கொரோனா-தினறும் முதலாளித்துவ அரசுகள்

-ராகவன்-

நேற்று இரவு (23/03/2020) தொலைக்காட்சியில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதாக கூறினார். இதைத் தொடந்து மக்களை நடமாட விடாத உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸின் தாக்கம் உலகெங்கும் அதிகரித்திருக்கின்றது. இதை கட்டுப்படுத்துவது எவ்வாறு என தெரியாமல்  அரசுகள் திணறிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர்கள் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீது குறைபட்டுக் கொள்கின்றனர்.கடந்த வருடத்தின் இறுதியில் ஒரு வைரஸ்  பரவி வருவதாக அனைத்து  அரசுகளுக்கும் தெரிந்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல் மெத்தனமாக  இருந்தனர்.இவர்களின் அசமந்தப் போக்கால் பல உயிர்கள் பலியாகி இருக்கின்றன. 

 தற்பொழுது மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைகள் முழுவதும்-  இந்த நெருக்கடியானது மக்களின் கோபமாக மாறி தமது அதிகாரத்துக்கு எதிரானதாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தும்- முதலாளித்துவ பொருளாதாரத்தை காப்பாற்றிவிட வேண்டும் என்ற நோக்த்தின் அடிப்படையிலுமே முன்னெடுக்கப் படுகிறது. இந்த அரசாங்கம் எவ்வாறு மக்கள் மீது அக்கறையாக இருந்தது என்பதற்கு  ” பலர் உங்கள் அன்புக்குறியவர்களை இழக்கவேண்டியிருக்கும்என்ற போரிஸ் ஜோன்சனின் அறிவிப்பே  நல்ல சான்று. 

அமெரிக்காவின் ட்ரம்ப் இந்தச்சீன வைரஸ்பாதிப்பு என்பது நாட்டில் இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறும் போதே அங்கு  பல்லாயிரக் கணக்கான அமெரிக்கர்கள்  தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.  அங்குள்ள தனியார் வைத்திய கட்டணம் முறை காரணமாக பலர் சிகிச்சை பெற முடியாமல் இருக்கின்றனர். மூன்றில் ஒரு அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இவ்வாறான ஒரு திட்டத்தைத் தான் பிரித்தானியாவில் கொண்டு வர இருந்தார் போரிஸ். இதற்கும் ஆதரவாக தமிழ் டேரிக்கள் பலர் எம்முடன் தர்க்கம் புரிந்தார்கள் என்பதையும் நினைத்துப் பாருங்கள்.

 சீனாவில் இந்த நெருக்கடியை ஒரு கட்டுக்குள் கொண்டு  வந்து இருப்பதாக அந்த நாடு கூறுகின்றது.கொரோனாவை கட்டுப்படுத்த அந்த அரசு எடுத்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் எமக்கு உடன்பாடு இல்லை. ஆயினும் சீனா பொது சுகாதாரத்திற்கு உடனடியாக முதலீடு செய்தது. தற்காலிக வைத்தியசாலைகள் வேகமாக அமைக்கப்பட்டன.ஆனால் பிரித்தானியாவில்  நிலைமை தலைகீழாக இருக்கிறது செய்தியாளர்கள் சந்திப்பில் தோன்றும் போரிஸ்  “Protect  The NHS”என்ற வாசகங்களுடன் தோன்றி யாரும் வைத்தியசாலை பக்கமே வராதீர்கள் வீட்டிலேயே இருங்கள் என்றார். கடந்த டோரி மற்றும் வலது சாரி தொழில்  கட்சியின் ஆட்சிகளில்  தொடர்ந்து NHS மீதான முதலீடு குறைக்கப்பட்டு  வந்தது. தற்பொழுது NHS மிகவும் பலவீனமான நிலையில் இருந்துகொண்டுதான் இந்த கொரோனா தொற்றை எதிர்கொள்கிறது.  NHS நோயாளர்களை பராமரிக்க முடியாமல் தினறிக்கொண்டு  இருக்கின்றது. “Protect The NHS” என்னும்  வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல் மோசமானது.  போரிஸ் தேசிய சுகாதார சேவைக்கு முதலீடு செய்வதற்கு தயாராக இல்லை – மாறாக தனியார் மருத்துவமனையின் படுக்கைகளுக்கு பில்லியன் கணக்கான பவுன்களை  வாடகை கட்டுவதற்கு தயாராக இருக்கின்றார்.

