அமெரிக்க காங்கிரஸ் கட்டிடத்தை வலது சாரிகள் முற்றுகை இட்டது ஏன் ?

Donald Trump supporters outside Congress building in the US | @JavedNLaghari
641 . Views .

அமெரிக்க தேர்தல் முடிந்து சனாதிபதி மாறும் தருணத்தில் அங்கு நடந்தது என்ன என்பது பற்றி பல்வேறு உரையாடல்கள் இன்றும் தொடர்கிறது. இது பற்றிய சில அவதானங்களை ஏற்படுத்துவது அவசியம். 

காங்கிரஸ் கட்டிடத்தின் மேலான தாக்குதல் அமெரிக்க அரச அதிகாரத்தின் உச்ச மட்டத்தில் இருந்து தூண்டுவிக்கப் பட்டது என்பது உண்மையே. வழக்கமாக தேர்தல் முடிவுகான சான்றிதழ் வழங்கும் நாள் அன்று  காங்கிரஸ் கட்டிடத்தை நோக்கி அணி திரளுங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு அறைகூவல் விடுத்தார் ட்ரம்ப். அதைத் தொடர்ந்து தீவிர வலதுசாரிகள் காங்கிரஸ் கட்டிடத்தை நோக்கி அணி திரண்டார்கள். குறிப்பாக அதி தீவிர வலதுசாரி குழுவான Qanon ஐ சேர்ந்தவர்களும் ட்ரம்பின் பொப்பிலிச கருத்துக்களால் கவரப்பட்டவர்களும்  ஏதோ ஒரு ‘புரட்சியை’ நடத்த போகின்றோம் என்ற பெருமிதத்துடன்  கெப்பிட்டல் ஹில்லை நோக்கி அணிதிரன்டார்கள். 

இவ்வாறான நிகழ்வுகள் வழமையாக லத்தீன் அமெரிக்கா, ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் தான் நிகழ்ந்திருக்கின்றது. நவ காலனித்துவ நாடுகளில் நடக்கும் அத்தகைய வலது சாரிய அத்துமீறிய அதிகார பறிப்புகள் பலவற்றுக்குப் பின் அமெரிக்க அரசும் இருந்திருக்கிறது. அந்த விபரங்கள் இரகசியமா பாதுகாக்கப் பட்டு பல தசாப்த்தத்தின் பின்தான் வெளிவருவதுண்டு. அத்தகைய நிகழ்வுகளை பாவித்து உலகுக்கு ஜனநாயக பாடம் எடுப்பதைத்தான் அமெரிக்க அரசு வழமையாகச் செய்து வந்ததை அறிவோம்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டிருக்கிறது. ஈரானில் இருந்து இலங்கை வரை அமெரிக்காவுக்கு சனநாயக பாடம் எடுக்கும் நிலை உருவாகி  இருப்பதைப் பார்க்கிறோம். காங்கிரஸ் கட்டடம் சூறையாடப்பட்டதை  சீனாவும் ரஷ்யாவும்  தமது பிரச்சாரத்துக்கு பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். இவ்வாறான கலோபரங்களுக்கு மத்தியில்தான் ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றார். ட்ரம்ப் ஏற்கனவே கூறியதைப் போல இந்தப் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை. 152 வருடங்களில் நடப்பு ஜனாதிபதியின் பதவியேற்ப்பு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி புறக்கணித்த நிகழ்வு முதல் முறையாக நடைபெற்றிருக்கின்றது. இனிவரும் காலங்களில் அடிக்கடி இது நிகழவும் கூடும்.

ஜனவரி 6ஆம் திகதி நிகழ்வுகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்துவிட்டது. இதில் நடைபெற்ற பல விடயங்கள் ஒரு போரை ஒத்ததாகவே இருந்தது. ட்ரம்பின் நிர்வாகத்தில் மக்கள் வலது இடது என்று துருவ மயப்பட்டு இருக்கின்றார்கள். ஆயினும் பெரும்பான்மையான முதலாளித்துவ வகுப்பினர் ட்ரம்பின் எதேச்சதிகார  போக்குக்கு எதிராக பைடனை  ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்பதும் தெரிகிறது.  இதற்கு முன்பு ட்ரம்பை பதவியில் இருந்து விலக்குவதற்கு இரண்டு முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது அறிவோம். பின்னர் அவர் தேர்தலில் நிற்க முடியாமல் செய்ய முயற்சிக்கப்பட்டது. நிதி மோசடி தொடர்பான வழக்குகள் போடப்பட்டன. சமூக வலைத்தளங்களில் அவர் தடை செய்யப்பட்டார். கெப்பிட்டல் ஹில் தாக்குதலை தொடர்ந்து ட்ரம்ப் தனது குரலை எங்குமே எழுப்ப முடியாத முறையில் அனைத்து வசதிகளும் இழுத்து மூடப்பட்டது. முன்பு அவரை ஆதரித்த வலது சாரிய ஊடகங்கள் கூட அவருக்கு எதிரான நிலைப்பாடில் இயங்கின. இவ்வாறு பல தாக்குதல்கள் ட்ரம்பின் மீது நடத்தப்பட்டது.

