தமிழக அரசியல் சூழலும் இடதுசாரி செயற்பாட்டாளர்கள்  எடுக்க வேண்டிய நிலைப்பாடும்

1,490 . Views .

சுமார் 2 தசாப்தங்களுக்கு முன் கார்பரேட்கள் நேரடியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதை யாரும் நினைத்து பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது கொள்கை பிடிப்போ அரசியல் தெளிவோ அற்ற பெரும் கார்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கு ஊர்வலம் செல்ல வேண்டும், எங்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி எந்த தொகுதிக்கு எந்த வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது வரையில் இந்த பெரும் நிறுவனங்கள் தலையிடுகின்றது.

தொகுதியில் நற்பெயர் உள்ள வேட்பாளர்கள் மற்றும் பேச்சாளர்களின் தேர்வு ஆகியவற்றில் கட்சிகள் பெரும் கவனம் செலுத்தும். தற்போது இந்த முடிவுகளையும் இந்நிறுவனங்களே எடுக்கின்றன. இதன் மூலம் பொதுமக்களை வெறும் தகவல்களாக (டேடாக்களாக) பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிறுவனங்களுக்கு கட்சியோ அதன் கொள்கையோ எதுவம் பொருட்டல்ல. யார் கட்டணத்தை ஒழுங்காக செலுத்துகிறார்கள் என்பதே இந்த நிறுவனங்களின் ஒரே நோக்கம். முப்பு பாஜகவை வெற்றிபெற வைத்த பிரஷாந்த் கிஷோரின் ஐபேக்தான் தற்போது திமுகவின் வெற்றிக்காக உழைக்கிறது என்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகின்றது.

ஆட்சிக்கு வந்தால் செய்யபோவதென்ன, ஆட்சியின்போது செய்ததது என்ன என்பதைக் கூறி வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக எதிர் காட்சிகள் செய்த பிழைகளை விமர்சிக்கும் போக்கு இப்போது அதிகம் காணக்கூடுகின்றன. சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் சித்தரிக்கப்பட்ட விளம்பர படங்களின் வழியாக எதிர்கட்சிகளை விமர்சிக்கும்போக்கு அதிகரித்துள்ளது. பிரச்சாரங்களில் தனிநபர் உணர்ச்சிகளையும், தனிமனித தாக்குதல்/ விமர்சனங்களும் அதிகரித்துள்ளது.

தமிழக தேர்தல் பிரச்சாரம்

ஏழைகள் வீட்டில் உணவு சாப்பிட்டு வாக்கு சேகரிப்பது வட இந்திய அரசியல் தலைவர்களின் பாணி. அதே பாணியை பின்பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘ஏழை தொண்டரின்’ வீட்டில் டீ குடித்து விட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதே போல் அம்மா பாசத்தை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கும் யுக்தியையும் அவர் உபயோகித்து வருகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் (அதிமுக) தனக்கு உடற்கோளாறுகள் உள்ளதென்று கூறி, அதை முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடும் கமல் ஹாசனும் மற்றும் அவருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருவோரும் இதே போல் வயதை ஒரு தகுதியாக கூறி வருகிறார்கள். இவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று கமல் ஹாசன் சிறு வயதில் இருந்து திரை துறையில் இருந்தவர், அவர் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் என்பதை எல்லாம் கூறி பிரச்சாரம் செய்கின்றனர். தரக்குறைவான வார்த்தை பிரயோகம், இழிவுபடுத்துதல் ஆகியவற்றிற்கும் இந்த பிரச்சாரங்களில் பஞ்சம் இல்லை. கருத்தியல் ரீதியாக மோதுவதை தவிர்த்துவிட்டு, “வானதி ஸ்ரீனிவாசன் (பாஜக) ஒரு துக்கடா அரசியல்வாதி” போன்ற தனி மனித தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு சற்றும் சலிக்காத வானதி ஸ்ரீனிவாசன், “கமல் லிப் சர்விஸில் (lip service) மட்டும்தான் தேர்ந்தவர்” என்று கூறியுள்ளார். அதாவது, அவர் ஒரு வாய் சவடால்கரர் என்பதோடு மட்டும் நிறுத்தாமல் மற்ற அர்த்தத்தை நீங்களே புரிந்துகொள்ளுங்கள் என்பது போன்று தரக்குறைவான விமர்சனங்களை வைத்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் அனைவருக்கும் பட்டப்பெயர் வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எங்கு பிரச்சாரத்துக்குச் சென்றாலும் எடப்பாடி பழனிசாமியை தியாகி, ஓ.பன்னீர்செல்வத்தை மிஸ்டர் தர்மயுத்தம், பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பயில்வான் என்று பட்டப்பெயர் வைத்தே அழைக்கிறார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மந்திரவாதி என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை சந்திரமுகி என்றும் அழைக்கிறார். இது போல் பலருக்கும் அவர் பட்டப்பெயர் வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஆ.ராசா முதல்வர் பழனிசாமியை பற்றி பேசிய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இவை உட்கட்சியில் இருந்தும் வந்த வண்ணம் இருந்தன. நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறைப் பிரசவம் இ.பி.எஸ். நல்ல குழந்தைக்குத் தாய்ப்பால் போதும். குறைப்பிரசவ குழந்தையைக் காப்பாற்ற தில்லியிலிருந்து மோடி என்கிற டாக்டர் வருகிறார்” என்று ஆ.ராசா கூறினார்.

