கூட்டமைப்பின் முதுகெலும்பு 

658 . Views .

21 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அன்று இரவே காலி முகத்திடலில் இராணுவம் குவிக்கப்பட்டு போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ரணிலுக்கு ஆதரவு வழங்காமல் – அவரை சனாதிபதியாக பாராளுமன்றம் தெரிவு செய்யாமல் தடுக்கவும் நாங்கள் எடுத்த முயற்சியை விமர்சித்தவர்களுக்கு இப்போது புரிந்து இருக்கும் என்றார் தமிழ் தேசிய கூட்டமைப்பின்(TNA) ஊடக பேச்சாளர் சுமந்திரன். அதாவது TNA கூட்டாக இணைந்து சஜித் பிரேமதசவால் தெரிவு பரிந்துரைக்கப்பட்ட  – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என எடுத்த நிலைப்பாடு சரியானது என்பதை நிறுவ முயல்கிறார். டலஸ் அழகபெரும சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருந்தால் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்து இருக்காது என்று சுமந்திரன் எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஒரு முடிவை எடுத்தால் அதைக் கூட்டாக சுமக்க வேண்டும் – அப்படி செய்யாதவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என சுமந்திரன் சமீபத்தில் சொல்லி இருந்தார். கூட்டமைப்பில் இருக்கும் பா.உ பலர் கூட்டமைப்பின் தலைமை சொல்வதை கேட்பதில்லை என்ற பாணி மிரட்டல் அது எனவும் எடுத்துகொள்ள முடியும். கூட்டமைப்பின் தலைமை யார் என்பதும் முடிவுகள் எடுப்பதில் யார் ஆளுமை செலுத்துகிறார்கள் என்பதும் எல்லோருக்கும் வெளிப்படையானது. சுமந்திரனை மீறி அரசியல் முடிவுைகளை எடுக்கும் வலிமை அந்த குழுவில் யாருக்கும் இல்லை. இதனாலும் தான் சுமந்திரனின் ஆளுமை அதிகமாக இருக்கிறது. அவருக்கு முன் ஒரு கருத்தை எதிர்த்து வாதிட இயலாமை – பிறகு அந்த முடிவு சிக்கலுக்கு உள்ளாகும் பொழுது ‘இது சுமந்திரன் முடிவு’ எனவும் ‘எமக்கு சம்மந்தம் இல்லை’ எனவும் பின்னால் இருந்து பேசுபவர்களாகவே ஏனைய கூட்டமைப்பினர் இருக்கிறார்கள். இந்த அனுபவத்தாலும் தான் சுமந்திரன் இவாறு பேசி இருக்கிறார். தனது முன் அனுபவம் காரணமாக இதை பேசினேன் என ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்திருக்கிறார்.

சுமந்திரன் தனது சக பா-உ பற்றி பேசுவது சரியே. செல்வம் அடைக்கலனாதனில் இருந்து சிறிதரன் வரை பல்வேறு முறையில் நிலையற்ற/ முன்னுக்குப் பின் முரணான நடைமுறைகளையே இவர்கள் செய்து வந்திருகிறார்கள். ஆனால் சரியான முடிவை எடுக்க யாருக்குமே ‘முதுகெலும்பு’ இல்லை என்பதுவே உண்மை. சுமந்திரனின் முதுகெலும்பும் நிறையவே வளைந்து கொடுத்திருகிறது என்பதுதான் வரலாறு.

இதுவரை கூடமைப்பினர் ஐக்கிய தேசிய கட்சியின் பதுகாவலர்கலாகத்தான் இயங்கி வந்திருக்கிறார்கள். ரணிலுடன் நெருக்கமாக இயங்கி வந்திருக்கிறார்கள். இன்று தமிழ் மக்கள் மத்தியில் ரணில் மேல் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்றால் அதற்கு கூட்டமைப்பினர் கூட்டாக கட்டி எழுப்பி இருந்த பிரமையுமே காரணம். எல்லாக் காலங்களிலும் தாம் ‘குறை தீமையின்’ பக்கம் நின்று வளைந்து கொடுத்துக் கொண்டு நின்றதைப் பெருமையாகப் பேசுகிறார் சுமந்திரன்.

