டோரிகளைத் தொடர்ந்து எதிர்த்தாக வேண்டும். 

1,610 . Views .

தொழிலாளர் கட்சி முன் வைத்த தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த கொள்கைகளை உள்வாங்கி இருந்தது. இருப்பினும் அவர்களது பிரக்சிட் சார் தளும்பல் நிலைப்பாடு தேர்தலில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தலை வென்ற பழமைவாத கட்சிச் தலைவர் போரிஸ் ஜோன்சனும் அவர்சார் தீவிர வலதுசாரிகளும் தாம் விரும்பிய பிரக்சிட்டை மக்கள் மேல் திணிக்கும் அளவு அவர்களுக்கு பாராளுமன்ற பலம் கிடைத்துள்ளது. வாக்கு வழங்கிய பலரும் எதிர்பார்ப்பதுபோல் அவர்கள் தரும் பிரக்சிட் மக்கள் சார் பிரக்சிட்டாக இருக்காது. மாறாக பில்லியனர்கள் – மிகப் பெரும் செல்வந்தர்கள் சார் உடன்பாடாகவும் பிரித்தானிய முதலாளித்துவத்தின் நலன் சார்ந்ததாகவும் மட்டுமே இருக்கும்.

இது தவிர போரிஸ் தான் முன் வைத்த ஏனைய கொள்கைகளை ஐந்து வருடத்துக்குள் நிறைவேற்றுவது நடக்கப் போவதில்லை. சேவைகள் வெட்டப் படுவது – தனியார்மயப் படுத்தப் படுவது தொடரத்தான் போகிறது. எவ்வாறு முன்பு டோரிக் கட்சி தமது பாராளுமன்ற பெரும்பான்மையை வைத்து தீவிர வலது சாரிய கொள்கைகளை முன்னேடுத்தார்களோ அதே போல்தான் நிகழப் போகிறது.

இவற்றை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இதற்கான எதிர்ப்பு தொழிற் துறை சார்ந்து எழுந்துதான் ஆகும். பத்து மில்லியனுக்கும் அதிகமானோர் ஜெரேமி கோர்பின் கொள்கைகளுக்கு வாக்களித்துள்ளனர். டோரிக் கட்சியை கடுமையாக எதிர்த்த ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும், லிபரல் டெமோகிராட் கட்சிகள் வாக்குக்களையும் சேர்த்துப் பார்த்தால் டோரி கட்சியை எதிர்த்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது தெரிய வரும். 32 வீதத்துக்கும் மேற்பட்ட வாக்களிக்கத் தகுதியானோர் வாக்களிக்கவில்லை என்பதையும் அவதானிக்க வேண்டும். இங்கிலாந்திலும் மற்றும் பல நாடுகளிலும் இருக்கும் முதல் வருபவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை சிறந்த சனநாயக முறை அல்ல என்பதையும் அவதானிக்க வேண்டும். உதாரணமாக டி.யு.பி மற்றும் கிரீன் கட்சிகள் எடுத்த வாக்குகளையும் அவர்களின் பாராளுமன்ற பலத்தையும் பார்க்காலாம். இரண்டரை லட்சம் கூட வாக்குகளை பெறாத போதும் எட்டு வலது சாரிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பி உள்ளது டி. யு.பி. அதே சமயம் எட்டு லட்சத்துக்கும் அதிக வாக்குக்களைப் பெற்ற கிரீன் கட்சி ஒரு பாரளுமற்ற உறுப்பினரை மட்டும் அனுப்பி உள்ளது.

வட அயர்லாந்தில் தீவிரமாக டோரி கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த டி.யு.பி யின் வாக்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. வரலாற்றில் முதன் முறையாக அவர்கள் பெரும்பான்மை உடைக்கப் பட்டிருக்கிறது (பாராளுமன்ற பிரததிநித்துவம் என்ற அடிப்படையில்). அதே சமயம் பிரிந்து போகும் உரிமை வழங்கும் வாக்கெடுப்பைக் கோரி நிற்கும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி மிகப் பெருமளவில் வாக்குகளை அதிகரித்து 48 ஆசனங்களை வென்றுள்ளது. பிரிந்து போகும் உரிமைக்கான வாக்கெடுப்பை நடத்தும் படியும் – ப்ரக்சிட் உடன்பாட்டில் ஸ்கொட்லாந்து பங்கு பற்றுதல் பற்றியும் நிறைய அடிபாடுகளை வரும் காலங்களில் பார்க்க முடியும். ஸ்கொட்லாந்து மக்கள் பெருமளவில் வாக்களித்த போதும் வாக்கெடுப்பு நடத்த டோரி அரசு முன்வரப் போவதில்லை. இது மேலும் ஸ்கொட்டிஷ் தேசியத்தை அதிகரிக்கும் சாத்தியத்தை கூட்டி உள்ளது. தேசியக் கோரிக்கை முன் வைத்து பல பேரணிகள் அங்கு நடக்கும் வாய்ப்புள்ளது.

