இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், மூன்று புதிய சட்டங்களும், உலகளாவிய சந்தை விலைகளின் ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளுக்கு இருந்த சில பாதுகாப்புகளில் கை வைத்துள்ளது. ஏற்கனவே பொருளாதாரத்தில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் மோசமடைந்து வரும் வேளாண் துறையை மேலும் அழிக்கும் கதவுகளை இச்சட்டங்கள் திறந்து விடுகின்றன.
இந்திய பாராளுமன்றம் இயற்றிய மூன்று வேளாண் சட்டங்கள் வருமாறு:
(1) நியமிக்கப்பட்ட ஏபிஎம்சிக்கு வெளியே தானியங்களை வாங்குவது மற்றும் விற்பது,
(2) நிறுவனங்களுடன் தங்கள் அறுவடைகளை விற்க ஒப்பந்தங்கள்,
(3) பதுக்கல் வழக்கு தொடரப்படாமல் தானியங்களை கையிருப்பு செய்தல்.
இச்சட்டங்களை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 500 க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. இப்போராட்டத்தில் இதுவரை 60 விவசாயிகள் உயிர் இழந்து இருப்பதாக பாரதீய கிசான் அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு இச்சட்டம் விவசாயிகளை முன்னேற்றும் என்றும் விவசாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சேர்க்கும் என வாக்குறுதி அளித்தும், கடும் குளிர் மற்றும் மழை, கொரோனா தொற்று மத்தியில் ட்ராக்டர்களை வீடுகளாக மாற்றி விவசாயிகள் இவ்வாறு போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? காரணம், இச்சட்டங்கள் ஏழை விவசாயிகளுக்கு ஆபத்தானதாகவும் பெரு நிறுவனங்களுக்கு சாதகமானதாகவும் இருக்கிறது. இதனால் பெரிய நிறுவனங்கள் விவசாயத் துறையை முற்றாக கைப்பற்றும் சாத்தியங்கள் உள்ளன.
பாஜக அரசு, விவசாய சமூகத்துடன் போதுமான அளவு ஆலோசிக்காமல் இந்த சட்டங்களை இயற்றியுள்ளது. இச்சட்டம் மே மாதம் கொரோனா லோக்டவுன் முழு வீச்சில் இருக்கும் போது அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊக்கத்தொகையில் ஒரு பகுதியாக 20 லட்சம் கோடி நிதி என்ற வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். மோடி அரசு நேரத்தை வீணாக்காமல் கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி தொழிலாளர், விவசாயிகள் மற்றும் பிற ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலைத் தொடங்கும் யுக்தியே இது.
மேலும், விவசாயிகளின் அதிருப்தி – விவசாய வருமானம் குறைந்து வருவதால் இன்னும் மோசமாகி உள்ளது. விவசாயத்தில் உற்பத்தித்திறன் தேக்கமடைகிறது என்பதில் எந்த இரகசியமும் இல்லை. அதற்கான முதலீடு இல்லாமையே அதற்கு காரணம். அதேபோல் உற்பத்தித் துறையில்(Manufacturing Sector) ல் போதுமான வேலைகளை உருவாக்க இந்திய அரசு தவறியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) விவசாயம் 17% பங்களிக்கிறது, ஆனால் 55% தொழிலாளர்கள் விவசாயத்துக்கு பயன்படுத்தப் படுகிறார்கள். கிராமப் புற விவசாயிகளுக்கு விவசாயத்தை தவிர்த்து ஏனைய தொழில்கள் இல்லாமையால் இச்சட்டம் அவர்களின் வாழ்வாதாரத்தில் ஓர் நிச்சயமின்மையை உருவாக்குவதாக உணர்கிறார்கள்.
ஏபிஎம்சி சட்டம்:
விவசாயிகளின் அறுவடை நியாயமான விலையை பெறும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) என்ற விலையை அரசு அளித்து இருந்தது. விவசாயிகள் வழங்கக்கூடிய எந்தவொரு தானியத்தையும் வாங்குவதற்காக மொத்த சந்தைகளில் (வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு, ஏபிஎம்சி என அழைக்கப்படுகிறது) வாங்கும் முகவர்களை (brokers) அரசாங்கம் நிலை நிறுத்தியிருந்தது. இதனால் குறைந்தளவு விவசாயிகளே பயனடைந்தார்கள். இருப்பினும் இந்த சிறு சலுகையும் இல்லாமல் போகும் நிலை உருவாகி உள்ளது.
