எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள கோட்டாபய   ராஜபக்‌ஷ

11 . Views .

எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள கோட்டாபய   ராஜபக்‌ஷ

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மதிப்பிழந்த ஆட்சியை பாதுகாக்க தற்பொழுது எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார்.  ஈஸ்டர் படுகொலை பின்னணியில் இருப்பவர்களும் எழுத்து துறைக்கு வந்திருப்பது பலரும் அறிவர். அண்மையில் “ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி” (The Conspiracy to oust me from the Presidency) என்ற நூலை எழுதிய கோட்டாபய ராஜபக்ச ஒரு சில வல்லரசு நாடுகளின் பின்னணியில் இடம்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதியினாலே தான் பதவி துறக்க வேண்டி வந்தது என தெரிவித்திருக்கின்றார். 

2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே, சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகள் தன்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் இருந்தன என்றும் 2022 இல் பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் போன்றோரின் ஆதரவு தனக்கு இருந்த போதிலும், உள்நாட்டு வெளிநாட்டு சதியை தன்னால் எதிர் கொள்ள முடியாமல் போனதாலே தான் பதவியை துறந்ததாகவும், அச்சந்தர்ப்பத்தில் இலங்கை ஒன்றும் மூழ்கிக்கொண்டிருக்கவில்லை எனவும் தனது நூலில் மேலும் தெரிவித்திருந்தார். இப்புத்தகத்தில் அமெரிக்காவைப் பற்றியோ அல்லது வேறு எந்த நாட்டைப் பற்றியோ நேரடிக் குறிப்பு எதுவும் இல்லை. அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச சதித்திட்டம் பற்றி தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை

இப்புத்தகம் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. ஆங்கில பதிப்பு 179 பக்கங்களைக் கொண்டிருகிறது. மற்றும் 1800 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தின் முதல் பதிப்பு தீர்ந்து விட்டது எனவும், இரண்டாம் பதிப்பு வெகுவிரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. புத்தகத்தின் முன் அட்டையில் கோட்டா பயவின் படமும், ‘சர்வதேச ஆதரவுடன் ஆட்சி மாற்றம் இலங்கையின் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியது எப்படி’ என்ற வரியும் இடம்பெற்றிருகிறது. நெட்ஃபிலிக்ஸ் இந்த இந்நூலை முன்வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாகவும், திரைக்கதை தயாராகிவிட்டதாகவும் சில தகவல்கள் வெளிவருகின்றன. சர்வதேச வாசக கவனத்தை ஈர்க்க கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மக்கள் இயக்கத்தினால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அரசியல் வீழ்ச்சியை வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகளை உள்ளடக்கிய “சதி” என்று கூறும் புத்தகத்தை வெளியிட்டு தனது கறைபடிந்த ஆட்சியை பாதுகாக்க முயலுகின்றார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கும் தனக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்றும் கொரோனா பெருந்தொற்றினால் உருவான நெருக்கடியே முக்கிய காரணம் என்றும் கோட்டாபய இந்த நூலில் எழுதியுள்ளார். இதன்மூலம் மிக மோசமான ஊழலில் ஈடுபட்டு நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ச குடும்பத்தின் மீது படிந்த கறையை பூசி மறைக்கும் வேலையினை ஆரம்பித்துள்ளார் கோட்டாபய.  மறதி மக்களின் தேசிய வியாதி என்பதை புரிந்து கொண்ட கோட்டாபய, புதிய கதைகளின் மூலம் தமது குடும்பத்தின் மீது படிந்திருக்கும் கறையினை அகற்றி, இவ்வருட இறுதியில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமது காலினை மீண்டும் பதிக்கலாம் என நம்புகிறார்.

ஒரு முக்கிய நிகழ்வு நிகழும்போது, அதனை ஒரு ரகசிய கும்பல் தான் திட்டமிட்டு நடத்தியது எனக் கூறுவது சதிக் கோட்பாடு ( Conspiracy Theory ) எனப்படும். வலுவற்ற ஆதாரங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட கருத்தை மையமாகக் கொண்டே தனது ஆட்சியைக் கவிழ்த்தது உள்நாட்டு, வெளிநாட்டு சதி என்கிறார் கோட்டாபய. கோட்டாபய போன்ற சதிக் கோட்பாட்டாளர்கள் உலக நிகழ்வுகளுக்குப் பரவலாக நிகழும் சம்பவங்கள்தான் காரணம் என்பதை ஒத்துக்கொள்வதில்லை. மாறாக நடந்தனவெல்லாம் திட்டமிட்ட சதியென்றும், உண்மைக் காரணங்கள் மறைக்கப்படுகின்றன என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். தமக்கான ஆதரவு வட்டத்தை மீள நிர்மாணிக்கும் திட்டமிடல் இது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய தனது நூலில் கூறிய காரணங்களை விட கூறாத காரணங்களே அதிகமாகும். 69 இலட்சம் மக்களின் வாக்கினைப் பெற்று வெளிப்படைத்தன்மை மற்றும் ‘நல்லாட்சிக்கான’ வாக்குறுதிகளுடன் இலங்கையில் ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம், அதன் ஆட்சிக் காலத்தில் பலத்த அரசியல், பொருளாதார சவால்களை எதிர்கொண்டது. அவர்களின் தொடர்ச்சியான தவறான அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. சுற்றுலாத் துறையின் வீழ்ச்சி, விவசாயத்துறை, மீன்பிடித்துறையின் வீழ்ச்சி, உள்ளூர் உற்பத்திகளின் வீழ்ச்சி, சிறிய நடுத்தர தொழில்களின் நசிவு எனபல தளங்களில் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. அத்துடன் ஊழலும் சேர்ந்து நாட்டை கீழ் நோக்கித் தள்ளியது. மக்களுக்கு பயன்தராத திட்டங்களும், ஊழலும் சேர்ந்து நாட்டை 90 பில்லியன் டொலர் கடனாளியாகவே மாற்றியது. 

