உலக முதலாளித்துவத்தை கலக்கத்தில் மூழ்கடித்துள்ள கொரோனா – சோஷலிச மாற்றுத்தீர்வுக்கான அவசியம்

1,056 . Views .

தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை:

தேதி: 23.03.2020

கொரோனா வைரஸ் தொற்று நோயானது உலக முதலாளித்துவத்தையும், அதன் சமூக அமைப்பையும் கொந்தளிப்பானதும் கிளர்ச்சியானதுமான ஒரு புதிய சகாப்தத்திற்குள் தள்ளிவிட்டிருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக தனது கோரப்பிடிக்குள் நுழையும் ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ சமூகத்தின் அழுகல்களை இந்நோய் அதிவேகமாக அம்பலப்படுத்தி வருகின்றது. துவக்கத்தில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இந்த வைரஸின் பரவல் அதன் சர்வாதிகார அரசால் மூடி மறைக்கப்பட்டது முதல் இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட ஏனைய நாடுகளில் போதிய மருத்துவ வசதிகளின்றி அவதிக்குள்ளாகி வரும் நோயாளிகள் மற்றும் வயதானவர்களின் விரக்தியான நிலை வரை முதலாளித்துவம் மற்றும் அதன் ஆட்சியாளர்களின் அழுகல் தன்மை மொத்தமாக அம்பலமாகியிருக்கிறது. சமூகம் எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறித்த சந்தேகத்தையும், பரவலான அச்சத்தையும் இது எழுப்பியிருக்கிறது.

 

பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் இந்நோய்த்தொற்று தாக்கியதன பின் இந்நாடுகளில் அமுலில் இருக்கும் சேவைகள் முடக்கப்பட்ட நடவடிக்கைகளின் பின்விளைவுகள் அதிர்ச்சிக்குரிய வகையில் வெளிப்பட்டிருக்கின்றன.

 

இலட்சக்கணக்கானோரின் உடல்நலத்தை சீரழித்ததோடு, ஒரு உலக பொருளாதார நெருக்கடியையும் இந்நோய் தோற்றுவித்துள்ளது. உலக பொருளாதார நெருக்கடியின் துவக்கப் புள்ளியான சீனாவில் 2020ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13% சுருங்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது! உலக வர்த்தகத்தில் 14% சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் நிலையில், அதன் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் சரிவே உலக பொருளாதாரத்திற்கு பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும். (2007-08இல் உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு வெறும் 4% மட்டுமே).

 

ஆயினும், முக்கியமான முதலாளித்துவ நாடுகள் பெரும்பாலானவற்றில் விதிக்கப்பட்டுள்ள கதவடைப்புகளும், கணிசமான காலத்துக்கு பெருந்திரளான உழைக்கும் மக்கள் அரை ஊதியத்தில் வாழ்வதும், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் ஜப்பானிலும் பொருளாதார சரிவு ஏற்கனவே துவங்கிவிட்டதை உறுதிப்படுத்துகின்றன.

 

தற்சமயம் உருவாகிவரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியானது 2007-08 நெருக்கடியை காட்டிலும் மோசமானதாக இருக்கப்போகிறது. 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பிரிட்டிஷ் பொருளாதாரம் 15% வரை சுருங்கக்கூடும் என்று சில கணிப்பீடுகள் கூறுகின்றன. லாரி எலியட் எனும் ஆசிரியர் லண்டன் கார்டியன் பத்திரிக்கையில் எழுதுகையில், “தற்போது உருவாகி வரும் பொருளாதார நெருக்கடியானது, நெருக்கடிகளுக்கெல்லாம் தலைமை நெருக்கடி” என்று கூறுகிறார். 2007-08 நெருக்கடியை காட்டிலும் மிக ஆழமானதாம்! உலக பொருளாதார பெருமந்தமாக மாறக்கூடிய அளவுக்கு இந்நெருக்கடி பேரழிவாக அமையக்கூடும் என்பதை மறுக்க இயலாது. பல நாடுகளில் பெரிய அளவிலான பணிநீக்கங்கள் நடைபெற்று வருவதுடன், தற்போது வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் பெருகும் என்ற அச்சம் பல நாடுகளில் நிலவுகிறது.

 

