என்றும் இல்லாதபடி இந்த முள்ளிவாய்க்கால் நினைவை மேலும் உறுதியாக நாம் முன்னெடுப்போம்

உடைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்க பட்டததை கண்டித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டடிருக்கும் கண்டன அறிக்கை

 

இலங்கை அரசு இன்று (13/05/2021) ஒரு தெளிவான செய்தியை தமிழ் பேசும் மக்களுக்கு அனுப்பி உள்ளது. 

இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைத்து எறியப்பட்டுள்ளது. அரச படைகள்தான் இதை செய்திருகிறார்கள் என்று உறுதியாகக் கூறக் கூடிய முறையில்தான் இது நிகழ்ந்திருக்கிறது. 

வரலாற்றை மாற்றி எழுதுவதே அரசின் நோக்கம். யுத்தக் குற்ற விசரனை – நல்லிணக்கம் உருவாக்குதல் – தமிழ் பேசும் மக்கள் உரிமைகளைப் பெறுதல் ஆகியன ஒருபோதும் நடக்காது என்ற உறுதியான செய்தியை ராஜபக்ச அரசு இந்நடவடிக்கைமூலம் வெளிப்படுத்தி உள்ளது. 

கொலை செய்யப்பட்டவர்கள் நினவு கூறுவதைக் கூட மறுக்கும் இந்த அரசு தாம் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் எதிரி என்பதைத் திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. இதுவும் ஒருவகை யுத்தப் பிரகடனம்தான். 

பாலஸ்தீன மக்களை இஸ்ரேலிய அரசு கொன்று குவிக்கத் தொடங்கிய அதே சமயம் தாமும் அத்தகைய நோக்கில் இருந்து வேறு பட்டவர்கள் இல்லை என்பதை இலங்கை அரசு வெளிச்சப் படுத்தி உள்ளது. 

இது வெறும் தூபி உடைப்பு அல்ல. நினைவுச் சின்ன அழிப்பு மட்டுமல்ல-  நினைவுகளின் அழிப்பும். இதன் பின் இருக்கும் படுகொலை அரசியல் மிகப் பயங்கரமானது. கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது. இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கும் அதே தருணம் இதன் பின் இருக்கும் அரசியல் மற்றும் எத்தகைய எதிர்ப்பு கட்டுவது அவசியம் என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். 

இதை வெறுமனே தூபி உடைப்பாக பார்க்காமல் அதன் அரசியலை நாம் பார்க்க வேண்டியது அவசியம். இன்னுமொரு தூபி கட்டித் தருவோம் போன்ற போலிப் பேச்சுகளுக்கு எடுபடாமல் அரசின் நோக்கம் தமது அழிவு நடவடிக்கைகளை முற்றாக மூடி மறைப்பதே என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். வெற்றுக் கண்டனங்களுடன் கண்மூடி இருக்கும் மேற்கு அரசுகள்/இந்திய அரசு ஒருபோதும் தமிழ் பேசும் மக்களின் நட்புச் சக்தி அல்ல. வெறுமனே தூபி சார்ந்த விசயமாக இதைச் சுருக்கி – பெரிதாக ஒன்றும் நடந்து விடவில்லை என்ற தோரணையில் பேசுபவர் உண்மையில் இலங்கை அரசின் நடவடிக்கையை அறிந்துகொள்ளாதவர்களாகவோ அரசைக் காப்பாற்றுபவர்களாகவோதான் இருப்பர். 

இந்தப் படுகொலை அரசின் பக்கம் சரியும் அனைத்து சக்திகளும் நமது எதிரிகளே. திட்டவட்டமான போராட்ட அரசியலை நோக்கி எமது திரட்சி நகரவேண்டும். இந்த அரசின் மூலம் தீர்வு – அல்லது மேற்கு நாடுகள் சொல்லுவது போல் –இந்த அரசை அழுத்தம் மூலம் திருத்துவது போன்ற திட்டமிடல்களை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். எமது நலன்கள் இந்த அரசுக்கு எதிர் திசையில் நிற்கிறது என்பதும், இந்த அரசின் வீழ்ச்சியில்தான் எமது விடுதலை ஆரம்பிக்கிறது என்பதும் திட்டவட்டமான தெளிவுபடுத்தப்பட வேண்டும். 

ஒவ்வொரு தூபிகள் உடைக்கப்படும் பொழுதும் எமது நினைவுகள் மேலும் நீளும் –ஆழமாகும் என்பதை நாம் பகிரங்கப் படுத்த வேண்டும். நீங்கள் எவ்வளவு ஒடுக்க முயல்கிறீர்களோ அவ்வளவுக்கு எமது போராட்ட அரசியல் மேலும் பலப்படும் எனத் தெரியப்படுத்துவதுதான் இதற்கு சரியான பதிலடி. 

என்றும் இல்லாதபடி இந்த முள்ளிவாய்க்கால் நினைவை மேலும் உறுதியாக நாம் முன்னெடுப்போம். பல அமைப்புக்கள் ஒழுங்கு செய்திருக்கும் நிகழ்வுகளில் மக்களை பெரும் தொகையாக பங்குபற்றும்படி தமிழ்சொலிடாரிட்டி கேட்டுக் கொள்கிறது. இந்த நாளில் எமது போராட்ட நகர்தல் பற்றிய உரையாடலை செய்ய போராட்டச் சக்திகள் பலரை அழைத்து தமிழ் சொலிடாரிடிட்டியும் ஒரு உரையாடலை ஒழுங்கு செய்துள்ளது. எல்லோரும் கலந்து கொள்ளுங்கள். எத்தனை அழிவு – உடைப்பு செய்யினும் எமது போராட்ட வேட்கை ஓங்குவதை தணிக்க முடியாது என்பதை உரத்து பதிவு செய்வோம்.

தமிழ் சொலிடாரிட்டி