நவம்பர் 2019 முதல் ஜூலை 2022 வரை கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தபோது, ​​அவரது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல நிதி முடிவுகளைத் தொடர்ந்து, அத்தியாவசிய இறக்குமதிகளுக்கான டாலர்கள் இல்லாததால், 1948 இல் சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. குடிமக்கள் நீண்ட வரிசையில் நீண்ட நாட்களைக் கழித்தனர். பலர் உயிர் இழந்தனர். அடிப்படை உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு மற்றும் மருந்துகளைப் பெறுவதற்குப் போராடினார்கள் மக்கள்.  அதே நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் நீண்டநேர மின்வெட்டுகளுடனும் போராடினர். கோட்டாபயவின் அரசின் மீது கோபம் கொண்ட தமிழ், சிங்கள முஸ்லீம் என பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மக்கள் தலைநகர் கொழும்பின் கடற்பரப்பில் மற்றும் நாடு முழுவதும் பல மாவட்டங்களில் ஒரு வரலாற்றுப் போராட்டத்தில் வீதிகளில் இறங்கினர். 

நாட்டின் பொருளாதார நிலைமை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கியமையினால் வேறுவழியில்லாத மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் கோட்டா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் இடைவிடாமல் கிளர்ந்தெழுந்தனர். இறுதியில் முற்றுகையிடப்பட்ட சனாதிபதி  நாட்டை விட்டு வெளியேறும்  நிலைக்கு உள்ளாக்கப்பட்டார். கொழும்பை நோக்கி திரண்டு வந்த போராட்டக்காரர்களை தடுக்க முடியாமல் போனதால்  2022 இல் பதவியை துறந்த கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து மாலைதீவுக்கு தப்பிச் சென்று பின்னர், மாலைதீவு அரசின் ஆதரவுடன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றது யாவரும் அறிந்ததே. ஆனால் வரலாற்றை மறந்த கோட்டாபயவோ தனது தவறினை தற்போது கொரோனாவின் மேல் தூக்கி போட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் கான்ஸிபிராசி தியரி – சதிக்கோட்பாடையும் துணைக்கழைக்கிறார். கோட்டாபய உட்பட ராஜபக்ச குடும்பம் பொருளாதார படுகொலையாளிகள் என இலங்கை உயர் நீதிமன்றமே முன்பொருமுறை  கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

கோட்டாபயவின் அரசு மற்றும் அவரின் பின்னணியில் இயங்கும் தற்போதைய அரசின் தவறான நடவடிக்கைகள், உதாரணமாக, இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை மறுசீரமைக்கத் தவறியமை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியவற்றில் மறுசீரமைப்பு இல்லாமை போன்றன நாட்டின் பொருளாதார சவால்களை அதிகப்படுத்தியதுடன் அமெரிக்க டாலர் கடன் பெறுவதையும் அதிகரித்தது. இலங்கை மின்சாரசபை முகாமையாளர் ஒருவர் 35 சொகுசு வீடுகளும், 63.5 கிலோ வோல்ட் சோலார் பனல் அமைப்பும் சொந்தமாக வைத்துள்ளார் என அண்மையில் தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இலங்கை மின்சார சபையில் நிலவும் ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது இந்நிகழ்வு. 

கொழும்பு போர்ட் சிட்டி திட்டம் பலத்த செலவுகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி, கூடுதல் நிலத்தை சீனாவுக்கு விட்டுக்கொடுக்கவும் காரணமாக அமைந்தது. இந்த பின்னடைவின் பொருளாதார தாக்கங்கள் கணிசமானவை, இது பிராந்தியத்தின் சாத்தியமான வளர்ச்சியை பாதித்தது. இம்மந்தமான வளர்ச்சிக்கு கோட்டாபாயவின் அரசாங்க பொருளாதாரக் கொள்கைகளே காரணமாகும். 