கொரோனா தொற்று துவங்குவதற்கு முன்பே நிலவிய ஒரு ஆபத்தான பொருளாதார சூழ்நிலையின் பின்புலத்திலிருந்தே இந்நெருக்கடி உருவாகிவருகிறது.  இந்நெருக்கடி ‘V’ வடிவிலான குறுகிய கால நெருக்கடியாக அல்லாமல் மிகவும் நீண்ட, ஆபத்தான நெருக்கடியாக இருக்கக்கூடும் என்று முதலாளிகள் அஞ்சுகின்றனர். இந்நோய் தொற்று ஆரம்பிப்பதற்கு முன்பே உலக பொருளாதாரம் ஒரு பேராபத்தான நிலையில் தான் இருந்தது. ஜெர்மனி, சீனா மற்றும் இதர நாடுகளில் ஏற்கனவே மந்தமடைய துவங்கியிருந்தது. 2019ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்திலேயே ஜப்பானிய குடும்பங்களின் செலவு 7% வீழ்ச்சியை கண்டிருந்தது. 2007/08 பொருளாதார வீழ்ச்சிக்கு பின் எவ்வளவோ நிதிச்சலுகைகளும், வட்டி விகித குறைப்புக்களும் வழங்கியும் கூட, ஒரு அதி-பலவீனமான மீட்சியை தவிர, உலக பொருளாதார வளர்ச்சி 2007க்கு முந்தைய நிலைக்கு திரும்பவே இல்லை. 2007/08 பொருளாதார வீழ்ச்சியானது, 1930இன் பெருமந்தம் போன்ற ஒரு நிலைக்கு இட்டுச்செல்லவில்லை என்றாலும், 1873-96இன் நீண்ட கால மந்தநிலையுடனும், 1929-39இன் உலக பெருமந்தநிலையுடனும் ஒப்பிடத்தக்க வகையில், முதலாளித்துவ வரலாற்றின் நீண்டகால பொருளாதார நெருக்கடிகளில் ஒன்றாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய செழிப்பு நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்த 1974 பொருளாதார நெருக்கடி, நிலையற்ற கொந்தளிப்பான ஒரு புதிய காலக்கட்டத்தை துவக்கிவைத்தது. இன்றைய ஆளும் வர்க்கங்கள் ஒரு நீண்ட நெடிய பொருளாதார நெருக்கடியையோ அல்லது பொருளாதார பெருமந்த நிலையையோ சந்திப்பதற்கான சாத்தியக்கூறை இன்று எதிர்நோக்கியிருக்கின்றனர். பொருளாதாரத்திலும், அரசியலிலும் ஒரு வலிமையான மற்றும் ஸ்திரமான நிலையிலிருந்து அவர்கள் இப்புதிய நெருக்கடிக்குள் நுழையவில்லை.

 

2019இன் முதலாம் அரையாண்டில் உலக கடன் $250லட்சம் கோடி என்ற தாறுமாறான அளவுக்கு அதிகரித்திருக்கிறது. அரசுகளின் கடன், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் கடன் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து, உலக பொருளாதாரத்தை விட மூன்று மடங்கு அதிகமான -இந்த அளவை உலக கடன் 2019இன் துவக்கம் வரை வரலாற்றில் எட்டியதில்லை.

 

உலக முதலாளித்துவ பொருளாதாரம், பல வழிகளில், கொரோனா நெருக்கடிக்கு முன்னரே, 2007/08 நெருக்கடி காலத்தைவிடவும் பெரும் கடனில் மூழ்கியிருந்தது என்பதே இதன் பொருள். ஆயினும், முதலீட்டாளரும், நியூயார்க் டைம்ஸ் இதழின் எழுத்தாளருமான ருச்சிர் ஷர்மா குறிப்பிடுவதை போன்று, இக்கடனின் நிச்சயமற்ற பெரும்பகுதி வங்கிகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து உலகெங்கிலும் உள்ள கார்ப்பொரேட்டுகளுக்கு கைமாறியிருந்தது. வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாமல், அப்பணத்தை மேல் வட்டிக்கு கடனளிப்பதன் மூலம் மட்டுமே பிழைப்பு நடத்தும் போலி நிறுவனங்களில் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவுக்கு பெருகியிருக்கிறது. இப்போலி நிறுவனங்களே அமெரிக்க பங்கு சந்தையில் 19%ம் மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தையில்10%ம் இடம்பிடித்துள்ளன.

 

2008ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலுள்ள கண்டிப்பான விதிமுறைகளை தவிர்ப்பதற்காக, தனிப்பட்ட ஒப்பந்தங்களில் இறங்கிய நிறுவனங்களை விழுங்கியிருக்கும் பெரிய கடன் சுமைகள் உலக கடன் நெருக்கடியின் இன்னொரு பகுதியாகும்.  அமெரிக்காவில் ஒரு சராசரி தனியார் பங்கு நிறுவனம் அதன் ஆண்டு வருமானத்தை விட 6 மடங்கு – அதாவது மதிப்பீட்டு முகமைகள் (rating agencies) மோசமான கடன் சூழல் என்று கருதுவதை விட இருமடங்கு – கடனை தன் தலைமீது சுமந்திருக்கின்றது.

 

இக்காரணிகள் யாவும் கொரோனா தொற்று நோய் எழுவதற்கு முன்னரே உலக பொருளாதாரம் ஒரு புதிய நெருக்கடியை நோக்கி சென்றுக்கொண்டிருந்ததை தெளிவுப்படுத்துகின்றன.

 

ஒரு புதிய பொருளாதார நெருக்கடியோடு கூடிய சுணக்கம் அல்லது வீழ்ச்சியின் விளிம்பில் முதலாளித்துவம் இருந்தது. தொற்று நோயின் வருகை, இதனை அப்படியே தள்ளிவிட்டு, உலக பொருளாதாரத்தை ஒரு கடும் வீழ்ச்சியிலோ அல்லது கிட்டத்தட்ட மந்தநிலையிலோ மூழ்த்தியிருக்கிறது. பொருளாதாரத்தின் மீதான தொற்று நோயின் தாக்கம் முதன் முறையாக இவ்வீழ்ச்சிக்கு ஒரு இரட்டை தன்மையை அளித்திருக்கிறது – தேவை, அளிப்பு என்ற இரண்டு தன்மைகளையும் கொண்டதாக உள்ளது. இது வெறும் நுகர்வு பற்றாக்குறை சார்ந்த நெருக்கடி மட்டுமல்ல, அளிப்பு, அளிப்பு சங்கிலி, உற்பத்தி மற்றும் விநியோகம் சார்ந்த நெருக்கடியாகவும் உள்ளது. இது பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சார்ந்த அழிவுகரமான பின்விளைவுகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தப்போகிறது என்பதுடன், முதலாளித்துவ பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் சார்ந்த பன்னோக்கு நெருக்கடியாகவும் திகழப்போகிறது. ஏற்கனவே பெருகிவரும் வேலையிழப்புகளின் வியக்கத்தக்க எண்ணிக்கையும், அதன் விளைவுகளும் இப்பன்னோக்கு நெருக்கடியின் ஒரு அம்சம் ஆகும்.