3500 மில்லியன் பவுன்சுகளைபொருளாதாரத்தைக்காப்பாற்றுவதற்காக போரிஸ் ஒதுக்கியிருக்கிறார் .கடந்த தேர்தலின் போது கோர்பின்  மக்கள் நலன் சார்ந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்திருந்தார். இதற்கு தமிழ் சொலிடாரிட்டியானது ஆதரவு தெரிவித்து இருந்தது. அப்பொழுது தமிழ் டோரிகள் பலர் எங்கள் முன் வைத்த கேள்வி  “இதுஎல்லாம் சாத்தியமா? ,இதற்கு உரிய பணம் எங்கு இருக்கின்றது?, கற்பனையில் வாழாதீர்கள்,யதார்தத்தை புரிந்து கொள்ளுங்கள்எனபது.   ஆனால் இப்பொழுது போரிஸ் ஜோன்சன் இவ்வளவு மில்லியன்களை ஒதுக்கி இருக்கின்றார். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது. பெரும் வியாபாரிகளின் லாபத்தை காப்பதற்காக பெரும்தொகை பணம் ஓடி வந்த வேகத்தை பாருங்கள். 

நாங்கள் அப்போது கூறியதையே இப்பொழுதும் கூறுகிறோம். பணம் இருக்கின்றது. மக்களின் வரிப்பணம் உண்டு. குவிந்து கிடக்கும் உபரி லாபம் பல வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது. ஆனால் அதை மக்கள் நலனுக்காக செலவழிக்ககூடிய பொருளாதார திட்டமிடல் தான்  இந்த முதலாளித்துவ அரசுகளிடம் இல்லை. நாங்கள் கற்பனையில் வாழவில்லை. நாங்கள் தான் யதார்ததுடன் இருக்கின்றோம். பாதிக்க பட்ட மக்களின் பக்கம் இருகின்றோம். அவர்களின் மீது இந்த அரசாங்கள் புரியும் அடக்குமுறைகளுக்கு எதிராக இருக்கின்றோம். நீங்களும் இதற்கு எதிரானவர்கள்,இதை மாற்ற வேன்டும் என உண்மையிலே விரும்பினால் எங்களுடன் இனையுங்கள். இங்கு எல்லா பக்கத்துடனும் இனைந்து வேலை செய்யவேண்டும் என சம்பல் அடிக்காதிர்கள். அவ்வாறு சொல்வதே அடக்குமுறை அதிகாரத்தின் பாகம் நிற்பது தான் . அவ்வாறு இயங்குவது உங்களை மக்களுக்கு எதிர் நிலையில் நிறுத்தும். 

 இலங்கையில்  தொழிலாளர்களின் போராட்டத்தினால் உருவாக்கப்பட்ட  தேசிய  சுகாதார  சேவை இன்று மற்ற நாடுகளை ஒப்பிடும் பொழுது கொரோனாவை கட்டுக்குள் கொன்டுவர அதிகம் உதவி உள்ளது..அரசாங்கம் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்தாலும்  இந்தத் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான எந்தவித திட்டமிடல்களும் அவர்களிடம் இல்லை. மாறாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோத்தபாய  தனது எதேச்சதிகாரத்தை பலப்படுத்திக் கொண்டு வருகிறார். புத்திஜீவிகள் என கூறிக் கொள்வோர் இதை ஆதரிப்பது  கண்டிக்கத்தக்கது. இவ்வாறான போக்கு முழு இலங்கையையும் இராணுவசர்வதிகாரத்துக்குள்  கொண்டு சென்றுவிடும். பொதுச்சேவை மீதான முதலீட்டை அதிகப்படுத்துவதற்காக போராடுதல் ,தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தல், கட்சி சாரா தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை உருவாக்கி அதை வலுப்படுத்த வேண்டிய தேவை என்பன உடனடியாக செய்யவேடியவையாக இருக்கின்றது.

