தடுப்பூசிகளின் பின்னரான மரணங்களும் – அறிவியலும்

தென்னிந்தியத் திரைக் கலைஞர் விவேக்கின் மரணம் தடுப்பூசி தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அரச மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் விவேக். தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையின் வெளியே பின்வருமாறு கூறியிருந்தார் விவேக்.

 ”அரசு மருத்துவமனைகள் தான் பெரும்பான்மையான மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குகின்றன. தடுப்பூசி மற்றும் அதன் பக்க விளைவுகள் குறித்து பலருக்கு சந்தேகம் உள்ளது. பல வதந்திகளும் உள்ளன. எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். தடுப்பூசி போடுவதில் எந்த ஆபத்தும் இல்லை என்பதை மக்களுக்கு காட்ட விரும்புகிறேன். மாறாக, அது நம்மைப் பாதுகாக்கும்.”

ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 24மணி நேரத்திற்குள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விவேக். 48 மணி நேரத்திற்குள் சிகிச்சை பலனின்றி விவேக் மரணமடைந்து விட்டதாக மருத்துவமனை அறிவித்தது. விவேக்கின் மரணம் மக்கள் மத்தியில் தடுப்பூசி தொடர்பாக பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இதனை பயன்படுத்தி தடுப்பூசி மற்றும் நவீன மருத்துவத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் அதிகளவில் நடைபெற்றுவருகிறது.

வலதுசாரி தேசியவாதமும் நவீன மருத்துவ எதிர்ப்பும் 

சதி கோட்பாடுகள் (Conspiracy Theories) மற்றும் இலுமனாட்டி கதைகளுக்கு ஓர் அரசியல் தளத்தை வலது சாரி தேசியவாதம் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. மக்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு சில தனி நபர்களோ  அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனமோ அல்லது இன்னுமொரு சமூக மக்களோதான் காரணம் என வெறுப்பு அரசியலை முன்வைத்து அதிகாரத்தை கைப்பற்றும் விதமாகவே வலதுசாரிய தேசியவாதம் இயங்குகிறது.  தற்சார்பு வாழ்க்கை, பொருளாதாரம், உற்பத்தி என எல்லாவற்றிலும் தன்னிறைவு கொண்ட சமூகமாக நாம் மாறுவோம் என சனரஞ்சக அரசியல் (Populist Politics) பிரச்சார படுத்தப்படுகிறது. முதலாளித்துவ சமூக கட்டமைப்புகள் பற்றி எந்த புரிதலும் இன்றி ஓர் நாட்டுக்குள் கம்யூனிசம், மாநிலத்துக்குள் சோசலிசம் என உழைக்கும் மக்களும் இளைஞர்களும் பெருமளவில் மூளை சலவை செய்யப்படுகிறார்கள். முதலாளித்துவ எதிர்ப்பு அரசியல் ஓர் சமூக கட்டமைப்பு மாற்றம் நோக்கி நகர வேண்டும். அது வெளிநாட்டு முதலாளிகளுக்கு  பதிலாக அதானி, அம்பானிகளை நிறுத்துவதோ தெலுங்கு முதலாளிகளுக்கு பதிலாக தமிழ் முதலாளிகளை நிறுவுவதாக அல்ல.

முதலாளித்துவ ஆட்சியின் தோல்வியின் விளைவு உழைக்கும் மக்களின் அடிப்படை வாழ்வாதரத்தை சீர்குலைகிறது. இதற்கு எதிராக மாற்று அரசியலை கட்ட வேண்டிய பாரம்பரிய பெரும் இடதுசாரிய கட்சிகளோ சமரசம் செய்வதால் முதலாளித்துவ சனநாயகத்துக்குள் நீர்த்துப் போகிறார்கள். சரியான மாற்று அரசியல் முன்வைக்கப்படாத களத்தை வலதுசாரி சனரஞ்சக தேசிய அரசியல் பயன்படுத்தி எழுச்சி பெற்று வருகிறது. டிரம்ப், போரிஸ், மோடி, ராஜபக்ச, சீமான் போன்றவர்கள் எழுச்சி இதற்கு எடுத்துக்காட்டாகும். எழுச்சி பெற்று வந்த வலதுசாரி சனரஞ்சக தேசிய அரசியல் பெருந்தொற்று காலத்தில் மேலும் வலுவடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த  முடியாமலும், அதனால் ஏற்பட்ட விளைவுகளை ஈடு செய்ய முடியாமலும் தவிக்கிறது  ஆளும் வர்க்கம். இதை தீவிர வலதுசாரிகளும் பொப்புலிஸ்டுகளும் தமது பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