 

சீனா மற்றும் தென்கொரியாவை தொடர்ந்து இந்நெருக்கடி தற்போது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதோடு இதர நாடுகளுக்கும் அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது. அதித்தீவிரமான இந்நெருக்கடி ஏற்படுத்தப்போகும் பின்விளைவுகள் குறித்த அச்சத்தால், நவ-தாராளவாத (neo-liberal) கொள்கைகளை விடுத்து பெரிய அளவிலான கீன்ஸியவாத நலத்திட்டங்களை கையிலெடுக்கும் நிர்பந்தத்துக்கு பெரும்பாலான நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் உள்ளாகியிருக்கின்றன.

 

வணிகங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருட்டு, தினசரி வீதத்தில், சில தினங்களுக்குள்ளாகவே மிகப்பெரிய அளவிலான பொதுத்துறை நிதியானது பொருளாதாரத்திற்குள் திணிக்கப்பட்டிருக்கிறது. வட்டி குறைப்பின் மூலம் €75000 கோடியை புழக்கத்தில் விடப்போவதாக ஐரோப்பிய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 34,500 கோடி யூரோக்களை பிரெஞ்சு பொருளாதாரத்தில் புகுத்தப்போவதாக அந்நாட்டு அதிபர் மேக்ரான் அறிவித்துள்ளார். பட்ஜெட் அறிவிப்புக்களை வெளியிட்டு ஒருவாரத்திற்குள்ளாகவே இன்னொரு £33000 கோடியை பிரிட்டிஷ் பொருளாதாரத்தில் புகுத்தப்போவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஒவ்வொரு அமெரிக்கரின் வங்கிக்கணக்கிலும் $2000 செலுத்த ட்ரம்ப் வெளிப்படையாகவே பரிசீலித்து வருகின்றார். ஹாங்காங் அரசு இதனை ஏற்கனவே செய்துவிட்டது.

 

சில பொருளாதார நடவடிக்கைகளை தக்கவைத்துக்கொள்ளவும், ஊக்கப்படுத்தவும் வட்டிவிகிதங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன – பிரிட்டனில் இது 0.1% அளவுக்கு சென்றுவிட்டது – வரலாறு காணாத வீழ்ச்சி! இந்நெருக்கடிக்கு முன்னரே சில நாடுகளின் வட்டிவிகிதங்கள் பூஜ்ஜியத்தை நெருங்கிவிட்டன.

 

நவதாராளவாதம் (neo-liberalism) கைவிடப்பட்டது

 

வரலாறு காணாத இந்த அமைதிக்கால நெருக்கடி ஏற்பட்டு சில தினங்களிலேயே, நவதாராளவாத கொள்கைகள் கைவிடப்பட்டு அரசின் தலையீடுகளும், கீன்ஸிய வழிமுறைகளும் கையிலெடுக்கப்பட்டுவிட்டன. பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து, புரட்சிகள் வெடிப்பதை தவிர்க்க இறுதி முயற்சியாக, இரு உலகப்போர் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவும் எண்ணற்ற அரசாங்கங்களால் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றன.

 

இத்தாலி தனது முக்கிய விமான போக்குவரத்து சேவையை அரசுடமையாக்கிவிட்டது, தனியார் மருத்துவ சேவைகளை ஸ்பெயின் அரசுடமையாக்கிவிட்டது. நொடிந்த நிலையில் இருக்கும் பிரெஞ்சு கம்பெனிகளை அரசுடமையாக்க தயார் என்று அறிவிக்கும் நிர்பந்தத்துக்கு மேக்ரான் ஆளாகியிருக்கின்றார். கிறித்தவ ஜனநாயகவாதியான ஜெர்மானிய நிதியமைச்சர், “தலையிடா சந்தை பொருளாதார கொள்கைகளை கைவிட்டுவிடக்கூடாது” என்று எச்சரிக்கும் அதேவேளை, தேசியமயமாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறித்தும் பேசுகின்றார். பிரிட்டனின் ஜான்ஸன் கூட தனியார் உற்பத்தி நிறுவனங்களை அணுகி, மருத்துவமனைக்கு தேவையான சுவாசக்கருவிகளை உற்பத்தி செய்யுமாறு கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

இவ்வளவு பெரிய நெருக்கடியை எதிர்க்கொள்ள வேண்டி இருப்பதால், அவர்கள் அனைவரும் நவ-தாராளவாத தலையிடா கொள்கைகளை ஒரு இமைநொடியில் துறந்துவிட்டனர். போர்க்காலத்தை– குறிப்பாக 1914-18 மற்றும் 1939-45 உலகப்போர்களின் காலத்தை – போன்று தனது ஆட்சி அமைப்பை காப்பாற்றிக்கொள்ள அனைத்தையும் முடுக்கிவிட தயாராக இருக்கின்றனர்.

