கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்

சாரா ராஜன், கட்டுரையாளர்

ஒருமாதத்திற்கு முன்புவரை கொரோனா வைரஸ் சீனாவின் உள்ளூர் பிரச்சினை மட்டுமே என்றும், அதனால் உலகின் பிறநாடுகளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் கருதப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அதற்கு எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என உலகநாடுகள் அலட்சியம்காட்டின. ஆனால், இன்று நிலைமை தலைகீழாய் மாறி, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

2008ன் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய பாதிப்பையே ஏராளமான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நாடுகள் இன்னமும் சரிசெய்ய முடியாமல் தவிக்கின்றன. ஏற்கனவே, சரிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த உலகப் பொருளாதாரத்தை மேலும் தள்ளி விழுத்தி உள்ளது கொரானவைரஸ். பயணத்தடை, விளையாட்டு நிகழ்வுகள் ரத்து, வெகுஜன கூட்டங்களுக்குத் தடை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ரத்து, பங்குச்சந்தை வீழ்ச்சி, வெறிச்சோடிய வணிகவளாகங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடல் என தொடர்பாதிப்புகளால் Covid-19 உலகப் பொருளாதாரத்தில் தன்கைவரிசையைக் காட்டியிருக்கிறது.

கடந்த வாரத்திலிருந்து பலநாடுகளின் அன்றாட வாழ்க்கை எதிர்பாராதவிதமாக மாறிப்போயிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,45,000யைத் தாண்டியுள்ள சூழலில், உலக நாடுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கின்றன; ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்துகின்றன; பொது இடங்களை மூடுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்தவர்களுக்கான சுற்றுலா விசாக்கள் அனைத்தையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதே போல் மார்ச் 11 அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து சுற்றுலா விசாக்கள் மற்றும் இ-விசாக்களை இந்திய அரசு இடைநிறுத்தியுள்ளது.

உலக முதலாளித்துவ நெருக்கடி

ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே சீனப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையும் பாதிப்புக்குள்ளாகியது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சில்லறை விற்பனை (Retail Sales) 2020 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 20.5% சரிந்துள்ளது. தொழில்துறை உற்பத்தி 13.5% குறைந்துள்ளது. நிலையான சொத்து முதலீடு கிட்டத்தட்ட 25% குறைந்துள்ளது.

இதில் இருந்து மீள சீனா இன்னும் போராடிவரும் நிலையில், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிலைமை இதைவிட வேகமாக மோசமடைந்து வருகிறது. இப்போது கொரோனா தொற்று நோயின் மையமாக இருக்கும் இத்தாலியில் 59,000க்கும் மேற்பட்டோரும், ஸ்பெயினில் குறைந்தது 30,000 பேரும், அமெரிக்காவில் 35,000-க்கு மேற்பட்டோரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கொரோனாவை சர்வதேசத் தொற்று நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் 7 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் உலக பங்குச்சந்தைகளில் இருந்து காணாமல் போனது. ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் 0% வளர்ச்சியுடன் இருந்த அமெரிக்காவின் பொருளாதாரம், இப்போது ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் மேலும் 5% சுருங்கிவிடும் என்று முதலீட்டு வங்கி கருதுகிறது. ஆண்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி வெறும் 0.4% தான் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. “2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியின்போது ஏற்பட்ட சரிவுக்கு இணையாக, இரண்டாவது காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 8% சுருங்கிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று ஐ.என்.ஜி பொருளாதார வல்லுநர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

இப்படி ஒரு பெரும் சரிவில் இருந்து அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஞாயிற்றுக்கிழமை அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முக்கிய வட்டி விகிதத்தைக் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்று ஆக்கிய தோடல்லாமல், உலகெங்கிலும் உள்ள வங்கிகளுக்கு அமெரிக்க டாலர்களில் கடன் வாங்குவதை மலிவானதாக அறிவித்தது. மேலும் திங்களன்று, நியூயார்க் பெடரல் 500 பில்லியன் டாலர் வரை நிதிச் சந்தைகளில் செலுத்தப்படும் என்று கூறியது. இதுமட்டுமின்றி, “மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பில்கள் செலுத்தவும், தேவைப்பட்டால் கடன்வாங்கவும் உதவுவதன் மூலம், சரியும் பொருளாதாரத்தை நேரடியாகவே தூக்கிப் பிடிப்பது நல்லது,” என சில பொருளாதார நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

உலகளாவிய தொற்று நோயின் தற்போதைய மைய இடமாகத் திகழும் இத்தாலி, இதைவிடவும் ஆழமான ஒரு பொருளாதார நெருக்கடியில் உள்ளது. மிக அதிக சதவீத மோசமான கடன்களுடன் இத்தாலி வங்கிகள் தத்தளிக்கின்றன.