கோர்பினும் லேபர் கட்சியும்

கோர்பின் முன் வைத்த தேர்தல் அறிக்கைதான் அவரது தோல்விக்கு முக்கிய காரணம் என கோர்பின் தற்போது தாக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறார். ஆனால் அதைப்போல் பொய் இருக்க முடியாது. கோர்பின் தற்போது வென்ற வாக்குகள் முன்பு 2001 ல் டோனி பிளேயர் வென்ற வாக்குகளை விட அதிகம் – அவருக்கு பின் பிரவுன், மிலிபாண்ட் ஆகியோர் வென்ற வாக்குகளை விட அதிகம். எவ்வாறு ப்ரக்சிட் இம்முறை வாக்கு வழங்குதலில் முதன்மை விவகாரமாக இருந்தது என்பதை தேர்தல் முடிவுகளைப் பார்ப்பவர்கள் அறிவர். எங்கு ப்ரக்சிட் வாக்குகள் அதிகமாக இருந்ததோ அங்கெல்லாம் லேபர் கட்சி பின் தங்கி இருப்பதை பார்க்காலாம். லேபர் கட்சியும் ப்ரக்சிட்டுக்கு எதிரான கட்சியாக பார்க்கப் பட்டதே இதற்குக் காரணம். கோர்பினின் நடுநிலை நிலைப்பாடு எடுபடவில்லை.

லேபர் கட்சி என்பதை விட கோர்பினுக்கும் – கோர்பின் கொள்கைகளுக்கும் எல்லாப் பக்கம் இருந்தும் எதிர்ப்பு வந்ததை தேர்தலில் பார்த்ததோம். பி பி சி உட்பட ஏறத்தாள அனைத்து ஊடகங்களும் கோர்பினைக் கடுமையாக எதிர்த்தன – பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டன. கோர்பின் துவேசி – தீவிர வாதத்துக்கு ஆதரவு வழங்குபவர் – தேசிய பாதுக்காப்பு நலனுக்கு எதிரானவர் எனப் பல்வேறு கேவலமான பிரச்சாரங்களை பில்லியனர்கள் கட்டுப்படுத்தும் ஊடகங்கள் செய்து வந்தன. எல்லா பெரும் செல்வந்தர்களும் கோர்பினுக்கு எதிராக என்ன என்ன செய்ய முடியுமோ அது எல்லாம் செய்தனர்.

