பிரக்சிட் நெருக்கடி- ஆளும் வர்க்கத்தால் தீர்வு இல்லை

டீலா நோ டீலா என்னும் டிவி ப்ரோக்ராம் போல இருக்கின்றது பிரித்தானியாவின் அரசியல்.முதலாளித்துவத்தின் தலையிடியாக இருக்கும் பிரக்சிட்  தற்பொழுது மூன்றாவது பிரதமரை தந்துவிட்டது.ஒக்டோபர் 31ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடும் எனக் கூறப்பட்ட நிலையில் 19 ஒக்டோபர்-சனிக்கிழமை நெருக்கடிக்கு மத்தியில் கூடியது பாராளுமன்றம்.அதில் பிரக்ஸிட் ஒப்பந்தத்தை அடுத்த வருடம் ஜனவரி 31 வரை ஒத்திவைப்பதற்கான தீர்மானத்துக்கு பிரித்தானிய எம்பிக்கள் ஆதரவளித்துள்ளனர். போரிஸ் ஜோன்சன் ஒப்பந்தத்தை விரைவு படுத்தும் படி ஐரோப்பிய ஒன்றியத்திடம் கூறியிருந்த நிலையில் இது அவருக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. தான் பிரக்சிட்டை பின் போடப்போவதில்லை என முடிந்த முடிவாக சொல்லிக் கொண்டு திரிந்தவருக்கு இது ஒரு தோல்விதான்.

மீண்டும் பேரம் பேசலின் மூலம் புதிய ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரியிருந்தார் போரிஸ்.ஒப்பந்தமா ஒட்டுமொத்த அறுப்பா என்னும் நிலையில் தனது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கலாம் என்பது போரிசின் நிலைப்பாடு.கதைப்பதை எல்லாம் உங்களின் பழைய பிரதமரிடம் கதைத்து விட்டோம் என்பது ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாடு. பிரித்தானிய முதலாளிகள் இந்த ஒப்பந்தத்தை புறங்கையால் ஒதுக்கித் தள்ளுகின்றனர்.பிரித்தானிய பாராளுமன்றத்தில் தற்போது நடக்கும் குடுமிப்பிடி சண்டை இங்கு உள்ள உழைக்கும் மக்களுக்கு சாதகமான ஒப்பந்தம் ஒன்றைகொண்டு வருவது என்பது பற்றி அல்ல.அது பிரித்தானிய முதலாளிகளின் நலனை எவ்வாறு மேலும் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றியதே ஆகும்.

ஐரோப்பிய பாராளுமன்றம் என்பது ஒரு தேசிய அரசு கிடையாது. இது ஒன்றிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது.உலகில் எல்லா பக்கங்களிலும் நடைபெறும் வர்த்தக போரில் இருந்து தமது சந்தையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது.அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது நடைபெறும் 5G தொழில்நுட்பம் சார்ந்த போட்டியை போல உலகின் அனைத்து பிராந்தியங்களுக்கும் இடையிலும் நாடுகளுக்கு இடையிலும் இந்த யுத்தமானது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. பிராந்தியத்தின் சந்தை பிடிமானத்தை வைத்து உலகத்தில் எல்லோரிடமும் தமக்கு சாதகமான பேரம் பேசுவதை நோக்கமாகக் கொண்டே இவர்கள் இயங்குகிறார்கள். இதுதான் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் நாங்கள் தனியாக இயங்கி இந்தப் பேரம் பேசலை செய்ய முடியும் என்பது நைய்ஜல் ப்பிரஜ் மற்றும் போரிஸ் ஜோன்சன் ஆகியோரின் நிலைப்பாடு ஆகும். இன்றைய சூழலில் இதற்குரிய சாத்தியப்பாடுகள் அதிகம். ஒன்றியத்தில் இருக்கின்ற சக்திவாய்ந்த நாடான ஜெர்மனி கூட ஒன்றியத்துக்கு வெளியே தனியாக பேரம் பேசலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கின்றது.

