பிரித்தானிய புதிய குடிவரவு சட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள்

ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் சட்டமூலத்திற்கு எதிரான போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம்
497 . Views .

பிரித்தானிய அரசு சட்டப்பூர்வ குடியேற்றத்தில் முக்கிய மாற்றங்களை அண்மையில் அறிவித்துள்ளது.

தற்போதய ஆளும் கட்சியின் குடிவரவு  திட்டங்களின்படி, தங்கள் மனைவியையோ அல்லது கணவனையோ இங்கிலாந்துக்கு அழைத்து வர விரும்புபவர்கள்  வருடத்திற்கு £38,700 சம்பாதிக்க வேண்டும், இது £18,600 என்ற தற்போதைய எண்ணிக்கையிலிருந்து இரண்டு மடங்கான அதிகரிப்பாகும்.

அரசு அறிக்கையின்படி  

  • வெளிநாட்டு திறமையான தொழிலாளர்கள் தமது உறவுகளை பிரித்தானியாவுக்கு அழைப்பதாயின்  அவர்கள் குறைந்த பட்சம் £38,700 சம்பளம் எடுக்கவேண்டும். இது £26,200 இலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. (ஆனால் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு துறைக்கு விலக்கு அளிக்கப்படும்).  
  • துணைவர் அல்லது குடும்ப விசாவிற்கான குறைந்தபட்ச வருமானத் தேவை £18,600 இலிருந்து £38,700 ஆக உயர்த்தப்படும்.  
  • பராமரிப்புப் பணியாளர்களாக வேலை செய்வோர் தம்மை  சார்ந்திருப்பவர்களை UK க்கு அழைத்து வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் விசாக்களுக்கு ஸ்பான்சர் செய்ய பராமரிப்பு நிறுவனங்கள் பராமரிப்பு தர ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.  
  • பற்றாக்குறையக இருக்கும் வேலைவாய்ப்புகளுக்கான பட்டியல் சீர்திருத்தப்படும் மற்றும் பற்றாக்குறை வேலைவாய்ப்புக்களுக்கான  தற்போதைய 20% செல்லும் ஊதிய தள்ளுபடி ரத்து செய்யப்படும். 
  • மாணவர்கள் குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வருவதற்கான விதிகள் கடுமையாக்கப்படும். மேலும் பட்டதாரி விசா வழியின் முழு மதிப்பாய்வை மேற்கொள்ள இடம்பெயர்வு ஆலோசனைக் குழு நியமிக்கப்படும். 

இருப்பினும் இது ஒரு பெரிய தாக்கத்தை மக்களுக்கு உருவாக்கும் ஏனேனில் குறைந்த திறமை ஊதியத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைய கடினமாக இருக்கும். வசதியானவர்கள் மட்டும் குடும்பத்துடன் இணையலாம் என மறைமுகமாக கூறுகின்றது அரசு.  இது அடிப்படை மனித உரிமை மீறல்களாகவே பலராலும் கருதப்படுகிறது. ஏற்கனவே பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர். இது தொடர்பாக மனித உரிமை வழக்கறிஞர்கள் சிலரும் மேல்முறையீடு செய்வதற்கு முன்வந்திருக்கிறார்கள். 

கடந்த காலங்களில் பிரித்தானிய தேர்தல்களில் சரியான கொள்கையை முன்வைப்பவர்களுக்கு மட்டும் வாக்கு வழங்கும்படி தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை செய்திருந்தது. எதிர்காலத்தில் மக்கள் இவ்வாறான பாதிப்புகளை சந்திக்க கூடாது என்ற அடிப்படையில் தீவிர வலதுசாரிய கன்சவேட்டிவ் கட்சிக்கு எதிர்ப்பும் தெரிவித்து வந்திருந்தோம். இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக பல போராட்ட சக்திகளுடன் இணைந்து பல நடவடிக்கைகளை  

தமிழ் சொலிடாரிட்டி முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்களை கண்டித்து தொடர்ச்சியான போராட்டங்களை அகதிகள் உரிமை (refugeerights campaign) ஊடாக முன்னெடுப்பதற்கு தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு முடிவெடுத்துள்ளது. 

 

மதன்