குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்

Assam, Dec 15 (ANI): Women raise slogans during a protest against the Citizenship (Amendment ) Act, 2019, organized by Assamese artists, at AEI Playground, Chandmari in Guwahati on Sunday. (ANI Photo)
1,464 . Views .

– சாரா ராஜன்

2019 டிசம்பரில், மோடி தலைமையிலான பாஜக அரசு, மில்லியன் கணக்கானவர்களின் உரிமைகளை அச்சுறுத்தும் புதிய குடியுரிமைச் சட்டத்தை அமுல்படுத்தி உள்ளது.CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்), NPR (தேசிய மக்கள் தொகை பதிவு), NRC (குடிமக்களின் தேசிய பதிவு) ஆகியவற்றைக் கொண்டுவருவதன் மூலம், மோடி அரசு இந்தியாவை ஒரு இந்து தேசமாக்கும் வேலையை செய்து வருவது பகிரங்கமாகி உள்ளது. இப்புதிய சட்டத்தின் படி இந்தியாவில் தஞ்சம் கோரும் சில நாடுகளைச் சேர்ந்த  இந்துக்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முஸ்லிம் மதம் சார்ந்தோர் இவ்வாறான குடியுரிமை பெற தகுதியற்றவர்கள் என சட்டமாக்கப் பட்டுள்ளது. இச்சட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மத சிறுபான்மையினர் மட்டுமல்லாமல், இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்ற அடிப்படையில் பல்வேறு தரப்பட்ட சமூகத்தினர் இச்சட்டத்தை எதிர்த்து வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். 

தற்போது நிகழும் போராட்ட எழுச்சி, குடியுரிமை சட்ட நடவடிக்கையால் தூண்டப்பட்ட போதும் மக்களின் கோபத்துக்கு அது மட்டுமே தனிக் காரணம் இல்லை. நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அரசு செய்து வரும் பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளின் மேல் உள்ள கோபத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாட்டை நாம் இந்த போராட்ட நடவடிக்கைகளில் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. 

பல ஆண்டுகளாக திரண்டு கொண்டிருந்த மொத்தக் கோபம் முதலில் அசாமில் வெடித்துக் கிளம்பியது.  பின் போராட்டம் காட்டுத்தீ போல் விரைவாக மற்ற மாநிலங்களுக்கும் பரவியது. பணமதிப்பிழப்பு, அதிகரித்த ஜிஎஸ்டி (பொருள் மற்றும் சேவை வரி), நீட் , காஷ்மீரின் ஜனநாயக உரிமைகளை பறிப்பது, நிறுவனமயமாக்கப்பட்ட  படுகொலைகள், பாபர் மசூதி தீர்ப்பு போன்றவை இப்போது நடந்து கொண்டிருக்கும் கிளர்ச்சியின் பின்னணியாக இருக்கின்றன. காஷ்மீரிகளின் தேசிய உரிமைகளை பறித்தது ஏற்கனவே பல தேசிய இனங்களின் சிறைச்சாலையாக இருக்கும் இந்தியாவில் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி விட்டுள்ளது.   இப்போது, ​​மோடி ஆட்சியின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின் ‘ஒரு தேசத்தை’ வலியுறுத்தும் நடவடிக்கை இந்தியாவுக்குள் சிறைப்பட்டு இருக்கும் பல் தேசியங்களின் எதிர்ப்பை மேலும் தூண்டி உள்ளது.

புதிய குடியுரிமைச் சட்டத்தையும் மோடி ஆட்சியையும் எதிர்க்கும் இந்த வெகுஜன இயக்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். இருப்பினும், இது ஒரு பல்வர்க்க இயக்கமாக, பல்வேறு முரண் சக்திகளை ஒன்றிணைத்த ஒன்றாக இருப்பதையும் நாம் பார்க்கிறோம். சில முதலாளித்துவ அரச கட்சிகள் கூட வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததை நாம் பார்த்தோம். கேரளாவில், இச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்  என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார். சிபிஐ (எம்) (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)) கட்சியைச் சேர்ந்த அவர் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கேரளாவைப் போன்று சட்டசபையில் தீர்மானம் கோருமாறு மற்ற மாநிலங்களில் உள்ள 11 பாஜக அல்லாத முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தவிர, 100 பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து CAA சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்த ஒரு கூட்டு மன்றத்தை அமைத்துள்ளன.

மோடி அரசு எவ்வாறு பதிலடி கொடுக்கிறது?

புதுடில்லியில், போலீசார் ஜாமியா பல்கலைக்கழக வளாகங்களுக்குள் பலவந்தமாக நுழைந்து கண்ணீர்ப்புகை  அடித்துள்ளனர். குடியுரிமை எதிர்ப்புச் சட்ட சுவரொட்டிகளை வைத்திருந்த மாணவர்களை அடித்து உதைத்துள்ளனர். இக்கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கும் இந்நேரத்தில் கூட புதுடில்லியில் உள்ள மற்றும் ஒரு கல்லூரி ஆன ஜவஹர்லால் நேரு கல்லூரியில் பாஜகவை சேர்ந்த குண்டர்கள் கல்லூரி வளாகத்துள் புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேல் கொடூர தாக்குதல்களை புரிந்து கொண்டு இருக்கின்றனர்.

