2020 ம் ஆண்டு மனித குல வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக கோவிட் -19 வைரஸ் மாற்றிவிட்டிருக்கிறது, மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள்,நடைமுறைகள், சமூகஈடாட்டம் எல்லாமே மாறிப்போயுள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில் அதிகளவு மக்களை காவு கொண்ட இரண்டு உலகப்போர்களைவிடவும் மனித சமுதாயத்தை பலவிதங்களில் முடக்கியுள்ளது.
கோவிட்-19 க்கு எதிரான வக்சின் மனித பாவனைக்கு வந்தபோதும் 2021 ஆம் ஆண்டும் கடினமான தொடக்கமாகவே உலகிற்கு இருக்கிறது. கடந்த வருட இறுதியில் தென் இங்கிலாந்து பகுதியில் அறியப்பட்ட கோவிட் 19 (SARS-CoV-2 )இன் திரிபடைந்த( mutated ) புதிய வகை வைரஸ் பிரித்தானியாவிற்கு மட்டுமின்றி, முழு உலகிற்குமே அச்சுறுத்தலாக உள்ளது.
வைரசில் ஏற்படும் திரிபடைதல் அல்லது மாறுதல் என்பது எப்போதும் நடந்துகொண்டிருப்பதுதான்.
அந்த மாறுதல்களினால் மனிதர்களுக்கு நோய் தொற்று ஏற்படும்போதுதான் அது மிக கவனத்திற்குரியாதாக இருக்கிறது. முதன் முதலில் 2019 ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட
SARS-CoV-2 வைரஸ் கடந்த ஒரு வருட காலத்தில் தனது கட்டமைப்பில் பல மாறுதல்களை கொண்டே வந்திருக்கிறது.அம்மாறுதல்கள் அல்லது திரிபுகள் நோயின் தீவிரத்திலோ அல்லது தொற்றின் வீச்சிலோ குறிப்பிட்ட மாறுதல்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் கடந்த வருடம் செப்ரம்பர் இறுதியில் தென் இங்கிலாந்து பகுதியில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரசானது (New varient ) தனது மேற்பரப்பு புரதத்தில்( Spike protein) பதினேழு தொடக்கம் இருபத்திரண்டு வரையான மாறுதல்களை கொண்டுள்ளது. இம்மாறுதல்களினால் முன்னைய வைரசை விட சுவாசப்பாதையில் உள்ள மனித கலங்களை இலகுவாக சென்றடையக் கூடியதாக இருக்கிறது. அதனாலேயே ஆரம்பத்திலிருந்த வைரசின் தொற்றினை விட 70 வீதம் வேகமானை பரவலை இப்புதிய வகை வைரஸ் ஏற்படுத்துகிறது. அதிகளவானோர் தொற்றிக்குள்ளாகும்போது அதிகளவு வைரசின் பெருக்கம் ஏற்பட்டு மேலும் பெருமளவானோரை தொற்றுகின்றது.அண்மைய ஆய்வின் முடிவுகளின்படி இவ் வைரசானது நோய்பரவலை அதிகமாக்குகிறதே தவிர நோய் தொற்று ஏற்பட்ட பின் நோயின் தீவிரமானது முன்னயதை ஒத்ததாகவே காணப்படுவது இப்போதைக்கு ஒரு ஆறுதலான விடயமாக இருந்தாலும் அதிகளவு தொற்றுக்கள் ஏற்படும்போது மருத்துவமனைக்கு செல்பவர்களின் எண்னிக்கையும் அதிகரிக்கும்,குறிப்பாக அவசர சிகிச்சை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகும். இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது பிரித்தானியாவின் சுகாதர சேவையானது(NHS ) முனனர் என்றுமில்லாதவாறான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
வைரஸ் தன்னை ஏன் எப்போதும் மாற்றிக்கொண்டே வருகிறது?
இதற்கு டார்வினின் இயற்கையின் தேர்வு விதியை (Natural of selection ) தான் துணைக்கழைக்க வேண்டும். எந்த உயிரினமும் தனக்கு நெருக்கடி ஏற்படும் போது தன்னை சூழலிற்கு ஏற்றவாறு தக்க வைத்துக்கொள்ள தன்னில் மாறுதல்களை ஏற்படுத்த முயலும். உயிரியலின் அடிப்படையில் வைரசை ஒரு உயிரினமாக கருத முடியாவிட்டாலும் மற்ற எந்த நுண்ணங்கியைவிடவும் மிக விரைவாக உரு மாறுதல்களை அடையகூடியது. குறிப்பாக ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு வகையான உயிரினத்திற்கு மிக இலகுவாக தொற்றி தன்னை வெற்றிகரமாகா தக்க வைத்துகொள்ளக்கூடியது.
spanish flu, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் போன்றன மிருகங்களிடமிருந்து மனிதனிற்கு தொற்றியவை, கொரொனா வைரசும் அப்படியானதே. ஆரம்பத்திலிருந்த கோவிட் 19 (SARS-CoV-2 ) வைரசை பின் தள்ளி இப்புதிய வகை வைரசானது மிக பெருமளவு தொற்றினை ஏற்படுத்தி தன்னை ஆட்சியுள்ளதாக( Dominant ) மாற்றியுள்ளது.
தற்போது பாவனையில் உள்ள வக்சின் இந்த புதிய வகை வைரசிற்கு எதிராக தொழிற்படுமா?
பிரித்தானியாவிலும், வேறு பல நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட Pfizer/Bio N teach , Moderna வக்சின் ஆனது mRNA வக்சின்(Subunit vaccine). mRNA என்பது ஒரு வகையான மரபணு கூறு( Genetic material). இது உயிரினங்களில் புரதத்தொகுப்பிற்குரிய தகவல்களை கொண்டுள்ளது. கோவிட்-19 இன் மேற்பரப்பு புரதத்திகுரிய mRNA ஐ ஆய்வுகூடத்தில் தொகுத்தே( Synthesized) இவ் வக்சின் தயாரிக்கபடுகிறது.
இதுவரை பாவனையிலிருக்கும் எல்லா வக்சினை விடவும் அதிஉச்ச உயிரியல் தொழிநூட்பத்துடன் உருவாக்கப்பட்ட வக்சின் இதுவாகும். இந்த வக்சின் தற்போது உருவாகியுள்ள புதிய வகை வைரசிற்கெதிராக தொழிற்படகூடியதாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இதை விட இன்னும் கூடுதலாக மாறுதல்களை கொண்ட வைரஸ் எதிர்காலத்தில் உருவானாலும் அம்மாறுதல்களுக்கு ஏற்ற வகையில் இந்த mRNA வக்சினில் ஒரு சில மாற்றங்களை( Tweak) செய்து புதிய வகை வைரசிற்கு எதிராக இவ்வக்சினை தொழிற்பட வைக்கமுடியும். இந்த தன்மையாலேயே இவ் mRNA வக்சின் மனிதகுல வரலாற்றில் விஞ்ஞானத்தின் முக்கிய ஒரு பாய்ச்சலாக கொள்ளமுடியும்.
ஒரு பெரும் தொற்றை(Pandemic ) இல்லாதொழிப்பதற்கு வக்சின் மட்டும் போதுமானதா? , மனித வரலாற்றில் நிகழ்ந்த பெரும்தொற்றுக்களிலிருந்து மனிதன் எவ்வாறு வெளியேறி தன்னை நிலைப்படுத்திக்கொண்டான் என்பதை இன்னுமொரு கட்டுரையில் பார்ப்போம்.