ஒரு அமெரிக்க சனாதிபதிக்கும் இத்தகைய ‘கவனிப்பு’ முன்பு நடந்ததில்லை.  ட்ரம்ப் மிக மோசமானவர் என்பதாலோ – அல்லது மக்கள் நலன் கருதியோ இது நிகழவில்லை. அமெரிக்க முதலாளித்துவம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் இக்கால கட்டத்தில் தமது இருத்தலைக் காப்பாற்ற – தமது நற்பெயரை காத்துக் கொள்வதும் அவர்களுக்கு அவசியமாக இறக்கிறது. 

தம்மை காத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டால் முதலாளித்துவ வர்க்கம் எந்த எல்லை வரை போகும் என்பதற்கு ட்ரம்ப்பை அவர்கள் தூக்கி எறிந்த முறை ஒரு சாட்சி. தமது வர்க்கம் சார் ட்ரம்ப்புக்கே இந்த கதி என்றால் அவர்களின் வர்க்க எதிரிகளான இடதுசாரிகள் அதிகாரத்துக்கு வர இருப்பின் என்ன செய்வார்கள் என கற்பனை செய்து பாருங்கள். அவர்களை ஒடுக்குவதற்கு எந்த கொடுமைகளையும் செய்வதற்கு இந்த அதிகாரவர்க்கம்  தயங்கப்போவது இல்லை. இடது சாரிய எதிர்ப்பை கட்டுபவர்கள் இவர்களின் தாக்குதல்களுக்கு  எதிரான தடுப்பு அரண்களை சரியாக நிறுவும் திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டும்.

இந்த தேர்தல் மோசடியாக நடைபெற்றது என்பதை நிறுவுவதற்காக ட்ரம்பும்  அவரது ஆதரவாளர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். ட்ரம்ப்  சார்பாக தேர்தல் மோசடி வழக்குகள் 62 பல்வேறு பிராந்திய நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருந்தது. உண்மையில் அமெரிக்காவின் தேர்தல் மோசடிக்கு நீண்ட வரலாறு உண்டு. அதனாலும்தான் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்தமையை அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றார்கள். அதனால்தான்  ட்ரம்ப் ஆதரவு வன்முறை ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்கா முழுவதும் நடைபெற்றது. 

ட்ரம்ப்பின் பின்னால் இருக்கும் ஆதரவாளர்களை  பலர் கடுமையாக திட்டுவதை நாம் பார்க்கலாம். அவர்களை  கும்பல்கள், குண்டர்கள், மண்டை பிழைத்தவர்கள் என்கின்றார்கள். அல்லது அவர்களை பாசிஸ்டுகள் இனவாதிகள் என்கிறார்கள். இது உண்மையில் பாரதூரமான குற்றச்சாட்டு. ட்ரம்பின் ஆதரவாளர்களில் பலர் முன்னாள் அமெரிக்க நிர்வாகங்களின் கொள்கைகளால் வெறுப்படைந்து இருப்பவர்கள், மாற்று அரசியலை தேடுபவர்கள் அவர்களுள் பாசிசக் கூறுகளை கொண்டவர்களும் இருக்கிறார்கள். இந்த குழுக்கள் எதிர்க்கப்பட வேண்டியவர்கள்தான். ஒட்டுமொத்த ஆதரவாளர்களையும்  பாசிஸ்டுகள் இனவாதிகள் என்பது எமது எதிரிகள் யார் என்பது பற்றிய  எமது தெளிவின்மையின்  வெளிப்பாடே  ஆகும்.  தமது பொருளாதார நலன்களை முதன்மைப்படுத்தி கோரிக்கை வைக்கும் வெள்ளை அமெரிக்கர் எமது எதிரிகள் அல்ல. மாறாக அத்தகைய கொடிய பெருளாதார நிலைமைக்கு மக்களை தள்ளிய முதலாளித்துவ அமைப்பும் – அமெரிக்க அதிகார வர்க்க்கமுமே எமது எதிரிகள். தொழிலாளர் மேல் கடுமையான தாக்குதலை செய்த கிளிண்டன் குடும்பம் மேல் பல்வேறு வரிய இடங்களில் கடும் வெறுப்பு நிலவி வருவதைப் பார்க்கிறோம். இதனாலும்தான் ட்ரம்ப் போன்றவர்கள் அதிகாரத்தை பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது என்பதை நாம் மறந்துவிட முடியாது. 