இது போன்ற சர்ச்சைகள் – மேலும் பா. ஐ. க வுடன் பி ஜே. பி வைத்திருக்கும் உறவு பற்றிய சர்ச்சை என சூடு பிடித்திருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களால் சார் கொள்கை நிலைப்பாடு மற்றும் அவர்களுக்கான மாற்று பற்றிய உரையாடல் காணாமல் போய் விட்டது.

பாஜக எதிர்ப்பு

சிலர் தனித்து பாஜக எதிர்ப்பு பேசி வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியாவின் முக்கியமான இடதுசாரிய இயக்கங்களில் இருந்து வெளியேறியவர்கள். சிறு குழுக்களாக இருந்து செயல்பட்டுவந்த இவர்கள் தற்போது ஒன்றாக இனைந்து செயல்பட வேண்டும் என்று எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும் பாஜக எதிர்ப்பை மட்டுமே முன்னிறுத்துவது சிக்கலான ஒரு விடயமாகும்.

பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் அனைவரையும் இணைப்பதன் மூலம் இவர்கள் வர்க்க நலனை தொலைத்து விடுகிறார்கள். இந்த ஒற்றை புள்ளிக்காக தீவிர வலதுசாரிகளை எதிர்ப்பவர்கள், தாராளவாதிகள், அவ்வப்போது முற்போக்கு பேசும் பிரபலங்கள், தேசியவாதிகள் ஆகிய அனைவரையும் இணைத்துக்கொள்கிறார்கள். பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று சொல்வதைத் தவிர இவர்களின் பிரச்சாரத்தில் வேறு அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை. பாஜக இல்லாமல் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனும் உடனடி கேள்விகளுக்கு கூட இவர்களிடம் பதில் இல்லை. இவை அனைத்தையும் விட ஆபத்தான விடயம் என்னவென்றால் இவர்களிடம் வர்க்க பார்வையே இல்லை.

வரவிருக்கும் தேர்தலில் மார்க்சியர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன?

உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு சரியான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை. இதன் காரணமாக நிறுத்தப்படும் போராட்டங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

நாடாளுமன்ற ஆட்சி நடைபெறும் இந்தியாவில் பெரும் கட்சிகள் முதலாளித்துவ நலனை பாதுகாக்கும் கட்சிகளாகவே உள்ளன – பாஜக மற்றும் காங்கிரஸ். இந்த கட்சிகளுக்கு தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நிலையான, பரந்தபட்ட ஆதரவு இல்லை. இக்கட்சிகள் செல்வாக்கு உள்ள மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்கின்றன. இந்த கட்சிகளும் முதலாளித்துவ நலன் சார்ந்த கட்சிகளாகவே உள்ளன.

இந்தச் சூழலில் இடதுசாரிகள் தனித்து குரல் எழுப்பாமல் குறை தீமைக்கு இரையாகி விடுகிறார்கள். இதனால் குறை தீமை தான் சரி என்கிற தவறான கருத்துக்கு பலர் தள்ளப்படுகிறார்கள்.

ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளும் சில மாவோயிச கட்சிகளும் இந்த பிரதான கட்சிகளுக்கு வெளியே, தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்குமான ஆதரவு வேறு எங்கும் இல்லை என்ற நிலைப்பாட்டை எப்போதும் ஏற்றுக் கொண்டுள்ளன. இவர்கள் மூன்றாம் எதிர்ப்பை கட்டுவதை வெறும் பாராளுமன்ற தேர்தல் முறைக்குள் முடக்கிவிட்டனர். அதனை ஒரு வர்க்க போராட்டமாக அவர்கள் முன்னெடுக்கவில்லை.