ஒன்றியத்தில் பலம் வாய்ந்த நாடுகளான ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்ற வாக்கெடுப்பு நடைபெறும் பட்சத்தில் அங்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது என்ற முடிவே வருவதற்கான சாத்தியக்கூறு இருக்கின்றது. அந்தளவுக்கு மக்கள் மத்தியில் ஒன்றியத்துக்கு ஆதரவு குறைந்து போய் உள்ளது. ஆனால் அவ்வாறான வாக்கெடுப்பை நடத்த இந்த நாடுகள் தயாராக இல்லை.ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருத்தல் என்பது அந்த நாடுகளில் பொருளாதார அரசியல் கொள்கைகளின் நீட்சியை சார்ந்தது ஆகும்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று பிரக்சிட் டீலுக்கு பெரும்பாலான ஆதரவு இல்லை.ஆனால் ஆட்சியை தக்க வைப்பதற்கு போரிசுக்கு ஆதரவு இருக்கின்றது. போரிசின் நோ டீல் பிரசிட்டை முன்னெடுப்பதுக்கு தொரேசா மே காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள்  தடையாக இருக்கின்றது. இதனை பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்ற முடியாது. இதன் அடிப்படையில்தான் கடந்த செப்டம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து அதற்கு வெளியில் இந்த டீலை முடிப்பதற்கு துடித்தார் போரிஸ் ஜோன்சன். ஆனால் அந்த ஒத்திவைப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மீளப்பெறப்பட்டது.

போரிசின் பிரக்சிட் தொடர்பான முன்னெடுப்புக்கு கன்செவேட்டிவ்  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் எதிர்ப்பு இருந்தாலும் ஆட்சியை தக்க வைப்பதற்கும், கொண்டு செல்வதற்கும் அவருக்கு ஏன் ஆதரவு வழங்கப் படுகின்றது?. அதற்கு ஒரே ஒரு காரணம் ஜெராமி கோபின். எக்காரணம் கொண்டும் கோர்பின் பொலிசி  அதிகாரத்திற்கு வந்து விடக் கூடாது என்பதில் பிரித்தானியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன. இன்று கன்சவேட்டிவ் பாட்டி ஒரு கட்சி அல்ல அது பல அணிகளாகப் பிரிந்து கிடக்கின்றது. ஆயினும் இவர்கள் மக்கள் சார்ந்த ஒரு நிகழ்ச்சி நிரல் அதிகாரத்துக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக ஓரணியில் இனைந்து நிற்கின்றார்கள். இவர்களிடம்தான் எமது உரிமைகளை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

தற்போதைய நிலையில் பொதுத் தேர்தல் என்பது தவிர்க்கமுடியாதது. இருந்தபோதும் தேர்தலுக்கு போவதற்கு யாருமே தயாரில்லாத நிலையில் வேறு வழியில்லாமல் டிசம்பர் 12 பொது தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.தேர்தல் நடைபெறும் பட்சத்தில் கோபின் வருவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். ஆயினும் போரிஸ் ஜோன்சன் அமெரிக்காவின் டொனால்ட் ரம்ப் போல  பொப்புலிஸ்ட் நிகழ்ச்சித் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். இதன் அடிப்படையில்தான் அகதிகளுக்கு வேலை செய்யும் உரிமை வழங்குவது, பொதுச்சேவைகளுக்கு பணம் வழங்குவது என்ற கருத்துக்களை முழங்கி வருகிறார். இவை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளதாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

பிராக்சிட்  பிரச்சனை தொடர்பாகவோ அல்லது பிரித்தானியாவின் அரசியல் தொடர்பாகவோ எந்த ஆழமும் தம்மைத் தாமே தமிழ் புத்திஜீவிகள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு இல்லை.அரசியல் போதாமைகள் இருக்கின்றது. உங்களுக்கும் நிஜ உலகிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.நீங்கள் சிறிய வைப்பு தொகையில் வீடுகள் வாங்கிய காலத்திலேயே நிற்கிறீர்கள். அதன் அடிப்படையிலேயே பிராக்சிட்டுக்கு ஆதரவாக வாக்களித்த மக்களை இனத்துவேசிகள் என்கிறீர்கள். நீங்கள் கற்பனையில் இருக்கும் உலகமல்ல தற்போது இருப்பது. பிரித்தானியா மாறிவிட்டது.

இங்கு 4. 5 மில்லியன் குழந்தைகள் வறுமையில் வாடுகிறார்கள் ,வீட்டு நெருக்கடி உச்சத்தில் இருக்கின்றது. இங்கு இருக்கும் தமிழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் அதிக நேரம் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்கின்றார்கள். இவர்களின் வேதனைகள் அதனால் ஏற்ப்படும் கோபம் பற்றியோ உங்களுக்கு ஏதாவது அக்கறை இருக்கிறதா? ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதால் மனித உரிமை சட்டங்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்றீர்கள். ஐரோப்பாவில் இருந்து இங்கு குடியேறியவர்கள் வெளியேற வேண்டியிருக்கும் என்றீர்கள். அவ்வாறு இல்லை என இங்கு இருக்கும் அனைத்து கட்சிகளும் சொல்லிவிட்டன. மனித உரிமை பற்றி கவலைப்படும் நீங்கள் இங்கு உள்ள சட்டங்களை கிழித்து எறிந்த தெரேசா மே  பக்கம் நின்று பலம் கூட்டியது ஏன்?. இது உங்களுக்கு முரணாகத் தெரியவில்லையா?