கண்டி அதிவேக நெடுஞ்சாலை திட்டம் ஊழல் பிரச்சினைகளால் நீண்டகால தாமதத்தை எதிர்கொண்டது, முதல் கட்டத்தை முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனது. மேலும் இலங்கை இரயில்வே தனியார்மயமாக்கல் முயற்சிகளால் – மூலதனத்தை பாதுகாக்க  தீண்டப்படாமல் இருந்தது. இவ்வாறான  மோசமான திட்ட நிர்வாகத்தால் இலங்கையின் உள்கட்டமைப்பு மேம்பாடு வெகுவாக பாதிப்படைந்தது. கிராண்ட் ஹயாட், ஹில்டன் கொழும்பு மற்றும் கிராண்ட் ஓரியண்டல் போன்ற முக்கிய திட்டங்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டன. இது வெளிப்படையாக தெரிந்த போதும், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை மாறாக ஊழல்வாதிகளை காப்பாற்றவே முயற்சி செய்தது. 

உதாரணமாக, 415,000 அமெரிக்க டொலர்கள் (130 மில்லியன் இலங்கை ரூபாய்கள்) பெறுமதியான மருந்துப்பொருள் கொள்வனவில்  மோசடியில் ஈடுபட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவைக் காப்பாற்ற ஆளும்கட்சியின் 113 உறுப்பினர்களும் ஜனாதிபதியும் முயற்சி செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் இவ் ஊழல் வெளிச்சத்திற்கு வந்த போது கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக சுற்றாடல் துறைக்கு அமைச்சராக மாற்றப்ப்பட்டார். இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில், பொருளாதார நெருக்கடியால், மருத்துவ மருந்துகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், மருந்துக் கொள்வனவில் ஏற்பட்டுள்ள  மோசடிகள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், சீனாவுக்கு வார்த்துக் கொடுத்த பகுதிகளை தவிர  மிச்ச சொச்ச இலங்கையும் தற்பொழுது இந்தியாவுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது.  டெலிகாம் நிறுவனம், இலங்கை மின்சார சபை, மன்னார் காற்றாலைகள், விமான நிலையங்கள், ஆள் அடையாள அட்டையை வழங்கும் பணி என அனைத்தும் இந்தியாவுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்குகிறோம் என்ற பெயரில் இந்திய அரசுக்கும் இந்திய நிறுவனங்களுக்கும் சாதகமாகவே இலங்கை அரசு செயற்பட்டு வருகின்றது. இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை உருவாக்கும் நடவடிக்கைகளே இதுவாகும்.

கோட்டா அரசாங்கத்தின் மோசமான டிஜிட்டல் மூலோபாயம் அதன் பொருளாதார நெருக்கடிகளை மேலும் அதிகப்படுத்தியது. ஏனெனில் வளர்ச்சியடைந்து வரும் டிஜிட்டல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு கோட்டாபயவின் அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. டிஜிட்டல் புரட்சி ஏற்படும் என ஆட்சியாளர்கள் கூறினாலும் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் முதலீடு என்பது வெகு குறைவாகவே உள்ளது. இதனால் தொழில்நுட்பத்தில் முன்னோக்கி செல்லும் நாடுகளுக்கு ஈடு கொடுக்க முடியாத நிலைமையே இலங்கையில் காணப்படுகின்றது. 

தாமதமான திட்டங்கள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், ஊழல் பிரச்சினைகள் மற்றும் மூலோபாய கவனம் இல்லாமை ஆகியவற்றால் உருவான எண்ணற்ற பொருளாதார சவால்களையே  இலங்கையில் கோத்தபாய – ரணில் – மகிந்த அரசாங்கத்தின் பதவிக்காலம் கண்டது. இந்த பின்னடைவுகளின் விளைவுகள் நாட்டின் பொருளாதாரத்தை அதாள பாலத்தில் தள்ளி விட்டுச் சென்றது. தமிழ் மக்களை கொன்று குவிப்பதற்கு – இராணுவ செலவுக்கு அரச பணத்தை அள்ளி கொட்டியது பற்றி யாரும் பேசுவதில்லை. பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் நாசமாக்கப்பட்டு வருகிறது.

அரசாங்கம் அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கான அரசியல் சூழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, அத்தியாவசியமான பொருளாதார விசயங்களைப் புறக்கணித்தது அரசு. அண்மைய உலக வங்கியின் அறிக்கையின்படி 57 இலட்சம் பேர் இலங்கையில் வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறை வீழ்ச்சியின் காரணமாக வேலையிலாதவர்களின் எண்ணிக்கை 9 இலட்சமாக அதிகரித்துள்ளது. ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி” என்ற நூலில் இவற்றையெல்லாம் பற்றிப் பேசாத கோட்டாபய,  தனது ஆட்சி பறிபோனதிற்கு உள் நாட்டு வெளிநாட்டு சதி மற்றும் கொரோனாதான் முக்கிய காரணம் எனப் பூசி மெழுகுவது, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியாகும்.