இந்த தெளிவின்றி மேம்போக்காக திட்டுவது தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபடுதலை  குலைத்து விடும். முதலாளித்துவத்தின் லாபம் குவிக்கும் நோக்கமும் அவர்களுக்கு ஆதரவான அரச அதிகாரமும் தொழிலாளர்களுக்கு சொல்லனா நெருக்கடிகளை கொடுக்கின்றது. அவ்வாறான தொழிலாளர்களை பொப்புலிச  கருத்துக்களைக் கூறி சுலபமாக ஈர்த்துவிட முடிகின்றது. அதனால்தான் உலகம் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் பாசிசக் கூறுகளை கொண்ட அமைப்புகள் அதிகாரத்துக்கு வருவது அதிகரித்து வருகின்றது.  ஆயினும் இந்த அமைப்புகள் 1920 மற்றும் 1930 ம் ஆண்டு பகுதியில் ஐரோப்பாவில் இருந்த வெகுஜன  பாசிச அமைப்புகள் அல்ல. அக்கால பாசிச கட்சிகள்  எதிர்ப்புக்கு உரிய  அனைத்து ஜனநாயக வெளிகளின் முதுகெலும்பையும் உடைத்து மக்களை அடக்கு முறைக்குள் வைத்திருந்தன. அந்த வரலாற்றின் கார்பன் கொப்பி அல்ல தற்போது நடப்பது. 

தற்போது இருக்கும் அனைத்து அதிதீவிர வலதுசாரிகளையும்   பாசிஸ்டுக்கள் என்று கூறுவது தவறு.  பாசிசத்தின் கொடுங்கோன்மையை  குறைத்து பதிப்பிடுகின்றோம் என்பதே அதன் பொருள். ஒரு சமூக மாற்றத்துக்கு  மக்களை அணிதிரட்டும் பொழுது எமக்கு எதிரிகள் பற்றிய சரியான மதிப்பீடு வேண்டும். அப்போதுதான் சரியான தந்திரோபாயங்களையும் திட்டமிடல்களையும் முன்வைக்க முடியும்.

தேர்தலில் தோல்வி அடைந்த உடன் ட்ரம்ப் அதிகாரத்தை தக்க வைக்க ‘சதி’ நடவடிக்கைகளை எடுக்கத் தயாரானார். அது ராணுவ மூலம், பின் நீதிமன்றங்களின் மூலம் நிறைவேற்றப்படுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவை கை கூடாததை தொடர்ந்து காங்கிரஸ் கட்டடத்தை முற்றுகையிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தனது நிர்வாகத்தில் இருந்த பாதுகாப்புச் செயலாளர், சைபர் பாதுகாப்பு உயர் அதிகாரி மற்றும் பாதுகாப்பு இயக்குனர்கள் ஆகியோரை நீக்கினார். 

அதன் பின் கடந்த ஜனவரி 6ஆம் திகதி நிகழ்வுகள் நடந்தேறியது. கெப்பிட்டல் ஹில்லை  நோக்கி அணி திரண்ட அதி தீவிர வலதுசாரிகள் பலர் துப்பாக்கிகளுடன் காங்கிரஸ் கட்டிடத்திற்குள் புகுந்து சூறையாடினார்கள். இந்த ஆயுதம் தாங்கியவர்களின் அணிவகுப்புக்கு பின்னால் ஏதேனும் முறையான திட்டமிடல்கள் இருந்ததா என்பது தெரியவில்லை. இதே போன்ற ஒரு சம்பவம்  1981 ஆம் ஆண்டு  ஸ்பெயினில் நடைபெற்றது. லெப்ரினன் கேனல் (Lt Col) அன்டோனியோ தேஜேரோ (Antonio tejero) பாராளுமன்றதில் ஜனாதிபதியை தேர்வு செய்யும் வாக்கெடுப்புக்காக பாராளுமன்றத்தில் கூடிய போது  200 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பணயக் கைதியாக 18 மணிநேரம் பிடித்து வைத்திருந்தார். அவ்வாறான திட்டம் எதுவும் இருந்ததா என்பது தெரியவில்லை. இருப்பினும் அதிகார வர்க்கத்தின் பெரும்பான்மையானவர்கள் ட்ரம்பை  அகற்றவேண்டும் என்று முடிவுடன் இருந்தமையால் இந்த கிளர்ச்சி கைகூடவில்லை.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க மக்கள் இருதுருவங்களாக பிரிந்து நிற்கின்றார்கள் என்பதை தெளிவாக்கி இருக்கின்றது. இந்த பிரிவு ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் ஒன்றாகி விடும் என்பது சந்தேகமே. விழ்ச்சி அடைந்து வரும் அமெரிக்க பொருளாதாரம், கொரோனா நெருக்கடி, அதனால் எழுந்திருக்கும் சமூக நெருக்கடி என்பன மாநிலங்களுக்கான கூடுதல் அதிகாரங்களை கோருதல் அல்லது தேசிய கோரிக்கையை வலுப்படுத்துதலை நோக்கி  நகரக்கூடும். மக்கள் துருவ மயப் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் இவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யவோ அல்லது ட்ரம்பிசத்துக்கு  ஆதரவாக இருக்கும் மக்களின் பெரும் பகுதியை தமது பக்கம் திருப்புவதற்கோ பைடன்  நிர்வாகத்தால் முடியுமா என்பது சந்தேகமே. 