ஏற்பட்டிருக்கும் இந்த சூழ்நிலைகளுக்கு காரணம் சில குறிப்பிட்ட இன அல்லது மத அல்லது பிரதேச மக்கள் கூட்டத்தினர் தான் என்ற வெறுப்பு அரசியல் பிரச்சாரத்தை தமது அரசியலுக்கு ஏற்றவாறு பயன்படுத்தி கொள்கிறது வலதுசாரி சனரஞ்சக தேசிய அரசியல் களம். ‘நமது நாட்டு தடுப்பூசிகள்’ என்றும், ‘நமது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு திரும்புவோம்’ என்றும், பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது. கண்மூடித்தனமான – அறிவியலுக்கு எதிரான இந்தப் பிரச்சாரம் அச்சத்தில் இருக்கும் மக்களிடம் விதைக்கப்படுகிறது. மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக விளங்கிய பல்வேறு தொற்று நோய்களை முற்றாக ஒழிக்க நவீன மருத்துவ அறிவியலே உதவி உள்ளது. இந்த நவீன மருத்துவ அறிவியலானது வெறுமனே ஒரு தனியார் நிறுவனத்துக்கோ அல்லது நாட்டுக்கோ இலாபம் ஈட்டிக் கொடுக்கும் உடைமையாக இருக்க கூடாது. அது அறிவியலை மக்கள் சார்பாக பயன்படுத்துதலை தடுக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. ஆனால் அறிவியலையே எதிர்ப்பது மடத்தனம்.

மருத்துவம் அரசுடமை ஆக்கப்பட வேண்டும். அதன் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் இலாப நோக்கம் அற்றதாக இருக்க வேண்டும். இவை அனைத்தும் அடிப்படை சேவைகளாக உலகின் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலமே இன்றைய நவீன அறிவியல் உலகின் பயன் மக்களுக்குச் சென்றடையும். இந்தக் கோரிக்கைளை முன்னிறுத்தி மக்களை அரசியல் மயப்படுத்துவதை விடுத்து காலத்தை பின்னோக்கி இழுக்க முடியாது. இயற்கையோடு ஒன்றி வாழ்தல் என்ற பெயரில் மக்களை மீண்டும் காட்டுமிராண்டி வாழ்க்கைக்கு கொண்டு செல்ல முடியாது. பாரம்பரிய மருத்துவம் என்ற பெயரில் முறைப்படுத்தப்படாத சிகிச்சை வழிகளை நம்பி பாதிக்கப்படுவது பெருபாலும் ஒடுக்கப்பட்ட மக்களே. மருத்துவம் எல்லா காலகட்டங்களிலும் வளர்ச்சி அடைந்தே வந்திருக்கிறது. அது அறிவியலுடன் பின்னிப் பிணைந்தே வளர்ச்சி பெற்று வருகிறது. அறிவியலை நீக்கி விட்டு எந்த மருத்துவ முறைகளையும் பின்பற்ற முடியாது. பாரம்பரிய மருத்துவ முறைகளை அறிவியல் ஊடாக முறைப்படுத்தலே அவசியம். மனித குல வரலாற்றில் அறிவியலை நீக்கி விட்டு எதையும் அணுக முடியாது. ”கார்களின் வருகைதான் விபத்துகளுக்கும், சூழல் மாசடைதலுக்கும் காரணம்” என அறுதியான முடிவுக்கு வந்து ”இனி மாட்டு வண்டியில் பயணிக்கலாம்” என்று முடிவெடுப்பது தீர்வாகாது. மாட்டு வண்டி பயணத்திற்கு திரும்ப மாட்டார்கள் என்பது ஒருபுறம் இருக்க; அந்த பயணத்திலும் விபத்துகளும், மாசடைதலும் இருந்தது தான். மாட்டு வண்டி பயணமும் அறிவியலின் வளர்ச்சி தான். அறிவியல் கண்டுபிடிப்பில் சில்லும் அச்சாணியும் (Wheel and Axle)  தான் மனித குல நாகரீகத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்தியதும் – அதன் போக்கினை மாற்றியமைத்தும் என்றால் மிகையாகாது.

