பிரித்தானிய தபால் நிலையத்தின் மோசடி பற்றிய குறுந்தொடரான “Mr Bates Vs The Post Office” என்ற வலைத்தொடர் ITV இல் ஒளிபரப்பான பின்னர் தபால் நிலைய மோசடி பற்றிய செய்திகள் பிரித்தானிய மக்கள் மத்தியில் மிகுந்த பேசுபொருளாகியுள்ளது. இம்மோசடி பற்றிய சுயாதீனமான முழுமையான வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்பொழுது வலுப்பெற்றுள்ளது.
ஹொரைசன்( Horizon) என்னும் மென்பொருள் 1999 இல் பிரித்தானியாவிலுள்ள தபால் அலுவலகத்தில் ( Post Office) அறிமுகப்படுத்தப்பட்டது. தபால் நிலையத்தின் கணக்கியல் பணிகளுக்காக ஜப்பானிய நிறுவனமான புஜிட்சுவால் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டது. மென்பொருளின் தவறு காரணமாக தபால் நிலையத்தின் கிளைகளில் இருந்து பணம் காணாமல் போனது போல் தோற்றமளித்தது. இதனால் பல நுற்றுக்கணக்கான தபால் நிலைய ஊழியர்கள் அல்லது துணை அஞ்சல் மாஸ்டர்கள், தபால் நிலையத்தின் பணத்தை திருடியதாக தவறாக குற்றம் சாட்டப்பட்டனர். இதனால் பலர் தமது நன்மதிப்பையும், பணத்தையும் இழந்து சிறைக்கு செல்லவேண்டிய நிலைக்கு உட்பட்டனர்.
மென்பொருளில் உள்ள பிரச்சனைகளை பலமுறை எடுத்துரைத்தபோதும் தபால் அலுவலகம் பாராமுகமாகவே இருந்து வந்தது. இறுதியில் அவர்கள் மீதே பொய் கணக்கு போடப்பட்டு அவர்களை சிறைக்குத் தள்ளியது தபால் நிலைய முகாமைத்துவம். இதனால் பலர் நிதி ரீதியாக அழிந்து வங்கிறோத்து நிலைக்கு ஆளாகினர். சிலர் மிகுந்த உடல் உள பாதிப்புக்கு ஆளாகினர். பலருக்கு இப்பாதிப்பு மரணத்தையும் ஏற்படுத்தியது.
தபால் நிலைய முகாமைத்துவம் மற்றும் குறைபாடுள்ள ஹொரைசன் எனப்படும் குறைபாடுடைய மென்பொருளை உருவாக்கிய புஜிட்சுவின் உரிமையாளர்கள், அதன் குறைபாடுகளை மூடிமறைத்தவர்கள், அதற்கு ஆதரவளித்த பிரித்தானிய கட்சிகளும் இந்த மாபெரும் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் ஹொரைஸனுடனான பிரச்சினைகள் பற்றிய எச்சரிக்கைகளை புறக்கணித்தார். தற்போதைய எதிர்கட்சித் தலைவரும், பொது வழக்குகளின் இயக்குநராக இருந்தவருமான கீர்த் ஸ்டார்மரும் அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு மறைமுக பொறுப்பாளராவார். தபால் துறை அமைச்சராக இருந்த சர் எட் டேவி போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஆலன் பேட்ஸை சந்திக்க கூட மறுத்துவிட்டார். உயர்மட்டத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் சாதாரண மக்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதையே மேற்படி சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
புஜிட்சு (Fujitsu) நிறுவனமானது, துணை தபால் நிலைய ஊழியர்களை தவிர வேறு யாரும் ஹொரைசன் கணக்கியல் பதிவுகளை மாற்ற முடியாது என தபால் அலுவலகத்திடம் கூறியிருந்தது – அதாவது தவறுகளுக்கான பழி துணை அஞ்சல் மாஸ்டர்களிடம் மட்டுமே இருக்க முடியும் என்று கூறியது. கணினிகள் தவறு செய்யாது என்றும் அதனை மீறி தவறு ஏற்பட்டால் அது தபால் நிலைய ஊழியர்களாளேயே ஏற்படும் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது புஜிட்சு நிறுவனம். ஒவ்வொரு முறையும் கணனி தவறு செய்யும்போது அது தமது தவறுதான் என தபால் நிலைய ஊழியர்கள் நம்பினார்கள் அல்லது நம்ப வைக்கப்பட்டார்கள். ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது என பின்னர் நிரூபிக்கப்படுள்ளது. அதாவது ஹொரைசன் மென்பொருளே தபால் நிலையங்களில் பணப் பற்றாக்குறையினை ஏற்படுத்தி, துணை தபால் மாஸ்டர்கள் மீது தவறான வழக்குகளுக்கு வழிவகுத்தது.
