கடனில் மூழ்கும் இலங்கையும்  தத்தளிக்கும் எதிர்காலமும் 

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ்மக்களை கொடூரமாக கொத்து கொத்தாக கொன்றொழித்து அந்த  இரத்தத்தின் மீது நின்றுகொண்டு ராஜபக்ச சகோதரர்கள் கூறினர். “இலங்கையின் இறையாண்மையை நாங்கள் மீட்டு  எடுத்து விட்டோம்.இனி இலங்கையின் ஒரு பிடிமண்ணை  கூட யாரும் எடுத்துவிட முடியாது”என்று. ஆனால் இன்று இலங்கையின்  மூலோபாய முக்கியதத்துவம் வாய்ந்த எந்த இடங்களும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாடுக்குள் இல்லை. இலங்கை வல்லாதிக்க அரசுகளால் கூறுபோட்டு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதை மீளத் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவரும் சக்தி இலங்கை அரசுக்கு இல்லை. 

2019 ம் ஆண்டு கோத்தபாய  பலமான தலைமை வளமான இலங்கை எனக் கூறிக்கொண்டு  ஆட்ச்சிக்கு வந்தார். மூழ்கிக்கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதற்கு ராஜபக்சக்கள் போட்ட  கானல் கணக்கு கைகூடவில்லை. கொரோனவினால் பொருளாதாராம் மேலதிக அடி வாங்கி உள்ளது. கொரோன தொற்று  வந்திருக்காவிட்டாலும்கூட இந்த ஜனதிபதியின்  இயலாமை ஒரு வருடத்துக்குள்ளேயே மக்களுக்கு தெரிய வந்திருக்கும். மிக விரைவில் இவரது இயலாமை வெளிவரும் என நாம் முன்பு சுட்டி இருந்தோம். கொரோனா அதை விரைவு படுத்தி விட்டிருக்கிறது.

இன்று இலங்கை கடனில் மூழ்கி இருக்கும் ஒரு நாடு. உள்நாட்டு  மொத்த வருவாயை விட அதிகமாக கடன் வட்டியினை திருப்பி செலுத்தும் நிலையில் இருக்கிறது இலங்கை. இந்த நிலையில் நாட்டுப் பொருளாத்தைக் காக்க ராஜபக்சக்கள் ஒரு திட்டமிடலையும் வைக்கவில்லை. அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி மேலும் கடன் வாங்குதல் மட்டுமே. இன்று இலங்கைக்கு இனாமாக கடன் கொடுப்பதுக்கு  யாரும் உடனடியாக முன்வரமுடியாத நிலையில் உலக சக்திகளிடம் கை ஏந்தி நிற்கிறது இலங்கை அரசு.

வீழ்ந்துகொண்டிருக்கும் பொருளாதாரமும் இலங்கை அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக்கொள்கைகளும் இன்று  மக்களை நெருக்கி கொண்டு இருக்கின்றது. வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு மற்றும் உள்ளூரில் உற்பத்தியை அதிகரிக்காமல் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தியமை என்பன மக்களின்  வாழ்க்கையில் நேரடியான தாக்கத்தை  ஏற்படுத்தி இருக்கின்றது. உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது ஆரம்பத்தில் கொரோனா நெருக்கடியை இலங்கை சிறப்பாக கையாண்டதாக ஒரு பிரச்சாரம் செய்யப் படுகிறது. ஆனால் அது இந்த  அரசாங்கத்தின் முயற்சியால் நடைபெற்றது அல்ல. மாறாக அது பல்வேறு அச்சுறுத்தல்களை தாங்கி நிற்கும் இலங்கையின் சுகாதார சேவை கட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டதாகும். கோத்தபாய அரசு இதை எதோ ஒரு இராணுவ நடவடிக்கை போலவே கையாளுகின்றது. இதனால் கட்டுபாட்டில் இருந்த நிலை தற்போது மோசமாகி வருகிறது. இந்தத் தொற்றை கட்டுப்படுத்த முறையான திட்டமிடல்கள் அவர்களிடம் இருக்கவில்லை. மூடநம்பிக்கைகளையும் , மருத்துவ ரீதியாக நிரூபிக்கபடாத சுதேச பாணிகளையும் பிரபல்யப்படுத்திய சுகாதார அமைச்சரும் அவரது கூட்டாளிகளும் கொரோன தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். கொரோனாக்கு எதிரான வக்சீன்  வழங்கலில் கூட திட்டமிடல்கள் இல்லாமல் பல குளறுபடிகள் நடை பெறுகின்றது . இன்று இலங்கையின் அரச வைத்தியசாலையில் 10% வீதமான படுக்கைகள் கொரோனா தொற்றாளர்களினால்   நிரப்பப்பட்டு உள்ளது. இது தேசிய சுகாதார சேவைக்கு மேலதிக சுமையை ஏற்படுத்துகின்றது. வைத்தியசாலை கட்டமைப்புக்களை விருத்தி செய்ய முதலீடு செய்யப் படவில்லை. நடந்த பாராளு மன்ற தேர்தலுக்கு எவ்வளவு பணம் வாரி இறைக்கப் பட்டது என்பதை அறிவோம். ஏரளாமான பணம் அரச மந்திரிகள் – மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் சூறையாடப் பட்டு வருவது ஒவ்வொரு அரசாங்கத்திலும் தொடர்ந்து நடந்து வருவதையும் அறிவோம். மக்களுக்கான சேவைகள் என்று வரும்போது மட்டும் மர்மமாக பணம் காணாமல் போய்விடுகிறது.