கொரோனா பெருந்தொற்று தனியார் மயப்படுத்தப்பட்ட மருத்துவ துறையின் போதாமைகளை அப்பட்டமாக வெளிக்காட்டிய பின்பும் மருத்துவத் துறையை  முழுமையாக  தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்ற பைடனின் நிலைப்பாடு அவர் எந்த அளவுக்கு மக்கள் சார் நலனில் அக்கறையுடன் இருப்பார் என்பதை எமக்கு உணர்த்துகின்றது. நடந்து முடிந்த  நிகழ்வுகள் அமெரிக்க உள்நாட்டுப் போர் நிகழ்வதற்குரிய ஆரம்ப நிகழ்வுகள் போல் தெரிகின்றது. 

ட்ரம்பின் நெருக்கடி தொடரக்கூடும் என்று அமெரிக்க முதலாளிகள் அஞ்சுகின்றார்கள். டிரம்ப் செய்தது ‘கிளர்ச்சி’ என வர்ணித்து தமக்கு எதிரான அனைத்து கிளர்ச்சிகளையும் வன்முறை கொண்டு முடக்கும் தயாரிப்பை அவர்கள் செய்து வருகிறார்கள். நிறவாதத்துக்கு எதிராக அமெரிக்காவில் தொடங்கி உலகெங்கும் நடந்த கிளர்ச்சிகளை அடக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அதிகார வர்க்கம் அடக்கும் சட்டங்களை அமுலுக்கு கொண்டுவர தமக்கு கிடைத்த சந்தர்பங்களை எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகின்றன. பிரித்தானியாவிலும் சிலைகள் உடைப்புக்கு எதிராக புதிய கடும் சட்டம் அமுலுக்கு வந்திருப்பதை அவதானிக்க. ஆப்கானிஸ்தான் – ஈராக் முதலான இடங்களில் இருக்கும் இராணுவத்தை விட அதிக இராணுவம் அமெரிக்க மண்ணில் – வெள்ளை மாளிகையை சுற்றி நிறுத்தப் பட்டதை அறிவோம். இதுவரை உலக வளங்களை கொள்ளை அடிக்க பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு துறை அமரிக்க மக்களுக்கு எதிராகவும் இலகுவில் திருப்ப பட்டு விடும் என்பதை மக்கள் உணரத் தொடங்கி இருக்கிரார்கள். 

பைடன் உள்நாட்டு பயங்கரவாத தடை சட்டத்தைக் கொண்டுவர இருக்கின்றார். இந்த சட்டம்  ட்ரம்பின்  ஆதரவு தளங்களுக்கு எதிராக – அல்லது தீவிர வலது சாரிகளுக்கு எதிராக என்ற பாவனையில் கொண்டுவரப்படுகிறது. இலங்கை உட்பட எல்லா நாடுகளிலும் இத்தகைய போலிப் ‘பாதுகாப்பு’ பிரச்சாரம் செய்தே இத்தகைய கொடும் சட்டங்களை அமுலுக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால் இச்சட்டங்களால் பாதிக்கப் படுவது தீவிர வலது சாரிகள் அல்ல – மாறாக அனைத்து போராட்ட சக்திகளும் – அரசை எதிர்ப்போரும்தான் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள். 