 

தற்போதுள்ள சூழ்நிலையில் தீவிர பொருளாதார வீழ்ச்சியையோ அல்லது மந்தநிலையையோ தவிர்ப்பதில் அவர்கள் எந்த அளவுக்கு வெற்றிபெறுவார்கள் என்பதைக் கூறமுடியாது. அரசியல், பொருளாதார மற்றும் நெருக்கடிகள் எழுவதற்கான அச்சம் ஏற்படின், பெருமந்தத்தையும் வீழ்ச்சியையும் தவிர்க்க இறுதி முயற்சியாக, எதிர்காலத்தை கூட அடகுவைக்க அவர்கள் தயாராகி வருவது கடந்தவாரம் தெளிவானது. இந்நெருக்கடி உலகம் தழுவியதாக உருவெடுக்கும் போது ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், லத்தின் அமெரிக்காவிலும் இதைவிட பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

 

முந்தைய வரலாற்றுக் காலத்தில் மலை போல் குவிந்திருந்த கடன் சுமையையும், கட்டுபடியாகக்கூடிய புதிய சந்தைகள் அற்ற நிலையையும், மிகை உற்பத்தியையும் உள்ளடக்கிய இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடியானது, ஆயுதக்குவிப்பிற்கும், போட்டி முதலாளித்துவ நாடுகளுக்கிடையிலான பதற்றத்துக்கும் வழிவகுத்து, உற்பத்தி சக்திகளின் அழிவின் மூலம் உலகமுதலாளித்துவத்தை மறு-துவக்கம் செய்ய காட்டுமிராண்டி வழிமுறைகளை மேற்கொள்ள வித்திட்டது. இது தேசிய முதலாளித்துவ நாடுகளை தனது சொந்த நலன்களை தக்கவைத்துக்கொள்ள போரிலும், உலகப்போரிலும் ஈடுபடசெய்ய வழிவகை செய்தது. அணு ஆயுத சகாப்தத்தில் தத்தமது நாடுகளிலும் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த ஒரு வாய்ப்பும் ஆளும் வர்க்கங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. ஆயினும் எதிரி சக்திகளுக்கிடையிலான பிராந்தியப் போர்களும், நிழல் யுத்தங்களும் இந்நெருக்கடியின் தவிர்க்கவியலாத பின்விளைவுகளாகும். இவற்றின் விளைவாக, உற்பத்தி சக்திகளை அழிக்கக்கூடிய நீண்டகால பொருளாதார சுணக்கத்திலோ அல்லது மந்தநிலையிலுலோ முதலாளித்துவம் ஆழ்ந்திருக்க நேரிடும். முதலாளித்துவத்தின் அண்மைக்கால வரலாற்றில் பார்த்திராத அளவுக்கு உலகம் தழுவிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார கொந்தளிப்புகள் தீவிரமடையும் காலமாக இந்நீண்ட காலம் அமையப்போகிறது என்பதே இதன் பொருள்.

 

ஆயினும், கீன்ஸிய சீர்த்திருத்தங்களுக்கு தாவி, இத்தகைய பேரழிவை தடுக்க முயலும் யுக்தி, உலக முதலாளி வர்க்கங்கள் அனைத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு ஒத்திசைவான சர்வதேச உத்தியாக இல்லை. இந்த உத்திக்கு ஒரு வலிமையான பொருளாதார பின்புலமும் இல்லை. 2007/08இல் துவக்கக்கால பதற்றத்துக்கு பின், உலகளாவிய வங்கி மற்றும் நிதியமைப்பில் தலையிட்டு சீரமைக்க உலக ஆளும் வர்க்கங்கள் ஒன்றிணைந்து ஒத்திசைவான கொள்கைகளை நடைமுறைப்படுத்தின.

 

தற்போதைய நெருக்கடியானது முற்றிலும் மாறுபட்ட சர்வதேச அரசியல் சூழ்நிலையில் அரங்கேறி வருகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சரிவும், சீனா உள்ளிட்ட இதர பிராந்திய சக்திகளின் எழுச்சியும், அமெரிக்காவோ அல்லது வேறெந்த சக்தியோ ஒரு தடையிலா ஒற்றை கொள்கையை இதர நாடுகளின் மீது விதிக்க இயலாத நிலையை உருவாக்கியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பலவீனமான நிலையும், சீனா, ரஷ்யா போன்ற இதர பிராந்திய சக்திகளின் எழுச்சியும் உலகமயம் சுருங்கி வருவதற்கும், தேசியவாத வர்த்தகத்தடைகளுக்கு திரும்புவதற்கும் வழிவகுத்துள்ளது. இந்நெருக்கடியின் போது ஒவ்வொரு முதலாளித்துவ சக்தியும் தனது சொந்த நலனை தற்காத்துக்கொள்ள தனித்தனி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதன் மூலமே இது தெளிவாக நிரூபணமாகின்றது.

 

உலக முதலாளித்துவமானது, வளர்ந்துவரும் வணிகப்போர்களின் பின்னணியில் இந்நெருக்கடியை சமாளிக்க வேண்டியுள்ளது. ரஷ்யா, சவூதி அரேபியா ஆகிய இருபெரும் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு இடையிலான போட்டியும், இப்போட்டி ஏற்படுத்தியிருக்கும் சர்வதேச கச்சா எண்ணெய் வீழ்ச்சியும், அதன் ஏற்றுமதியை நம்பியிருக்கும் நைஜீரியா, வெனிசுலா போன்ற நாடுகளில் இவ்விலை வீழ்ச்சி ஏற்படுத்தியிருக்கும் அழிவுகரமான பின்விளைவுகளும் நிலவும் சூழ்நிலையில் தான் உலக முதலாளித்துவம் இந்நெருக்கடிக்குள் நுழைந்தது.

