இலங்கையின் அப்துல்கலாம் ரணில் விக்கிரமசிங்க !!!

இலங்கையின் அப்துல்கலாம் ரணில் விக்கிரமசிங்க!

சர்வதேச நாணய நிதி மூலம் எவ்வாறு நாட்டை மீட்டு எடுப்பது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் 2048 இல் இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றமுடியும் எனக் கூறியிருந்தார். அக்கினிச் சிறகுகள் எழுதியபோது அப்துல்கலாம் 2020 இல் இந்தியா வல்லரசாகும் என  ஒரு கனவு கண்டிருந்தார், அதே போல் ஒரு கனவைத்தான் ரணில் விக்கிரமசிங்கவும் காணுகிறார் போல் தெரிகிறது. அப்துல் கலாமாவது ராக்கெட் விஞ்ஞானத்தின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு இக்கனவைக் கண்டிருந்தார். ஆனால் ரணிலோ சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றுக்கொண்ட சிறு தொகை கடன் மூலம் உருவாகும் வெறும் கற்பனை வளர்ச்சியை மட்டுமே வைத்துக் கொண்டு இக்கனவைக் காண்கிறார் என்பதுதான் நகைப்புக்குரிய விடயம். அப்துல்கலாம் கண்டதை கூட  ஓரளவு நியாயமான கனவு எனலாம் ஆனால் ரணில் காண்பதோ வெறும் பகல் கனவு. அபிவிருத்தி அடைந்து வரும் பட்டியலில் இருந்த நாட்டை வங்குரோத்து நாடாக்கிய பின்னர் கடன் வாங்கி அபிவிருத்தி அடைந்த நாடாக்குவேன் என்பது  பகல் கனவு அன்றி வேறேது.

தற்போதைய ஜனாதிபதியான, ரணில் ராஜபக்ச என அழைக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க   மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை மாறாக அவசர நடவடிக்கைகள் மூலம் நியமிக்கப்பட்டார். இந்த அரசாங்கமும் ரணிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டார்கள். கடந்த தேர்தலில் ரணில் தனது தொகுதியை இழந்தார், அவரது கட்சியால் ஒரு பாராளுமன்ற தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் தேசியப் பட்டியல் பொறிமுறையின் மூலம் அவர் தனது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெறும் ஒரு ஆசனத்தையே பெற்றுக் கொடுத்தார். தனக்கு ஒரு ஆதரவும் இல்லை என்பதை ரணிலே வெளிப்படையாக பேசி இருக்கிறார். மார்ச் 22 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தனக்கு ஆதரவு இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் அதே வேலை அதற்கு பதிலாக தனது தன்னம்பிக்கை போதும் என்று கூறுகிறார். அவர் தான் யார் ஆதரவில் யார் நலனுக்கு இயங்குகிறார் என்பதை மறைத்து பேசுகிறார். 

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு இல்லை. ஆனால் மக்களைத் நசுக்கும் கொள்கைகளை கொண்டு செல்வதற்கு அவமானப்படுத்தப்பட்ட ராஜபக்ச குடும்பத்தை நம்பியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை கிளர்ச்சியின் போது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் ராஜபக்ச குடும்பத்தையும் முழு அமைச்சரவையையும் வெளியேற்றியது. இருப்பினும், தற்போதைய ஜனாதிபதி அவசரகால அதிகாரங்களையும் இராணுவத்தையும் பயன்படுத்தி வெகுஜன மக்கள் இயக்கத்தை நசுக்கி வருகிறார். அத்துடன் பழைய ஆட்சியை பின்கதவு வழியாக மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். ‘முறையான ஜனநாயகம்’ கூட இப்போது இல்லை என்பதற்கான சாட்சியே இதுவாகும்