உத்தரபிரதேசத்தில், காவல்துறையினர் முக்கியமாக ஏழை முஸ்லீம் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, CAA ஆர்ப்பாட்டங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு பணம் செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர். நேரடியாக இன்றி வெவ்வேறு வடிவங்களில் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போர்கூட  கைது செய்யப்படுகிறார்கள் அல்லது தடுத்து வைக்கப்படுகிறார்கள். வரலாற்றாசிரியர், ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சி.ஏ.ஏ எதிர்ப்பு கோஷங்களுடன் கோலங்களை (ரங்கோலி) வரைந்த மக்கள் தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் . ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்த  தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு மோடி அரசாங்கத்தால் விதிக்கப்பட்டது – இருப்பினும் இது எதிர்ப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டது. மக்கள் இன்னும் தெருக்களில் இருக்கிறார்கள். விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

இடதுசாரி அமைப்புகள் வகிக்க வேண்டிய முக்கிய பங்கு

உலகம் முழுவதும் நிகழ்ந்த வெகுஜன இயக்கங்களும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சிலி, ஹாங்காங்கில் நடந்த போராட்டங்கள் பலமான அரசுகள் எனச் சொல்லப்பட்ட அரசுகளை ஆட்டங்காண வைத்துள்ளது.   

இந்த ஆர்ப்பாட்டங்களில் மாணவர்களின் மற்றும் இளையோரின் பங்கேற்பு முக்கயமாக இருந்ததை அவதானிக்காலாம்.  இந்தியாவிலும் இத்தகைய தீவிர போராட்ட முறையை நாம் தற்போது பார்க்கிறோம். சுதந்திரத்திற்குப் பின் தேசிய அளவில் நிகழும் கிளர்ச்சி இது எனச் சொல்வது மிகை இல்லை. 

அனைத்து இடது அமைப்புகளும் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தொழிலாள வர்க்கம் ஒன்றிணைந்து போராட்டத்திற்கான ஒரு தளத்தை உருவாக்க இது மிகவும் முக்கியமான காலகட்டம்.

CAA, NPR, NRC திரும்பப் பெறுவது மட்டுமல்லாமல், அடிப்படை ஊதியம், எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கான சுதந்திரம், சுயநிர்ணய உரிமை, அகதிகள் உரிமைகள், இலவச கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற பிற உரிமைகளையும் கோர வேண்டும். 2020 ஜனவரி 8 ஆம் திகதி வரவிருக்கும் பொது வேலைநிறுத்தத்தின் மூலம் நாட்டை இயக்கி வருவது என்ன சக்தி என்பதை நிரூபித்துக் காட்ட முடியும். தொழிலாளர் பலத்தை இந்த பொது வேலை நிறுத்தம் எடுத்துக்காட்டும். பாராளுமன்ற வட்டத்துக்குள் முடங்கிக் கிடக்கும் சிறு தொகை அதிகார வர்க்கத்தின் கைகளில் இருந்து அதிகாரத்தை பறிக்கும்வல்லமை இந்த வர்க்கத்துக்கு உண்டு என்பதை இந்த வேலை நிறுத்தம் எடுத்துக் காட்ட முடியும். முழு நாட்டையும் முடக்கிவிடக்கூடிய இந்த வேலைநிறுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைநிறுத்தம் முதலாளித்துவ கொள்கைகளுக்கு தெளிவான மாற்றை வழங்கக்கூடிய ஒரு ஜனநாயக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட தளத்தை உருவாக்குவதற்கான தொடக்கமாக இருக்க வேண்டும். 

பாராளுமன்றம் உரிமைகளை வழங்குவதற்காக மக்கள் காத்திருக்க வேண்டியதில்லை. பணியிடம், பல்கலைக்கழகங்கள் போன்ற எல்லா இடங்களிலும் போராட்டக் கமிட்டிகள் கட்டப்பட வேண்டும். இந்தக் கமிட்டிகள் ஒன்றிணைந்து சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க ஒரு சக்திவாய்ந்த தளத்தை உருவாக்க முடியும். மோடி ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை  வீட்டுவசதி, சுகாதாரம், கல்வி, நில சீர்திருத்தம், மத உரிமைகள் போன்ற பல்வேறு சனநாயக கோரிக்கைகளுடன் இணைக்கும் சரியான திட்டமிடல் நோக்கி நாம் நகர வேண்டும். அதன் மூலம் நாம் எல்லாருக்கும் பலன் தரும் திட்ட மிட்ட பொருளாதார அடிப்படையில் இயங்கும் சமூகத்தை உருவாக்கும் நடவடிக்கை நோக்கி நாம் நகர முடியும். அத்தகைய சனநாயக சோசலிச சமூகத்தை உருவாக்கும் நோக்கில் போராட்டம் பலப்பட வேண்டும். தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே அத்தகைய சோசலிச மாற்றத்தை அடைய முடியும்.