தமிழக அரசியல் சூழல் – இவர்களின் சித்தாந்தம் என்ன?

Photo Credit: M. Periasamy

2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தின் முக்கியமான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மக்கள் நலக் கூட்டணி என்கிற பெயரில் விஜயகாந்த்தை தூக்கிப்பிடித்தது. எவ்வித கொள்கை பிடிமானமும் இல்லாத சொல்லப்போனால், கொள்கைகளேயற்ற வெறும் சினிமா அடையாள பிம்பம் விஜயகாந்த். அப்படிப்பட்ட அவரை, ஆழமாக கொள்கையும் 100 ஆண்டு கால அரசியல் வரலாறும் கொண்ட ஒரு இயக்கம், எந்த முகாந்திரத்தில் தங்களின் முதல்வர் வேட்பாளராக தூக்கிப்பிடித்தது ஏன் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

இது இன்று நேற்றின் வரலாறு அல்ல. 30 ஆண்டுகளுக்கு முன்னர் எம்ஜிஆர் எனும் பிம்பத்தை, அவருக்கு கொள்கைகள் எழுதிக்கொடுத்து தூக்கிப்பிடித்தது இவர்கள்தான். அதனால், இவர்கள் என்ன பயனடைந்தார்கள்? 20 ஆண்டுகளுக்கு பின் விஜய்காந்த் என்ற காற்றடைத்த பிம்பம் தான் இவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

தமிழகத்தில் செல்வாக்கு மிகு திராவிட கட்சிகளின் தலைவர்கள், – ஆளுமைகளாக கருதப்பட்ட இருவர் – உயிரிழப்பிற்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விட்டது . இந்த இடத்தை நிரப்ப பெரும் போட்டி நிலவியது/நிலவுகிறது.

இப்போட்டியில் ஈடுபட்டுள்ளவர்கள் பல விதம் என்றாலும், இவர்கள் கையாளும் முறைகள் வேறுபட்டவை ஆயினும், இவர்களின் சித்தாந்தத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ட்வீட்டர் பக்கத்தில் குழப்பும் விதத்தில் வார்த்தைகளை கோர்த்து அதனை பதிவு செய்து தன்னை தானே அதி மேதாவி என்று நினைத்துகொள்வோரும், யாருக்குமே பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அரசியல் பேசுவோரும், படம் வெளிவரும்போது அதனை சந்தைப்படுத்துவதற்காக அரசியல் பேசுவோரும் அதில் அடங்குவர்.

திரைப்படங்களில் நடித்ததால் கிடைத்த செல்வாக்கை பயன்படுத்தி அடுத்த எம்ஜிஆர் ஆகி விடலாம் என்று மனக்கோட்டை கட்டிய இவர்களின் சித்தாந்தத்தில் மாற்றம் இல்லை, சொல்லப்போனால் இவர்களுக்கென்று தனி சித்தாந்தமே இல்லை.

ரஜினியின் ஆன்மீக அரசியல்

கடந்த 25 ஆண்டு காலமாக நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா எனும் கேள்வி இருந்த நிலையில், 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் கட்சி துவங்குவேன் என்று அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.

தற்போது உடல்நிலையை காரணம்காட்டி கட்சி துவங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

அறிவிப்பை வெளியிடும்போது “தமிழகத்தில் நேர்மையான, நியாயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம்” என்று அவர் குறிப்பிட்டார். ஜாதி, மதம் ஆகியவை ஆன்மீகத்தின் மிக முக்கியமான அம்சங்கள். இவை இல்லாத ஆன்மிகம் என்பது தண்ணீர் இல்லாது வாழும் மீன்கள் என்று கூறுவதற்கு சமமாகும்.

எனவே, மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜகவின் பி அணியாக தான் ரஜினியை பார்க்க முடியும். நேரடியாக, பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ரஜினிகாந்த் மூலமாக மதவெறி அரசியலை திணிக்க முயல்கிறது. மதவெறி அரசியல் மீது தமிழக மக்களுக்கு பெரிய ஈடுபாடு இல்லாத காரணத்தால் தான் “எனக்கு காவி சாயம் பூசாதீர்கள்” என்று ஒரு விளக்கத்தை முன்னதாக ரஜினி கொடுத்திருந்தார். ஆனால் பாஜகவை சேர்ந்த அர்ஜுனமூர்த்தியை இணைத்துக்கொண்டபோதே ரஜினியின் சாயம் வெளுத்துப்போனது.

கமலின் மய்யம்

மய்யம் என்ற பெயரில் இருந்தே அவர் எடுக்கும் நிலைப்பாடு என்ன என்பதை பற்றிய தெளிவு நமக்கு ஏற்படும். தனி நபரோ அல்லது இயக்கமோ எதுவாக இருந்தாலும் ஒரு சார்பு நிலை இருக்கும். ஒருவர் இடதுசாரியாகவோ அல்லது வலதுசாரியாகவோ கொள்கை சார்பு கொள்வர். ஒருபோதும் எவர் ஒருவராலும் மய்யமாக நிரந்தரமாக இருக்க முடியாது.