மோடி  முழு இந்தியாவையும் அவசர நிலைக்குள் கொண்டு வந்து உள்ளார். இதைத் தவிர வேறு திட்டமில்லை. அதற்குரிய எண்ணமும் இல்லை.சோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் 4500 இந்திய ரூபாய்களை கட்டணமாக அறவிடுகிறார்கள். குடும்பத்தில் நான்கு பேர் உள்ள சாதாரண அமைப்பு சாரா தொழிலாளி எவ்வாறு இந்தச் சோதனையைச் செய்ய முடியும். இருக்கும் சனத்தொகைக்கு ஏற்ப அரச வைத்தியசாலைகள் இல்லை. இருக்கும் பல வைத்தியசாலைகள் முதலீடு இல்லாமல் இடியும் நிலையில் உள்ளது. இந்த தொற்றின் வீதம் அதிகரித்தால் இந்த நிலையில் இது ஒரு படுகொலையில் அல்லவா கொண்டு வந்து  விடப்போகின்றது. குறைந்த பட்சம் தனியார் மருத்துவமனைகளில் சோதனைகள் இலவசமாக்கப்படவேண்டும். அதேநேரம் மதத்தின் பெயரால் மூடநம்பிக்கைகளை பரப்புவோர் அதிகரித்து விட்டார்கள்.வட இந்தியாவில்  மாடு மூத்திர அரசியல்  அரச ஆதரவோடு நடக்கின்றது. கொரோனாவால்  உயிரிழக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த அரசாங்களே பொறுப்புக்கூற வேண்டும். 

கொரோனாவுக்கு  எதிராக போராடுவதற்கு கியூபா தனது மருத்துவர்களை உலகமெங்கும் அனுப்பியிருக்கிறது .இடதுசாரிகள் என தம்மைக் கூறிக் கொள்வோர்பாருங்கள் கியூபாவை, சீனாவை கம்யூனிசம் தான் இந்த தொற்றை  கட்டுக்குள் கொண்டு வந்து இருக்கின்றதுஎன சமூக வலைத்தளங்களில் ஆர்ப்பரிக்கின்றனர். உண்மையில் சீனா, கியூபா ஜனநாயக மறுப்பு உள்ள நாடுகள். அவை கம்யூனிச நாடுகள் கிடையாது. ஆயினும் அங்கு இருக்கின்ற குறைந்தபட்ச திட்டமிட்ட பொருளாதாரத்தினால் உடனடியாக இந்த நெருக்கடிக்கு  எதிரான   நடவடிக்கையை எடுக்க கூடிய இருந்தது. முன்பு நடந்த மகத்தான புரட்சிகளின் பக்க விளைவாக இன்றும் தொடரும் சிறிதளவு திட்ட மிட்ட பொருளாதார முறை – தேசிய மயப்பட்ட சேவைகள் ஆகியன கூட இவ்வளவு பலனை தர முடியும் என்றால், முழுமையான திட்ட மிட்ட பொருளாதாரம் எவ்வாறு மனித குலத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் என்பதை எண்ணிப் பாருங்கள். 

சரிந்து  கொண்டு இருந்த  பொருளாதாரம் கொரோனாவினால்  மேலும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றது. பொருளாதாரத்தைக் காப்பாற்ற பணத்தினை மக்களுக்கு இனாமாகக் கொடுங்கள் என்ற குரல்களும் கேட்கின்றன. இவை இந்த முதலாளித்துவ பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கான கூக்குரல்களே. இதன் மூலம் முதலாளித்துவ பொருளாதாரத்தை மறுசுழற்ச்சிக்கு உட்படுத்தலாம் என எண்ணுகிறார்கள். மீண்டும் முதலாளிகள் எம்மை  சுரண்டிக் கொளுப்பதை அனுமதிக்க  முடியாது. இந்த முதலாளித்துவ பொருளாதார முறையால் உலகத்தில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க முடியாது என்பதை நாம் கண்கூடாக காண்கின்றோம். எனவே அனைத்து சேவைகளும் தேசியமயப் படுத்தப்பட வேண்டும் – குறிப்பாக மருந்து கம்பெனிகள். எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் நெருக்கடியை சமாளிப்பதற்கு நாம் திட்டமிட்ட பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டிய தேவை இருக்கின்றது.  தொழிலாளர்கள் மற்றும்  மக்களை உள்ளடக்கி ஒரு உலகளாவிய  அமைப்பை உருவாக்கி அதை  வலுப்படுத்தி எமது போராட்டத்தை மேலும் வீரியப்படுத்துவதே எமது இன்றைய தேவை.