கொரோனா  நெருக்கடியினால்  இலங்கைக்கு  அந்நிய செலாவணியை கொண்டுவரும் துறைகளான சுற்றுலா, ஆடை ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  ஆகியன  பாதிக்கப்பட்டு  இருக்கின்றன. கொரோனா நெருக்கடியானது கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வரப்பட்டலும்  அது இலங்கையின் அந்நிய செலாவணி துறையை உடனடியாக  சுழற்சியடைய வைக்காது. இலங்கை அரசாங்கம் வங்கிகளின் கடன் விகிதத்தை குறைத்து இருக்கின்றது. இதன் மூலம் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பினர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கின்றது. இந்த கடன்களால்  அவர்களின் கைகளில் பணம் புரள்கிறது. இந்த கடன்களில் குறிப்பிடப்பட்ட பகுதி பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுகின்றது. இதனால் பங்கு சந்தை குறிப்பிட தக்க வளர்ச்சியை காட்டுகின்றது. ஆயினும் இது ஊதி பெருத்த நீர் குமிழ் போன்ற நிலைதான். குமிழ் வெடிப்பின் போது ஏற்படும் வீழ்ச்சியை பயன்படுத்தி பெரிய முதலீட்டாலர்கள் சிறிய முதலீட்டாலர்களை அழித்து  துடைத்து விடுவார்கள். ஏற்கனவே வடக்கு கிழக்குப் பகுதியில்  இருக்கும் சிறு (அல்லது நுண்) கடன் திட்டம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு பதிலாக   அந்த மக்களை சமூக பொருளாதார நெருக்கடிக்குள் வைத்திருக்கின்றது என்பதையும் நினைவில் கொள்க. இலங்கை பங்கு சந்தையில் வர்க்கத்துக்கு சாதகமான சூழல் இருக்கின்றதாக Bloomberg இதழ் ஜனவரி 27ம் திகதி கூறியது. ஆனால்  பிப்ரவரி 2 ம் திகதி  இலங்கை பங்குச்சந்தை  குறியீட்டு சுட்டெண் வரலாற்றில் இல்லாதவாறு முதல் நாளோடு ஒப்பிடும் போது  7.7 % வீழ்ச்சியடைந்தது. இத்தகைய வேகமான வீழ்ச்சி மாற்றங்களைத்தான் நாம் தற்போது பார்த்து வருகிறோம்.

இலங்கை ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் விலை அதிகரித்து இருக்கிறது.  டிசம்பர் 31ம் திகதி அமெரிக்க டாலரின் விலை 185.21 ரூபாயாக இருந்தது. தற்பொழுது 197.01 ரூபாயாக இருக்கின்றது. இது இன்னமும் வீழ்ச்சி அடைந்து  விரைவில் 200 ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. ரூபாயின் மதிப்பை  சீராக வைத்திருக்க அந்நிய செலவாணியை வாங்குவதற்கோ  விற்பதற்கோ வர்த்தக வங்கிகளுக்கு ஆறு மாதகால தடையை மத்திய வங்கி விதித்து இருக்கிறது.  