1999 முதல் 2015 க்கு இடையில், தபால் அலுவலகம் வழக்குத் தொடரும் அதிகாரங்களைக் கொண்டிருந்தமையால் 700 ற்கும் மேற்பட்ட தபால் ஊழியர்களை, சராசரியாக வாரத்திற்கு ஒருவர் என்ற வீதத்தில் – ஹொரைசன் எனப்படும் மென்பொருள் கணக்கியலின் தகவலின் அடிப்படையில் வழக்குத் தொடுத்தது. மேலும் 283 வழக்குகள் கிரவுன் பிராசிகியூஷன் சர்வீஸ் ( Crown Prosecution Service – CPS) உட்பட பிற அமைப்புகளால் கொண்டுவரப்பட்டன. தபால் நிலையத்தின் கணக்கில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அதற்கு தபால் நிலையத்தின் ஊழியர்களே பொறுப்பு என்பதே தபால் நிலையத்துடனான ஒப்பந்தமாகும். ஆகையால் சிலர் தங்கள் சொந்த பணத்தில் அல்லது கடன் வாங்கி, தம்மீது போலியாக குற்றம் சாட்டப்பட்ட தொகையை செலுத்தினர். பணம் செலுத்த முடியாத பலர் திவால் நிலையை எதிர்கொண்டனர் அல்லது அதன் விளைவாக வாழ்வாதாரத்தை இழந்தனர். இது பிரித்தானிய வரலாற்றின் மிகப்பெரிய கரும்புள்ளி என்று விவரிக்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கான சப்-போஸ்ட் மாஸ்டர்கள் மோசடி செய்ததாக தவறாகக் குற்றம் சாட்டிய கணக்கியல் ஊழலில், இழப்பீட்டு செயல்முறையை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் பாரிய போராட்டத்தின் பின்னர் மீள மதிப்பாய்வு செய்து வருகின்றது. இரண்டு தசாப்தங்களாக தொடர்ந்த போராட்டம் மற்றும், மக்களின் அழுத்தம் இப்போது பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை பாராளுமன்றம் வழியாக நடவடிக்கை எடுக்க அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. பிரதமர் “பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்கவும் அவர்களை குற்றத்திலிருக்குது விடுவிக்கவும் உறுதியளித்துள்ளார் . பொதுமக்களின் போராட்டத்தின் வலிமையால் அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரச்சாரகர்கள் தங்கள் வழக்குகளை மறுபரிசீலனை செய்வதற்கான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை 93 தண்டனைகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன.
செக்கண்ட் சைட் (Second Sight) எனப்படும் சுயாதீன கணக்காளர்கள் ஹொரைசன் மென்பொருளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து தபால் நிலையத்தின் ஊழலை அம்பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர். ஆகவே ஹொரைசன் மென்பொருளின் பிழைகளைக் கண்டறிந்த கணக்காளர்களை பணிநீக்கம் செய்ய தபால் அலுவலக முதலாளிகள் ஏப்ரல் 2014 இல் ரகசியமாக முடிவு செய்தனர். இவ் ரகசிய திட்டத்திற்கு “புராஜெக்ட் ஸ்பாரோ” (Project Sparrow) எனப் பெயரிட்டிருந்தனர். அஞ்சல் அலுவலக வாரிய துணைக் குழுவால் எடுக்கப்பட்ட புராஜெக்ட் ஸ்பாரோ என்னும் இரகசியத் திட்டத்தைப் பற்றி அரசாங்கம் அறிந்திருந்தது என பிபிசி மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. பிரித்தானிய அரசாங்கத்தின் துணையுடன், அரச அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்களும் அஞ்சல் அலுவலக நிறுவன முதலாளிகளும் சேர்ந்து நடத்திய ஒரு மூடி மறைப்பு நாடகமே இது என தற்பொழுது தெரியவருகிறது.