புதிய சட்டம் முதன்முறையாக, ஏபிஎம்சி ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டிகளுக்கு வெளியே விவசாய விளைபொருட்களை வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. விவசாயிகளிடமிருந்து எவரும் பொருட்களை வாங்கக்கூடிய தனியார் மண்டி அமைக்கலாம். ஏபிஎம்சியில் வாங்குவோர் வைத்திருக்க வேண்டிய உரிமங்கள் இனித் தேவையில்லை. எந்தவொரு வரி அல்லது கட்டணத்தையும் செலுத்துவதில் இருந்து இந்த மண்டிகளுக்கு விலக்கு உண்டு.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை யாருக்கு விற்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தேர்வுகளை வழங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் வாதிடுகிறது. தங்களுக்கு கூடுதல் தேர்வையும், சிறந்த விலையையும் வழங்குவதற்குப் பதிலாக, அது ஒரு சில தனியார்களின் தயவில் அவர்களை விட்டுச்செல்லும் என்றும் அவர்கள் தாங்களாகவே விலையை ஒழுங்கமைத்து நிர்ணயிப்பார்கள் எனவும் விவசாயிகள் அஞ்சுகின்றனர். இது விவசாயிகளை ‘விலை நிர்ணயிப்பவர்கள்’, என்ற நிலையில் இருந்து, ‘நிர்ணயிக்கப்பட்ட விலையை பெற்றுக்கொள்பவர்கள்’ என்ற நிலைக்கு தள்ளும்.
ஒப்பந்த விவசாயம்:
ஒப்பந்த விவசாயத்தில் விதைப்பதற்கு முன் விவசாயிக்கும் வாங்குபவருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் செய்ய முடியும். அதன் கீழ் விவசாயி தனது விளைபொருட்களை வாங்குபவருக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் விற்க ஒப்பந்தம் செய்யப்படுகிறார். விதைப்பதற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் வாங்குபவருக்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமான நிச்சயமற்ற தன்மையை நீக்க இது உதவும் என்று அரசாங்கம் வாதிடுகிறது.
இந்தியாவில் ஒப்பந்த வேளாண்மை என்பது விவசாயிகளுக்கு எதிரான பல முறைகேடுகளை உள்ளடக்கியது. இதில் ஒருதலைப்பட்ச ஒப்பந்தங்கள், தாமதமான கட்டணங்கள், தரத்தை அடிப்படையாகக் கொண்டு தேவையற்ற நிராகரிப்புகள் என பல அடங்கும்.
விவசாயிகளுக்கு போதுமான நிவாரண வழிமுறைகள் சட்டத்தில் இல்லாததால், ஒப்பந்த விவசாயத்தால் பெரிய நிறுவனங்கள் தங்கள் நிலங்களைக் கையகப்படுத்த முடியும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.
1894 காலனித்துவ சட்டத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தி புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் 2013 ல் உருவாக்கப்பட்டது. இச்சட்டம் மூலம் அரசு நிலத்தின் மேல் அதிக அதிகாரங்களை தக்க வைத்துக் கொண்டு நிலத்தை கையகப்படுத்த வழி வகுக்குறது. மோடி அரசு 2014 ல் பதவி ஏற்றவுடன் இச்சட்டத்தில் பல மாற்றங்களைக் (நிலத்தின் மேல் மக்கள் கொண்டு இருந்த சில பாதுகாப்புகளையும் நீக்க) கொண்டு வர முயன்றது. ஆனால் விவசாய சமூகத்தில் (பாஜகவின் சொந்த விவசாயிகளின் பிரிவு கிசான் மோர்ச்சா உட்பட) எழுந்த எதிர்ப்பால் நிறைவேற்ற முடியாமல் போனது.
உணவு பதுக்கல் சட்டம்:
இது பெருவணிகத்திற்கு நன்மை பயக்கும் மற்றொரு சட்டமாகும். வணிகர்கள் மீது அரசாங்கம் விதித்திருந்த விவசாய பொருட்கள் மீதான இருப்பு வைத்திருக்க உதவும் வரம்புகளை நீக்க இது முயல்கிறது.
