மறவோம் என்பது எம் உறுதி
படுகொலை மூலம் ஒரு போராட்டத்தை முடக்கி விட முடியும் என்பதை நிறுவுவதற்கு முயன்று வருகிறது இலங்கை அரசு.
‘தீவிரவாதத்தை’ முழுமையாகத் தோற்கடித்த முன்னுதாரணம் தாம் என ராஜபக்ச குடும்ப அரசு உலகெங்கும் அறிவித்தது அறிவோம். அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையை மக்கள் ஏற்றுக்கொள்ள வைக்கமுடியும் என்பதை நிறுவ எத்தனையோ அரசுகள் முயன்றும் அவர்கள் தோல்வியை சந்தித்ததுதான் உலக வரலாறு.
அடக்குமுறை – வாழ்வாதார பின்னடைவுகள் எதையும் மக்கள் தாமாக ஏற்றுக் கொள்ளவதில்லை. அவற்றில் இருந்து மீளும் உணர்வு ஒருபோதும் சாகடிக்கப்பட முடியாதது.
உடல்களைக் கொன்று குவிக்கலாம் –நினைவுகளை அழிக்க முடியாது – கனவுகளைப் புதைக்க முடியாது.
அடுக்குமுறை தொடரும்வரை அதற்கு எதிர்ப்பு கிளர்ந்துகொண்டுதான் இருக்கும். அதைத் தடுக்க கொலைகார வரலாறை திரித்து எழுதுவதும் மறைப்பதும் மறக்கச் சொல்வதும் அதிகார சக்திகளுக்கு அவசியமாக இருக்கிறது.
அதனால்தான் நாம் உரத்துச் சொல்ல வேண்டி இருக்கிறது – நாம் ஒருபோதும் மறவோம்.
வீழ்ந்த ஒவ்வொரு உயிரும் வீணாகப் போனது என்ற நிலை எமது நினைவுகள் இருக்கும்வரை வராது. மறவோம் என்பதும் எமது போராட்டத்தின் பகுதிதான்.
நினைவுகளை எவ்வளவு தூரம் முடக்க முயற்சிக்கிறார்களோ அவ்வளவு தூரம் நாம் உரத்துப் பேசுவோம்.
கொலை தீர்வல்ல. அடங்கிவாழ்தல் எமது வாழ்முறை அல்ல. அழிவுகளால் நாம் வீழ்ந்து விடப்போவதில்லை.
படுகொலை நடந்து பதினைந்து வருடம் கழிந்து விட்டது. மக்கள் எழுச்சியை முடக்க வழங்கப்பட்ட எந்த உறுதியும் நடைமுறைக்கு வரவில்லை – இந்தப் பொய் –ஏமாற்று வாக்குறுதிகள் ஒருபோதும் நடைமுறைக்கு வரப்போவதில்லை. நாம் போராட்ட அரசியலை கட்டி எழுப்பாமல் எமது உரிமைகள் வென்றெடுக்க முடியாது. நடந்த கொலை வெறியாட்டங்களையும் – கொடுமைகளையும் – தொடரும் அடக்குமுறையையும் அனைவரும் தெரிந்து கொள்வதும் நினைவில் ஊற்றுவதும் அவசியம். போராட்ட அரசியலைக் கட்ட அவை எமது ஊற்றாக இருக்கட்டும்.
இந்த நோக்கோடு நடைபெறும் கண்காட்சியில் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளையோர் கலந்து கொள்ள வேண்டும். கடந்த வரலாறை நாம் நினைவு கொள்வதும் அதில் இருந்து கற்றுக்கொள்வதும் அவசியம்.
உங்களுக்கு தெரிந்த அனைவரையும் கலந்து கொள்ள ஊக்குவியுங்கள்