அண்மையில் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் ஜனாதிபதியின் முயற்சி தோல்வியடைந்தது. அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவி கடைசியாக கொழும்பின் சிறிய குமிழிக்குள் சிக்கி கொண்ட ரணில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் தன்னை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர் எனக் கருதி தேர்தல் நடத்த எண்ணியிருந்தார். அதன் மூலம் மேற்குலகம் கோரியவாறு சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்திற்கு முன்னர் தேர்தலில் வெற்றிபெற்று மக்கள் ஆணையை பெற்றுவிடலாம் எனக் கருதியிருந்தார். எனினும், தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே, தேர்தல் பேரணிகள் ஆரம்பிக்கப்பட்டபோதே, ரணில் உள்ளிட்ட ராஜபக்சக்கள் நாட்டில் எந்தளவுக்கு செல்வாக்கற்றவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. தேர்தல் பொதுக்கூட்டங்களில் அவர்களால் கணிசமான ஆதரவைப் பெற முடியவில்லை. இந்த தேர்தலில் ஆளும் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும் எனத் தெரிந்தவுடன் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரான நாமல் ராஜபக்சவை ‘புதிய தலைவராக’ உயர்த்தும் முயற்சியில் பெரும் தோல்வி ஏற்பட்டது. அவரது முன்னாள் கூட்டாளியான விமல் வீரவன்ச கூட, காலியான மைதானங்களில் காலி நாற்காலிகளுடன் பேசும் அவரை “அரைவாசி வெந்த புரொயிலர்  கோழி ” என்று அழைத்தார்.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆளுங்கட்சியின் பெரும் சரிவிலிருந்து முழுமையாகப் பயனடைய முடியவில்லை. ஏனெனில் ரணிலின் கொள்கைகளுக்கு தெளிவான மாற்று அவர்களிடம் இல்லை. எனினும் அவர்களின் செல்வாக்கு  அதிகரித்திருப்பது உண்மையே. ஏனெனில் ராஜபக்சக்களை விட சஜித் குறைவான தீமைகளைச் செய்பவராகக் காணப்படுவதால் அவருக்கான ஆதரவு ஓரளவு அதிகரித்தது. குறைவான தீமையுடன் இணைக்கப்பட்டு, அதாவது பெரிய கொடுங்கோலனை விட சிறிய கொடுங்கோலன் பரவாயில்லை என்பதன் அடிப்படையில் மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு அளித்தனர்.

இந்த வெற்றிடத்தில், ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி – மக்கள் விடுதலை முன்னணி) மற்றும் அதன் கூட்டணியான என்.பி.பி (NPP) ஆகியவை குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்ற முக்கிய சக்தியாக உருவாக்கி இருக்கிறது. என்.பி.பி இடமும் தெளிவான மாற்று இல்லை. மற்றும் IMF உடன்படிக்கைக்கு மறைமுக ஆதரவை வழங்கினாலும், அதன் இடது சொல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாக அது பிரபலமடைந்து வருகிறது. 

JVP தலைமையிலான NPP, கல்வியை தனியார்மயமாக்குவதை வெளிப்படையாக ஆதரிப்பது உட்பட வலதுசாரிக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் வெற்றி முதலாளித்துவ நலன்களுக்கு பேரடியாகவே கருதப்படும். இதை மேற்கு, இந்தியா மற்றும் முதலாளித்துவ நாடுகள் பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. எவ்வாறாயினும், எந்தவொரு வலுத்சாரிய கொள்கைக்கும் ஜே.வி.பி தீர்க்கமான சவாலை முன்வைக்கவில்லை.

இப்போது ஜே.வி.பி யின் நிலைப்பாடு முற்றிலும் புதிய தேர்தலுக்கான அழைப்பைச் சுற்றியே உள்ளது. தாங்கள் வெற்றிபெறும் போது மட்டுமே தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. இந்த அரசாங்கம் எவ்வளவு செல்வாக்கற்றது என்பது ஜே.வி.பி உட்பட அனைவருக்கும் தெரியும். அண்மையில், ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி ரணிலுக்கு ஒரு சாவாலை விட்டிருந்தார். ரணில் தனது ஆதரவை வெளிப்படுத்த குறைந்தபட்சம் நூறு பேரையாவது கூட்டி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு சவால் விடுத்தார். இவ்வளவு சிறிய, அணிதிரட்டலைக் கூட ரணிலால் செய்ய முடியாத நிலைதான் இருக்கிறது என்பது மிகையான கூற்றல்ல. இந்த பலவீனம் மற்றும் வெகுஜன எழுச்சி மற்றும் மக்களின் கோபத்தின் மனநிலையை அறிந்திருந்தும், ஜே.வி.பி ஒரு தீர்க்கமான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு தடையாக இருந்து வருகிறது. ஜே.வி.பி. தொழிற்சங்கத்தில் இருக்கும் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலைநிறுத்தங்கள் செய்வதை நிறுத்துவதற்கு உதவியதை அறிவோம்.