 

ட்ரம்ப், போரிஸ் ஜான்ஸன், போல்சனாரோ போன்ற சுயவிளம்பரத்தில் ஆர்வம் கொண்ட, கையாளாகாத வலதுசாரி முதலாளித்துவ அரசியல்வாதிகள் இந்நெருக்கடியை கையாண்ட விதம், இந்நெருக்கடியை மேலும் தீவிரமாக்கிவிட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்நோய் தொற்றை “சீன வைரஸ்” என்றழைப்பதன் மூலம் பதற்றத்தை மேலும் தீவிரமாக்குகின்றார் ட்ரம்ப். தேசிய சுகாதார சேவை பணியாளர்களுக்கு பொதுவான பரிசோதனையை மேற்கொள்ள மறுக்கின்றார் ஜான்ஸன். நிலைமையின் தீவிரத்தன்மையை தொடர்ந்து மறுக்கும் போல்சனாரோ, தனது சொந்த கொரோனா பரிசோதனையின் முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், உல்லாசமாக நடந்து சென்று மக்களோடு கைக்குலுக்கிக் கொண்டிருக்கின்றார். இந்தியாவில் மோடியும் கூட இப்படியான அணுகுமுறைகளையே கடைப்பிடிக்கின்றார்.

 

இவ்வைரஸ் தொற்றை கையாளும் விதத்தில் பெரும்பாலான மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுக்கும், கடந்த கால ஸ்டாலினிய அதிகாரத்துவ ஆட்சியின் எச்ச-சொச்சங்களால் ஒளியூட்டப்பட்ட ஒரு வினோதமான அரசு முதலாளித்துவ பொருளாதாரத்தை கொண்ட சீனாவுக்கும், (இவ்வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் சேதங்களை துவக்கத்தில் மூடி மறைத்த போதிலும்) மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்நோய் தொற்று ஆரம்பித்த இரண்டு வாரங்களுக்குள் அவசர மருத்துவமனைகளை கட்டவும் (தொழிலாளர்களை அடிமைகளை போன்று கட்டாயப்படுத்தி வேலைசெய்ய நிர்பந்தித்த போதிலும்), நாடு முழுக்க தீவிரமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மருத்துவர்களை அனுப்பவும் சீன அரசால் முடிந்தது. சரியான உணவு விநியோக அமைப்பையும் அதனால் ஏற்படுத்த முடிந்தது. அதிகாரத்துவ திட்டமிடலும், முதலாளித்துவத்திற்கு திரும்பும் செயல்பாட்டில் அரைகுறை தூரத்திலும் இருக்கும் கியூபாவாலும் கூட ”இண்டெர்ஃபெரான் ஆல்பா 2B” என்ற சக்திவாய்ந்த மருந்தை பயன்படுத்தி சிகிச்சையளித்து உயிரிழப்பை குறைக்க முடிந்தது. பின்னர் அதன் அரசாங்கம், இத்தாலியில் நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் பொருட்டு தனது மருத்துவர்களை ஐரோப்பாவுக்கும் அனுப்பியும் வைத்தது. இதேப்போன்று, ரஷ்யாவாலும் இத்தாலிக்கு தனது உதவிகளை அனுப்பிவைக்க முடிந்தது.

 

தற்போதைய நெருக்கடி, பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மற்றும் பிராந்திய அரசியல் உறவுகளின் ரீதியிலும் உலக முதலாளித்துவத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை குறிக்கிறது. எவ்வாறாயினும், உலக அளவிலும், பிராந்திய அளவிலும் அரசியல் உறவுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படப்போவதும், சக்தி வாய்ந்த புரட்சிகர – எதிர்புரட்சிகர கூறுகளுக்கிடையேயான மிகப்பெரிய வர்க்க யுத்தங்கள் நடக்கப்போவதும் நிச்சயமே.

 

முதலாம் உலகப்போர் அமெரிக்க ஏகாதிபத்திய சக்தியின் வளர்ச்சிக்கான ஒரு சகாப்தத்தை துவக்கி வைத்ததைப் போன்று, தற்போதைய நெருக்கடி சர்வதேச அரங்கில் அதன் நிலையை மேலும் பலவீனப்படுத்தப் போகின்றது. தற்போதைய நிலையில் இவ்வீழ்ச்சி எவ்வளவு தூரத்திற்கு இருக்கப்போகிறது என்பதை கூற முடியாது. இந்நெருக்கடியின் விளைவாக சீனா பொருளாதார ரீதியில் சின்னாபின்னமாகியிருக்கிறது என்பதோடு, இந்நெருக்கடியிலிருந்து அந்நாடு எப்படி மீண்டெழப் போகின்றது என்பது இன்னும் தெளிவாகவில்லை. சர்வதேச அளவிலான பதற்றங்களும், சச்சரவுகளும் தீவிரமடையத் துவங்கியுள்ளன. பிராந்திய ஒற்றுமைகளும், ஒத்துழைப்புக்களும் சீர்குலையவும், உடைந்து சிதறவும் கூடும். தற்போதைய வடிவிலான ஐரோப்பிய ஒன்றியத்தை நாறாகக் கிழித்துப்போடும் இந்நெருக்கடி பூதத்தை கண்டு ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் அச்சத்தில் உறைந்துப்போயுள்ளன. பெரும் நிதியை ஐரோப்பிய மைய வங்கியால் பொருளாதாரத்துக்குள் செலுத்துவது குறித்த விவாதத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சிதைவு குறித்த அச்சுறுத்தலும் ஆகும்.

