வாழும் பிரபாகரனும் இறந்துபோன நெடுமாறன்களும்

625 . Views .

2009 மே மாதம் 17 திகதி தமிழீழ விடுதலை புலிகளின் (வி.பு) தலைவர் சிறீலங்கா இராணுவத்துடனான போரில் இறந்து விட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளரான செ.பத்மநாதன்(K.P) அறிவித்தார். புலம்பெயர் தனியார் தொலைக்காட்சி இந்த செய்தியை அறிவித்து அகவணக்கம் செலுத்தும் இசையுடன் தீபம் ஒளிரும் காட்சியை ஒளிபரப்பினார்கள். மக்களால் இந்த கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இக்கட்டான இந்த சூழ்நிலையில் மக்களை அரசியல் மயப்படுத்தி போரட்டத்தை தொடரச் செய்யும் தலைமைத்துவத்தை வழங்கும் நிலையில் ஏற்கனவே இருந்த புலம்பெயர் தேசத்து அமைப்புகள் எதுவும் இருக்கவில்லை. அவர்கள் போரட்டத்தை அழித்தொழித்த மேற்கத்தைய வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இயங்க தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

வி.பு. தொடர்ச்சி நாம்தான் என்பதில் அவர்களுக்குள்ளே பெரும் வெட்டுக் குத்து அன்றே தொடங்கி விட்டது.

30 ஆண்டுகால ஆயுதப் போரட்டம் பெரும் படுகொலையோடு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மக்கள் ஒரு வித விரக்தி நிலையில் இருந்தார்கள். மக்களை அரசியல் மயப்படுத்தி அமைப்பாய் திரட்டுவதன் மூலம் போராட்ட பலத்தை கட்டி நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் புலத்தில் அப்போது இயக்கிக் கொண்டிருந்த எந்த அமைப்பும் அதனைச் செய்யவில்லை. செய்யவில்லை என்பதை விட அவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்பது தெரியாதிருந்தது என்பதே உண்மை.

2009ற்கு முன்னர் புலத்தில் இயங்கிய பெரும்பலான அமைப்புகள் மறுபேச்சில்லாமல் வி.பு. களின் கட்டளைகளை நிறைவேற்றி வந்தவர்களே. மக்களை அரசியல் மயப்படுத்தல், போரட்டத்தை கட்டுதல் பற்றிய திட்டமிடல் சிறிதும் அவர்கள் முன்னெடுக்கவில்லை. வீதிகளில் தொடர்ச்சியாக போரடி வந்த மக்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, சர்வதேசத்தோடு பேசுகிறோம் என அந்தந்த நாடுகளில் உள்ள கட்சிகளில் தம்மை இணைத்து கொண்டார்கள். புலத்தில் இவ்வாறு சர்வதேசத்தை வளைத்துக் கொண்டிருக்க -களத்தில் சிங்கக் கொடியை கையில் ஏந்தி சிறிலங்க அரசுடன் நல்லிணக்கம் செய்தார்கள் so called தமிழ் தலைமைகள். இவ்வாறாக புலமும் களமும் ஆண்டுக்கு சில தடவைகள் சந்திப்பு செய்யும் இடமாக மாறிப்போனது ஐக்கிய நாடுகள் சபை.

எந்த அமைப்புக்களாலும் அரசியல் ரீதியாக மக்களை வென்றெடுக்க முடியவில்லை. வி.பு. கள் அழிக்கப்பட்ட பின் இந்த அமைபுக்களின் செயற்பாடுகள் மூலம் மக்கள் அமைப்பு ரீதியான திரட்சியில் இருந்து நீர்த்து போகச்செய்யப்பட்டனர். மீண்டும் மக்களை அமைப்பு ரீதியாக திரட்டும் வேலையை 2009இல் இருந்து இன்று வரை தமிழ் சொலிடாரிட்டி இயக்கம் மட்டுமே செய்து வருகிறது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு மட்டுமே போரட்டம் தொடர்ச்சியாக செல்ல வேண்டும் என வலியுறுத்தியது – வலியுறுத்தி வருகிறது.

நாம் வி.பு.களின் தொடர்ச்சி அல்ல -ஆனால் போரட்டத்தின் தொடர்ச்சி எனச் சொல்லி தமிழ் சொலிடாரிட்டி போரட்ட அரசியலை முன்னிறுத்தியே இயங்கி வருகிறது. உண்மையை மக்களிடம் மறைக்க முடியாது. படுகொலை நிகழ்ந்த காலப்பகுதியில் ‘படுகொலை நிகழத்தான் போகிறது.  மக்களையும் போராளிகளையும் காக்க வேண்டும் என்றால் இந்த அரசுகளை நம்பி பலனில்லை. எமது போரட்டத்தை இன்னும் வீரியமடைய செய்ய வேண்டும். சர்வதேச போரட்ட சக்திகளோடு நாம் இணைந்து போரை நிறுத்துவதற்கான பெரும் போரட்டத்தை கட்ட வேண்டும்’ என தமிழ் சொலிடாரட்டி வலியுறுத்தியது. இந்த அபைப்புகள் எதுவும் செவிமடுக்கவில்லை.  மக்கள் மத்தியில் பொய்களையும், புரட்டுகளையும் நித்தம் சொல்லி வந்தார்கள்.