இவ்வாறான நடவடிக்கைகள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்தவிதமான  மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. கொரோனா  நெருக்கடியில் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.சாதாரண மக்கள், அன்றாட கூலிவேலை செய்பவர்கள் தமது  வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கான பணத்தினை சம்பாதிப்பது மிகுந்த சிரமமாக இருக்கின்றது. கொரோனா  முதலாவது அலையின் பின்னர்  ஏற்படட இடைவெளியில் தமது சேமிப்புகளை முதலீட்டு சிறு வணிகங்களை  தொடங்கியவர்கள் இன்று அதை  தொடர முடியாமல் நட்டத்தில் நிற்கின்றார்கள். பெரிய நிறுவனங்களும் பொருளாதாரம் மீள்ச்சியடையும் என்ற நம்பிக்கையில் மட்டுமே இயங்குகிறார்கள்.  சந்தைபடுத்தல் மற்றும் விளம்பரத்துக்காக செய்த முதலீட்டுக்குரிய லாபத்தினை  எடுக்க முடியாமல் திணறுகின்றனர். பிரித்தானியாவை போல அரசாங்கத்துக்கு  நெருக்கமான சில வணிக நிறுவனங்கள் மாத்திரமே இந்த பெரும் தொற்றை பாவித்து கொள்ளை லாபம் பார்க்கின்றன.  

 சீனா இலங்கையை தனது கடன் வலையில் வீழ்த்தி இருக்கிறது. தனது ரோட் அண்ட் பெல்ட் திட்டத்தில் இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இலங்கை இருப்பதால் அங்கு தனது பிடியை அதிகரிக்க  கடன்களை வழங்குவதற்கு தயாராக இருக்கிறது. பொருளாதாரத்தில் தோல்வி அடைந்த நாடான இலங்கை அரசுக்கு தன்னை கொண்டு நடத்துவதற்கு இந்த கடன்கள் அவசியமாக இருக்கின்றது. ஆனால் சீன நிதிகள் அனைத்தும் இலங்கை லாபம் ஈட்ட முடியாத மூலோபாய இடங்களுக்கான முதலீடாகவே  இருக்கிறது. அந்த இடங்களையும்  நீண்ட கால குத்தகைக்கு சீனா எடுத்துக் கொள்கின்றது. சீனாவுக்கு இலங்கை அரசு  வடக்கில் இருக்கும் மூன்று தீவுகளை காற்றாலை மின் உற்பத்திக்காக வழங்கி இருக்கிறது. தீவுகள் வழங்கப்பட அதே தருணம் இந்தியாவின் அதானி குழுமத்துடன் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இது இந்தியாவுக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ளது. இந்தியாவை சமாதானப்படுத்த திருகோணமலையில் இந்தியாவுக்கு ஏற்கனவே நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்ட எண்ணெய் குதங்கள் போக எஞ்சிய வையும் இந்தியன் ஒயில் காப்பிரேசனுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. காங்கேசன்துறை  துறைமுகம் மற்றும் பலாலி விமானத் தளம் என்பனவற்றை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. இன்று  இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அழிக்கப்பட்டுவிட்டது. இனி இலங்கையில் பெற்றோலிய பொருட்களுக்கான விலையை இந்திய கம்பெனிகளே தீர்மானிக்க போகிறார்கள். அவர்களின் லாப வேட்டைக்கு இலங்கையின் உழைக்கும் மக்கள் பலியாகப் போகிறார்கள். 

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பிராந்திய  ஆதிக்கத்துக்கு சவாலாக இருக்கிறது. இதனால் இந்தியா அமெரிக்காவுடனான நெருங்கிய உறவின்  மூலமும் இவ்வாறான பொருளாதார ஒப்பந்தங்கள் மூலமும்  இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்கின்றது. இத்தகைய நிலைமையால் தமிழ் மக்களின் பிரச்சினை இந்த பூகோள அசைவுகளில் சிக்கு பட்டு நிற்பதை நாம் அவதானிக்க வேண்டும். இலங்கையில் இருக்கின்ற தமிழ் பேசும் மக்களின் தேசிய கோரிக்கை இலங்கை இந்திய உறவுகளில் மாத்திரம் அல்ல தமிழ் நாட்டிலும் பெரும் செல்வாக்கை செலுத்துகின்றது. அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான  அரசியல் கட்சிகளும் தமது எதிர்ப்பை தெரிவித்தன. தமிழ்நாட்டின் தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மோடி அரசு இந்தவிடையதில் தலையிட்டது. தீவுகள் சீனாவுக்கு வழங்கப்படும் வாய்ப்பு உண்டு என்ற செய்தி வந்தபோது இந்திய போர் விமானங்கள் இந்த தீவுகள் மேல் பறந்து சென்றதை அறிவோம். இலங்கையில்  இந்தியாவின் தலையீடு தென் இலங்கையில்  ஒரு  பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தென் இலங்கையில் இருக்கும் சிங்கள மக்களுக்கு இந்திய எதிர்ப்பு மனநிலை இருக்கிறது. இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் தென்னிந்தியாவில் இருக்கும் தமிழ் நாட்டினால் அவர்களுக்கு தாம் சிறுபான்மை என்ற  உணர்வும் உண்டு. இதை ஜனதா விமுகத்தி பெரமுன (ஜேவிபி ) தமக்கான அணி திரட்டலுக்கு பாவிக்கின்றது. ஏற்கனவே இந்திய எதிர்ப்பு என்பதைக் கூறித்தான் 1987-1989 இல் தமது இரண்டாவது எழுச்சிக்கான அணிதிரட்டலை செய்தார்கள்.