மகிந்த இராஜபக்ச ஆட்சிக்கு வராமல் தடுக்க எனச் சொல்லி தமிழ் மக்களை கொலை செய்த இராணுவத்தின் தளபதியாக இருந்த பொன்சேகவுக்கு ஆதரவு அளித்தனர். பின்னர் இராஜபக்ச அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு அளித்தனர். மைத்திரிபால சிறிசேனா ரணிலினை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய போது ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கினர். தற்போது ரணில் சனாதிபதி பதவிக்கு வராமல் தடுக்க இராஜபக்ச கட்சியின் வேட்பாளர் டலஸ் அழகபெருமாவுக்கு ஆதரவு என்கிறனர். டலஸ் ஒரு இனவாதியோ ஊழல் செய்பவரோ அல்ல என்ற சான்றிதல்களையும் இவர்கள் வழங்குகின்றனர்.

பாராளுமன்றத்தில் தங்கள் இருப்பை பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு எந்த அரசியல் அடிப்படையும் இந்த முடிவுகளுக்கு இல்லை. இந்த நிலைபாடுகளை மேற்கொண்டதன் ஊடாக மக்களின் எந்த பிரச்சனைக்கு தீர்வு கொள்ள முடியும் என இவர்கள் நம்புகிறார்கள். இதுவரை இந்த குறைதீமை நிலைப்பாட்டால் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? மீண்டும் மீண்டும் இனவாதிகளையும் மக்கள் விரோத சக்திகளையும் தமிழ் மக்கள் நம்பி நிற்பதை தவிர வேறு வழியில்லை என்றா சொல்கிறீர்கள்? சுமந்திரன் சொல்வது போல் பேயினை வராமல் தடுக்க பிசாசிற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டின் மூலம் இவர்கள் சாதித்தது என்ன? ஆக குறைந்து இவர்கள் சொல்வது போல் பேயை வாராமல் தடுத்து இருக்கிறகளா என்றால் அதுவும் இல்லை. உண்மையில் உங்களின் இந்த குறை தீமை நிலைப்பாடு தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்திருக்கிறது.

புதிய அரசியல் அமைப்புச் சட்டம் என்பதே இவர்களின் ஓயாத பல்லவியாக இருக்கிறது. டலஸ் அழகபெரும சனாதிபதியானால் கடிவாளம் நமது கைக்குள் இருந்திருக்கும் என்கிறார்கள். இம்முறை எழுத்து மூலம் இது தொடர்பாக கையெழுத்து வாங்கிய பின்னர்தான் ஆதரவு அளித்தோம் என்கிறார்கள். கோத்தபாயவின் பதவி விலகல் கடிதம் போல இந்த ஒப்பந்தமும் இன்னும் யார் கண்ணிலும் படவில்லை. தெற்கு அரசியல் வாதியின் ‘பேச்சளவு வாக்குறுதிகளை’ நம்ப முடியாது என்பதை எந்த ஒரு சாதாரண தமிழரிடம் கேட்டாலும் சொல்லி விடுவார். கையெழுத்து வைக்கப்பட்ட பல ஒப்பந்தங்களும் எவ்வாறு கிழித்து எறியப்பட்டன என்பதும் அனைவருக்கும் தெரியும். இதையும் தாண்டி நகர வேண்டும் தமிழ் அரசியல் என்ற படிப்பினைக்கு இன்னும் கூட்டமைப்பு வந்து சேரவில்லை. இம்முறை இவர்கள் என்ன கோரிக்கையை வைத்தார்கள்? ‘இதெல்லாம் பெரிய விசயமில்லை – இவற்றை நான் எனது பழைய தேர்தல் பிரச்சாரத்திலேயே ஏற்றுக் கொண்டு இருக்கிறேன்’ என சஜித் பிறேமதாசவே சொல்லி விட்டார் என்பதை சுமந்திரனே சுட்டி காட்டி இருக்கிறார். எந்தப் புதிய கோரிக்கையோ – அல்லது ரணில் ஏற்றுக் கொள்ளாத கோரிக்கையையோ இவர்கள் முன்வைக்கவில்லை. இதற்கு ஏன் பேச்சுவார்த்தை? கூட்டம் கூடுதல்? கையெழுத்துப் பிரச்சாரம்? வெல்லுகிற குதிரையில் பந்தயம் கட்டுகிறோம் என நேரடியாக சொல்லிவிட்டு செல்ல வேண்டியதுதானே. இதுதான் இவர்களின் முடிவு எடுப்பதின் பின் இருந்த சாராம்சம்.

