
பகுதி – ஓன்று.
ஓரிடத்தில் அழுது புலம்புவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஓன்று கூடுகிறார்கள்.
உலகின் எந்த இடத்தில் இது நடந்தாலும் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். இப்படி ஒரு நிகழ்வு சகஜமில்லை.
மக்கள் அழுவதற்கு கூடும் பொழுது – அதுவும் ஆயிரக்கணக்கில் இணைந்து ஒப்பாரி வைக்க, கூடும் பொழுது ஏன் எது எனச் சிந்திக்க வேண்டாம்?
-கடந்த பதினாறு வருடங்களாக இது நடக்கிறது. அழுவதற்குகூட அனுமதி கிடைக்காத தருணங்களிலும் அவர்கள் அழுதார்கள். பூமியில் கையால் அடித்து புலம்புகிறார்கள். பூக்களை எடுத்து எறிந்து தமது நெஞ்சைப் பொத்திக் கொள்கிறார்கள்.
இந்த பூமியில்தான் உறவுகள் அழிந்தன.
அவர்களைச் சுற்றி வெறுமைதான் படர்ந்து கிடக்கிறது.
ஒரு உயிரும் இல்லை – பிணமும் இல்லை.
ஒரு சொட்டு ரத்தம் – ஒரு எலும்புத் துண்டு – தசை – சுட்ட அடையாளம் – குண்டு விழுந்த பள்ளம் – சிதறிய குடியிருப்புகள் என எதுவேமே கிடையாது.
வெறும் மணல். வெற்றிடம். அடையாளம் இல்லாத வெற்றிடம். வருடா வருடம் மே 18ல் ஓலங்கள் மட்டும் அங்கு நிரம்பி அடங்கிவிடுகின்றன.
தாய்க்குத் தெரியும். தனது குடும்பத்தில் அனைவரையும் இழந்த சிறுவனுக்கும் தெரியும். அந்த வெறுமை வெளியில் மட்டுமில்லை ஒவ்வொரு உணர்விலும் கூட. எல்லாவற்றையும் துடைத்து எறிந்து விட்டார்கள். வெற்றிடத்தில் அழிவின் அடையாளங்கள் நிலைக்காது என நினைத்து விட்டார்கள் மடையர்கள்.
அவர்கள் வெறுமை அறியாதவர்கள். இங்கோ உறவுகள் அதை அணிந்து திரிகின்றன.
2
அடுத்த நாள் இன்னுமொரு இடத்தில் அதி நவீன ஆயுதங்களுடன் அதிகாரிகள் கூடுகிறார்கள்.
கொலை செய்தவர்கள் கௌரவிக்கப் படுகிறார்கள். அப்பாவி முகத்துடன் அழுதபடி நின்ற சிறுவர்களின் நெஞ்சில் சுட்டவர்களுக்கு பதக்கமும் பதவியும் வழங்கப் படுகிறது. விமானங்கள் பூத் தூவ இரனுவத்தில் இறந்தவர்கள் கொண்டாடப் படுகிறார்கள். அவர்களுக்கு சிறப்பு பட்டங்களும் குடும்பங்களுக்கு விசேட உதவிகளும் வழங்கப் படுகின்றன. அவர்கள் அடையாளங்கள் காட்சிக்கு வைக்கப் படுகின்றன. கனரக வாகனங்களும் ஆயதங்களும் பவனி வருகின்றன. ஒற்றை நாடுதான் ஒருவரும் தொட ஏலாது போன்ற சவால்விடும் தொனியில் சனாதிபதி உரை ஆற்றுகிறார். முப்படைத் தளபதிகள் கூடி நிற்க வெற்றி முழக்கம் நடக்கிறது. சிங்க கொடி ஓங்கி பறக்கிறது.
இதற்கு முதல்நாள்- மே 18
தோற்றவர்கள் இந்த நாளை படுகொலை நாள் என்கிறார்கள்.
மே 15 நாக்பா நாள்.
பாலஸ்தீனியர்கள் பேரழிவு நாள் என்கிறார்கள்.
பிரதம மந்திரி தலைமையில் எல்லோரும் ஒன்றுகூடி அந்த நாளை நினைவு கொண்டனர்.
