தேர்தலில் வாக்களிப்பது என்பது கொள்கை அடிப்படையிலேயே. இழுபறிகள் மற்றும் கட்சி எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இருந்து விடுபட பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டிய காட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருகின்றனர் ஆட்சியில் இருக்கும் கன்சவேடிவ் கட்சியினர். இவர்களும் லோபேர் கட்சிக்குள் இருக்கும் வலதுசாரிகளும் ஜெரேமி கோர்பின் அடுத்த பிரதமர் ஆகி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பது யாவரும் அறிந்ததே. அதற்குக் காரணம் கோர்பின் முன் வைக்கும் சோஷலிச கொள்கைகள் – அதற்கு இளையோர் மத்தியில் இருக்கும் மிகப் பெரும் ஆதரவு என்பதும் அனைவரும் அறிந்ததே.
தற்போதைய தொழிலாளர் கட்சி (லேபர் பார்டி) தலைமைத்துவத்தில் இருக்கும் ஜெரேமி கோர்பின் முன் வைக்கும் பல்வேறு கொள்கைகள் இங்கிலாந்தில் வாழும் அனைத்து மக்கள் நலன்களுக்கும் மிக அவசியமானவை. ஊதிய உயர்வு – மேலதிக வீடுகள் கட்டுதல் முதற்கொண்டு – வேலை நாளை குறைத்தல் மற்றும் கல்வி சுகாதார சேவைகளுக்கு மேலதிக செலவு செய்தல் ஈறாக அந்தக் கொள்கைகள் எமது அன்றாட வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது சார்பாக இருக்கிறது. இதனால் கோர்பினின் கொள்கை நிலைப்பாட்டுக்கு தமிழ் சொலிடாரிட்டி தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்திருக்கிறது. இது ஒரு தனிப்பட்ட கட்சி சார்ந்த ஆதரவு இல்லை என்பதையும் –இது மக்கள் நலன் சார் -கொள்கை சார் – கோர்பின் கொள்கைகள் சார் நிலைப்பாடு – என்பதையும் அவதானிக்க.
இது தவிர இங்கிலாந்தில் வாழும் தமிழ் பேசம் மக்கள் சார்பான பல்வேறு கோரிக்கைகளையும் கோர்பின் உள்வாங்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஜான் மக்டானல்ட் ஆகியோருடன் இது பற்றி உரையாடியதன் விளைவாக எமது பல கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டிருகிறார்கள். இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தமக்கு கவலை தருவதாக இருப்பதை தெரிவித்த அவர்கள் – தமது அரசாங்கத்தில் அதற்கு எதிரான நடவடிக்கை எடுப்போம் என கூறியிருகிறார்கள். இது தவிர பின்வரும் குறைந்த பட்சம் மூன்று விசயங்களை தாம் நடைமுறைப் படுத்துவோம் எனக் கூறி இருக்கிறார்கள்.
அனைவருக்குமான வேலை வாய்ப்பை வழங்குதல். அகதி கோரிக்கையாளர், அகதிகள் உட்பட அனைவருக்குமான வேலை செய்யும் உரிமையை வழங்குதல்.
அகதிகள் தடுப்பு முகாம்களை மூடுதல். மறுக்கப்பட்ட அனைத்து அகதிகள் வழக்குகளையும் மீள்விசாரனைக்கு எடுத்தல்.
இலங்கைக்கு வழங்கப்பட்டும் எல்லாவித இராணுவ – மற்றும் பாதுகாப்பு சார் உதவிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துதல்.
இவை தவிர இங்கிலாந்தில் வாழும் தமிழ் மக்களுக்கு அத்தியாவசியாமாக இருக்கும் பல்வேறு கோர்பின் கொள்கைகளையும் நாம் ஆதரிக்கிறோம். அவற்றில் சில பின்வரும்மாறு
- வீட்டு வாடகையைக் கட்டுப்படுத்துதல். கவுன்சில் வரி அதிகரிப்பதை நிறுத்துதல்.
- கல்வி மற்றும் சுகாதார சேவைகளை முழுமையாக இலவசமாக வழங்குதல். நடந்தவரும் தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல்.
- பறிக்கப்பட்ட தொழிற்சங்க உரிமைகளை திருப்பி வழங்குதல்.
- பெண்களுக்கான சம ஊதியம் உட்பட அனைத்து சம உரிமைகளையும் வழங்குதல்.
- LGBTQ+ யினரின் அனைத்து உரிமைகளையும் வழங்குதல்.
- பூகோள சூழலியலை காக்கும் திட்டங்களில் அதிக முதலீடு செய்தல்.
- இங்கிலாந்தில் சாத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல்.
இது போன்ற கோரிக்கைகளை நாம் முழுமையாக ஆதரிக்கிறோம். இந்த அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் கோர்பின் கொள்கைகளுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.
வரும் இங்கிலாந்து தேர்தலின் போது நாம் கோர்பின் கொள்கைகளுக்கு தமிழ் மக்கள் வாக்கு வழங்க வேண்டும் எனக் கோரும் அதே தருணம் – கோர்பின் ஆட்சியமைக்கும் பட்சத்தில் இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் வலயுருத்தி வருகிறோம். அந்த அடிப்படையில்தான் அடுத்த தேர்தலில் கோர்பின் வெல்வதற்காக நாம் வேலை செய்வோம் எனக் கூறுகிறோம்.
தமிழ் பேசும் மக்கள் கொள்கை அடிப்படையில் வாக்களிக்க முன்வர வேண்டும். எமது நலன்கள் சார் கொள்கைகளை – ஒடுக்கப்படும் மக்கள் சார் கொள்கைகளை முன் வைப்பவர்களை நாம் தயங்காது ஆதரிக்க வேண்டும். கன்சவேடிவ் கட்சி இந்த நாட்டில் வாழும் ஒடுக்காபடும் மக்கள் சார்ந்து இயங்கிய வரலாறு இல்லை. ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமான நட்பை பாதுகாத்துக் கொண்டு இலங்கை அரசுக்கான பிரச்சாரங்கள் செய்பவர்கள் பலர் முன்னணி உறுப்பினர்களாக இருக்கும் கட்சி அது. லயம் பாக்ஸ் போன்றவர்கள் தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் இங்கிலாந்தில் வாழும் தொழிலாளர் மற்றும் இளையோர் ஆகியோருக்கு எதிரான நிலைபாடுகளை கொண்ட கட்சியாக இருக்கிறது கன்சவேட்டிவ் கட்சி. இத்தகைய கட்சிக்கு நாம் ஒருபோதும் வாக்கு வழங்க முடியாது. அதே சமயம் லேபர் கட்சிக்குள் இருக்கும் வலது சாரிகளும் கன்சவேடிவ் கட்சியின் நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். அவர்களையும் நாம் எதிர்த்துத்தான் ஆக வேண்டும். கோர்பின் கொள்கைக்கான எமது ஆதரவு அவர்களுக்குமான ஆதரவு அல்ல. இதனால்தான் கொள்கைகளை பார்த்து மக்கள் தமது வாக்குகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
இந்த நிலைப்பாட்டுடன் உடன்படுபவர்கள் தேர்தல் காலத்தில் எம்மோடு இணைந்து வலை செய்ய முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். எம்மை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.