அவ்வாறு நான் மய்யமாக (neutral) இருக்கிறேன் என்று கூறினால் அது சரியானதை புறக்கணித்துவிட்டு தவறுக்கு துணை நிற்பதற்கு சமம். அது ஒரு வலதுசாரியாக இருப்பதற்கு சமம். அவ்வப்போது பினராயி விஜயன் போன்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்திப்பதின் மூலமும், அவ்வப்போது முடி திருத்தும் தொழிலாளிகள், நெசவு தொழிலாளிகளை சந்திப்பதின் ஊடாகவும் தன்னை ஒரு இடதுசாரியாக காட்டிக்கொள்ள கமல் ஹாசன் முற்படுகிறார். ஆனால் அவரது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி அவரது முகத்திரை கிழிந்து தொங்குவது தான் நடந்துகொண்டு இருக்கிறது.

நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு நமது கல்வி தரம் சரியாக இருந்திருக்க வேண்டும் என்று பதில் அளிப்பது, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற விடயங்கள் இதற்கு சிறு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றது.

தமிழகத்தில் பாஜக

தமிழகத்தில் பாஜகவுக்கு பலம் இல்லை. கரணம் அடித்தாலும் அவர்களால் ஆட்சியில் அமர முடியாது’ என்று கூறுவது சரி தான். மோடி, அமித் ஷா போன்ற அக்கட்சியின் தலைவர்கள் தமிழகம் வரும்போது #gobackmodi #gobackamitshah போன்ற ஹாஷ்டேகுகள் ட்ரெண்ட் ஆவதும் சரி தான். ஆனால் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பாஜகவினர் தொடர்ந்து செயல்படுகிறார்கள் என்பதையும் அதில் ஓரளவு வெற்றியும் அடைந்து வருகிறார்கள் என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டாலும் வேல் யாத்திரையை நடத்தியது, அங்கங்கே ஷாகாக்களை நடத்துவது, பெரும் அளவில் விநாயகர் ஊர்வலங்களை நடத்துவது, மத கலவரங்களை உண்டாக்குவது போன்ற பலவற்றை பாஜக நடத்தி காண்பிக்கிறது.

தமிழகம் மட்டும் இல்லாமல் பல இடங்களில் அடிமட்டத்தில் இருந்து பாஜக பணியாற்றி வருகிறது. ‘இது வாக்கு எந்திரத்திற்கு கிடைத்த வெற்றி’ என்று சொல்லிவிட்டு நம்மால் கடந்து சென்றுவிட முடியாது. அடிப்படையில் இந்துத்துவ சித்தாந்தத்தை உறுதி செய்வது, வெற்றி பெற்றதில் இருந்து முதலாளிகளின் நலனுக்காக உழைப்பது போன்றவற்றில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கொரோனா தொற்றும் முதலாளிகளின் நலனும்

கொரோனா பேரிடர் காலகட்டத்தில், அதாவது 2020-ம் ஆண்டு உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.2 % சரிந்து உள்ளது. இந்த சரிவு 2007-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடும்போது இரு மடங்கு அதிகமாகும்.

இந்த சூழலிலும் இந்திய அரசு உட்பட அணைத்து உலக அரசுகளும் முதலாளிகளின் நலனில் மட்டுமே ஆர்வம் காட்டியது. கொரோனா தொற்றை காரணம் காட்டிப் பெரும் நிறுவனங்கள் தொழிலாளிகளின் வேலையை பறித்துக்கொண்டு இருந்த சமயத்தில், – பலரது சம்பளத்தை குறைத்து வந்த சமயத்தில்தான் – இந்திய அரசு தொழிலாள சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவந்ததது.

பல ஆண்டுகளாக போராடி வென்ற தொழிலாளர் நல சட்டங்களை சீர்குலைக்கும் வகையில் இது அமைந்திருந்தது. அதன்படி, 12 மணி நேர வேலை நேரம், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு 60 நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற வேண்டும், முதலாளிகள் விருப்பத்திற்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் ஒருவரை பணியில் அமர்த்தவோ பணியில் இருந்து நீக்கவோ முடியும்.

கொரோனா சிகிச்சை வழங்க நாள் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் வசூலித்ததும், புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு எந்த ஏற்பாடும் செய்யாததும் ஒரே காலகட்டத்தில் நடைபெற்றது. இதன் வழியாக முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அம்பலம் ஆனது.

ஜனநாயக ரீதியாக விவாதிக்கப்படாமல் மூன்று வேளாண் சட்டங்களும் இயற்றப்பட்டது. இது குறைந்தபடச்ச ஆதரவு விலையை அழித்ததுடன் நேரடி கார்ப்பரேட் தலையீட்டிற்கும் வழிவகை செய்தது. இதற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. பாஜகவுக்கு எதிர்ப்பே வராது என்று நினைத்த காலம் மாறி எல்லா விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள்.

இந்திய இடதுசாரிகள்

இந்த போராட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டுகளின் விவசாய சங்கங்கள் இணைந்துள்ளது. பொது வேலை நிறுத்தத்தின்போது புதிய வேளாண் சட்டங்களுக்கும் தொழிலார் சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பாக கோரிக்கைகளை வைத்தாலும் இவை அனைத்தும் வெற்றுச் சம்பிரதாயங்கள் போல்தான் நடைபெறுகின்றது.

கட்டுரையின் முற்பகுதியில் சொன்னது போல் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது மட்டுமே போதுமானது எனும் நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் உண்மையான இடதுசாரிய பணி என்பது தொழிலாளர் சங்கங்களை வலுப்படுத்தி சோசியலிச சமூகத்தை உருவாகும் பணிகளை முன்னெடுப்பதாகும். அதுவே லாபத்திற்காக செயல்படும் அமைப்பில் இருந்து தொழிலாளர்களுக்கு விடுதலை அளிக்கும்.