பாலஸ்தீனப் படுகொலையைக் கண்டித்துக் கொண்டனர். உண்மையாகவா ? உங்களில் பலருக்கு படுகொலை தெரியலாம் – படுகொலைக்குள்ளாவது எப்படித் தெரியும்?
பாலஸ்தீனம் ஐயாயிரத்து நானூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அது கடின பயணம்.
ஒரு முன்னூறு கிலோமீட்டர் சென்றால் ஒரு வெற்றிடம் வரும். அந்த வெற்றிடக் கடற் கரையோரம் வீசும் காற்றில் உப்போடு உப்பாக கலந்திருக்கு கொஞ்சம் படுகொலை. சென்று பார்த்திருக்கலாமே.
நாக்பா நடந்து 77 ஆண்டுகள் கழிந்து விட்டன.
காசாவில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படுவதை இந்த ஆண்டு தீர்வாக வழங்குகிறது இஸ்ரேல். இரத்த ஆறு ஓடுவது நிற்கவில்லை.
எப்படி நிற்கும் – அது இன்னும் இஸ்ரேல் அல்ல – இன்னொரு நாடு.
3
இது இருவேறு பிரபஞ்சத்தில் வெவ்வேறு காலத்தில் நிகழ்ந்தவை அல்ல. முன்னூறு கிலோமீட்டர் இடைவெளியில் – இருபத்து நாலு மணிநேர இடைவெளியில் நடந்தவை. மொழியில் இருந்து அனைத்தும் இரு வேறு. அவர்கள் சொல்கிறார்கள் இது ஒற்றை நாட்டில் என்று – ஒன்றுபட்ட நாட்டில் என்று. அது எப்படி சாத்தியம். ஒற்றையை ஒருபக்கமும் காணக் கிடைக்கவில்லை.
இது இரு நாடுகள்.
இல்லை என்றால் எம்மால் புரிந்து கொள்ள முடியாது.
இது இரு வேறு நாடுகள்.
அதுவே இதன் புரிதலை சாத்தியப்படுத்துகிறது.
ஒருமுறை கிழக்கில் பேச வந்த மாற்று நாட்டு முன்னாள் சனாதிபதி ராஜபக்ச சொன்னது நினைவில் வருகிறது. அவர் கூட்டம் பெரிதாக இருக்க வேண்டும் என காசு கொடுத்து பல பஸ்ஸில் மற்ற நாட்டில் இருந்து ஆட்களும் வந்திருந்தார்கள். அங்கிருத்த பெரும்பான்மையருக்கு சிங்களம் மட்டுமே தெரிந்திருந்தது, இருந்தாலும் சனாதிபதி தமிழில் பேச முடிவு செய்தார். அவருக்குப் பின்னால் நின்ற தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கு சிறு நடுக்கம் ஏற்பட்டாலும் தடுக்க முடியுமா என்ன. சனாதிபதி பேசினார்.
‘நாங்கள் எல்லோரும் … (சிறு மௌனம்) ஒற்றுமையாக இருக்க வேண்டாம்.’
பின்னால் நின்ற மொழி பெயர்ப்பாளர் விழுந்தடித்து பாய்ந்தார்.
‘சார் டும் சார். டும்… டும்’
சற்று சினத்துடன் தலையத் திருப்பிக் கொண்ட சனாதிபதி அதற்குப் பதில் சொன்னார்.
‘டம் எனவா டும் எனவா’
(டம்மா இருந்தா என்ன டும்மா இருந்தா என்ன)
ஆம் உண்மைதான் எதுவாக இருந்தால்தான் என்ன ?
அவரது அயல் நாட்டினரிடம் எந்த அதிகாரமும் இருக்கவில்லை. அப்பாவியாக நிற்றவர்களிடம் எந்த ஆயுதங்களும் இருக்கவில்லை. அவர்களைப் போட்டுத் தள்ளுவதற்கு கனரக ஆயுதங்களுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. அந்த கூட்டத்தில் குழுமி இருந்தவர்களுக்கு அந்த மொழி தெரியவில்லை. டாம் சொன்னதில் குறை பட்டுக்கொள்ள யாரும் இல்லை. கேட்க துனிந்தவர்கள் இன்று இல்லை.
ஆம் அது வேறு நாடு. கேட்பாரற்றுக் கிடக்கிறது.