ஆனால் இராஜபக்சவினையோ அல்லது ரணிலினையோ ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கான இவர்களின் செயற்பாடுகள் தோல்வியில் தான் முடிந்தன. கூட்டமைப்பின் அரசியற் பந்தயங்களும் சூதாட்டங்களும் ஒரு வெற்றியையும் தரவில்லை. இராஜபக்சகளை பதிவியில் இருந்து மக்கள் தான் துரத்தி அடித்தார்கள். தெற்கில் ஆட்சியில் உள்ள போரினவாத தரப்புகளுக்கு எதிராக மக்கள் திரளும் போது எல்லாம், ஆட்சியில் இல்லாத போரினவாத தரப்பிற்கு ஆதரவு அளித்து அவர்களைப் பலப்படுத்துவதே கூட்டமைபின் வரலாறாக இருக்கிறது.  எந்தத் தயக்கமும் இன்றி குறை தீமை என்ற பெயரில் இனவாதத்தின் பின் திரளத் தயாராக இருக்கும் கூட்டமைப்பினர் ராஜபக்சக்களை விரட்டடி விராட்டி அடித்த மக்கள் போராட்டம் பக்க நிற்கவோ – அதற்கு மக்களை திரட்டவோ தயாராக இல்லை. அவர்தம் அரசியலின் போதாமை/குறைபாட்டை இது திறம்பட வெளிக்காட்டி நிற்கிறது.

தெற்கில் மாற்றம் நிழ்ந்து பேரினவாத கட்டைமப்பு பலவீனம் அடையும் சந்தர்பத்தைப் பயன்படுத்தி அதனை உடைத்து, மக்கள் நலன்சார்ந்து இயங்கும் மாற்று அரசியல் தரப்புகளை பலப்படுத்தாமல்; மீண்டும் மீண்டும் பேரினவாத இலங்கை அரசை பலப்டுத்தும் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே சுழல்கிறது கூட்டமைப்பு. மக்கள் எழுச்சியின் முன்னால் உருக்குலைந்து கிடந்த இலங்கை அரசினை மீண்டும் இயங்க வைத்துள்ளது இந்த இடைக்கால அரசு என்னும் ஏற்பாடு.

மக்களால் தெரிவு செய்யப்பாடத ஒருவர், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால், இரகசியமாக நாட்டின் தலைமை அரசியல் அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்படுகிறார். இதனை எதிர்த்தும், இடைக்கால அரசு என்பதை மறுத்தும் பாராளுமன்ற உறுப்புரிமையை தூக்கி எறிந்து விட்டு போரட்டக் களத்தில் இயங்க முன்வந்து இருந்தால் நாட்டில் மக்களிடையே நல்லிணகத்தை ஏற்படுத்தும் பெரும் அரசியல் நிகழ்வாக அது அமைந்திருக்கும். தமிழ் பேசும் மக்கைளின் உரிமைகளை அடைவது நோக்கிய முக்கிய நகர்வாக அது இருந்திருக்கும்.

டலஸ் வந்தாலும் ரணில் வந்தாலும் பேரினவாத அரச அதிகார மையத்தினை காத்திட அவர்கள் எதனையும் செய்வார்கள். இராணுவத்தை ஏவி போராட்டகாரர்கள் மீதான தாக்குதலை நடாத்தும் இராஜபக்சவினை அகற்றிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும். அதற்காக ரணில் தரப்புக்கு வாக்களியுங்கள் என்று பலமுறை முன்பு பிரச்சாரம் செய்தீர்கள். இப்போது நீஙகள் கூறிய ரணில்தான் சனாதிபதியாக உள்ளார்.ஏன் இப்போதும் இராணுவம் தாக்குகிறது என எண்ணி உங்கள் பழைய மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுங்கள். பேரினவாத கட்டமைப்பினை மீண்டும் பலப்படுத்தும் நிகழ்ச்சி நிரலில் கூட்டமைப்பு இணைந்து செயற்பட்டு உள்ளது. இந்த வரலாற்று குற்றத்தில் இருந்து கூட்டமைப்பு தப்ப முடியாது. கதைத்துப் பேசி இதில் இருந்து தப்ப முடியும் என நினைகிறார்கள். வரலாறு அவ்வாறு இயங்குவதில்லை.