அறிவியலின் சுதந்திரத் தன்மை

அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் எனப் பல துறைகளின் ஆராய்ச்சிகளும் அதன் முடிவுகளையும் விஞ்ஞானத்தின் அடிப்படை என்று – அப்படியே ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்கிறது இன்னுமோர் தரப்பு.  விஞ்ஞானம் மற்றும் அறிவியல் அடிப்படையில் கூறப்படுவது அனைத்துமே 100 சதவீத உண்மை என்று ஏற்று கொண்டால் தான் நீங்கள் அறிவுள்ளவர்கள், முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்கள் என்கிறது இந்த தரப்பு. தடுப்பூசி செலுத்தி கொண்ட விவேக் 24 மணி நேரத்தில் நோய்வாய்ப்படுகிறார். 48 மணி நேரத்தில் மரணம் அடைகிறார். உலக சுகாதார தாபனத்தின் அறிவுறுத்தலின் படி விவேக்கின் மரணம் தொடர்பாக தீவிர பரிசோதனை நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். அவரின் உடல் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டிருக்க வேண்டும். அதில் கிடைக்கப்பெற்ற அறிதல் வல்லுனர்களுடன் பகிரப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதன் பின்னரே மாரடைப்பால் அவர் இறந்ததிற்கும் தடுப்பூசி செலுத்தியதற்கும் தொடர்பு உண்டா / இல்லையா என்ற முடிவிற்கு வர முடியும். இரத்த குழாயில் அடைப்பு இருந்ததால் அது மட்டும் தான் காரணம் – தடுப்பூசி செலுத்தியமை 100 சவீதம் காரணம் இல்லை என்ற முடிவுக்கு வருதல் எப்படி அறிவியல் பூர்வமானதாக இருக்க முடியும்.

நவீன மருத்துவம் வழங்கும் பல மருந்துகள் தடுப்பூசிகள் என்பவை பக்க விளைவுகளை கொண்டவையே. இந்தப் பக்கவிளைவுகள் மனித உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நன்மைகள், தீமைகள் குறித்த ஆய்வுகளின் பின்னரே பாவனைக்கு வரும். அப்போதும் அவை 100 சதவீதம் எல்லோருக்கும் பயனளிப்பது என்று முடிவு செய்ய படுவதில்லை. மக்களில் பெரும்பான்மை விகிதாசாரத்துக்கு நன்மை (Proportionally benefit) பயப்பதாக இருப்பவையே பயன்பாட்டிற்கு வருகின்றன. அத்தோடு மட்டும்  அல்லாமல் அவை பயன்பாட்டின் போது தரவுகள் பெறப்பட்டு தொடர்ச்சியாக ஆய்வுக்குட்படுத்த படுகின்றன. குறிப்பிட்ட மருந்து வகைகள் ஒவ்வாத சிறுபான்மை மக்களுக்கு வேறு வகைகள் அல்லது வழிமுறைகள் பின்பற்ற படுகின்றன. இந்த செயன் முறைகளின் அடிப்படையில் புதிய மருந்து/ தடுப்பூசி பாவனைக்கு வர 8 -10 வருடங்கள் ஆகும் என்கிறது நவீன மருத்துவ உலகு. இவை இல்லாமல் இன்றைய உலகின் சிக்கல் நிலை கருதி உடனடியாக பாவனைக்கு கொண்டு வரப்பட்டதே கொரோனாவுக்கான தடுப்பூசி. விகிதாசார நன்மை அடிப்படையில் இந்த தடுப்பூசிகள் பாவனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.பெரும்பாலும் நேரடியாக ஏற்படும் பாதகமான விளைவு (Adverse effect) பற்றிய ஆய்வோடு இவை பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆயினும் மனித உடலின் பாகங்களிலும் கூறுகளிலும் ஏற்படுத்தும் மாற்றங்கள் – ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகள் (Undesirable Effect) பற்றிய ஆய்வுகள் இன்றியே பாவனைக்கு வந்துள்ளது.