போராட்டத்திற்கான மனநிலை உருவாகிறது

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), இலங்கை வங்கி ஊழியர் சங்கம், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சிறிய தொழிற்சங்கங்களுடன் இணைந்து அரசாங்கம் முன்னெடுக்கும் பாரிய சம்பள வெட்டுக்களுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன. தொழிற்சங்கங்களுக்கு இடையே போர்க்குணம் அதிகரித்து வருகிறது, மேலும் ஒரு பொது வேலைநிறுத்தம் உட்பட மேலும் வேலைநிறுத்த நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் அல்லது மாதங்களில் சாத்தியமாகும். போராட்டத்தை தீவிரப்படுத்துவதைத் தவிர தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை. அரசுப் படைகளால் இடைவிடாத கொடூர தாக்குதல்கள் மற்றும் கைதுகள் நடந்தாலும், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த மிருகத்தனமான அடக்குமுறை நடவடிக்கைதான் இன்னும் கூடுதலான மக்கள் அமைப்புகளை வளர்ச்சியடையாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. இருப்பினும், ஆட்சியின் மீதான கோபமும், விரக்தியும் கூடிக்கொண்டே செல்வதை நாம் பார்க்கலாம்.

மாற்று அரசியல் கட்டப்பட வேண்டும் 

இலங்கையில் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி வெகுஜன அணிதிரட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது அரசாங்கத்தின் தற்போதைய தாக்குதல்களுக்கு எதிரான தீர்க்கமான போராட்டத்தை மீண்டும் தொடங்கும் நோக்கத்துடன் உள்ளது. ஒரு பொதுவான போராட்டமானது நிலைமைகளை மேம்படுத்தக் கோரி மட்டுமல்லாது மக்களுக்கான , தொழிலார்களுக்கான மாற்றறீடாக கட்டமைக்கப்பட வேண்டும். 

கடனை செலுத்தாமை, மூலதனக் கட்டுப்பாடு, ஜனநாயகக் கட்டுப்பாட்டில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்தல், தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் தேசியமயமாக்கல் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பெரும் நிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாக்கும் கொள்கைகளுக்கு பதிலாக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்குப் பயனளிக்கும் ஒரு அவசரப் பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால் ஒரு சாத்தியமான வெகுஜன தொழிலாளர் மாற்று உருவாக்கப்படாவிட்டால், அத்தகைய கொள்கைகள் செயல்படுத்தப்படாது. ஏனெனில் தற்போதைய அரசானது ஐ எம் எப் இன் நிபந்தனைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளையே ‘பொருளாதார சீர்திருத்தங்கள்’ என்று சொல்கிறது. இரண்டும் ஒன்றல்ல.

அரகலயா-2.0 க்கான அழைப்பு, நாடு முழுவதும் மக்கள் பேரவைகளை உருவாக்குவதற்கான தெளிவான கோரிக்கைகள் ஆகிய கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போதுள்ள மக்கள் பேரவைகளும், கடந்த அரகலயாவின் போது தோன்றிய பல்வேறு அமைப்புகளும் இத்தகைய உத்தியைக் கடைப்பிடித்து, சமூகத்தை மறுசீரமைக்க ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையை ஸ்தாபிக்க அழைப்பு விடுக்க வேண்டும். “ரணிலே  ராஜினாமா செய், அப்படியே 225 எம்.பி.களையும் கையோட கூட்டிச் செல்” என்ற கோஷம் பிரபலமடைந்து வருவதுடன், முதலாளித்துவ நிறுவனங்களின் செலவாகும் குறைந்து வருகிறது.. இந்த காலாவதியான நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பதிலாக, தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு ஒரு புதிய, உண்மையான மாற்றீட்டை உருவாக்க நாம் உழைக்க வேண்டும். அது வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சபைக்கான தேர்தலை ஒழுங்கமைக்கவும் உதவும். எனவே, அத்தகைய முழக்கங்களைப் பின்பற்றுவது ஒரு மாற்றுக்கான முன்மொழிவுகளாக இருக்க வேண்டும். தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அணிதிரட்டல்களின் கூட்டு நடவடிக்கை மூலம் , தற்போதைய நெருக்கடிகளுக்கு மாற்று இல்லை என்ற முதலாளிகளின் அப்பட்டமான பொய்யை அம்பலப்படுத்த முடியும்.

 

கஜன்