76 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக தமிழ் சொலிடாரிட்டி  போராட்டம்

65 . Views .

அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்கியும் , தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மறுத்தும் இலங்கை அரசாங்கம் தனது ‘சுதந்திர தினத்தை’ தனது வழமையான முறையில் கொண்டாடியது 

இந்த நாள் எங்களின் சுதந்திர தினம் அல்ல, நமக்கெல்லாம் கறுப்பு தினம் என்று வலியுறுத்தி தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே போராட்டங்களை நடத்தியது. இலங்கையில் உள்ள அனைவரினதும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயற்பட்டை  நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ் சொலிடாரிட்டி ஏற்பாடு செய்த  போராட்டத்தின் போது தான் பிரியங்கா பெர்னாண்டோ போராட்டக்காரர்கள் மீது  கொலை மிரட்டல் விடுத்தார்.

இந்த ஆண்டு, தமிழ் சொலிடாரிட்டி மற்ற புலம்பெயர் அமைப்புகளிலிருந்து தனியான போராட்டத்தை ஏற்பாடு செய்தது. பிரித்தானியாவில், சில புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து, நமது அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறு “His Majesty King Charles III” பிரித்தானிய மன்னரிடம்  வேண்டுகோள் விடுத்தனர். இந்த அணுகுமுறையுடன் நாங்கள் அடிப்படையில் உடன்படவில்லை. பிரிட்டிஷ் முதலாளித்துவத்தால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியான முடியாட்சியை நாங்கள் நம்பவில்லை அல்லது அதிகாரத்தில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சி உட்பட வலதுசாரி அரசாங்கங்களை நாங்கள் நம்பவில்லை. அவர்களின் நலன்கள் நம்மை நேரடியாக எதிர்க்கின்றன. எந்த ஒரு முதலாளித்துவ அரசுகளும் எமக்கான உரிமைகளை  ஒருபோதும்  வழங்கப்படவில்லை; இன்று நாம் அநுபவிக்கும் ஒவ்வொரு உரிமைகளும் எமது இயற்கையான கூட்டாளிகளான தொழிலாளர்  வர்க்கம், வெகுஜனங்கள் மற்றும் இளைஞர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் பெறப்படடவை .

நமது இயற்கையான கூட்டாளிகளுடன் கூட்டாக போராட்டங்களை ஏற்பாடு செய்வதே எங்கள் உத்தி. எனவே, தமிழ் சொலிடாரிட்டி ஒரு சுயாதீனமான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது. பிற குழுக்களால் ஏற்பாடு செய்யப்படட போராட்டத்துக்கு  பிறகு தனியான போராட்டத்தை ஏற்பாடு செய்தது. முதல் போராட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கலந்து கொண்டு அரண்மனை மற்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். அதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட நபர்கள் தமிழ் சொலிடாரிட்டி  உறுப்பினர்களுடன் இணைந்து தூதரகத்திற்கு வெளியே போராட்டத்தை தொடர்ந்தனர். தூதரகத்திற்குள் கொண்டாடிக் கொண்டிருந்த இலங்கை உயர்ஸ்தானிகர்  ரோகித போஹோல்லகம  மற்றும் பிற மூத்த அதிகாரிகள் எமது பலத்த எதிர்ப்பை எதிர்கொண்டனர். 

 

நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு:

நாங்கள் கோருகிறோம்:

  • PTA மற்றும் பிற அடக்குமுறை சட்டங்களை உடனடியாக ரத்து செய்யவும்
  • போராடடக்காரர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடுங்கள்
  • அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்
  • ஒன்று கூடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்பனவற்றை உறுதி செய் 
  • இராணுவம் மற்றும் அரசாங்க அதிகாரத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து நிலங்களையும் திரும்ப வழங்கவும்
  • சுதந்திரமான போர்க்குற்ற விசாரணையை நாங்கள் கோருகிறோம்
  • அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் பகுதிகளிலிருந்தும் படைகளை திரும்பப் பெறு
  • கல்வி மற்றும் சுகாதாரத்தில் தனியார்மயமாக்கலை நிறுத்துங்கள்
  • தமிழ் பேசும் மக்களின்  சுயநிர்ணய உரிமையை அனுமதியுங்கள்.