பின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம் 

1,497 . Views .

  சாரா ராஜன்

இந்தியப் பிரதமர் மோடி 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பரப்புரை  செய்து கொண்டிருக்க இந்தியப் பொருளாதார உண்மை நிலவரம் வேறு விதமாக இருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் வேகமாக மந்தநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 70  ஆண்டுகளில் இல்லாத மந்த நிலைக்கு இந்தியப் பொருளாதாரம் நகர்த்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (GDP) கடந்த ஐந்து காலாண்டுகளில் குறைந்து இப்போது 5% க்கும் குறைவாக உள்ளது.

பல தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இன்னும் பத்தாயிரம் தொழிற்சாலைகள் வரை மூடப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. குறிப்பாக கார் தொழிற்சாலைகள் 41% சரிவடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் மட்டும் 1.5 மில்லியன் வேலைகள் இழக்கப்படும் என எதிர்பாக்கப்படுகின்றது

பொருளாதாரத்தில் வங்கித்துறையில் ஏற்படும் மந்த நிலையானது மேலும் சரிவைத் தூண்டக்கூடும். அண்மையில் வங்கித் தொழிலாளர்களுக்கு எதிரான சீர்திருத்தங்களை அரசாங்கம் செயல்படுத்த முயன்றபோது, அந்நடவடிக்கை தொழிலாளர்கள் மத்தியில் தீவிர எதிர்ப்பைத் தூண்டியது அறிவோம். பிரகாசிக்கும் இந்தியா என்ற பிரச்சாரம் வெறும் போலி என்பது இன்று தெட்டத் தெளிவாகி விட்டது. ‘Shining India’ என்ற சுலோகத்தை பரப்புரை செய்ய  மோடி 20 மில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்ட காலத்தில் இருந்தே அது ஒரு கொடூர நகைச்சுவையாகவே இருந்தது. உலக ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதி உள்ள இந்தியாவில் இது வெற்றுப் பரப்புரையே.

உண்மையில் மோடி ஆட்சியில் நடப்பது இதற்கு நேர்மாறான ஒன்று. எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை வானளவு உயர்ந்துள்ளது. கறுப்பு பணம் பற்றிய தனது உறுதி மொழியை நிறைவேற்ற மோடி அரசாங்கம் ‘பணமதிப்பிழக்கம்’(de-monetisation) என்னும் நடவடிக்கையை ஒரே இரவில் நடைமுறைப்படுத்தியது. அதாவது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் பயன்படாது என்பதே அது. ஆனால் இந்த நடவடிக்கையின் மூலம், 86% பணம் சட்ட விரோதமாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் demonetisation ஆல் கள்ள நோட்டுகள் 35% அதிகரித்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. இது மட்டுமில்லாமல் 1.5 மில்லியன் வேலை இழப்பு மற்றும் சிறு வணிகங்கள் மூடப்பட்டுள்ளன. Demonetisation ஐ அடுத்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமுல்ப்படுத்தப்பட்டது. இந்நடைமுறையும் அதன் குறிக்கோளான வரி சேகரிப்பு மற்றும் கறுப்பு பணம் கையாளுதலை தடுத்தல் ஆகியவற்றை நிறைவேற்றவில்லை.

மேல் குறிப்பிட்ட தோல்விகள் மற்றும் மோசமான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியிலும், இந்த ஆண்டு மே மாதம் இரண்டாவது முறையாக மோடி எதிர்பாராத பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். வகுப்புவாத பிரிவினை , தேசியவாதம், பாகிஸ்தானுடனான போர் அச்சுறுத்தல் மற்றும் பிற காரணிகள் இந்த வெற்றிக்கு பங்களித்தன.