ரனில் மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்தின் செயலற்ற தன்மை, ஈஸ்டர் குண்டு வெடிப்பு என்பனவும்   இலங்கைக்கு வலிமையான தலைவர் வேண்டும் என்ற பிரச்சாரமும் கோத்தபாய ராஜபக்சவை தனி சிங்கள  வாக்குகளின் மூலம் ஜனாதிபதியாக்கியது. இன்று அவரது அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து இருக்கிறது. ஆனாலும் உருப்படியான எதிர்ப்பு இன்மையால் கோத்தபாய  பலம் பொருந்தியவராகவே   இருக்கின்றார். அவர் ஜனாதிபதியாகிய சிறிது காலத்துக்குள்ளாகவே தனது இராணுவ சகாக்களை அமைச்சுக்களின்  செயலாளர்கள்  மற்றும் அதிகார சபைகளின் தலைவர்களாக்கி  இருக்கின்றார். கொரோனா நெருக்கடிகளை பாவித்து இராணுவ அதிகாரிகள் நிவாரண நடவடிக்கைகளுக்கு  இணைப்பாளராக இருக்கிறார்கள். ஜனவரி  முதலாம் திகதியில் இருந்து 25 இராணுவ அதிகாரிகளை மாவட்டங்களின் இணைப்பாளர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே இருக்கின்ற சிவில் சேவைகள் அமைப்புக்கு வெளியில் ஒரு அதிகார அமைப்பாக செயல்படுவதோடு  சிவில் சேவை அதிகாரிகளின் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகின்றார்கள். இவை இலங்கையை இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துவதாக இருக்கிறது

ஒரு இராணுவ சர்வாதிகாரத்துவம் தேர்தல் மூலம் ஆட்சியில் அமர்த்தப் பட்டுள்ளது என கூறலாம். கோத்தபாயவும் அவரது சகாக்களும் பல கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள். மனித உரிமை மீறல்களை செய்தவர்கள். அவர்களை எதிர்க்க  சிவில் சேவை அதிகாரிகள் பயப்படுகின்றார்கள். அது மாத்திரம் இல்லாமல் அவர்களின் இந்த அதிகார பறிப்புக்கு எதிராக போராடுவதற்கு உரிய சிவில் சேவைகளுக்கான சங்கங்களோ கட்டமைப்புகளோ இல்லை. இருக்கும் சில தொழிற்சங்கங்களும் அரச ஆதரவு நிலையிலும் கட்சி வாரியாகவும் பிரிந்து இருக்கின்றன.

பிப்ரவரி 4ம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தில் உரையாற்றிய கோத்தபாய “நான்  பௌத்த  மக்களின் தலைவன் என்பதில் பெருமை அடைகிறேன்” என  கூறினார். இதன் மூலம் தான் சிங்கள மக்களின் மீட்பர் என்ற தனது இனவாத நிலைப்பாட்டில் தான் இருக்கின்றேன் என்பதை மீண்டும்  தெளிவுபடுத்தி இருக்கின்றார். நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்  நாட்டில் இருக்கின்ற சிறுபான்மை இன மக்கள் கோத்தபாயவுக்கு எதிராகவே வாக்களித்தனர். இலங்கையில்  இன முரண்பாடுகள் கூர்மை அடைந்து இருக்கின்றது. அதனை சீர் செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல்  அதை  கூர்மைப்படுத்தி தமது அதிகாரத்தை தக்க வைக்கவே ராஜபக்சக்கள் முயல்கின்றார்கள். பௌத்த இனவாத சக்திகளை திருப்தி படுத்தவும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் அரசின்  செயல்திறன் இன்மையை மறைக்கவும்.இசுலாமியர்கள்  மீது வெறுப்பை கட்டமைத்து  இருக்கிறது இலங்கை அரசு . இசுலாமியர்கள்தான் கொரோனவை பரப்புகின்றார்கள் என்ற பிரச்சாரமும் இறந்த  உடல்களை புதைக்க விடாமல் எரிக்கப்பட்டமையும் சிறுபன்மை மதங்களின் உரிமைகளை நசுக்கும் செயலாகும். கோவிட் இனால் இறந்த உடலை புதைப்பதால்  தொற்று பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது மதங்களுக்கிடையில் முறுகல் நிலையை  உருவாக்கவேண்டும்  என்பதற்காகவே கையில் எடுக்கப்பட்டு இருக்கின்றது.   அரசு தற்பொழுது இவற்றை புதைப்பதுக்கு இரணதீவு உகந்த இடம் என கூறி அங்கும் சமூக பதட்டத்தைஉருவாக்கி இருக்கின்றது.