இது போதாது என லேபர் கட்சிக்குள் இருந்த வலது சாரிகளுக்கும் தேர்தலில் லேபர் வெல்வதை விட கோர்பினையும் அவரது கொள்கைகளையும் தாக்குவதே முதன்மையாக கருதி நடந்து வந்தனர். கோர்பின் தலைமையில் வெல்ல முடியாது எனக் கட்சியை விட்டு வெளியேறிய சுக்க உம்முனா போன்றவர்கள் இன்று தேர்தலில் படு தோல்வி அடைந்துள்ளார்கள். கோர்பினின் இடது சாரியக் கொள்கையால்தான் பின்னடைவு என்பதை அவர்களால் நிருபிக்க முடியவில்லை. தவிர தேர்தல் சமயத்தில் பதினைந்து முன்னாள் லேபர் பா. உறுப்பினர்கள் இணைத்து லேபர் கட்சிக்கு எதிராக கடுமையாக வேலை செய்தனர். கோர்பினுக்கு  வாக்கு வழங்க வேண்டாம் என அவர்கள் ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டும் – ஊடகங்களில் பேசியும் கடும் பிரச்சாரம் செய்தனர். கட்சிக்குள் இருந்த வலது சாரிகளும் அவரை தாக்க பின் நிற்கவில்லை. நடுநிலை என்ற நிலைப்பாட்டை ப்ரக்சிட் சார்பாக கட்சி முன் வைத்த பிறகும் அதைப் பொருட்படுத்தாது –தாம் எவ்வாறு கோர்பினை எதிர்க்கிறோம் என்றும் – எவ்வாறு தாம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவு எனவும் தமது தொகுதிகளில் பிரச்சாரம் செய்த வலது சாரிகள் பலர். அவர்கள் பிரக்சிட் வாக்காளர்களால் தோற்கடிக்கப் பட்டிருகிறார்கள். இது தெட்டத் தெளிவான விசயமாக இருந்தும் தாம் தான் தோல்விக்கு காரணம் என ஏற்றுக் கொள்ள மறுக்கும் இவர்கள் தற்போது தோல்விக்கு காரணமாக கோர்பினைத் தாக்கத் தொடங்கி உள்ளனர். இவர்களில் பலர் தமது தொகுதிப் பிரச்சாரம் எதிலும் கோர்பினைப் பற்றி பேசவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த வலது சாரிகள்தான் லேபர் கட்சி முழுமையான ப்ரக்சிட் எதிர்ப்பு எடுக்க வேண்டும் (லிபரல் டெமோகிராட் போல) என கோர்பினின் கழுத்தை நெருக்கியவர்கள். மக்கள் மேல் இருக்கும் அக்கறையால் இதை அவர்கள் செய்யவில்லை. கோர்பினை பழிவாங்குதல் – லேபர் கட்சி அதிகாரத்தை அவரிடம் இருந்து பறித்தல் என்பதற்கான ஒரு திட்டமிடலாகவே இதை அவர்கள் முன்னெடுத்தார்கள். இன்னுமொரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை நோக்கி கோர்பினின் கழுத்தை நெருக்கித் தள்ளியது இவர்களால்தான். கட்சியை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் – கட்சி உடைப்படக் கூடாது என்ற காரணங்களைக் காட்டி இவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தது கோர்பின் செய்த மிகப்பெரும் தவறு. தற்போது நடந்த தேர்தல் ஒருவகையில் ப்ரக்சிட்கான இரண்டாவது வாக்கெடுப்பு என்று கருதலாம். கோர்பின் முற்போக்கான – சரியான நிலைப்பாட்டை ப்ரக்சிட் சார்பாக எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எடுக்காததன் குறைபாடே இந்த தேர்தல் பின்னடைவிற்கு முக்கிய காரணம்.

முதலளித்துவ வர்க்கம் – அவர்களின் ஒட்டு மொத்த நிறுவனங்கள் – ஊடகம். வலது சாரிகளின் ஒருங்கினைந்த எதிர்ப்பு – கட்சிக்குள்ளும் காலை வாரும் நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில்தான் கோர்பின் இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. லிபரல் டெமோகிராட் போல் பிரக்சிட் நிலைப்பாட்டை கோர்பின் எடுத்திருந்தால் கட்சி இதை விட மோசமான பின்னடைவையே சந்தித்து இருக்கும் என்பது தெளிவு. லிபரல் டெமோகிராட் கட்சித் தலைவர் தனது ஆசனத்தையே தக்க வைத்ததுக் கொள்ள முடியாத நிலையில் – அக்கட்சி பெரும் பின்னடவை சந்தித்து இருப்பதை நாம் பார்க்கிறோம்.

வெள்ளைத் தொழிலாளார் துவேசத்தால் கோர்பின் தோற்றுப் போனார் எனவும் சிலர் பேசத் தொடங்கி உள்ளனர். ப்ரக்சிட்டுக்கு ஆதரவை வெறும் துவேசம் என குறுக்கிப் பிரச்சாரிக்கும் மத்திய தர வர்க்க உணர்வின் பின்னிருந்து அது எழுகிறது. உண்மை அதுவல்ல. இங்கிலாந்தில் வீழ்ச்சி அடைந்துள்ள வாழ்க்கைத் தரம் மற்றும் வாழும் சூழ்நிலை ஆகியனதான் அவர்களை இத்தகைய நிலைப்பாடு நோக்கி தள்ளுகிறது என்பதை நாம் அவதானிக்க வேண்டும். ப்ரக்சிட்டுக்கு ஆதரவு வழங்கும் வலது சாரிகள் மத்தியில் துவேசிகளும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அதுதான் முதன்மை காரணி அல்ல. வெள்ளைத் தொழிலாளர்களை துவேசிகளாக தட்டிக் கழித்து ஆறுதல் பெரும் இந்த பிரச்சாரிகள் இந்த தொழிலாளர்கள் வாழும் இடம் சென்று பார்த்து அவர்களோடு உரையாட வேண்டும். அப்பொழுது தெரியும் உண்மை நிலவரம்.