மேற்கு முதலாளித்துவ நாடுகளில் சோதிக்கப்பட்ட மற்றும் தோல்வியடைந்த முறைகள் இப்போது மோடி தலைமையிலான அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏழைகளிடமிருந்து செல்வந்தர்களுக்கு செல்வத்தை மாற்றும் நடவடிக்கைகள், தனியார்மயமாக்கல் முயற்சிகளை விரைவுபடுத்துதல், வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி நிறுவனங்களைப் பாதுகாத்தல், பெருவணிகங்களுக்கு வரிச்சலுகைகளை வழங்குதல் ஆகியவை அதில் அடங்கும். இதே சமயம் பொதுச் சேவைகளுக்கு ஒதுக்கும் பணம் குறைக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட்டப்பட்டும் வருகிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கார்ப்பரேட் வரியை 30% வீதத்தில் இருந்து 22% வீதமாக குறைத்தார். அதே நேரத்தில் அரச செலவினங்களைக் குறைப்பதாக உறுதியளித்தார். இது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளிடமிருந்து அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்.டி.ஐ) மீட்டெடுக்கும் என்று அவர் கூறுகிறார். 15% க்கும் குறைவான வரி ஆப்பிள்-கம்பனி போன்ற உற்பத்தியாளர்களை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு ஈர்க்கும் என்று அவர் கூறினார். ஆனால் சீன உழைப்பில் மூன்றில் ஒரு பங்கான குறைந்த வரி மற்றும் தொழிலாளர் செலவுகளை வழங்கினாலும், சீன உற்பத்தியுடன் போட்டியிடும் திறன் இந்தியாவுக்கு இல்லை. அதிநவீன தொழில்நுட்பத்தை சொந்தமாக வைத்து உற்பத்தி செய்யும் திறனைப் பொறுத்தவரை இந்திய உற்பத்தி சீனாவை விட பின்தங்கியிருக்கிறது.   

இதன் விளைவு மோடி அரசு சொல்வதற்கு நேர்மாறானது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு வீழ்ச்சியடைந்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் மலிவான உழைப்பால்( cheap labour) உருவாக்கப்பட்ட செல்வம் இப்போது நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறது. செல்வந்தர்களின் அதிக வெளியேறுதலில் ( outflow of wealthy individuals) இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது (சீனாவும் ரஷ்யாவும் முதல் மற்றும் இரண்டாவது). கடந்த ஆண்டு மட்டும் 5,000 மில்லியனர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். மற்றொரு அறிக்கையின்படி, 2014 முதல் 23,000 டாலர் மில்லியனர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடன் அடிப்படையிலும்  – மற்றும் சேவைத் துறையையுமே முக்கிய அடிப்படையாக கொண்டிருந்தது. மோடியின் ‘Make in India’ பிரச்சாரம் மூலதனத்தை விட்டு வெளியேறும் போக்கை மாற்றத் தவறிவிட்டது. நிர்மலா சீதாராமன் கடைசி பட்ஜெட்டை 10 ஆண்டு பார்வை ஆவணம் என்று குறிப்பிட்டார். ஆனால் மூன்று மாத காலப்பகுதியில் அதை அவர் மூன்று முறை திருத்த வேண்டியிருந்தது.

பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மலிவான பொருட்களைப் பயன்படுத்துவது போன்ற செயற்பாடுகளால் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியாது.

அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த ஐந்து மாதங்களில் இந்தியா-சீனா இருதரப்பு வர்த்தகம் 3.59% குறைந்துள்ளது.

மோடி ஆட்சியின் புகழ் குறைந்து வருவதால், தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள இந்து தேசியவாத தேசபக்தியை ஊக்குவிப்பது நடந்துவருகிறது. குறிப்பாக பாஜக, ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், அரசு பலத்த முறையில் அடக்குமுறையை கையாளுகிறது. இந்துத் தேசியவாத மற்றும் வலதுசாரி அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தனது ஆதரவாளர்களை, உயர் பதவிகளில் குறிப்பாக நீதித்துறையில் மாற்றுவதற்கான, நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இதற்கு எதிராக கல்கத்தா உயர் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தை மேற்கொண்டது அறிவோம்.

இந்து தேசியவாதம் :

இந்து தேசியவாதத்தின் உக்கிரம் நாடு முழுதும் பரவலாகிக் கொண்டு வருகிறது. இதன் விளைவாக, பெண்கள், ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. ஜனரஞ்சக முறையில் சில வாக்குறுதிகள் பற்றி என்ன தான் மோடி அரசு பேசினாலும் (மகாராஷ்டிராவில் 36,000 இளைஞர்களுக்கு வேலை வழங்குவது போன்றவை), இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பாஜக ஆதரவு குறைந்து வருகிறது.

