இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய! தமிழ் பேசும் மக்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் எட்டாவது சனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டிருப்பது அனைத்து சிறுபான்மை மக்கள் மத்தியிலும் கடுமையான விரக்தியை உருவாக்கி இருக்கிறது. இந்த தற்காலிக பின்னடைவில் இருந்து விடுபட்டு நாம் சரியான அரசியல் திட்டமிடல் சார்ந்து நகர்வது மிக அவசியம்.

சிறுபான்மை

சிறுபான்மை என்ற சொல்லைப் பலர் விரும்புவதில்லை. இலக்க அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் இலங்கைக்குள் சிறுபான்மை என்பது யதார்த்தம். இதை ஏற்றுக் கொள்ளாது நாம் கற்பனையான ‘பெரும்பான்மை’ நிலைப்பாடில் இருந்து சிந்தித்து திட்டமிடல்களை செய்வது தவறு. தமிழ் மக்களின் தேசியக் கோரிக்கை ‘சிறுபான்மை’ சார் கோரிக்கை அல்ல. அதே சமயம் அவர்களைச் சிறைப்படுத்தி இருக்கும் இலங்கை அரசுக்குள் அவர்கள் இலக்கத்தில் சிறுபான்மைதான். குழந்தைப் பிள்ளைகளுக்கு விளங்கப் படுத்துவது போல் இந்த விபரத்தையும் எழுத வேண்டியிருப்பதற்கு காரணம் தமிழ் மக்கள் மத்தியில் உலாவரும் அரசியற் செயற்பாட்டாளர்களின் அரசியற் போதாமையே.

சிறுபான்மை மக்களின் வாக்குகள் பெறாது சனாதிபதியாக முடியாது என்ற போலி நம்பிக்கையை கடந்த சனாதிபதித் தேர்தல் முடிவுகள் உடைத்துக் காட்டி இருக்கின்றது. தான் தேர்தலில் வெல்ல சிங்கள வாக்குகள் மட்டுமே போதும் என முன்பு கோத்தபாய அறிவித்திருந்தார்.  2015 ம் ஆண்டு சனாதிபதித் தேர்தல் முடிவுகளை நிலையான ஒன்றாக நம்பிக் கொண்டிருத்த பலர் அப்படி ஒன்று நடக்கும் சாத்தியம் வருமாயின் அது சிறுபான்மை மக்கள் தேர்தலில் பங்குபற்றாது இருக்கும் பட்சத்தில் மட்டுமே நடக்கும் என வாதிட்டனர். தெற்காசிய வரலாறு காணாத அளவில் வாக்களிப்பார் வீதம் (என்பதுக்கும் அதிகம்) கூடியிருந்தமையால் நிச்சயமாக சஜித் தான் வெல்ல முடியும் என்று தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கும் வரை நம்பியிருந்தோர் பலர்.

தான் சொன்னபடி பெரும்பான்மை வாக்குகளை வைத்து வெற்றி அடைந்துவிட்டார் கோத்தபாய. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தபாய ராஜபக்ச பெற்ற 6,924,255 (52.25%) வாக்குகளில் பெரும்பானை சிங்கள மக்கள மத்தியில் இருந்து மட்டுமே பெறப்பட்டவை. தமிழ் பேசும் மக்கள் அவருக்கு வழங்கிய வாக்குகளைக் கழித்துப் பார்த்தால் கூட அவர் வெற்றி அடைந்திருப்பார். ஒரு தமிழ் பேசும் பிரஜை வாக்கு அளிக்காவிட்டால் கூட சிங்கள பெரும்பான்மை வாக்குகளை வைத்து ஒருவர் சனாதிபதி ஆக முடியும் என்பதை இந்தத் தேர்தல் காட்டி இருக்கிறது. இந்த அடிப்படையில் இலங்கையில் முதன் முதலாக சிங்கள இன அடிப்படையில் மட்டும் தெரிவு செய்யப்பட்டவர் சனாதிபதியாகி இருக்கிறார்.