யுத்தம் இறுதிகட்டத்தை அடைந்து பிரபாகரன் இறுந்து விட்டார் என அறிவித்த செ.பத்மாநாதன் உடனடியாக தூரோகி ஆக்கப்பட்டார். தொலைக்காட்சியில் அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சாம் தினேஷ் மலையகத்தான் என்று வசைபாடப்பட்டார். புலிகளின் பினாமிகளுக்கு இந்தச் செய்தி உவப்பானதாக இருக்கவில்லை. கதிகலங்கி நின்ற மக்களை இந்த அமைப்புகளும் சேர்ந்தே ஏமாற்றினார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து பழநெடுமாறன் தலைவர் பாதுகாப்பாக தப்பிச் சென்றுவிட்டார். திரும்பி வருவார் என அறிவித்தார். நக்கீரன் வரா இதழ் பிராபாகரன் எப்படி தப்பிச் சென்றார் என crime story எழுதியது. மக்கள் கொஞ்சம் தங்களை ஆசுவாசபடுத்திக் கொண்டார்கள்.  இது நடந்து தசாபாபதம் கடந்தாகிவிட்டது. இதன்பிறகு நிறைய நடந்து விட்டது.

பல வெற்று ஐ.நா கூட்டத் தொடர்களையும், நல்லிணக்க ஆட்சியையும் மக்கள் பொறுமையாகக சகித்துக் கொண்டனர். சிங்கள மக்களின் வாக்கு மட்டுமே நமக்கு ஆட்சி செய்ய போதும் என் முழங்கியவர்கள் அம்மக்களாலேயே ஆட்சியில் இருந்து மட்டும் அல்ல நாட்டில் இருந்தே துரத்தி அடிக்கப்பட்டதையும் பார்த்தோம். இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் என்னும் மழுப்பல்களையும், தலைவர் போரட்டத்தை என்னிடம் தான் ஒப்படைத்தார் என்ற மேடை கூச்சல்களையும்  மக்கள் பார்த்தாகி விட்டது. எமது உரிமைகளுக்காக நாம் போரட வேண்டும் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

தலைவர் வருவார் என்பது 2009 இல் மக்களுக்கு ஒரு நம்பிக்கை தரும் வாசகம் போல் இருந்தது. இன்று அவ்வாறு சொல்பவரின் உண்மை தன்மையை கேள்வி கேட்க மக்கள் தயங்கவில்லை. மறைந்த தோழர் கௌரிகாந்தன் ஒரு குறிப்பில் பின்வருமாறு சொன்னார்:

உடலாலும், மனதாலும், மூளையாலும் வாழ்வதுதான் வாழ்க்கை. உடலால் மட்டும் வாழும் வாழ்க்கை என்றும் நிற்காது. ஆனால், மனதாலும் மூளையாலும் வாழும் வாழ்க்கை, உடலாலான வாழ்க்கை அழிந்தபின்பும் நீடித்து நிற்கும். சமூகத்தின் நண்பனாகவோ, அல்லது சமூகத்தின் எதிரியாகவோ. புத்தர், முகமது நபி, இயேசு, மார்க்ஸ், சார்ல்ஸ் டார்வின் போன்றவர்கள் இன்னமும் வாழ்கிரார்கள். உடலால் அழிந்த வர்களில் சிலர் இனியும் பிறப்பார்கள், உடலாலல்ல, மனதாலும், மூளையாலும். வாழக்கூடிய மனதும், மூளையும் இருக்குமானால் மரணத்தை வெல்லலாம்.”

புலத்திலும், தயாகத்திலும் இருக்கும் கட்சிகளும் அமைப்புக்களூம் போரட்ட அரசியலை கைவிட்டு சமரச அரசியலை செய்கிறார்கள். தமது எசமானர்களுக்கு போரட்ட அரசியல் பிடிக்காது என்பதால் மக்களை போரட்ட அரசியலில் இருந்து நீக்க முனைகிறார்கள்.  மக்கள் உரிமைகளை வென்றெடுத்தலை தவிர்த்து சலுகைகளை வேண்டி நிக்கிறார்கள். போரட்ட அரசியலை ஒழிக்க நினைக்கிறார்கள். தலைவர் வருவார் என்பதுவும், இல்லாவிட்டால் இறைவன் என்பதும் போரட்ட மறுப்பு சிந்தனையே. உங்கள் உரிமைகளுக்காக நீங்கள் போரடுங்கள் என்பதே பிரபாகரன் சிந்தனை.

தங்கள் உரிமைகளுக்காக மக்கள் போரடிக்கொண்டே இருக்கிறார்கள். பிரபாகரன் வாழ்கிறார். நெடுமாறான் இறந்து போனார்.