பாஜக தனது ‘ஒரு நாடு – ஒரு வரி – ஒரு மொழி – ஒரு குடியுரிமை’ கொள்கைகாக அழுத்தம் கொடுப்பது ஏழை மக்களிடையே பிளவுகளைத் ஏற்படுத்துகிறது. அரசியலமைப்பில் சாசனங்கள் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை ஒழித்து காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம், இந்து தேசியவாதத்தைத் மேலும் மோடியால் தூண்ட முடிந்தது.

காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக முழு காஷ்மீர் பகுதியையும் நாட்டின் பிற பகுதியில் இருந்து பிரித்து, தொடர்புகளை துண்டித்தது மத்திய அரசு. இருப்பினும் காஷ்மீர் மக்கள் இந்த அடக்குமுறையை அமைதியாக ஏற்றுச் செல்ல மறுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும் அடக்குமுறைக்கு மத்தியிலும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு போர் நடைபெறுகிறது. இந்தப் பிரச்சினை காஷ்மீர் தேசியப் பிரச்சினையை கூர்மைப்படுத்தி இருப்பது மட்டுமல்லாமல் இது முழு பிராந்தியத்தையும் பாதிப்பதாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். அசாம் முதல் தமிழ்நாடு வரை மத்திய அரசுடனான நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.மோடியின் கொள்கைகளுக்கு எதிராக இன்னும் பல போராட்டங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடந்து வருகின்றன. வங்கித் தொழிலாளர்கள் தங்கள் மீது செயற்படுத்த முயலும் சீர்திருத்தங்களை எதிர்ப்பதற்காக வேலைநிறுத்த நடவடிக்கைக்கு மட்டுமில்லாமல் மோடியைத் தடுக்க ஒரு பொது வேலைநிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தை ஒழுங்கமைக்க முன்வருவதில் தொழிற்சங்கங்கள் தயக்கம் கொள்கின்றன. இரண்டு முன்னணி கம்யூனிஸ்ட் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஐ (எம்)) ஆகியவை தொழிலாளர்களின் போராட்டத்தை வழிநடத்தும் ஒரு வாகனமாக தங்களை பார்க்கவில்லை. மாறாக தங்கள் தேர்தல் கூட்டணிகளிலையே அதிக கவனம் செலுத்தியுள்ளனர். மோடி ஆட்சியை ‘பாசிசம்’ என்று வகைப்படுத்தி, அவர்கள் கூட்டணிகளை தேடியுள்ளனர். ஆனால் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்பாடுகளுக்காகப் போராடுவதற்கும் ஆன கூட்டணிகள் அல்ல அவை. மாறாக தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழை மக்களுக்கு எதிரான ஊழல்  வரலாற்றைக் கொண்டுள்ள காங்கிரஸ் மற்றும் பிற பிராந்தியக் கட்சிகளுடனான கூட்டணிகள் அவை. இந்த அணுகுமுறை தொழிலாள வர்க்கம் மற்றும் துன்பப்படும் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு எந்த வழியையும் வழங்காது.

முதலாளித்துவத்தின் தொலைநோக்குப் பாதுகாவலர்களில் சிலர், வெகுஜனங்களின் வசம் பணம் இல்லாவிட்டால் தங்கள் முதலாளித்துவ அமைப்பு நெருக்கடியில் இருந்து மீட்கப்படாது என்பதை உணர்ந்துள்ளனர். அத்தகையோர் தொழிலாளர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனாலும் ஒரு சில சலுகைகளால் மட்டும் முதலாளித்துவ வீழ்ச்சியை நிறுத்தி விட முடியாது. வறுமை ஊதியங்கள் இப்போதே முடிவுக்கு வர வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ .178 / நாள் (சுமார் £ 2 / நாள்) அறிமுகப்படுத்தப்படுவது வெற்றுப் பாசாங்கே தவிர வேறொன்றுமில்லை. இது வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்க எவ்விதத்திலும் போதுமானது இல்லை.