இந்த யதார்த்தத்தின் சாத்தியத்தை மறுத்த பல தமிழ் தலைமைகள் தேர்தலில் தாமும் ஒரு காரணி ஏற்ற அடிப்படையில் குறைந்த தீமையை தெரிவு செய்யும் அரசியல் நிலைப்பாட்டையே தொடர்ந்து செய்து வந்திருகிறார்கள்.

குறை தீமையும் அதற்கு மருந்தும்

ஒவ்வொரு சனாதிபதித் தேர்தலின் போதும் ஏதோ ஒருவகையில் குறைந்த தீமை செய்யும் நபருக்கு வாக்கு வழங்க வேண்டும் என்பதே பல தமிழ் தலைமைகளின் நிலைப்பாடாக இருந்து வந்திருக்கிறது. அவர்கள் மட்டுமின்றி தங்களை ‘முற்போக்கு’ என பாசாங்கு செய்வார் – ஏன் தம்மை மாக்சியர் என சொல்லிக் கொள்வார் கூட -அந்த நிலைப்பாட்டைதான்  ‘யதார்த்தம்’ என்றும் ‘நடைமுறைச் சிந்தனை’ என்றும் பசப்பி வந்திருகின்றனர். வெற்றுத் தர்க்கத்துக்குள் தமது தலைகளைப் புதைத்துக் கொண்டவர்கள் கோத்தபாய என்ற பெரும் தீமைக்கு எதிராக சிறு தீமையான சஜித்துக்கு ஆதரவு கொடுப்பதை எல்லாவகையிலும் சரி என நம்பி இருந்தனர்.

தமிழ் பேசும் மக்களும் அவ்வாறே குறை தீமை அடிப்படையில் வாக்களித்திருப்பதை நாம் பார்க்கலாம். இது இலங்கையில் மட்டும் இன்றி உலகெங்கும் நடக்கும் ஒன்றுதான். மக்களுக்கு சரியான தெரிவு இல்லாமையாலும் – கிடைக்கும் தேர்வில் ஒன்றைக் கடுமையாக எதிர்க்க வேண்டி இருப்பதாலும் இந்தப் போக்கு உருவாகிறது.

ஆனால் குறை தீமையும் தீமையே.

ஒருபோதும் அது மக்களுக்கான தீர்வாக இருந்த வரலாறு இல்லை. இவ்வாறு குறை தீமைப் பக்கம் திரள்வது –தீர்வை நோக்கிய திசையை நோக்கி நகரும் ஒரு சிறு காரணியாக கூட இருக்க முடியாது என்பதைத்தான் கடந்த தேர்தல் நிருபித்து இருக்கிறது. இந்த நிலை மாற மக்களுக்கான சரியான தெரிவு கட்டி நிமிர்த்தப் பட வேண்டும்.

இதனால்தான் பல்லைக் கடித்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்துவமான பலத்தைக் கட்ட வேண்டும் என நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். நாம் குறை தீமைகள் பக்கம் இழுபடுவது கால நீரோட்டத்தில் எமது அரசியல் பலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து வருகிறதே தவிர ஒருபோதும் எம்மை முன் நோக்கித் தள்ளவில்லை.

இந்த இடத்தில் ரணில் காலத்தில் ஒரு ‘சனநாயக வெளி’ இருந்தது என்பதை மறுக்க முடியுமா? என ஒரு கேள்வி வரும். உண்மைதான். அதை எப்படிப் பறிபோக விட்டீர்கள் ? என நாம் திருப்பிக் கேட்போம். எமக்கு கிடைக்கும் எல்லா ‘வெளி’ களையும் எல்லாச் சீர்திருத்த சிறு துணுக்குகளையும் நாம் வரவேற்கிறோம். ஏற்றுக் கொள்வோம். ஆனால் அது எமது கட்டுப்பாட்டில் இல்லாதவரை அதன் நிரந்தரத் தன்மையை ஒருபோதும் நம்போம். நாளை ஒரு ‘இடைவெளி’ கிடைக்கும் என வெற்று நம்பிக்கை அரசியல் செய்வது தவறு. போலி நம்பிக்கைதான் தர்க்க முடிவுகளுக்கும் இலகுபடுத்தப்பட்ட ‘பொதுப்புத்தி’ தீர்மானங்களுக்கும் பலம் கொடுக்கிறது.