பேரினவாத கட்டமைப்பினை காப்பாற்றுதலின் ஊடாக தமது நலன்களும் பேணப்படும் என்பது கூட்டமைப்பு நன்கறிந்த விடயம். சனாதிபதி தெரிவிற்கு இரகசிய வாக்கெடுப்பு தேவையில்லை. மக்களால் தெரிவு செய்யபட்வர்கள் நாட்டின் மிக மோசமான காலகட்டத்தில், நாட்டையும் தலைமமை அரசியல் அதிகாரத்துக்கு யாரை தெரிவு செய்கிறார்கள் என்பதை மக்களும் தெரிந்து கொள்ள திறந்த வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் கூட்டமைப்பு கோரவில்லை. ஏன் எனில் போனரிவாத அரசின் இந்த கட்டைமைப்பு அவர்களுக்கும் ஏதுவாகதான் இருக்கிறது.

ஓர் அரசியல் நிலைப்பாடு எடுக்க – அதுபற்றி கூட்டமைப்பினர் மக்கள் முன்னால் விவாதிப்பதில்லை. நிலைப்பாடு தொடர்பாக நடக்கும் விவாதத்தை பற்றி அவர்கள் வெளியே வாயும் திறப்பதில்லை. ஏன் என்றால் ஏற்படும் முரண்பாடுகளும் , விவாதமும் அரசியல் நிலைப்பாட்டுப் பிரச்சனையோ அல்லது கோட்பாட்டு பிரச்சனையோ அல்ல. அது அவரவர் அதிகாரம் நலன் சார்ந்த முறுகலே ஆகும்.

டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் (பா.உ) அறிவித்து இருந்தார்கள். (அதைவிட அதிகம் எனவும், தனது கணக்குப்படி 121 என்கிறார் சுமந்திரன் – அவரது இத்தகைய கணக்குகள் தொடர்ந்து பிழைத்து வருகிறது). ஆனால் வாக்கெடுப்பில் அவர் பெற்றுக்கொண்டது 82 வாக்குகளே. TNA தரப்பில் இருந்து கூட்டு முடிவு என்று அறிவிக்கப்பட்டாலும் இரகசிய வாக்கெடுப்பில் TNA பா.உ களில் சிலர் ரணிலுக்கு வாக்களிக்களிப்பார்கள் என ஹரின் பெர்னாண்டோ கூறினார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் ” முதுகெலும்பு உள்ளவர்கள் கூட்டணியின் கூட்டு முடிவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்” என்றார் சுமந்திரன். கூட்டணியின் முடிவுக்கு எதிராக ரணில் ஆதரவு நிலைப்பாடு எடுத்தவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் – வளைந்து கொடுப்பவர்கள் என்கிறார் TNA ஊடக பேச்சாளர், ஆனால் யாருக்கு வளைந்து கொடுக்கிறார்கள் என்று வெளிப்படையாக இன்னும் யாரும் சொல்லவில்லை. உண்மையில் யாரை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டினை இவர்கள் மக்கள் நலனில் கொண்ட கரிசனையிலில் இருந்து எடுப்பதில்லை. மாறாக தமது அதிகார நலன்களை பாதுகாத்தலின் அடிப்படையில் இருந்தே யாரை ஆதரிப்பது என்ற முடிவுக்கு இவர்கள் வருகிறார்கள்.