 

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருக்கும் அரசு செலவுகளின் மீதான வரம்புகள், நொடிந்த நிறுவனங்களை காப்பாற்ற அரசு தலையிடக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் யாவும் காற்றில் பறக்கவிடப்படுவதை இந்நெருக்கடி தவிர்க்க இயலாததாக்கியுள்ளது. அதே சமயம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான பதற்றங்களும் பலமடைந்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இத்தாலி அவசர மருத்துவ உதவி கோரியதும், அக்கோரிக்கைக்கு எந்த ஐரோப்பிய நாடும் செவிமடுக்காததும் இப்பதற்றங்களை பிரதிபலிக்கின்றது. மருத்துவப் பொருட்களுக்கும் மருத்துவர்களுக்கும், பிற உதவிகளுக்கும் கியூபா, சீனா மற்றும் ரஷ்யாவை நாடும் நிலைக்கு இத்தாலி தள்ளப்பட்டது.

 

குறுகிய காலத்தில், இவ்வைரஸின் பாதிப்புகளின் மீதும், அது ஏற்படுத்தக்கூடிய பொருளாதார நெருக்கடி குறித்தும் எழுந்த நியாயமான அச்சம் பல நாடுகளில் அழிவுகரமான இந்நெருக்கடியை சமாளிக்க, தேச ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்ற உணர்வை துவக்கத்தில் ஏற்படுத்தியது. இதனால், பிரான்ஸ், சிலி உள்ளிட்ட சில நாடுகளில் ஒரு குறுகிய காலத்துக்கு வெகுஜன இயக்கங்கள் எழுந்தன.

 

அனைத்து நாடுகளிலும் அரசுகள் பரவலான அவசரநிலை அதிகாரங்களை கையிலெடுக்க தயாராகி வருகின்றன. பிரிட்டனில் ஜான்ஸனும், ஜப்பானில் ஷின்ஜோ அபேயும் இரண்டாண்டுகளுக்கு அவசரநிலை அதிகாரங்களை பிரகடனப்படுத்தியுள்ளனர்! இத்தாலியில் பகுதியளவு இராணுவ கட்டுப்பாட்டை அமுல்படுத்தியுள்ள அரசு, அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறுவோருக்கு €5000 அபராதம் விதிக்கின்றது. இன்னும் சில நாடுகளிலும் பகுதியளவுக்கு இராணுவமோ அல்லது இதர அரசு படைகளோ நிறுத்தப்பட்டு சமூகம் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது.

 

ஆரம்பத்தில் இத்தகைய நடவடிக்கைகள் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் கூடுமான வரை பாதுகாக்கவும், நெருக்கடியை சமாளிக்கவும் அவசியமானவை என்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் துவக்கக் கட்டங்களில் உருவாக்கப்பட்ட மனநிலையை ஒத்ததாகும். தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் இன்னுயிர்களையும், நலன்களையும் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளையும் – தொழிலாளர் சர்வதேசத்த்துகான கமிட்டி- (CWI) ஆதரிக்கிறது. ஆயினும், முதலாளித்துவ அரசுகள் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான அதிகாரங்களை ஜனநாயகப்பூர்வமாகவும், மக்களின் நலன்களைக் காக்கவும் மட்டுமே பயன்படுத்தும் என்பதை கடுகளவும் நம்ப முடியது. முதலாளித்துவத்தின் நலன்களை காப்பது மட்டுமே அவர்களின் முக்கிய நோக்கம். மேலும், ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு மேல், அவர்கள் உழைக்கும் வர்க்கத்தையும், நடுத்தர வர்க்கத்தையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்நெருக்கடியை ஈடு செய்யுமாறு நிர்பந்திக்க முயலுவார்கள். இதனால் மிகப்பெரிய சமூக கொந்தளிப்புகள் உருவாவதை தவிர்க்க முடியாது.

 

அவசரகால சர்வாதிகார நடவடிக்கைகளை உழைக்கும் வர்க்கத்திற்கும் அவர்களது ஸ்தாபனங்களுக்கும் எதிராகவே முதலாளித்துவ அரசுகள் திருப்பிவிடக் கூடும். இங்கிலாந்து உள்ளாட்சி தேர்தல்களையும், லண்டன் நகர மேயர் தேர்தலையும் ஒராண்டுக்கு ஒத்திவைத்திருப்பதே ஜனநாயக உரிமைகளை பறிக்க இந்நெருக்கடி எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப்படக் கூடும் என்பதை குறிக்கிறது. நவம்பர் மாத அமெரிக்க பொதுத்தேர்தலையும், அதிபர் தேர்தலையும் ட்ரம்ப் தள்ளிவைக்கவும் வாய்ப்பில்லாமல் இல்லை – இதனை செய்ய அரசியல் சட்டத்திருத்தம் தேவை என்பதால் இது அவ்வளவு எளிதானதல்ல. அமெரிக்க முதலாளி வர்க்கத்துக்கு இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும் என்றாலும், அமெரிக்காவில் நடக்கப்போகும் நிகழ்வுகளை பொறுத்து, இது போன்ற தீவிரமான நடவடிக்கையில் ட்ரம்ப் இறங்க வாய்ப்பில்லாமல் இல்லை.

