஊதியம் பற்றி ஒரு சொட்டு பேச்சில்லை. துரைமார்களின் செல்வந்தம் பற்றி அக்கறை இல்லை. வேறு வழியின்றி பரம்பரை பரம்பரையாக தமது குழந்தைகளையும் தேயிலைத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்ற இந்த அடிமட்ட தொழிலாளர்கள்தான் எதிரிகள்!
அவர்கள் உண்மையான பாட்டாளி வர்கம் இல்லை – இந்திய அரசின் கைக்கூலிகள்.
என்னே மார்க்சியம் இது.
சில அமைப்புக்கள் தங்களை மார்க்சியவாதிகள் எனக் கூறிக்கொண்டு இனவாதம் பேசுவது புதிய போக்கில்லை. ஸ்டாலின் தலைமையில் சோவியத் ஒன்றியத்தால் அறிமுகமான ‘ஒரு நாட்டில் தேசியம்’ மற்றும் ‘பாசிச எதிர்ப்பிற்கு தேசிய அரசின் பின் திரளுதல்’ போன்ற நிலைப்பாடுகளில் இருந்து இது பலப்பட்டது. (ஆனால் தமிழ் நாட்டில் இயங்கும் ம க இ க என்ற மாவோயிச கட்சி ஆய்வு சொல்கிறது ஜே வி பி உண்மையில் டிராட்ஸ்கிய சித்தாந்தப் பாதையை தேர்ந்தெடுத்த ஓன்று என்று. பின்பு ஜே வி பி சமூக பாசிச இயக்கமாக சிதைந்து போனது என வரையறுக்கிறார்கள். ஜே வி பி பற்றி – அதன் தோற்றம் வளர்ச்சி பற்றிய அடிப்படை அறிவே இல்லை. பொய் பிரட்டு செய்து கட்சி வளர்க்க முயலும் இன்னொரு அமைப்பு இது)
இந்தியாவில் இயங்கும் பல இடதுசாரிகள் இந்திய பெரும் தேசியத்தை பாதுகாப்பதில் அக்கறையாக இயங்குகின்றனர். தமக்குப் பிடிக்காதவர்களை ‘பாசிஸ்டுகள்’ என தூற்றவும் – பொய் புரட்டுகள் செய்யவும் அவர்கள் தயங்கியத்தில்லை.
மார்க்சிய கட்சி என சொல்லிக் கொள்ளும் ஒரு கட்சி – இனவாத அடிப்படையில் இயங்கினால் – இன்னுமொரு இன மக்கள் மேல் அவதூறும் வன்முறையும் செய்தால் – அக்கட்சி இருந்து பிரயோசனமில்லை. உறுப்பினர்கள் அதில் இருந்து வெளியேறி விட வேண்டும். பொய்களாலும் அவதூறாலும் – மாற்றார் மேல் வன்மம் பரப்புவதாலும் -எந்த அமைப்பையும் கட்டி விட முடியாது.
இன சுத்திகரிப்பு செய்யும் நோக்கில் புலிகள் முஸ்லிகளை வடக்கில் இருந்து வெளியேற்றவில்லை. இருப்பினும் புலிகள் செய்தது பெரும் தவறு.
ஜே வி பி யின் மலையாக மக்கள் பற்றிய நிலைப்பாடுதான் இன சுத்திகரிப்பு நிலைப்பாடு. இந்த மாபெரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள – புரிந்துகொள்ள இன்றுவரை அவரகள் தயாரில்லை.
தமிழ் கலாச்சாரம் சிங்களத்தை முழுங்கி விடும் என்ற பயத்தை பலப்படுத்தி தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டிய தேவை தீவிர வலது சாரிய சிங்கள இனவாத கட்சிகளுக்கு தேவையாக இருந்தது. பேரினவாதம் தமிழர் தாயகம் கேட்டதால் தோன்றியதில்லை. தீவிர வலதுசாரிய இனவாதத்தின் எழுச்சி அது. ஜே வி பி யும் அதற்கு பங்களித்தது. பேரினவாதம் பலப்பட ஜே வி பி உதவியது.