போலி நம்பிக்கை கொடுப்பது தமிழ் தலைமைகளுக்கு அவசியமாக இருப்பதற்கு காரணம் அவர்கள் அடையும் சலுகைகளாயும் இருப்பதை அவதானிக்க. அத்தகைய பொருளாதார லாபங்கள் இந்த தற்காலிக இடை வெளியில் பெரும்பான்மை மக்களுக்குக் கிடைப்பதில்லை.

எமக்கு வழங்கப்படும் அனைத்தும் பறிக்கப்படும். அதனால்தான் நாம் ஒடுக்கப்படுவோர் அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என பேசுகிறோம் – அதற்கான திட்டமிடல் சார்ந்து சிந்திக்க வேண்டும் என கோருகிறோம். அது நடக்கிற காரியமில்லை என நினைப்பவர்கள் வெறும் கதிரை அரசியலுக்குள் தமது கனவுகளை முடக்கி கொள்ளட்டும். அதை மறுப்போர் கனவை நனவாக்கும் திட்டமிடல் நோக்கிச் சிந்திக்க வேண்டும்.

திட்டமிடல்

‘சஜித்துக்கு ஆதரவு தர மறுப்பு என்பதை கோத்தபாயவுக்கு ஆதரவு’ என தேர்தல் சமயத்தில் ஒரு சிலர் வாதிட்டனர். ‘சஜித் மோசமான வலது சாரி என்பதும் மக்கள் விரோதி என்பதும் எமக்குத் தெரியும். இருப்பினும் கோத்தா வருவதை தடுப்போம். அதன்பிறகு சஜித்தை பார்த்துக் கொள்வோம். ஏனெனில் போராடும் உரிமை அங்கு இருக்கும்’ என வாதிட்டோரும் உண்டு. இந்த வகையில் பல்வேறு வகை தர்க்க நியாயங்கள் உலாவி மீண்டும் மீண்டும் குறை தீமையை ஆதரிக்கும் திட்டத்திலேயே வந்து குறுகி நின்றதை நாம் பார்க்கலாம். மக்களின் போராட்ட அரசியல் மற்றும் போராட்ட அமைப்பு பற்றிய முழுமையான தெளிவின்மையும் இந்த வாதங்களுக்குள் புதைந்து கிடக்கிறது.

எமது போராட்ட அரசியற் பலப்பட வேண்டுமானால் முதலில் நாம் எமது பலத்தைத் திரட்ட வேண்டும். அந்தப் பலம் இன்றி வலது சாரிய கட்சி ஒன்றை அண்டி நிற்பது – எமது பலத்தைத்தான் மேலும் உடைக்கும். அது மட்டுமின்றி நாம் எது குறை தீமை என்பதை முன் அனுமானம் செய்து கொள்வது தவறு. சந்திரிகா, பிரேமதாசா, மகிந்த என பலரது சனாதிபதி தேர்தலின் போதும் பலரும் விட்ட பிழை இத்தகைய முன் அனுமானத்தாலும் பலப் பட்டு இருக்கிறது. இந்தக் குறை தீமை என்ற போலி மறைப்பு எவ்வாறு பெரும் தீமையின் அரசியல் வெளியை பலப்படுத்துகிறது என்பதை பார்க்க வேண்டும். லட்டின் அமேரிக்கா முதற்கொண்டு ஐரோப்பிய நாடுகள் பலதில் எவ்வாறு தீவிர-கொடூர அரசியற் கட்சிகள் அதிகாரத்துக்கு வந்தன – அவர்கள் வர முதல் யார் அதிகாரத்தில் இருந்தார்கள் – அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பார்ப்பவர்களுக்கு இது புரியும். மக்கள் மோசமான இனவாதம் நோக்கித் தள்ளப்படுவதற்கு காரணங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் உரிமைகள் சார் சரியான கொள்கை நிலைப்பாடு இல்லாத ஒரு கட்சி ஒருபோதும் வளரும் இனவாதத்தைக் கட்டுப் படுத்த முடியாது. ஒரு பக்கம் சிங்கள தொழிலாளர் மற்றும் இளையோர் உரிமைகளை தாக்கிக் கொண்டு மறுப்பக்கம் அவர்கள் பொப்புலிச இனவாதம் நோக்கி நகரக் கூடாது என எதிர்பார்ப்பது நகைப்புக்கிடமானது.