மூன்று புதிய சட்டங்களுடன், எம்.எஸ்.பி-யில் தற்போதைய கொள்முதல் முறைகளிலிருந்து விலகிச் செல்லவே அரசாங்கம் சமிக்ஞை செய்கிறது என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில் பலவிதமான போலி வாக்குறுதிகளுக்குப் பின் அரசாங்கத்தை விவசாயிகள் நம்புவதாகயில்லை. ஆகவே, ‘ஏபிஎம்சி பைபாஸ் சட்டம்’ வழியாக ஏபிஎம்சியை அகற்ற அனுமதிப்பதன் மூலம் எம்எஸ்பியில் கொள்முதல் செய்வதிலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் வழி வகுக்கிறது என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
எம்.எஸ்.பி உரிமைச் சட்டமாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
இதுபோன்ற ஒரு சட்டத்திற்கான கோரிக்கை 2018 ஆம் ஆண்டிலிருந்து, நாடு தழுவிய விவசாயிகள் போராட்டங்கள் மூலம் பரவியிருந்தன – கிசான் மும்பைக்கு நீண்ட அணிவகுப்பு, டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு எதிர்ப்பு அணிவகுப்பு ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.
2018 க்குப் பிறகு, விவசாயிகள் போராட்டங்கள் மழுங்கடிக்கப்பட்டு, இப்போது மீண்டும் உயிர்த்துள்ளன. எம்.எஸ்.பி-ஐ சட்டப்பூர்வ உரிமையாக்குவதற்கான கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டங்கள் முடிவடையாது என்று விவசாய தலைவர்கள் கூறியுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்தின் தீவிரத்தை கண்டு மத்திய அரசு, மண்டிகளை பதிவு செய்வதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் வகுக்கக் கூடிய வகையில் சட்டத்தைத் திருத்துவதற்கு திறந்திருப்பதாக டிசம்பர் 9ல் கூறியுது. தனியார் மண்டிகளுக்கு வரி விதிக்கும் முடிவை மாநில அரசுகளுக்கு விட்டுவிடலாம் என்றும் கூறியுள்ளது.
ஆனால் விவசாயிகள் முற்று முழுதாக வேளாண் சட்டங்களை நிராகரிக்கக் கோரி போராட்டத்தை தொடருகின்றனர்.
மின்சார திருத்த மசோதா, 2020:
பல மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தற்போது மானிய விலையில் மின்சாரம் பெறுகிறார்கள், அங்கு அவர்கள் உட்கொள்ளும் மொத்தக் கட்டணத்தில் ஒரு பகுதியை செலுத்துகிறார்கள். அந்தந்த மாநில அரசுகள் மீதமுள்ள தொகையை செலுத்துகின்றன. கட்டணம் பெரும்பாலும் தாமதமாகும்.
விவசாயிகளால் புறக்கணிக்கப்படும் புதிய மசோதாவின் முக்கிய அம்சம் என்னவென்றால், மானியம் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது இப்பொது மாற்றப்பட்டு இருப்பதே. புதிய மசோதாவின் படி, விவசாயிகள் மின்சாரத்திற்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். மாநில அரசு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மானியத் தொகையை மாற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதிலும் விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லை. மின்சார கட்டணம் அதிகரிக்கும் போது, அதன் சுமை விவசாயிகளிடமே தங்கி விடும் என சந்தேகிக்கிறார்கள்.
இந்திய வேளாண் துறையின் பின்னடைவின் காரணம்:
1960 மற்றும் 1980 க்கு இடையில் நடந்த ‘பசுமைப் புரட்சி’ எனச் சொல்லப்படும் நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் ஓரளவு வறுமை குறைய ஆரம்பித்தது எனக் கூற முடியும். நவீன மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட விவசாய தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதாலும், அரசாங்கத்தின் வலுவான கொள்கை ஆதரவோடு இந்தியா சிறிதளவு விவசாய வளர்ச்சி கண்டது.