தொழிலாளர்களின் சக்தி:

2016 ல் நடந்த மகத்தான பொது வேலைநிறுத்தத்தை எதிர்கொண்டு, மோடியும் அவரது முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லியும் தொழிற்சங்கங்களுக்கு முன்பு ரூ .15 000 (மாதம் £ 172) என்ற கோரிக்கையை அமல்படுத்துவதாக வாக்குறுதியளித்தனர். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு கூட தினசரி ஊதியமாக ரூ .385 (40 4.40) வழங்க வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் முந்தைய ரூ .176 மட்டத்திலிருந்து வெறும் ரூ .2 (.0 0.023) அதிகரிப்பதாக அறிவித்தது மிகவும் பின் தங்கிய நடவடிக்கையே. இது தொழிற்சங்கங்களின் கோரிக்கையை மட்டுமல்லாது, கடந்த பொது வேலைநிறுத்தங்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் கேலி செய்வதாக இருக்கிறது.

உண்மையில், இந்த புதிய தேசிய குறைந்த பட்ச ஊதிய வரையறை நிலை பல பகுதிகளில் ஊதியங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. புதிய சோசலிச மாற்று – தொழிலாளர் சர்வதேசத்திற்கான குழுவின் (சி.டபிள்யூ.ஐ) இந்திய பிரிவு – குறைந்தபட்ச ஊதியம் ரூ .100 / மணிநேரம் (தோராயமாக £ 1), ரூ .25,000 / மாதம் (£ 286) வழங்கப்படவேண்டும் எனக் கோருகிறது.

புதிய சோசலிச மாற்று அனைத்து வேலை நீக்கங்களையும், நிரந்தரமற்ற முறையில் பணியாளர்களை அமர்த்துவதையும் நிராகரிக்கிறது. பணிநீக்கங்களுக்குப் பதிலாக, முழு இலவசக் கல்வி மற்றும் சுகாதாரம், மலிவு விலை வீடு கட்டுதல், வேலைகளை உருவாக்குதல் போன்ற அனைத்து பொது சேவைகளையும் மேம்படுத்த பொது முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். புதிய சோசலிச மாற்று பெருவணிகத்திற்கு வழங்கப்படும் வரி சலுகைகளை முற்றிலும் நிராகரிக்கிறது. அதற்கு பதிலாக அனைத்து அடிப்படை சேவைகளும் தேசியமயமாக்கப்பட்டு அவை  ஜனநாயக முறையில் தொழிலாளர்களின் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படவேண்டும்.

புதிய சோசலிச மாற்று அனைத்து தீவிர இடது சாரிய சக்திகளையும் ஒரு வெகுஜன தொழிலாளர் அமைப்பை உருவாக்க முன்வர வேண்டும் என அழைக்கிறது. தொழிலாளர் மக்களின் வாழ்க்கைத் தரத்தைத்  தாக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்க்க வேண்டும். இந்த தற்போதைய நெருக்கடிக்கு தொழிலாளர்களும் ஏழைகளும் பொறுப்பல்ல. முதலாளித்துவம் உருவாகிய நெருக்கடிக்கு தொழிலாளர்கள் தண்டிக்கப்படக்கூடாது. தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

கடந்த தேர்தலில் இந்த கட்சிகள் எதிர்கொண்ட தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான, சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) உறுப்பினர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் தாக்குதலுக்கு எதிராக ஒரு வலுவான போராட்டத்தை கட்டியெழுப்ப வேண்டும். சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) ஐ மீண்டும் இணைவது பற்றிய விவாதம் தேர்தல் கூட்டணியைப் பற்றி மட்டும் இருக்கக்கூடாது. அதற்கு பதிலாக, அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள், பிற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து இந்த தாக்குதல்களையும் அழுகிய முதலாளித்துவ அமைப்பையும் முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு புதிய ஜனநாயக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட வெகுஜன அமைப்பை உருவாக்க வேண்டும். முதலாளித்துவ அரசாங்கத்திற்கு மாற்றாக தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்காக போராடுவதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும். ஒரு சோசலிச பொருளாதாரத்தை உருவாக்குவது மட்டுமே மக்களின் நலனுக்காக பிராந்திய வளங்களை ஜனநாயக ரீதியாக திட்டமிடுவதற்கான ஒரே வழியாகும்.