கோர்பினுக்கு எதிராக அவர் ஒரு துவேசி என முன்னெடுக்கப்பட்ட பொய் பிரச்சாரம் வேலை செய்யவில்லை என்பதையும் இங்கு குறிப்பிடுவது அவசியம். ஆசிய ஆபிரிக்க மக்கள் பெரும்பாலும் வாழும் இடங்கள் அனைத்திலும் லேபர் கட்சி எந்த பிரச்சினையும் இன்றி வெற்றி கொண்டுள்ளது. இந்து தேசிய – சாதிய பிரச்சாரத்தை தூண்டி விட்ட இந்து கவுன்சில் போன்றவர்களுக்கு சமூகத்தில் செல்வாக்கு இல்லை என நாம் முன்பு சுட்டிக் காட்டியது சரி என நிருபிக்கப் பட்டிருக்கிறது.

பிரக்சிட் வாக்கெடுப்பின் போது இங்கிலாந்து தொழிலாளர்களின் கோபத்தை –எதிர்ப்பையே நாம் முன்பு பார்த்தோம். மக்கள் மத்தியில் எத்தகைய நிலை உள்ளது என்பதை சோசலிசக் கட்சி போன்ற புரட்சிகர சோசலிச கட்சிகள் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்திருக்கின்றன. எந்த ஒரு புரட்சிகர அமைப்பும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவு வழங்க வில்லை. இருப்பினும் லேபர் கட்சிக்குள் இருந்த லிபரல்கள் பலர் தம்மை இடது சாரிகளாக அறிவித்துக் கொண்டு –தீவிர வலது சாரிய நிலைப்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். முமண்டம் என்ற அமைப்பில் இயங்கும் ( லேபர் கட்சிக்குள்) மத்திய தர வர்க்கத்தினரின் அடிப்படையில் கோர்பின் தொடர்ந்து இயங்க கூடாது. வலது சாரிகளை சமாளிக்கவும் அவர்களைத் திருப்திப் படுத்தவும் அவர்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்து வருகின்றனர். கோர்பின் கட்சித் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கடுமையான பிரச்சாரத்துக்கு இவர்களும் அடி பணிந்து விட தயாராக இருக்கின்றனர். கோர்பினை விலத்த முயல்வது – மீண்டும் வலது சாரிய தலைமைத்துவத்தை நிலை நாட்ட என்ற விபரம் முழுமையாக இவர்கள் தலைக்குள் இன்னும் புகவில்லை.

கட்சிக்குள்ளும் வெளியிலும் இந்த நிலைப்பாட்டைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். மில்லியன் கணக்கான தொழிலாளர் எதிர்ப்பு சடாரென தணிந்து போய் விடாது. ப்ரக்சிட்டுக்கு பிறகு அவர்கள் திருப்தியுடன் ஒதுங்கி நின்று விடப் போவதில்லை. அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிவர்த்தி செய்யும் எந்த நோக்கமும் போரிஸ்க்கு இல்லை. விரைவில் அக்கோபம் வெடிக்கும். அது பேரணி நிகழ்தல் – வேலை நிறுத்தம் – என பல்வேறு தளங்களில் வெளிப்பட வாய்ப்புண்டு. அதற்கான தாயார்படுத்தலை நாம் செய்ய வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் மாற்றம் கொள்ளாத- சமரசமற்ற தொழிலாளர் வெகுசன கட்சி ஒன்று உருவாக வேண்டும். அது லேபர் கட்சியாக இல்லாத விடத்து அத்தகைய புதிய கட்சியை உருவாக்க அனைத்து முற்போக்கு சக்திகளும்  – இடது சாரிகளும் – தொழிற்சங்க வாதிகளும் – சோசலிஸ்ட்டுகளும் முன் வர வேண்டும். முமண்டம் இந்தகைய முன்னெடுப்பை லேபர் கட்சிக்குள் முடக்குவதை நிறுத்தி விட்டு தொழிலாளர் அரசியல் பிரதிநிதித்துவம் பரந்து பட்ட முறையில் உருவாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். அதற்கான வேலைகளை ஆரம்பிப்போம்.