ப்ராஜெக்ட் ஸ்பாரோ இருந்ததிற்கான ஆதாரத்தை முன்னாள் தபால் அலுவலகத் தலைமை நிர்வாகி பவுலா வெனெல்ஸ் வெளிப்படுத்திய பிறகு, 2021 ஆம் ஆண்டில் மிகவும் திருத்தப்பட்ட வடிவத்தில் அதன் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. எனினும் இப்போது பிபிசி திருத்தப்படாத அறிக்கையினை பெற்றுள்ளது. அதில் இதுவரை வெளிவராத ரகசியங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இம்மோசடிக்கு துணைபோன பவுலா வெனெல்ஸ்க்கு மக்கள் சேவைக்காக வழங்கப்பட்ட CBE விருதை திருப்பிப் பறிக்கவேண்டும் என தற்பொழுது அழுத்தம் கொடுக்கப்படுகிறது
“ப்ராஜெக்ட் ஸ்பாரோ” துணைக் குழுவிற்கு பிரித்தானிய தபால் நிலையத்தின் தலைவர் ஆலிஸ் பெர்கின்ஸ் தலைமை தாங்கினார். அத்துடன் தலைமை நிர்வாகி பவுலா வெனெல்ஸ், தபால் நிலைய மூத்த உள் வழக்கறிஞர், பொது ஆலோசகர் கிறிஸ் அவுஜார்ட் மற்றும் பிரித்தானிய அரசாங்க முதலீடுகளின் மூத்த சிவில் ஊழியர் ரிச்சர்ட் காலார்ட் ஆகியோரும் இருந்தனர். ஆகவேதான் இது அரச துணையுடன் நிகழ்த்தப்பட்ட ஒரு மோசடி எனக் கூறப்படுகிறது
தபால் நிலையத்தின் ஊழியர்கள் அல்லது துணை அஞ்சல் மாஸ்டர்கள் 2017-2019 ஆம் ஆண்டில் நீதிமன்றம் மூலம் தபால் அலுவலகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததால், “புராஜெக்ட் ஸ்பாரோ” விவாதங்களின் விவரங்களை தபால் நிலையம் வெளிப்படுத்தவில்லை. 2014 இல் தபால் மாஸ்டர்களுக்கு “டோக்கன் கொடுப்பனவுகள்” அல்லது இழப்பீடாக மொத்தம் £1 மில்லியன் மட்டுமே செலுத்த தபால் அலுவலகம் திட்டமிட்டிருந்தது. ஆனால் இது ஊழலின் மொத்தச் செலவை மிகவும் குறைத்து மதிப்பிடுவதாகும், ஏனெனில் தற்பொழுது வெளியாகியுள்ள ஆவணங்களின் அடிப்படையில் இது இப்போது £1bn க்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல் பிரித்தானிய அரசின் இன்னொரு மோசடியான விண்ட்ரஷ் ஊழல் ஏப்ரல் 2018 இல் வெளிப்பட்டது, ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ்கறுப்பின மக்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று தவறாக வகைப்படுத்தப்படுத்தி அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றினர். பலர் தமது வேலையைப் பாதுகாப்பதில், வைத்தியசாலையை அணுகுவதில், வீடு வாடகைக்கு எடுப்பதில், தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர், பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் கரீபியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் 1948 மற்றும் 1971 க்கு இடையில் இங்கிலாந்துக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தபால் நிலைய மோசடி போல் இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட கறுப்பின மக்களுக்கும் நீதி கிடைக்க போராட வேண்டும். மக்களுக்கான ஆயுதம் என்பது தற்போது துப்பாக்கிகளும் குண்டுகளுமல்ல. போராட்டம் மட்டுமே அவர்களது ஆயுதம். போஸ்ட் ஆபிஸ் போன்ற முதலாளித்துவ நிறுவனங்களால் அல்லது அரச அதிகாரத்தால் ஒடுக்கப்படும் மக்களுக்கு போராட்டமே சிறந்த வழி.