மூலதன பொருளாதாரத்தில் (Capital Economics) பிரிட்டனின் தலைமை பொருளாதார நிபுணராக கருதப்படும் பால்டேல்ஸ், இரண்டாவது காலாண்டில் பிரிட்டனில் உற்பத்தி 2.5% குறைந்துவிடும் என்று மதிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் இதில் 5% வீழ்ச்சி சாத்தியம் என்றும் கூறுகிறார். முதலாளித்துவ நிபுணர்கள் வீழ்ச்சியை குறைத்து மதிப்பிடுவது உண்டு. தற்போது அவர்களே மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியின் சாத்தியத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.

Supply மற்றும் Demand என பொருளாதாரத்தின் இருபக்கங்களையும் Covid-19 பாதிக்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் பொருட்கள் மற்றும் சேவைகளின் Supply பலவீனமடைகிறது. ஏற்கனவே தாம் உற்பத்தி செய்வதை நுகர்வோர் வாங்க முடியாத நெருக்கடி இருந்ததை அறிவோம்.

இதற்கு முன்எப்போதும் இல்லாத ரீதியில் உலகளாவிய கடன் அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு $86,000 கடன் இருப்பதற்குச் சமம். 2019 ஆம் ஆண்டின் இறுதியில் நிதி நிறுவனங்களைத் தவிர்த்து, மற்ற துறை நிறுவனங்களில் நிலுவையில் உள்ள மொத்தக் கடன் உலகளவில் 13.5 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும். மொத்த உலக கடன் 240 ரில்லியன்களைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

சுருங்கும்உலகமயமாக்கல்:

போர்களைப் போன்ற சில மோசமான நெருக்கடிகள் வரலாற்றை வேகமாக முன்னோக்கி நகர்த்தக் கூடியவை. ஒரு குறிப்பிட்ட நாட்டில் பொதுவாக அரை நூற்றாண்டில் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தில் ஏற்படக் கூடிய விளைவுகள் அல்லது பாதிப்புகள், போர் போன்ற நெருக்கடிகளால் ஓரிரு ஆண்டுகளிலே நடைபெறும். இதற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு கொரோனா வைரஸ். இந்தத் தொற்று நோய் ஈரான், ஈராக், ரஷ்யா, நைஜீரியா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளின் புவிசார் அரசியலில் மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. உதாரணத்திற்கு, இந்நாடுகளின் பிரதான வருவாய் எண்ணெய் மற்றும் எரிவாயுதான். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பினால் இவற்றின் விலைகள் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.

ஹைட்ரோ கார்பன்களுக்கான நுகர்வோர் சந்தை பலவீனமடைந்துவரும் சூழலில், விலைகளை உறுதிப்படுத்த ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் முயற்சிகள் எடுத்தன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின்சல்மான் ஆகியோரிடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி இன்னும் பலமாதங்கள் நீடிக்கப்போகும் விலையுத்தத்திற்கு வழிவகுத்துள்ளன. உள்நாட்டுப் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகள்பற்றிய இவர்கள் இருவரின் தவறான கணக்கீடுகள், எதிர்பார்த்ததைவிடவும் மோசமான சிக்கல்களை உருவாக்கக்கூடும்.

முன்னணி ஹைட்ரோ கார்பன் உற்பத்தியாளரான ஈரான், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளிலிருந்து தப்பியிருந்தாலும், இப்போது கடுமையான நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. மேலும், ஈராக் மற்றும் வெனிசுலா நாடுகளில் எண்ணெய் விலை குறைந்ததில் இருந்து பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.

அல்ஜீரியா, அதன் வருவாய்க்கும் வாழ்வாதாரத்திற்கும் ஹைட்ரோ கார்பன்களை நம்பியுள்ளது. இந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையே இதுகுறித்து நிலவிய மாற்றுக் கருத்துகளால் பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், கொரோனா வைரஸ் நோயால் மக்கள் பெருவாரியாகத் தெருக்களில் இறங்கிப் போராட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், அதேநேரம், ஒடுக்கப்பட்ட மக்களின் கோபம் கொரோனாவுக்குப் பின்னர் அது ஏற்படுத்தியுள்ள பொருளாதாரச் சிக்கல்களுடன் சேர்ந்து பெரும் அளவில் வெடிக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டு.

தொற்றுநோய்க்கும் எண்ணெய் விலைகளின் வீழ்ச்சிக்கும் உள்ள தொடர்பு உலகமயமாக்களை மோசமான சரிவிற்கு எடுத்துச்சென்றுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.

இதுமட்டுமல்லாமல், கொரோனா வைரஸ் ஒரு மாபெரும் அதிகாரச் சண்டையையும் ஊக்குவித்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா தேசியவாதிகள் ஏற்கனவே பல்வேறு தருணங்களில் ஒருவர்மேல் உள்ள வெறுப்பை வைரஸின் பேரால் காட்டத் துவங்கியுள்ளனர். யு.எஸ்-சீனா இடையேயான போட்டி யு.எஸ்-சோவியத் இடையே நிலவிய போட்டியைவிட குறைவான ஆபத்தானதுதான் என்று பல ஆண்டுகளாக நம்பப்பட்டது. ஏனெனில், அமெரிக்காவும் சீனாவும், தங்களுக்கிடையேயான ஒரு போரை பொருளாதார ரீதியாக முன்னெடுக்க முடியாத அளவுக்கு மூழ்கியிருந்தன. ஆனால், இப்போது நிலைமையோ வேறு.

