நாய்க்குப் பெயிண்ட் அடிக்கும் ரணில் விக்கிரமசிங்க

825 . Views .

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் அண்மையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இலங்கைக்கு சுதந்திரதினம் கொண்டாடும் அளவுக்கு வக்கு இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் இலங்கையில் யாருக்கு இப்போது சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பதே எமக்கு முன்னுள்ள கேள்வியாகும். இலங்கையின் சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கை வாழ் மக்கள் அனைவருக்குமே அது ஒரு கரி நாளாகும். தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை விட சிங்களவர்களுக்கும் கூட சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். 

சுதந்திரதின கொண்டாட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், மக்கள் எவ்வளவுதான் திண்டாடினாலும் பரவாயில்லை அதிகாரத்தை தக்க வைப்பதற்கான கொண்டாட்டமே முக்கியம் எனக் கருதி சுதந்திரதின கொண்டாட்டட்டத்தை தடல் புடலாக செய்தது ரணில் ராஜபக்ச அரசு. இரு வேறு வர்க்கத்தின் நோக்கங்களை தெளிவாக படம்பிடித்துக் காட்டியது சுதந்திரதின நிகழ்வுகள் – அதாவது மக்களின் தேவையும் அரச அதிகாரத்தின் நோக்கமும் ஒன்றல்ல என்பதை படம் பிடித்துக் காட்டியது கடந்த சுதந்திர தின நிகழ்வுகள். 

இலங்கை அரசியல் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்து முன்னேறி வருகிறது என்பதைக் காட்ட சுதந்திர தின நிகழ்வுகள் வெகு விமர்சையாக நடத்தப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க முன்னரே தெரிவித்திருந்தார். அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவியிருந்தது அதில், ஒருவர் தனது தோட்டத்துப் பயிர்களைப் பாதுகாப்பதற்காக நாய்க்கு புலி போல் பெயிண்ட் அடித்து அதனை தனது தோட்டத்தில் உலவ விட்டிருந்தார். வைரலான இந்த வீடியோவை ரணிலும் பார்த்தாரோ தெரியவில்லை, நாய்க்கு பெயிண்ட் அடிக்கும் இந்த உத்தியைதான் ரணிலும் தற்பொழுது கையாண்டு வருகிறார். 

முறையற்ற நிர்வாகம், பொருத்தமற்ற தீர்மானங்கள், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, கடந்த கோத்தபய அரசு விவசாயக் கொள்கையை மாற்றி அமைத்ததால் ஏற்பட்ட விவசாயத் துறையின் வீழ்ச்சி, தொழில் வாய்ப்புக்கள் குறைவு, சிறுவர்கள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்படுதல் என வறிய மக்கள் மட்டுமல்லாது, சிறிய  மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் பாரிய சவால்களை எதிர்கொள்வதுடன்  – பல மூடப்பட்டும் வருகின்றன. ஆனால் ரணிலோ மறுபக்கத்தில் நாய்க்குப் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றார். 

நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காகவே புதிய வரிகள் விதிக்கப்படுகின்றன எனக் கூறும் அரசு, அரசியல்வாதிகளின் சொகுசு செலவை குறைக்கவில்லை – பாராளுமன்ற உறுப்பினர்களின் மேல் வரியை விதிக்கவில்லை – ஊழல் நிறைத்த அரசியல் தலைவர்களிலிடமிருந்தோ அல்லது கடந்த காலங்களில் வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்தவர்களிடமிருந்தோ பணத்தைப் பெறவில்லை. குறைந்தபட்சம் லஞ்சம் ஊழல் செய்த பணத்தை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைளைக் கூட மேற்கொள்ள வில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தே வரியை மேலும் மேலும் அறவிடுகின்றது. அரசியல் வாதிகளின் சொகுசு வாழ்க்கைக்காக மக்கள் தம் வயிற்றை இறுக்குவது எவ் விதத்தில் நியாயம்?. அரசின் வரி அதிகரிப்பால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உட்பட  6000 க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த சில வருடங்களில் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரியானது மக்களின் வாழ்க்கைத்தரத்தைப் பாதிக்காமலும் நியாயமானதாகவும் அறவிடப்பட வேண்டும். சீனி பூண்டு மோசடி, மத்திய வங்கி முறி மோசடி, போன்ற பல ஊழலின் மூலம் இழந்த தொகையானது அரசு வரி மூலம் அறவிட எதிர்பார்க்கும் தொகையை விட அதிகமாகும்.  இழந்த பணத்தை பெற முயற்சி செய்யாமல் மக்களை  வஞ்சிக்கின்றது இந்த ரணில் ராஜபக்ச அரசு. மேலும் பண வீக்கம் அதிகரித்து வட்டி வீதம் அதிகரிக்கும் இன்றைய நிலையில் மேலும் மேலும் மக்களின் மேல் வரியை சுமத்துவதென்பது பனையால் விழுந்தவனை மாடேறி மிதிபத்திற்கு ஒப்பானதாகும். 

தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் போர் ஓய்ந்தாலும் வாழ்க்கைக்கான போர் ஓயவில்லை. இராணுவ ஆக்கிரமிப்பு, காணி அபகரிப்பு, பொறுப்புக்  கூறாமை, அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுத்தல், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்குதல், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தல் என ராஜபக்ச அரசு செய்ததையையே ராஜபக்சவின் பினாமி அரசான ரணில் அரசும் செய்கின்றது. இங்கு ரணிலுக்கு ராஜபக்சவுக்கும் வேறுபாடே இல்லை. இந்தப் பின்னணி அறியாமல் அண்மையில் நாமல் ராஜபக்ச கூறுவதை போல் ரணில் ஒரு திறமைசாலி, அனுபவசாலி, பொருளாதார பிரச்சனையிலிருந்து நாட்டை மீட்கக் கூடியவர் அவர் மட்டும்தான் எனக் கூறுவது நகைப்புக்குரியது. 

நாய்க்குப் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் ரணில் ராஜபக்ச அரசினால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. இன்னும் அதிக கடன் பெறுதல், இயற்கை வளங்களை விற்றல், வரியை அதிகரித்தல் போன்றனவே இவர்களின் தீர்வாக உள்ளதே தவிர பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு நிரந்தர தீர்வு இவர்களிடத்தில் இல்லை. இலங்கையைப் போன்று மிகுந்த நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு நிதி வழங்க முன்வரும் IMF  ஆனது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. வட்டி விகிதத்தை உயர்தத்தல், தனியார் மயப்படுதலை அதிகரித்தல் போன்றன அவற்றுள் சிலவாகும். IMF இடம் கடன் பெறும் ரணிலும் இதைத்தான் இலங்கையிலும் அமுல் படுத்த முனைகிறார் அதாவது இலங்கையை இன்னொரு பாகிஸ்தானாக மாற்ற முனைகிறார். இதுவரை IMF இடம் கடன் பெற்று முன்னேறிய நாடுகள் என்று ஏதேனும் பட்டியல் இருக்கிறதா? இல்லையே. இருந்தால் அறியத் தரவும். 

தெற்கில் குழப்பத்தை விளைவித்தல் அதன் மூலம் தமது அதிகாரத்தை தக்க வைத்தல்  – இதுவே ரணில் ராஜபக்ச பட்டாளங்களின் கடந்தகால வரலாறாக அல்லது தற்போதைய ‘காய் நகர்த்தலாக’ இருக்கின்றது. ஆகவே, இலங்கை பொருளாதார மீட்சி பெற மக்களுக்கான முறையான பொருளாதார கொள்கை அமுல்படுத்தப்படுவதோடு இல்லாமல், இலங்கையின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படவேண்டும், இயற்கை வளங்கள் விற்கப்படுவது தடை செய்யப்படவேண்டும், ராஜபக்ச ரணில் பட்டாளம் விரட்டியடிக்கப்படவேண்டும்,  அதற்கு மக்கள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாக திரண்டு தமது சக்தியை கட்டியெழுப்பினாலே சாத்தியப்படும். இல்லையெனில் மக்கள் பேசுகின்ற உரிமையும், போராடுகின்ற உரிமையும், ஒன்று கூடுகின்ற உரிமையும் நீதிமன்றின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டுவிடும். 

மீண்டும் ஒரு அரகலய – மக்கள் இயக்கத்துக்கு நாம் தயார்படுத்த வேண்டும். இம்முறை நாம் அதிகாரத்தை எம் வசப்படுத்தலை நோக்கி நகர வேண்டும்.