இலங்கையின் புதிய “பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை” எதிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் வேண்டுகோள்

ஐக்கிய சோசலிச கட்சி இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற மிக கொடிய சட்டத்திற்கு எதிராக அணி திரளும்படி அனைத்து கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றது. தமிழ் சொலிடாரிட்டடி இந்த கோரிக்கையை ஆதரிக்கின்றது.

அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு,

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க விரும்பும் அனைவருக்கும் இது ஒரு வேண்டுகோள்.
இலங்கை அரசாங்கம் சமீபத்தில் “பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்” என்ற மிகக் கொடூரமான சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இலங்கையிலும் சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க எதிர்ப்பை எதிர்கொண்டது அறிவோம். ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பதாக பாசாங்கு செய்து இன்னும் கொடூரமான மற்றும் ஜனநாயக விரோத சட்டத்தை கொண்டு வந்து பொதுமக்களை ஏமாற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக வலுவான எதிர் நிலைப்பாட்டை எடுக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். அரசாங்கத்தை எதிர்க்கும் அனைவரையும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவதற்கான பின்னணியை உருவாக்கும் இந்த கொடூரமான சட்டத்தை தோற்கடிக்க அனைவரும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்தச் சட்டம் இயற்றப்பட்டால் அரசியல் ஆர்வலர்கள் மற்றும் தொழிற்சங்க ஆர்வலர்கள் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவர்.

அனைத்து அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் ஒன்று கூடி குறைந்தபட்சம் பின்வரும் கோரிக்கைகளை எதிர்த்துப் போராட முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

● மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும்.
● பேச்சு சுதந்திரம், ஒன்று கூடும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சுதந்திர உரிமைகளையும் உத்தரவாதப்படுத்து.
● ஜனநாயகத்தின் மீதான இந்த கொடூரமான தாக்குதலுக்கு எதிராக ஒரு பாரிய வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு, அனைத்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற அனைத்து செயற்பாட்டு அமைப்புகளுக்கு தேசிய அளவிலான தீவிர எதிர்ப்பு தினத்தை ஏற்பாடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறோம்.
● இந்த மோசமான சட்டத்திற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச அமைப்புகளையும் அரசாங்கங்களையும் வலியுறுத்துகிறோம்.
● ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் இந்த கொடூர அடக்குமுறை முயற்சிகளை கண்டித்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

இந்தக் கோரிக்கைகளுக்கு (அல்லது குறைந்தபட்சம் இந்தக் கோரிக்கைகளின் சில பகுதிகளாவது) உங்கள் ஆதரவை உறுதிப்படுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீதான வரலாற்றில் மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றிற்கு எதிராக ஒன்றுபடுவோம்.

இந்த கோரிக்கைக்களை ஏற்றுக் கொள்பவர்கள் உங்கள் ஆதரவை இணைத்துக் கொள்ள விரும்பின் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.

Email : info@tamilsolidarity.org

அறிக்கையை மூன்று மொழிகளிலும் வாசிப்பதற்கு கீழ்வரும் இணைப்பை பயன்படுத்தவும்.

Appeal letter to political parties 23.04.06 in tamil

Appeal letter to political parties 23.04.06 english

Appeal letter to political parties 23.04.06- Sinhala