தொடரும் காவல் சித்ரவதை மற்றும் மரணங்கள் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்

– பிரேம், சென்னை

அஜித்குமார் என்கிற 27 வயது இளைஞரை விசாரணைக்கு அழைத்து சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அடித்தே கொன்றுள்ளது தமிழக காவல்துறை. முறையாக FIR கூட பதிவு செய்யாமல் காவல் நிலையத்திற்கு கூட அழைத்து செல்லாமல் மானாமதுரை DSP அமைத்த சிறப்பு படை கொலை செய்துள்ளது. சிவகாமி அவரது மகள் நிகிதா என்கிற இருவர் தங்களது நகைகள் திருடுபோய்விட்டது என்று அளித்த புகாரின் பெயரில் கோயிலில் தற்காலிக காவலாளியாக பணிசெய்து வந்தவரை விசாரணைக்கு அழைத்து அடித்தே கொன்றிருக்கிறார்கள். கொலைசெய்யப்பட்ட அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 44 மேற்பட்ட காயங்கள் உள்ளது என்றும் கொலை செய்ய நினைப்பவர் கூட இத்தகைய கொடூரமாக நடந்திருக்க மாட்டார் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புகார் அளித்த நிகிதா என்கிற பெண்மணி BJP கட்சியில் செல்வாக்கு கொண்டிருந்தவர் என்றும் அதனால் காவல்துறை ஒரு கூலி படையைப் போல செயல்பட்டுள்ளது என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் காவல்துறையினரின் அடக்குமுறை, அரச வன்முறையை பற்றிய விவாதத்தையும் – காவல்துறை பற்றிய மக்களின் எதிர்ப்பையும் மீண்டும் ஒரு முறை பதியவைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்க்ஸ் இருவரும் காவல்துறையினரால் கொடூரமாக சித்ரவதை செய்து அடித்து கொலை செய்த சம்பவத்தை எதிர்த்து மக்களின் போராட்டத்தை செய்திருந்தனர். இது போன்ற சம்பவம் தனது தலைமையில் அமையும் ஆட்சியில் நடக்காது என்றும் உறுதி அளித்து மக்களின் ஆதரவை மட்டும் அல்ல அன்றைய இடதுசாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், ஜனநாயக இயக்கங்களின் ஆதரவையும் திமுக பெற்றது. சில இயக்கங்கள் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தில் மனித உரிமை, ஜனநாயக இயக்கங்களோடு திமுக போன்ற ஆளும் வர்க்க கட்சியும் அங்கம்பெற முன்வந்ததுவரை அந்த ஆதரவு நீண்டது. ஆனால் இந்த ஆளும் வர்க்க கட்சிகளில் பண்பு ரீதியில் எந்த மாறுபாடும் இல்லை என்பதை மாஞ்சோலை கொலை, மேலவளவு சம்பவம், தோழர் லீலாவதி படுகொலை என்று கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் நிருபித்து வருகின்றன. திமுக தலைமையில் ஆட்சி அமைந்த இந்த 4 ஆண்டுகளில் மட்டும் 24 காவல் கொலைகள் நடந்துள்ளது. கொலைகள் மட்டுமே இத்தனை என்றால் அத்துமீறல்கள், வன்முறைகள் எண்ணிக்கை பல மடங்கு இருக்கும் என்பதை நாம் ஊகித்து கொள்ள முடியும்.

அரசு, காவல்துறையை சீர்திருத்துமா?