இக்கட்டத்தில் சிறுகுழுவான நமக்கு இருவேறு பணிகள் உள்ளன. நாங்கள் வெகுஜன சோசலிஸ தொழிலாளர் கட்சியை கட்டும் பொருட்டு, தனித்தியங்கக் கூடிய ஒரு வெகுஜன உழைக்கும் வர்க்க சக்தியை உருவாக்க போராடி வருகிறோம். மேலும், எங்கள் இயக்கமான புதிய சோசியலிச இயக்கம், மார்க்சிஸ்ட் வேலைத்திட்டத்திற்கு உறுதுணையான சக்தியாக இருக்கும்.

 முதலாளித்துவ கட்சிகள் மற்றும் இன்னபிற கட்சிகளின் ஆற்றாமைகளை வெளிக்குணரும் பொருட்டு, பொதுமக்களிடையே பரப்புரை செய்வோம். அக்கட்சிகளிடம் மக்களை ஈர்த்து வைத்திருக்கும் முழக்கங்களும் கொள்கைகளும் இருக்கின்ற போதிலும், அவற்றுக்கு முதலாளித்துவத்தை எதிர்த்து நிற்கும் நோக்கமோ அல்லது உழைக்கும் வர்க்கம், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் நோக்கமோ இருப்பதில்லை.

இதனால், வாக்காளர்களுக்கு எந்தக் கட்சியை தேர்தெடுப்பது என்ற குழப்பம் வாக்குச்சாவடிகளில் ஏற்படக்கூடும்.

நாங்கள் தேர்தல் புறக்கணிப்பை ஆதரிக்கவில்லை. பொதுமக்களில் ஒருசாரார் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பதையும், மற்றொரு சாரார் நோட்டாவுக்கு வாக்களிப்பதையும் புரிந்துக்கொள்கிறோம். எவ்வாறாயினும், இந்த எதிர்ப்பலையை வடிகாலிட்டு, உழைக்கும் வர்கத்துக்கான ஒரு பிரதித்துவத்தை கட்டியெழுப்ப முயல வேண்டும். இது மிகவும்  கடினமான பாதை என்று நீங்கள் நினைக்ககூடும். ஆனால், மேற்சொன்ன அக்கேள்விக்கு வேறெந்த பதில் பெற்றாலும் அது தவறுதான். உழைக்கும் வர்க்கத்திற்கு இவ்வுண்மையை எடுத்துக் கூறுவது முதன்மையான பணி.

உழைக்கும் வர்க்கத்திற்கான கட்சியை கட்டியெழுப்புவதன் வழியாகவே தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்குமான உரிமைகளை வென்றெடுக்க முடியும். தேர்தலின்போது இதற்காக போராடாமல் இருப்பதென்பது, நம் ஒரு கையை பின்னல் கட்டிக்கொண்டு சண்டையிடுவதற்கு சமம். சிறு சக்தியாகக்கூட தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கான கோரிக்கைகளோடு இத்தேர்தலில் நாம் போட்டியிட வேண்டும்.

அதிமுகவையும் அதன் கூட்டணி கட்சியான பாஜகவையும் நாங்கள் கடுமையாக எதிர்கிறோம். தொழிலாளர்களும் ஏழை வாக்காளர்களும் இக்கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது. அதற்கு பதிலாக, மோடி-அமித் ஷா ஆட்சியை எதிர்க்கும் திட்டங்களைக் கொண்ட தொழிலாளர் வர்க்க கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். அதே சமயம், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பது மட்டும் போதுமானதல்ல. குறுகிய கால கோரிக்கைகளை வெல்வதற்கும் மோடியின் ஆட்சியை தோற்கடிப்பதற்கும், முதலாளிதுவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்துவதற்கும் ஒரு புதிய கட்சியின் தேவையுள்ளது. நாங்கள் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் முகத்திரையை கிழிப்பதற்கு வேலை செய்து வருகிறோம்.

காங்கிரஸ் ஆட்சியின் கீழ்தான் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிரான தாக்குதல்கள் தொடங்கியது. அப்போதிருந்த இடதுசாரிகளின் தோல்வியின் காரணமாகவே பாஜக ஆட்சியில் அமர்ந்தது. அதன்பொருட்டே, நாம் இந்நிலைக்குள் சிக்குண்டிருக்கிறோம்.

எனவே, குறைதீமையை ஆதாரிக்க வேண்டுமென்ற வாதத்தை ஏற்க முடியாது. தற்போது, தொழிலாள வர்க்கத்திற்கான கட்சியை கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. இதற்கே நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இவ்வாறான ஒரு மாற்றத்தை உருவாக்க முற்போக்கு மற்றும் தொழிலாளர் கட்சிகள் முன்வர வேண்டுமென்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இதனூடே, சோசலிச பார்வையையும் மக்கள் நலனையும் கருத்தில் கொண்டியங்க வேண்டும்.