ஏற்கனவே விழுந்து கொண்டிருந்த பொருளாதார நெருக்கடி , கொரோன நெருக்கடி , அரசின் தெளிவற்ற கொள்கை முடிவுகள் , ஜனநாயக மறுப்பு என்பன மக்களை கோபம் கொள்ள செய்து இருக்கின்றது. இது ஏற்கனவே கூறியது போல ராஜபக்சக்களின் அரசின் மீது நம்பிக்கை இழக்க செய்த்துள்ளது. தமது அதிகாரத்தை தக்கவைக்க இனவாதத்தை தூண்டி வீடுவதை தவிர வேறு வழி  அரசுக்கு இல்லை. ஏற்கனவே வடக்கில் கூர்மை அடைந்திருக்கும் தேசிய கோரிக்கைக்கு தீர்வினை காண்பதற்கான பலத்தை கட்டுவதாற்கோ , தெற்கில் அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் மக்களை ஓருங்கிணைப்பதுக்கான திட்டமோ தமிழ் அரசியல் தலைமைகளிடம் இல்லை. மாறாக  அவர்கள் இப்பொழுது செய்வது எல்லாம்  தமது வாக்கு வங்கிகளை எப்படி பாதுகாத்து கொள்ளலாம் என்பதுக்கான அரசியல் மாத்திரமே.எந்த வித திட்டமிடல்களும் இல்லாத தமிழ் தலைமைகள் இந்தியாவை தம்பக்கம்  வளைக்கின்றோம் என கூறி செய்யும் கூத்துக்கள் மக்களை மீளாத குழியிலே கொண்டு வீழ்த்தும். அண்மையில் நடைபெற்ற  பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான  பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் கோரிக்கைகள் வேறாகவும் தலைவர்களின் நோக்கங்கள் வேறாகவும் இருக்கின்றன. இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் இல்லாதவாறு  மத தலைவர்களை முன்னிறுத்தி இந்த பேரணி ஒழுங்கு செய்யப்படு இருந்தது. இது இந்தியாவில் பாஜகவின் அமித் சா பாணி அணி திரடடல் ஆகும். இன்று பேரணியில் கலந்து கொண்ட மக்களின் கோரிக்கைகள் பின் தள்ளப்பட்டு அதில் பிரபல்யப்படுத்த பட்ட அரசியல்வாதியான சாணக்கியன் கிழக்கு மாகாண முத்தலமைச்சர் வேட்பளராக முன்மொழிய பட்டிருக்கின்றார். அத்தோடு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பேரணி நோக்கம் முடிவடைந்து விட்டது. 

இன்று மக்கள் கிளர்ந்து எழுந்தாலும் அதற்கு தலைமை தாங்கக்கூடிய  அமைப்புக்கள் இல்லை. இன்று இலங்கையில் பலமான எதிர்க்கட்சி என்பது இல்லாமல் இருக்கின்றது. அது மாத்திரம் அல்ல வீதித்க்கு வரும் தொழிலாளர்களுக்கு தலைமை தங்கவும் பலமான தொழில் சங்கங்கள் இல்லை. அரசினால் வளர்த்துவிடப்படும் இன்னவாதத்துக்கு எதிராணா திட்டமிடல்களுடன் தமிழ் பேசும் மக்களின் தலைமைகளும் இல்லை. இது ராஜபக்ச சகோதரர்களுக்கு சாதகமான நிலைமையை உருவாக்கி இருக்கின்றது. அவர்கள் எதிர் காலத்தில் தேர்தல் மாவட்டங்களை ஜெரிமெண்டரின் செய்வதன் மூலம் தனி சிங்கள வாக்குகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியும் என நம்புகிறார்கள். இவற்றுக்கு எதிராக போராட கூடிய பலமான இடதுசாரி கட்சிகளும் இல்லை . இவை இலங்கை மக்களை ஒரு இருண்டகாலத்தை நோக்கி கொண்டு செல்லக்கூடும். இவற்றுக்கு எதிராக குறைந்த பட்சம்  ஜனநாயக உரிமைகளுக்கான தளம் ஒன்றினை கட்டுவதை நோக்கி நகருவோம்.