ஜோ பைடன் மிகவும் நெருக்கடியான நிலையில் ஆட்சிக்கு வந்து இருக்கின்றார். முன்னர் ஆட்சியில் இருந்த -கோப்ரேட்டை ஆதரவு ஜனநாயகக் கட்சி ஆட்சியாளர்களான – பில் கிளின்டன் மற்றும் ஒபாமா ஆட்சிக்காலம் போல பைடன் ஆட்சி இருக்கப் போவதில்லை. பைனான்ஸியல் டைம்ஸ் “பைடனின் ஆட்சி ஒபாமாவின் பொருளாதார கொள்கை நீட்சியாக இல்லாமல் 1930இல் ஏற்பட்டு பெரும் நெருக்கடியில் இருந்து மீள ரூஸ்வெல்ட் பயன்படுத்திய முறையை முன்னெடுக்க வேண்டும்” என்று கூறுகின்றது. இது விழுந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என சில முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் நம்புகிறார்கள். 

1933 தொடக்கம் 36 வரை பிராங்கிளின் ரூஸ்வெல்ட் நவ ஒப்பந்தம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்த டீல் மூன்று முக்கிய R ( Relief, Recovery, Reform ) பிரிவுகளைக் கொண்டிருந்தது. இதில் ‘உட்கட்டமைப்புக்களுக்காக’ என பாரிய முதலீடு செய்யப்பட்டது. இது போன்ற நடவடிக்கைகள் மட்டும் அச்சமயம் எதிர்கொண்ட நெருக்கடியில் இருந்து முதலாளித்துவத்தை மீட்கவில்லை. 

அதன் பின்னர் ஏற்பட்ட இரண்டாம் உலகப்போர், அதன்பின் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலையான தன்மை என்பன முதலாளித்துவ பொருளாதாரத்தை மறுசுழற்சி அடைய வைத்தது. 

இப்பொழுது பைடன் கதைக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ரில்லியன் டொலர்களை உருவாக்குதல் என்பதும், அவர் வழங்கும் சலுகைகள், சீர்திருத்தங்கள் என்பனவும் ஒரு சாதக சூழலை ஏற்படுத்தக் கூடும். ஆனால் அவை இந்த நெருக்கடிக்கு ஒரு நிரந்தர தீர்வைத் தராது. அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும் கொரோனா நெருக்கடியும்,  இரண்டாம் உலகப் போரின் முடிவை தொடர்ந்து அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கமும் முற்றிலும் வேறுபட்டது. பழைய ‘ரூஸ்வெல்ட்டின் முறை’ இந்த நிலையில் பொருளாதாரத்தை மறுபடியும் மறுசுழற்சியடைய வைக்க போதுமானதாக இருக்காது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியும் சீனாவின் வலுவூட்டப்பட்ட உலக உறவுகளும் உலக சமன்பாடுகளை மாற்றிவிட்டன. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு இருக்கும் வர்த்தக உடன்படிக்கை அமெரிக்க உறவுகளின் அடிப்படையையே மாற்றியிருக்கிறது. பைடனின் அணுகுமுறை ட்ரம்பின்  அணுகுமுறை போன்று இருக்காது என்பது உறுதி. மீண்டும் நட்பு நாட்டு அணிகளை உருவாக்குவதற்கும் அதற்குரிய சதி திட்டங்களை நடமுறைப்படுத்துவதற்கும் பைடன் அரசு முயலும். இதனால் பிராந்தியங்களிடையில் சிறிய போர்கள் நிகழும் சாத்தியமும் உண்டு. 

இன்று அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் முற்போக்கு இடதுசாரிகளின்  முக்கிய வேலை திட்டம் ஒரு சுயாதீன ஜனரஞ்சக தொழிலாளர் கட்சி ஒன்றை உருவாக்குவதாகும். சோஷலிஸ்டுக்கள், பசுமை செயற்பாட்டாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்க வேண்டும். சரியான அரசியல் திட்டமிடலின் அடிப்படையில் ஒரு மாற்று பலத்தினை கட்டி நிமிர்த்தாமல் அமெரிக்கர்கள் மீது அமெரிக்க ஆளும் வர்கம்  நடத்த இருக்கும் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது. 

தமிழ் பேசும் மக்களின் ஆதரவு மற்றும் நடவடிக்கை என்பது போராடும் மில்லியன் கணக்கான அமெரிக்க மக்களுடன் ஒன்றினைவதாக இருக்க வேண்டும். அவர்களை முடக்கும் சக்திகள் பக்கம் பிரிந்து நின்று பிச்சை எடுப்பதால் நாம் எந்த உரிமைகளையும் வென்றுவிட முடியாது.