ஆனால், இந்தியாவில் சீர்திருத்தங்களின் காலங்களில், நாட்டின் வறுமையை குறைக்க விவசாயம் முக்கிய பங்களிப்பு அளிக்கவில்லை. 1980 பிற்பட்ட காலங்களில் விவசாய வளர்ச்சி அதே மட்டத்தில் அல்லது அதற்கும் குறைவாகவே இருந்தது எனக் கூறலாம். 1980-1990 ஆண்டுகளில் 2.89 வீதமாக இருந்த விவசாய உள்நாட்டு உற்பத்தி 1991-2003 காலகட்டத்தில் 2.67 சதவீதமாக மட்டுமே வளர்ந்தது.
இந்தியாவில் சீர்திருத்த காலங்களில் ஏற்பட்ட சீர்திருத்தங்கள் சீனாவைப் போலல்லாமல் விவசாயம் சாரா துறைகளிலேயே தொடங்கியது. வேளாண்மை அல்லாத தொழில்கள் விரைவான பொருளாதார வளர்ச்சியை கண்டன, ஆனால் அதே நேரத்தில் இவ்வளர்ச்சி வறுமை விகிதத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, காரணம் இந்தியாவில் தொழிலாளர் சக்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாயத் துறையைச் சார்ந்தே இருந்தனர்.
விவசாய கட்டமைப்பை மிகவும் சமமாக மாற்றுவது எனச் சொல்லி அறிமுகப்படுத்தப்பட்ட நில சீர்திருத்தக் கொள்கைகள் அவ்வளவு வெற்றிகரமாக இல்லை. அத்தோடு அவை ஏராளமான நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை வேலையின்மை என்ற கோர தாக்குதலிற்கு ஆளாக்கியது.
இந்தியாவின் கிராமப்புற மின்மயமாக்கல் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. இது வேளாண் செயலாக்கம் (agro -processing) மற்றும் குளிர் சேமிப்புகளை (cold storage) கடுமையாக பாதித்தது. குறைந்த சேமிப்பு வசதிகள் மற்றும் திறனற்ற விநியோகச் சங்கிலிகளால் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் கிட்டத்தட்ட 10-15 சதவீதம் வீணாகின்றன.
மறுபுறம், உரங்கள், மின்சாரம், நீர் மற்றும் விலை ஆகியவற்றின் மீதான மானியங்கள் அதிகரித்து வருவதால், 2000 களில் இருந்து வேளாண்மையில் மெதுவான வளர்ச்சியையே இந்தியா காணமுடிகிறது.
அடுத்த கட்டம்:
இந்தியாவின் குறிப்பிடத்தக்க பிரிவுகள்/துறைகள் போராட்டத்தின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகின்றன. கார்ப்பரேட் முதலாளித்துவ ஆட்சியை சவால் செய்வதோடு மட்டுமல்லாமல், அதைத் தாண்டி செல்ல அவர்களுக்கு அதிகபட்ச ஒற்றுமையும் ஒரு திட்டமும் தேவை. வளர்ந்து வரும் அனைத்து போராட்ட அமைப்புகளும் ஒரு கூட்டணியை உருவாக்க முற்பட வேண்டும். மோடி ஆட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட தீங்கு விளைவிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் விவசாயிகளின் போராட்டத்தை தொழிலாளர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரிக்க வேண்டும். நவம்பர் 26 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்த 250 மில்லியன் தொழிலாளர்களுக்கு மோடி அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கும், கடுமையாக தொழிலாளர்களை குறி வைத்து இயற்றி இருக்கும் சட்டங்களை ரத்து செய்வதற்கான கோரிக்கையை வெல்வதற்கும் மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்களையும் தோற்கடிப்பதில் வெற்றியை அடைய தொழிலாள வர்க்கமும் ஏழைகளும் ஒன்றுபட்ட முன்னணியில் தோளோடு தோள் நிற்க வேண்டும்.
விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்க தொழிலாளர் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு நேரடியாக முறையிட வேண்டும். அத்தகைய கூட்டணி மூலம் போராட்டத்திற்கான ஒரு சக்திவாய்ந்த தளத்தை உருவாக்க முடியும். இந்த வகையான தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் போராட்டங்களை அணிதிரட்டுவதன் வழியாக மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். முதலாளித்துவ ஆதிக்கத்தை, – ஒரு உண்மையான ஜனநாயக சோசலிச அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலம் நிலத்தையும் அனைத்து வளங்களையும் பயன்படுத்துவதற்கான ஜனநாயக திட்டமிடலுடன், முடிவுக்கு கொண்டு வர முடியும்.