 

இந்நெருக்கடி காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு அவசரகால நடவடிக்கைகளையும் உழைக்கும் மக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஜனநாயக சோதனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி கோருகிறது. தேசிய ஒற்றுமைக்கு துணை நிற்கவும், முதலாளித்துவ கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசில் பங்கேற்கவும் அழுத்தம் நிலவுகிறது. இத்தகைய மனநிலைக்கு மதிப்பளிக்கும் போதிலும், இடதுசாரி கட்சிகளும், தொழிற்சங்கங்களும் முதலாளிவர்க்க கட்சிகளோடு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால், அதனை தொழிலாளர் அகிலத்திக்கான கமிட்டி (CWI) கடுமையாக எதிர்க்கும். இத்திசையில் தொழிற்சங்க தலைவர்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு நகர்வும், ஒரு கட்டத்தில் தொழிற்சங்கங்களுக்குள் போராட்டங்களையும், சச்சரவுகளையும் உருவாக்கும் என்பது நிச்சயம். ஆளும் வர்க்கத்தின் நலன்களை மட்டுமே தற்காத்து, உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எந்த விதத்திலும் பலனில்லாத ”தேசிய ஐக்கிய” முதலாளித்துவ கூட்டணி அரசுகளில் பங்கேற்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். அதற்கு பதிலாக, தொழிலாளர்களின் இயக்கத்திற்கு இந்நெருக்கடியை சமாளிக்க தனக்கே உரிய “செயல் திட்டங்கள்” தேவைப்படுகிறது.

 

அம்பலப்பட்டுப் போன வர்க்க பிரிவினைகளும், சோஷலிச மாற்றுத்தீர்வுக்கான அவசியமும்:

 

இந்நிகழ்வுகளால் வர்க்கப்போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று அர்த்தமில்லை. மாறாக, சமூகத்தின் வர்க்கப்பிரிவினைகள் இன்னும் தெளிவாக அம்பலமாகியிருக்கிறது. இப்பிரிவினைகள் இன்னும் ஆழமாகப்போவது நிச்சயம். இந்நெருக்கடியின் துவக்கத்தில் அச்சமும், நடுக்கமும் நிலவினாலும், சமூகத்தில் வர்க்க பகைமைகள் ஒளிந்திருப்பது இந்நெருக்கடியின் மூலம் அப்பட்டமாகியிருப்பதுடன், இந்நெருக்கடி தீவிரமடைகையில், அப்பகைமைகளும் தீவிரமடையப் போகின்றன.

 

இத்தாலியிலும், பிரான்ஸிலும் நடைபெற்ற வேலை நிறுத்தங்களும், ஸ்பெயினின் மெர்ஸிடஸ் பென்ஸ் நிறுவன தொழிலாளர்களும், லண்டன் மருத்துவமனைகளின் துப்புரவு பணியாளர்களும், அமெரிக்கா உட்பட இதர நாடுகளின் தொழிலாளர்களும் முன்னெடுத்த வேலை நிறுத்தங்களும் இவ்வர்க்க பகைமைகளையே பிரதிபலிக்கின்றன. சுகாதாரம் மற்றும் இதர பணியாளர்களின் இயல்பான ஆதரவு கரங்களும், ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் இயல்பும் பல்வேறு நாடுகளில், குறிப்பாக, கதவடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வளர்ந்துள்ளது. ஸ்பெயின் மன்னரின் இரகசிய பரிவர்த்தனைகள் அம்பலமானதை தொடர்ந்து, அவருக்கெதிராக ‘பார்சிலோனா’வில் மக்கள் கோஷமெழுப்பியும், பாத்திரங்களை தட்டி ஒலியெழுப்பியும் எதிர்ப்பை தெரிவித்தது, இந்நெருக்கடி வளரும்போது, வர்க்க மோதல்கள் எவ்வளவு தீவிரமாக வெளிப்படும் என்பதற்கு உதாரணமாகும். பிரேசில் நாட்டில் கூட இந்நோய்த் தொற்றை கையாளுவதில் போல்சனாரோவின் கையாளாகாத தனத்தை எதிர்த்து, அவர் ஆட்சிக்கு வந்தது முதல் இல்லாத அளவுக்கு சில பிரம்மாண்டமான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

 

இந்நெருக்கடியின் அரசியல் பின்விளைவுகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அரசியல் விழிப்புணர்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, முதலாளித்துவ அமைப்பின் இருக்கையையே கேள்விக்குள்ளாக்கப் போகிறது. முதலாளித்துவத்தை குறித்தும், அது அமைத்திருக்கும் சமூக கட்டமைப்பு குறித்தும் தொழிலாளர்களின் ஒரு அடுக்கில் கேள்வியெழும்பியிருப்பதன் மூலம் இச்செயல்பாடு ஏற்கனவே துவங்கிவிட்டது. நீண்டகால பொருளாதார நெருக்கடியோ, அல்லது பெருமந்தமோ ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறித்து உழைக்கும் வர்க்கமும், இளைஞர்களும், நடுத்தர வர்க்கத்தினமும் சிறிது சிந்தித்துப்பார்த்தாலே அவர்களால் புரட்சிகர முடிவுகளுக்கு வந்து சேர முடியும். கீன்ஸிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் ஓரளவு பலன் தந்தாலும், இறுதியில் உழைக்கும் வர்க்கத்தின் தேவைகளையும், வெகுஜனத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. ஏற்கனவே பல நாடுகளில் அரசு மற்றும் செல்வந்தர்களின் மீதான மக்களில் குறிப்பிட்ட பிரிவினரின் பார்வை ஆழமான அவநம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

 

