37 பில்லியனும், மூன்றரைப் பவுண்சும் – பிரித்தானிய பட்ஜெட் 2021 

photo Clare Doyle

பிரித்தானிய அரசின் 2021 ஆம் ஆண்டிற்கான  பட்ஜெட் வெளிவந்துள்ளது .அதன்படி பிரித்தானிய  தேசிய வைத்திய சாலையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஒரு வீத சம்பள உயர்வை – அதாவது  கிழமைக்கு 3.50 பவுண்டுகள் ஊதிய உயர்வை அதிகரித்திருக்கின்றது பிரித்தானிய அரசு. கொரோனா நெருக்கடியான  காலத்தில் தமது உயிரை பணயம் வைத்து வேலை செய்த வைத்தியசாலை ஊழியர்களுக்கு  வெறும் மூன்றரைப் பவுண்டுகள்தான். அதாவது மாதத்திற்கு  பதினான்கு பவுண்டுகள் மட்டுமே சம்பள உயர்வு.  இதனை மருத்துவ சங்கங்களும், வைத்தியசாலை ஊழியர்களும், தொழிற் சங்கங்களும் வன்மையாகக் கண்டித்து வருகின்றன. கொரோனா  நெருக்கடியின் காரணாமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் இதற்கு மேல் சம்பள உயர்வை தரமுடியாது என கைவிரித்துள்ளது பிரித்தானிய அரசு. கடந்த வருடம் 2.1 வீதம் சம்பள உயர்வை வழங்குவோம் என வாக்குறுதி அளித்த கன்சர்வட்டிவ் கட்சி குறைந்த பட்சம்  தாம் வழங்கிய வாக்குறுதியை கூட காப்பாற்றமுடியவில்லை. 

இந்த வருடத்திற்கான பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது ஒரு வீத சம்பள உயர்வானது ஊழியர்களின் வாங்கும் சக்தியில் எந்தவித பாரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அதனாலேதான் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து  பொதுத்துறை ஊழியர்களுக்கும் 15% சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. கொரோனா நெருக்கடியினால் மக்களின் உயிர்களையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்குப் பதிலாக, நிறுவனங்களையும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பையும் காப்பாற்றி அதற்கு ஏற்படவிருக்கும் சேதாரத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது பிரித்தானிய அரசு.

கொரோனா  நெருக்கடி தொடங்கிய காலத்தில் 40,000 NHS ஊழியர்களுக்கான தேவை இருந்தது. எனினும் அரசின் தற்போதைய நடவடிக்கைகளினால் திறமை வாய்ந்த  ஊழியர்கள் பலர் வேலையை விட்டு நீங்கிச் செல்லும் அபாயமும் காணப்படுகின்றது. NHS ஊழியர்களின் உயிரைப் பணயம் வைக்க விரும்பும் அரசு -அல்லது அவர்கள் இறந்து போகக்கூட அனுமதிக்கும் அரசு அவர்களுக்கு சம்பள உயர்வைக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பின்னடிக்கின்றது. 

NHS  ஊழியர்களுக்கு 3.50 பவுண்டுகளுக்கு க்கு மேல் எதுவும் கொடுக்க முடியாது என கைவிரிக்கும் அரசு மறுபக்கத்தில் மிகப் பெரும் காப்ரேட் நிறுவனங்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு 12 பில்லியன் வரைக்கும் வரி விலக்கு அளித்துள்ளது.இதன் மூலம் அமேசன் போன்ற நிறுவனங்கள் இதுவரை செலுத்தி வந்த வரியை விட குறைவான வரியையே செலுத்தப் போகின்றன. தேசிய வைத்திய சாலை ஊழியர்களைக் காப்பாற்றுவதை விட , அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதை விட அமேசன் போன்ற நிறுவனங்களைக் காப்பாற்றுவதையே தனது முதன்மைக் கடமையாக எண்ணுகிறது கன்சர்வேட்டிவ் கட்சி என்பது இதிலிருந்து புலனாகிறது.

உலகில் கொரோனாவின் காரணமாக அதிகளவான மக்கள் இறந்த நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.மக்கள் இறந்துகொண்டிருக்கும் அதேவேளையில் பிரித்தானிய கோடீஸ்வரர்களின் செல்வம் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. இதன் பின்னரும்கூட மக்களின் பெல்ட்டையே இறுக்கச் சொல்லும் பிரித்தானிய அரசு இன்னமும் முதலாளித்துவ நிறுவனங்களின் பெல்ட்டையோ அல்லது கோடீஸ்வரர்களின் பெல்ட்டையோ இறுக்கச்  சொல்லவில்லை. மாறாக  காப்ரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப பொருளாதாரக் கொள்கை மற்றும் பட்ஜெட்டை அமுல்படுத்துகிறது.

கொரோனா பரிசோதனை செய்வதற்காக இரண்டு வருடத்திற்கு 37 பில்லியனை ஒதுக்கிய அரசு வைத்தியசாலை ஊழியர்களின்  சம்பள உயர்வுக்காக நிதி ஒதுக்க தயங்குகிறது. கொரோனா சோதனை முக்கியம் அதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை. Test  and  Trace என்ற பெயரில் செய்யப்படும் பரிசோதனையில் பெருமளவான நிதி செர்கோ (Serko) போன்ற நிறுவனங்களை சென்றடையும். இதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் சொற்பமே. Test and Trace பரிசோதனையின் பின்னரும் கூட, இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை பிரித்தானியா முடக்குதலுக்கு உள்ளாவதை தடுக்க முடியவில்லை எனின் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீண் விரயம் எனவும், வெறுமனே நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாக இருக்கின்றது எனவும் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

கொரோனா  நெருக்கடி நிலையின் போது கூட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பல தடவைகள் உயர்த்தியுள்ளனர். தனது ஆலோசகராக இருந்த டொமினிக் கம்மிங்ஸ் என்பவரின்  சம்பளத்தை £45,000 இனால் உயர்த்தினார் போரிஸ் ஜான்சன். அதாவது அவரது சம்பளம் £100,000 இலிருந்து £145,000 இற்கு  சென்றது. இவ்வாறு தமக்கும்,  தாம் சார்ந்தவர்களுக்கும் சம்பள உயர்வுக்கு நிதியை ஒதுக்கும் அரசு, மக்களின் அடிப்படை தேவைகளுக்கு, மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு, நிதியை ஒதுக்க மறுக்கின்றது. 

 குறிப்பிட்ட சில, அதுவும் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான முதலாளிகளின் நலனுக்கு சார்பாக இயங்கும் இவ் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக NHS  ஊழியர்கள் மற்றும் பிரித்தானியாவில் தொழிற்சங்களுடன் இணைந்து ஒரு வலுவான போராட்டத்தைக் முன்னெடுக்க வேண்டும். மக்கள் அனைவரும் ஒரு அமைப்பாக திரண்டு இப்போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும். பொருளாதாரம் என்பது ஒரு சிலருக்கானது அல்ல.அது ஒட்டு மொத்த மக்களுக்குமானது. மக்களுக்கான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தும் வரை- பொதுப்பணித்துறை ஊழியர்கள், மற்றும் பிரித்தானிய தேசிய வைத்தியசாலை ஊழியர்களுக்கான முழுமையான சம்பள உயர்வு கொடுக்கப்படும் வரை – பிரித்தானிய தேசிய வைத்தியசாலைகளுக்கு முழுமையான நிதி ஒதுக்கப்படும்வரை, இப்போராட்டம் தொடரப்பட வேண்டும். அதற்கு நாம் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.