”நாங்கள் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற மாட்டோம்” என்று கடந்த 50வருடங்களாக கூட்டணியினர் கூறி வருகின்றனர். அதவாது அமைச்சு பதவி பெற்று விலைபோக மாட்டோம்; சலுகைகளை அனுபவிக்கமாட்டோம் என்கிறார்கள். அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியானலும், இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆனாலும் சரி அவர்கள் இந்தியாவின் செல்ல பிள்ளைகளாக இருக்கும் சலுகையை யாருக்கும் விட்டு கொடுக்கத் தயாரில்லை. 1980களில் இந்திய – இலங்கை ஒப்பந்தம் தொடர்பான காலகட்டம் தொடக்கம் அண்மையில் 13ஆவது திருத்த சட்டத்தை அமுல்ப்படுத்த வேண்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது ஈறாக பல்வேறு விடயங்கள் இதற்கு சான்று பகிர்கின்றன. இந்திய அரசின் கைபொம்மையாக இருக்க வேண்டியே, TNA என்ற கூட்டமைப்பு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

பூகோள அரசியலில் இலங்கை அரசினை தமது பக்கம் சாய்க்க தமிழர் தரப்பினை இந்திய அரசு பயன்படுத்தும். இதனை பயன்படுத்தி நமது அரசியல் நலன்களை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூட்டணியினர் ஓயாமல் சொல்லி வருகிறார்கள். இவ்வாறு தர்க்க அடிப்பையில் மக்களின் உரிமைகளை வென்றெடுத்த வரலாறு இல்லை. ஆனால் அவர்கள் சொல்வதை முழுதாக மறுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த பூகோள அரிசியல் ‘காய் நகர்த்தல்களில்’ இந்தியாவின் கைப்பொம்மை காய்களாக இருப்பதன் ஊடாக இலங்கைக்குள் தமது அதிகார நலன்களை பாதுகாத்து கொள்கிறது கூட்டமைப்பு. பல கட்சிகளாக உடைபட்டு இல்லாமல், தமது காய் நகர்தலுக்ககாக இவர்கள் ஓர் கூட்டமைப்பாக இருப்பதும் இந்திய ஒன்றிய அரசுக்கும் ஏதுவானதாகும்.

TELO வின் மத்திய குழு இனி தமது கட்சி இனி தனிதே தேர்தலில் போட்டியிடும் என்று முன்பு முடிவெடுத்து அறிக்கை வெளியிட்டது. அடுத்த நாள் கூட்டமைப்பில் உள்ள கட்சி தலைவர்கள் இந்திய தூதரகத்தில் நடாத்திய கூட்டத்தின் பின்னார் TELO வின் மத்திய குழு முடிவு எவ்வாறு தலைக்கீழாக மாற்றப்பட்டது என்பது எல்லோரும் அறிந்ததே. தற்போது இடைக்கால சனாதிபதி தெரிவின் போது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை TNA உறுப்பினர்களுக்கு சுமந்திரனின் தொலைபேசி வாயிலாக இந்திய தூதரக அதிகாரி கூறினார் என்று தினசரி நாளிதழான காலைக்கதிர் தனது ஆசிரியர் தலையங்கத்தில் வெளியிட்டுள்ளது. காலைக்காதிரின் தலைமை ஆசிரியரான வித்தியாதரனும் சுமந்திரனும் நெருக்கமானவர்கள். அது மட்டுமின்றி சுமந்திரன் தரப்பு அரசியலை முழுமையாக ஆதரிக்கும் பத்திரிகையாகவே காலைக்கதிர் விளங்குகிறது. இந்த செய்தியினை சுமந்திரனோ, வேறு TNA உறுப்பினர்களோ இந்திய தலையீடு பற்றிய விசயத்தை முற்றுமுழுதாக மறுதலிக்கவில்லை. தனது தொலைபேசி வாயிலாக சொல்லியதாக வந்த செய்தியை சுமந்திரன் மறுத்திருக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அதிகார நலனை தக்கவைத்து கொள்ள ஒரு கூட்டணியாக தற்போது விளக்குகிறதே தவிர அது மக்களின் நலன் மற்றும் உரிமைகளை வென்றெடுக்கும் ஒர் அரசியல் சக்தியாக இல்லை. தமது எஜமானர்களின் நலனை பிரதிபலிப்பதன் ஊடாக தமது அதிகார மையத்தை தக்க வைத்து கொள்ளுதலே கூட்டமைப்பின் நோக்கமாக இருக்கிறது.