லக்க ரீதியான பலம் பொருந்திய நிலை இருந்தாலும் கூட அத்தகைய எழுந்தமான முடிவுகளை வைத்து நாம் திட்டமிடல் செய்வது தவறு. ஆனால் இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு இருப்பது தெட்டத் தெளிவான பாதை. குறை தீமையை ஒன்று பட்டு தூக்கினாலும் எமது பலம் நிற்கப் போவதில்லை. கடந்த தேர்தல் தந்த வரலாற்றுப் பாடத்தில் இந்தப் புள்ளி முதன்மையானது. ஆக நாம் அந்த அடிப்படையில் முயல்வது தவறு. தமிழ் பேசும் மக்களின் பலத்தை ஒன்றிணைத்தல். அதோடு அனைத்து ஒடுக்கப்படும் மக்களின் பலத்தையும் ஒன்றிணைக்க பாடுபடுதல். இந்த நடைமுறையை நாம் முன் நிறுத்த வேண்டும். தேர்தல் காலம் மக்கள் அரசியல் பற்றி அதிகம் சிந்திக்கும் காலம். பலர் சிறு அளவிலாவது அரசியல் நடவடிக்கை செய்ய முன் வரும் காலம். இந்தத் தருணத்தில் தேர்தல் எமது வேலை இல்லை என ஒதுங்கி இருக்காது – புறக்கணிக்கும் கோரிக்கை வைக்காது நாம் எமது அரசியல் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் பலப்படுத்தும் செயற்பாட்டை செய்ய வேண்டும்.

இதற்கான ஆதரவு எவ்வளவு – கிடைக்கக் கூடிய வாக்கு எவ்வளவு போன்ற கேள்விகள் பற்றிப் போராட்ட சக்திகள் கவலை கொள்ள முடியாது. அரசியல் உரையாடலை எவ்வாறு நகர்த்துகிறோம் – மக்களின் அரசியல் பங்களிப்பை – அவர்தம் பிரஞ்சையை எவ்வாறு முன் நகர்த்துகிறோம் என்பதுதான் எமது அக்கறை. ஏனெனில் அதுதான் பலமான ஒரு சக்தியயை கட்டி நிமிர்த்தும்.

இவ்வகையில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு ஐக்கிய சோஷலிச கட்சியோடு இணைந்து செய்த வேலைகள் முக்கியமானவை. ஆரம்பத்தில் சிறிதளவாவது எமது அரசியல் – மற்றும் கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது மட்டுமே எமது முக்கிய நிலைப்பாடாக இருந்தது. ஆனால் பல்வேறு தளத்தில் – குறிப்பாக செயற்பாட்டாளர் மத்தியில் எமது அரசியல் நிலைப்பாட்டின் சரித்தன்மை எதிர்பார்த்ததையும் விட அதிகமாகப் பதியப் பட்டுள்ளமையை நாம் பார்த்தோம். தமிழ் பேசும் சமூகம் இன்னுமொரு திசையில் – சரியான போராட்ட திசையில் – நகர தயாராகத்தான் இருக்கிறது என்பதை இது மேலும் பதிந்துள்ளது.  இதற்கு அப்பாலான தெளிவான போராட்டம் சார் மாற்றுத் திட்டமிடல் யாரிடமும் இருக்கவில்லை – யாரும் முன் வைக்கவும் இல்லை. இது தமிழ் சொலிடாரிட்டிக்குப் பெருமையான விசயம் இல்லை. இது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் அரசியல் குறைபாட்டையும் சுட்டி நிற்கிறது. அரசியல் ரீதியாக வளர்ச்சி அடையும் சமூகத்தில் முன்னோக்குப் பற்றிய பல விவாதங்கள் நடக்கும். அதற்கான சூழல் வலுப்பட வேண்டும்.