ஐக்கிய ராச்சியத்தில் AstraZeneca தடுப்பூசி எடுத்து கொண்டவர்களில் 79 பேருக்கு  மிக அரிதாக ஏற்படும் மூலையில் இரத்தம் கட்டும் நோய் ஏற்பட்டு இருக்கிறது. இதில் 19 பேர் இறந்து போனார்கள். அய்ரோப்பா உட்பட 20 நாடுகள் இரத்தக்கட்டி நோய் ஏற்படுவதாக கூறி AstraZeneca தடுப்பூசியை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளார்கள். ஆரம்பத்தில் இந்த தடுப்பூசிக்கும் இரத்தக்கட்டி நோய்க்கும் நேரடியான எந்தத் தொடர்பும் இல்லை என மறுத்தது  பிரித்தானிய மருத்துவ அதிகார சபை. ஆனாலும் இந்த தடுப்பூசி ஹார்மோன்களில் மற்றும் இரத்தக் கூறுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களும் இரத்த கட்டி நோய் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் தோற்றுவிக்கப் படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை விகிதாசார நன்மை அடிப்படையில் மில்லியன் கணக்கானோர் பயனடைந்தாலும் 100 சதவீதம் பாதுகாப்பானது என்ற முடிவுக்கு வர முடியாது. பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் பணிபுரியும் 16 சதவீத சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுப்பு தெரிவித்து உள்ளனர். தடுப்பூசி பற்றிய நிலையில்லா தன்மை சாதாரண மக்களுக்கு மட்டுமின்றி, துறை சார்ந்தவர்களுக்கே உண்டு என்பதற்கு இந்த விடயம் ஓர் எடுத்துக்காட்டு.

தடுப்பூசி மட்டும் அல்ல மக்களுக்கான சேவைகள் தரமானதாகவும் சகலருக்கும் பாரபட்சம் இன்றி கிடைப்பதற்கும் ஆவன செய்ய வேண்டியது அரசுகளின் கடமை. தடுப்பூசிகள் மீதான விமர்சனங்களுக்கு  வெளிப்படை தன்மையோடு செயற்பட்டு மக்களின் சந்தேகங்களை போக்க வேண்டியதும் அரசின் கடமையே. அதற்கு மக்களின் சேவைகள் தேசிய மாயப்படுத்தப்படல் வேண்டும். அறிவியல் விற்பனை பண்டமாக இல்லாமல் மக்களின் சேவைக்கு பயன்பட வேண்டும். பெரும் தனியார் நிறுவனங்களின் விற்பனை பண்டமாக சிக்கி இருக்கும் மருத்துவம் போன்ற துறைகளை மக்கள் சந்தேகம் துளியும் இன்றி நம்ப வேண்டும் என்பது பகுத்தறிவுக்கு ஆகாது. அறிவியலும் தொழில்நுட்பமும் சுதந்திரமாக செயற்படும் துறைகள் அல்ல.  அரசியல் அதிகாரத்தை தக்க வைக்கவும், வியாபார நோக்கிற்காக்கவும் இந்த துறைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது வெளிப்படையானது. தகவல் தொழில்நுட்ப உலகில் செய்திகளும் தரவுகளும் வேவு பார்க்கப்பட்டு – அறிவியலின் பெயரால் மக்கள் மூளை சலவை செய்யப்படுகிறார்கள். இவைகளை ஆராய்ந்து அறிதலே பகுத்தறிவு. கறுப்பு வெள்ளையாக அறிவியல் – எதிர் – மூடநம்பிக்கை என்ற ஒற்றை பரிமாணத்திற்குள் எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தக் கூடாது.

வெறும் பார்பணிய எதிர்ப்பு என்ற ஒற்றை பரிமாணத்திற்குள் மட்டும் நின்று சுழல்வதால் சமூக நீதியை நிலைநாட்ட முடியாது. சமூக நீதியை நிலைநாட்டவும் புரட்சிகர சமூக மாற்றத்தை நோக்கி நகரவும்  முதலாளித்துவ எதிர்ப்பு அரசியலை நோக்கி நகர வேண்டியதை தமிழ்நாட்டு கட்சிகள் இயக்கங்கள் இன்னும் உணரவில்லை. காலத்தை பின்னோக்கி இழுக்க முடியாது. ஆனால் சமூகம் சார் கோரிக்கைகள் பலப்பட வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட சேவை இன்று முக்கியமான கோரிக்கை. இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த இயக்கங்கள் கட்சிகள் செயற்படாவிட்டால் பொப்புலிச வலதுசாரிய அரசியல் இந்த தளத்தை பயன்படுத்தி வளர்ச்சியடைவதை தவிர்க்க முடியாது.