பைனான்ஸியல் டைம்ஸ் பத்திரிக்கையும் கூட, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை குறித்த சமீபத்திய கட்டுரையில் பின்வரும் முடிவுக்கு வந்தது: “நோய் தொற்றைப் போன்ற ஒரு பேரழிவு நிகழ்வுகள் யாவும் இயல்பாகவே, வரலாற்றுப்போக்கின் வேகத்தை முடுக்கிவிட்டு, அதன் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன. முதலாம் உலகயுத்தம் ரஷ்யாவில் கொந்தளிப்பை தீவிரமாக்கி, 1917 புரட்சிக்கு வழிவகுத்ததோடு, அமெரிக்காவை 20ஆம் நூற்றாண்டில் உலகின் தலைச்சிறந்த சக்தியாகவும் உயர்த்தியது. இரண்டாம் உலகப்போரானது, சர்வதேச விவகாரங்களில் ஐரோப்பிய பேராதிக்கத்துக்கு முடிவுகட்டி, அமெரிக்க-சோவியத் போட்டிக்கான அரங்காக பூமியை மாற்றியது. இந்நோய் தொற்றும், அதன் பொருளாதார விளைவுகளும் கட்டுக்குள் கொண்டுவரப்படாவிட்டால், இம்மாதிரியான பெரிய அளவிலான வரலாற்று பின்விளைவுகள் ஏற்படப்போவது உறுதி”. (Financial times 17/03/2020).

 

1930களின் பெருமந்தம் மற்றும் இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து ஏற்பட்ட வியத்தகு அரசியல் கொந்தளிப்புகளும், தீவிரத்தன்மையும், சமூக மாற்றத்துக்கும், தேசியமயமாக்கலுமான வெகுஜன ஆதரவை ஏற்படுத்தியது சில முக்கிய படிப்பினைகளை அளிக்கிறது. நெருக்கடி காலத்தில் பேரளவிலான கீன்ஸிய வழிமுறைகளையும் அரசு தலையீட்டையும் கையிலெடுத்த பின், தொற்று நோயின் உடனடி விளைவுகளிலிருந்து வெளிவந்தவுடன் அவற்றை மீண்டும் கைவிடுவது ஆளும் வர்க்கத்துக்கு மிகக்கடினமானதாக இருக்கப்போகிறது.

 

அதேவேளை, நெருக்கடியின் விளைவாக, சில சமூகப்பிரிவினரின் மத்தியில் இனவாதம் வளர்ச்சியடைவதும், தீவிர வலதுசாரி தேசியவாதத்துக்கு சற்று ஆதரவு கூடுவதும் நடந்திருக்கிறது. சில நாடுகளில் இது ஒரு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கலாம், உதாரணமாக, போலந்து, ஹங்கேரி, மற்றும் ஏனைய சில நாடுகளில் வலதுசாரிகளால் தீவிர அதிகாரத்துவ ஒடுக்குமுறை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

 

இந்நிகழ்வுகள் யாவும் சர்வதேசிய அளவில் உழைக்கும் வர்க்கத்துக்கும், அதன் ஸ்தாபனங்களுக்கும் புதிய சவால்களையும், பணிகளையும் உண்டாக்கப் போகின்றன. தொழிலாளர்கள் உள்ளிட்ட முதலாளித்துவத்தால் சுரண்டப்படும் அனைவரது நலன்களுக்காகவும், போர்க்குணம் மிக்க தொழிற்சங்கங்களை கட்டியெழுப்ப வேண்டியது இதற்கு முன்பில்லாத அளவுக்கு அவசரத் தேவையாக உருவெடுத்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, உழைக்கும் வர்க்கத்திற்காகவும் ஏழைகளுக்காகவும் வெகுஜன கட்சிகளை கட்டுவதற்கு போராட வேண்டியதும், முதலாளித்துவத்துக்கு மாற்றாக சோஷலிசத்தை கொண்ட ஒரு புதிய சமூகத்தை உருவாக்க போராட வேண்டியதும் இதற்கு முன்பில்லாத அளவுக்கு மிக அவசரமான பணியாகும். போதிய மருத்துவ வசதிகளுக்காகவும், சுகாதாரத்துக்காகவும், குடிதண்ணீர் விநியோகம் வேண்டியும், ஏனைய பொது  சுகாதார பிரச்சனைகளையும் முன்வைத்து நடந்த போராட்டங்கள் யாவும் பல நாடுகளில் உழைக்கும் வர்க்கத்துக்கான வெகுஜன கட்சிகளை கட்டியமைப்பதில் மகத்தான பங்காற்றியிருக்கின்றன. இலங்கையில் முன்னாள் டிராஸ்கிய வெகுஜன கட்சியாக திகழ்ந்த ”லங்கா சம சமாஜ்ஜிய கட்சி” துவக்க காலத்தில் மலேரியாவுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டங்களின் மூலமாகவே தனக்கான வெகுஜன அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டது. அரசின் செயலற்ற நிலைக்கு ஒரு மாற்றுத்தீர்வு உண்டு என்பதையும், சோஷலிச மாற்றுத்தீர்வு என்பதன் பொருள் என்னவாக இருக்கும் என்பதையும் அக்கட்சி நிரூபித்துக் காட்டியது. இன்றைய கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியும் கூட காலப்போக்கில் முதலாளித்துவத்துக்கு சோஷலிச மாற்றுத்தீர்வின் மூலம் சவால்விடக்கூடிய கட்சிகளையும், ஸ்தாபனங்களையும் உலகம் முழுக்க கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பை பாட்டாளிவர்க்கத்துக்கு உருவாக்கக் கூடும்.