குறைந்தபட்சம் நோர்வே சுவீடன் போன்ற நாடுகளில் இருப்பதைப் போன்ற சட்டங்களா ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மனித உரிமைச் சட்டங்கள்.சட்டங்களை இயற்றும் இறையாண்மை நாடுகளுக்கு உண்டு இவற்றை இயற்ற விடாமல் தடுக்கும் முதலாளிகளின் மீது தானே எமது கோபம் திரும்ப வேண்டும்.

முதலில் கூறியது போல ஐரோப்பிய ஒன்றியம் என்பது ஒரு  அரசு கிடையாது. தேசிய அரசுகளின் அடிப்படையில் கட்டப்பட்டதும் கிடையாது. அது ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளின் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளின் நீட்சியே.இன்று பிரக்ஸிட்க்கு எதிராக கதைப்பவர்கள் பிரித்தானிய தேசிய அரசு உடைய வேண்டும் என்பதன் அடிப்படையிலா கதைக்கின்றீர்கள். மாறாக ஒன்றியத்தில் உள்ள முதலாளிகளின் சுரண்டல் சக்தி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அல்லவா கதைக்கின்றீர்கள்.இதை நாங்கள் எதிர்க்கின்றோம்.

பிரக்சிட்க்கு  ஆதரவு அளித்த மக்கள் அனைவரும் இனவாதிகள் என ஒதுக்கித் தள்ள முடியாது இதில் ஆங்கில தேசியவாதம் செல்வாக்குச் செலுத்தியது என்பது உண்மை.அது ஒரு காரணி மாத்திரமே தவிர அது மட்டுமே காரணமல்ல. பிரித்தானியாவில் உழைக்கும் மக்களின் மீதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், பொது சேவைகள் மற்றும் மக்கள் சலுகைகள் மீதான வெட்டுக்கள்,வேலையின்மை,வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன மக்களை விரக்தியில் தள்ளியுள்ளது. இது குடியேற்றவாசிகள் மீதான கோபமாக,அரச கட்டுமானத்துக்கு எதிரானதாக, வன்முறையை நோக்கியதாக இருக்கின்றது.அண்மையில் அதிகரித்த வன்முறைகளின் புள்ளிவிவரங்கள் இதையே காட்டுகின்றது.விரக்தியில் இருக்கும் மக்கள், அரசியல் மயப்படாமல் இருக்கின்றார்கள். இவர்கள் அரசியல் மயப்படுத்துவது  முக்கிய தேவையாக இருக்கின்றது. இதனால் தான் உலகம் முழுவதும் வலதுசாரி பொப்பிலிஸ்ட் தலைவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்கின்றார்கள். இது அவர்களின் கொள்கையின்பால் பட்ட ஆதரவு அல்ல. யாராவது ஏதாவது செய்ய மாட்டார்களா என்ற அங்கலாய்ப்பு பால்பட்டது. இதையே பிரித்தானியாவில் போரிஸ் ஜோன்சன் பயன்படுத்துகின்றார். இங்குள்ள முதலாளிகளின் நலனை பாதுகாத்து கொண்டு பொப்புலிஸ்ட் கருத்துக்களின் மூலம் தனது அரசியல் அதிகாரத்தை பலப்படுத்துவதே அவரின் நோக்கம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவின் இணைவு என்பது முதலாளிகளின் நலன் சார்ந்தது மாத்திரமே  அது தொழிலாளர்களின் நலன் சார்ந்தது அல்ல. அது இங்கு வேலைவாய்ப்பின்மையை உருவாக்குவதோடு தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்கும்  என இங்குள்ள போராட்ட தொழிற்சங்கமான RMT ஆரம்பத்தில் கூறியது.அதனாலே BOB CROW தலைமையில் NO To BOSS’S EU என்ற இயக்கத்தை உருவானது. அதையே நாங்கள் இப்பொழுது கூறுகின்றோம் NO TO Boss’s BREXIT.

நாம் தொடர்ந்து தொழிலாளர் நலனை பாதுகாக்கும் – ஒடுக்கப்படும் மக்களின் நலன்களை பாதுகாக்கும் ‘டீல்’க்காக குரல் கொடுக்க வேண்டும்.