அமெரிக்க நிறுவனங்கள், சீனாவிலிருந்து ஆசியாவில் உள்ள பிறநாடுகளுக்கு தங்கள் விநியோகச் சங்கிலிகளைத் திருப்புவதால், ஏற்கனவே நடந்துகொண்டிருந்த இந்தப் போட்டி கொரோனா வைரஸால் மேலும் ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும் தெற்கு மற்றும் கிழக்கு சீனா கடல்களில் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வார்கள்.

உலகெங்கிலும் நாடுகளில் தங்களின் 5 ஜி நெட்வொர்க்கை விற்பனை செய்வதில் போட்டி தீவிரமடைவதால், இருநாடுகளுக்கிடையேயான உறவு மோசமடையும். குறிப்பாக சீனாவின் தாக்கம் யூரேசியா முழுவதும் பரவி வருகிறது. கடல் மற்றும் சாலை வழிகளைக் கைப்பற்றுவது மட்டுமல்ல, தொழில்நுட்பத்திலும் சீனா பெரும் பங்கு வகிக்கிறது.

உலக மயமாக்கள் விஷயத்தில் அமெரிக்கா- சீனா இடையே பெரும் உரசல் ஏற்படும். வெறும் கொரோனாவால் மட்டும் இல்லாமல், காலநிலை தொடர்பான பேரழிவுகள், Cyber attacks என இப்பெரிய சக்திகளின் அடிதடிகள் தொடரும் வாய்ப்பே உள்ளது.

தொற்றுநோயின் மோசமான விளைவுகளைப் பொறுத்தவரை, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குள் வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள், வெளிநாட்டினர் உள்ளே நுழைவதைப் பெருமளவு கட்டுப்படுத்துவதால், தேசியவாதிகளாலும், வலதுசாரிகளாலும் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, கொரோனா காலத்துக்குப் பிறகும் கூட இது நடைமுறையில் இருக்கக்கூடும்.

மேலும் Covid-19 தடுப்பூசிக்கான பிரத்யேக உரிமைகளுக்காக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கணிசமான தொகையை ஒருநிறுவனத்திற்கு வழங்க தயாராக இருந்ததை ஒரு ஜெர்மன் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. ஆயினும்கூட ஐரோப்பிய அதிகாரம் இதனால் ஆத்திரமடைந்ததைத் தொடர்ந்து, சில நாட்களில் ஐரோப்பிய ஒன்றியம் 90 மில்லியன் டாலர்களை அந்நிறுவனத்தில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தது. இதையெல்லாம் பார்க்கும்போது கொரோனவை கட்டுப்படுத்தும் மருந்துக்கான உரிமைகளைப் பெறவும் – ஏனைய வளங்களுக்கும் பணக்கார நாடுகள் தங்களுக்குள் விலங்குகளைப்போல சண்டையிடப் போகின்றன என்றே தோன்றுகிறது. கொரோனாவுக்கு பின்னான உலகத்தில் அமெரிக்கா மற்றும் சீனா, அட்லாண்டிக் கூட்டணி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பல பிளவுகள் ஏற்படக்கூடும்.

மொத்தத்தில் கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்படும் இடையூறுகள், வெளிநாட்டு விநியோக வணிகத்தைத் தன்நாட்டின் கைகளுக்குள் தக்கவைத்துக்கொள்வதை நோக்கி நகர்த்தப்படும். இது உலகமயமாக்கலுக்கு முரணாத்தான் இருக்கும்.

இறுதியில் பொருளாதார தாக்கம் எதுவாக இருந்தாலும், அதை நாம் ஒட்டுமொத்தமாக Covid-19 நோயின் மேல் போட்டுவிட முடியாது. ஏனெனில் உலகப் பொருளாதாரம் ஏற்கனவே மிகவும் பாதிப்படைந்திருந்த நிலையில், கொரோனா என்பது மூழ்கிக்கொண்டு இருந்த படகில் போடப்பட்ட மற்றுமொரு பெரிய ஓட்டை மட்டுமே!

முதலாளித்துவ பொருளாதார எல்லைகளை இன்று நன்றாக நாம் பார்க்க கூடியதாக இருக்கிறது. இதன் அறிதலில் இருந்து நாம் திட்ட மிட்ட பொருளாதார நடவடிக்கை நோக்கி நகர முன்வர வேண்டும்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் (இந்த கட்டுரை மேற்படி பத்திரிகையில் வெளிவந்தது)