 ஏன் ஜே. வி. பி என்ற அமைப்பு ஒரு மாற்றதாக தெரியவில்லை என சிலர் இங்கு கேட்கலாம். முற்போக்கு போர்வை போர்த்த இனவாதம் தோய்ந்த இன்னுமொரு கட்சியே ஜே. வி. பி. தேசிய இனப் பிரச்சினை சார்பாக அவர்கள் நிலைப்பாடு மோசமானது என்பதற்கு அப்பால் சமூகம் சார்ந்தும் அவர்கள் சரியான கொள்கைகளை முன் வைக்கவில்லை. தம்மிடம் இருக்கும் பலத்தைக் கூட சரியான முறையில் திரட்டிப் போராட்ட அரசியற் சக்தியாக நிற்கும் பலத்தை இழந்து நிற்கிறது ஜே. வி. பி. தமிழ் பேசும் மக்களின் பல்வேறு கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டு அதை சிங்கள ஒடுக்கப்படும் மக்களின் நலன்களோடு இணைக்கும் ஒரு நிலைப்பாட்டை ஜே. வி. பி முன் வைத்து இருக்குமானால் அதற்கு நாம் ஆதரவு வழங்கி இருக்க முடியும். அப்படி எதுவும் நடக்க வில்லை. ஒரு சில வெற்று பொருளாதார வாக்குறுதிகள் – மற்றும் ஒரு சில முற்போக்கு கொள்கைகள் ஆகியனவற்றை அவர்கள் முன் வைப்பதன் அடிப்படையில் அவர்களை ஆதரிப்பது ஆபத்தானது. சமூகத்தின் ஒரு பகுதியை வெட்டி ஒதுக்கி விட்டு முற்போக்கு முகமூடி போட்டுக் கொள்வது இறுதியில் வலது சாரிய அதிகாரத்த்துக்குப் பிரித்தாளும் பிடி கொடுப்பதாகவே இருக்கும். முன்பு லங்கா சம சமாஜக் கட்சி செய்த தவறை – அதற்கு ஆதரவு வழங்கியோர் செய்த தவறை நாம் இன்று செய்ய முடியாது.

தற்போதய தேவை என்ன

 இலங்கையில் அரசியல் அதிகாரம் சிறுபான்மை மக்களை தாக்குவதோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது. எல்லாப் பக்கத்தாலும் தாக்கப்படும் சமூகமாக இன்று மிக பலவீனமாகிக் கொண்டிருக்கும் சமூகம் முஸ்லிம் மக்களே. தீவிர வாதத்தை எதிர்க்கும் போர்வையில் செய்யப்படும் இந்த மக்கள் மேலான தாக்குதல் மேலும் சிங்கள பௌத்த இன வாதத்தை வலுப்படுத்தும். இதற்கு எதிராக நாம் ஒன்றிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இது பற்றிய தனி அறிக்கை ஒன்றை தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு வெளியிட இருப்பதால் இங்கு அது பற்றி முழுமையாகப் பேசவில்லை.

 தவிர தமிழ் பேசும் மக்கள் மற்றும் போராட முன்வரும் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் – இளையோர் ஆகியோருக்கு இடையிலான நெருக்கம் அதிகரிக்கப்பட வேண்டும். எழுச்சி கூட்டங்கள் அமைப்பைக் கட்டும் நோக்கோடு தொடர்ந்து ஒழுங்கமைக்கப் பட வேண்டும். நாம் சொல்லும் பொது அமைப்பு என்பது ஏற்கனவே இருக்கும் அமைப்புக்களின் தொகுப்பல்ல. மாறாக தொழிலாளர் மற்றும் ஒடுக்கப்படும் மக்கள் பங்களிக்கும் – சனநாயக முறையில் ஒழுங்கு படுத்தப்படும் ஒரு அமைப்பாக அது இருக்க வேண்டும். ஒரு பிடரல் அமைப்பாக –இந்த முன்னெடுப்பு பல்வேறு ஒடுக்கப்படும் மக்களுக்கு பாடுபடும் ஏனைய அமைப்புகளை ஒன்றிணைக்க முடியும். இதற்கான வேலைகளில் ஈடுபட முன்வாருங்கள். எம்மோடு இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.