ஒவ்வொரு முறை இப்படி சம்பவங்கள் நடக்கும் போதும் துறை ரீதியான விசாரணை, நடவடிக்கை, ஆறுதல் அளிப்பது மற்றும் நிவாரணம் அளிப்பது என்பது தொடர் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது. 2022 ஆம் ஆண்டில் ராஜசேகர் என்பவர் காவல்துறையால் அடித்து கொலை செய்யப்படும் போது. அன்றைய காவல்துறை தலைமை இயக்குனரான திரு. சைலேந்தர் பாபு விசாரணையின் பொது பின்பறவேண்டிய நடைமுறை என்று ஒரு SOP (STANDING OPERATING PROCEDURE ) 41 நடைமுறைகளை வெளியிட்டிருந்தார். ஆனாலும் இது தொடர்வதும், நடவடிக்கைக்கு உள்ளான அதிகாரிகள் காவலர்கள் சிறுது காலத்தில் அதே பணியில் தொடர்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட ஸ்டெர்லைட் தூப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட காவலர்கள், கைதிகளின் பற்களை பிடுங்கிய பலவீர் சிங் போன்றவர்களே இதற்கு உதாரணம். இப்படி காவல் துறையை அரசு, நீதிமன்ற கண்டிப்பதும், நடவடிக்கை எடுப்பதும் பின் எல்லாம் காற்றில் பறப்பதும் மீண்டும் தொடர்வதுமாகவே நீள்கிறது. இத்தகைய நிகழ்வுகள் காவல்துறை, அரசு மற்றும் முதலாளித்துவத்தின் கோரா முகத்தை வெளிப்படுத்துகிறது. நமக்கு இருக்கும் கடமை இந்த முதலாளித்துவ கட்டமைப்பை தாண்டிய ஒரு தீர்வை முன்வைக்க வேண்டியதாகும். அதாவது காவல்துறை சித்திரவதைக்கு எதிராக கடுமையான சட்டம் வேண்டும் -இத்தகைய குற்றச்சாட்டில் ஈடுபடும் காவலர்கள் மீது கிரிமினல் குற்றம் பதிவு செய்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். காவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் உபோயகமானதாக தோன்றினாலும் அவை மட்டும் போதாது.

காவல்துறையை கண்காணிக்க ஜனநாயாக முறையில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் குழு வேண்டும். ஜனநாயக அமைப்பு முறையில் குறைந்த பட்சம் இதையாவது செய்தாக வேண்டும்.
காவல்துறையை ஒரு மக்கள் குழு கண்காணிக்க வேண்டும். இது ஒன்றும் சாத்தியமில்லாதது அல்லது கற்பனையான ஒன்றோ இல்லை. இப்பொழுது இருக்கும் முதலாளித்துவ சட்டங்களை கொண்டே இதை நாம் கோர முடியும். உதாரணமாக Friends of Police, naxalite எதிர்ப்பு சல்வா ஜூடும் போன்று அமைப்புகளை அரசுகளே உருவாக்கி அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறது. இது போக ஹிந்துத்வ இயக்கங்கள் gowrakshas என்கிற பசு பாதுகாப்பு குண்டர் படைகளை நடத்துகிறது. அரசுகளும் வலதுசாரிகளுக்கு மட்டுமே இது சாத்தியம் என்று என்னக் கூடாது Gulabi (பிங்க்) Gang ” என்கிற பெண்கள் குழு உத்தர பிரதேஷத்தில் பெண்கள் மற்றும் தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறை புகாரை ஏற்க மறுக்கும் வழக்குகளை இந்த கண்காணிப்பு குழு எடுத்து அவர்களுக்கு தண்டனை வாங்கி தருவது அறிவோம். 2014 ஆண்டு கணக்கின்படி கிட்டத்தட்ட 2,70,000 பெண்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இதை உதாரணமாக கொண்டு இந்தியாவில் இருக்க கூடிய தொழிலாளர், விவசாய தொழிலாளர்கள் மனிதநேய மக்களை செயல்பாட்டாளர்கள் அடங்கிய ஒரு ஜனநாயக அமைப்பை தொடங்க வேண்டும். இந்தியா முழுவதும் நடக்கும் தலித் மக்கள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர், பழங்குடினர், பெண்கள், மாற்று பாலினத்தவர்களுக்கு எதிரான கும்பல் வன்முறைகள், பழமைவாதிகள், அரசு பயங்கரவாதம் போன்றவற்றால் தொடர்ந்து பாதிக்க பட்டும் எந்த நீதியோ நிவாரணமும் பெற இயலாத மக்களுக்கு அரணாக இந்த ஜனநாயக குழு செயல்படவேண்டும். இதை இந்த முதலாளித்துவ கட்டமைப்புக்குள்ளேயே அமைக்க முடியும். ஆனால் இதை ஒரு போதும் இந்த அரசுகள் செய்யாது. இதை உழைக்கும் மக்கள் தான் தன் போராட்டத்தால் வென்றுடுக்க முடியும். அதன் மூலம் தான் இத்தகை அத்துமீறல்களை தடுக்கவும், தண்டிக்க முடியும். உலக்கும் வர்க்க்கம்தான் அத்தகைய சனநாயக கண்காணிப்பு அமைப்பை சட்ட ரீதியாக மாற்றும் அழுத்தத்தையும் வழங்க முடியும்.
இத்தகைய திட்டமிடல் நோக்கி இடது சாரிகளும் செயற்பாட்டாளர்களும் திரள முன்வர வேண்டும்.