பேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்

1,504 . Views .

2009 இல் நடந்த இனப்படுகொலையின் உச்சத்திற்கு பின்னர் 2010இல் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 58 சதவீத வாக்குகளை பெற்றார். ஸ்ரீலங்காவின் 22 தேர்தல் மாவட்டங்களில் தமிழ் பேசும் மக்கள் கணிசமாக வாழும் 6 மாவட்டங்களை விட மற்றைய 16 மாவட்டங்களிலும் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார். சிங்கள மக்களின் வாக்குகள் மட்டும் மஹிந்த ராஜபக்சவின் இந்த அமோக வெற்றிக்கு போதுமானதாக இருந்தது.

உதாரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் (ஐதேக) கோட்டை என்று வர்ணிக்கப்படும் கொழும்பு மாவட்டத்தில் 53 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார் ராஜபக்ச. மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன ‘பெரிய பேய்’ ராஜபக்சவினை ஆட்சியில் இருந்து அகற்ற போரை வழிநடத்திய இராணுவ தளபதி ‘சின்ன பேய்’ சரத் பொன்சேகாவிற்க்கு வாக்களிக்குமாறு தமது ‘சாணக்கிய மாந்திரீகங்களை’ உச்சரித்தனர். சாணக்கிய மாந்திரீகங்கள் பலிக்கவில்லை.

சற்றும் மனம்தளராத தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாணக்கிய பீடம் மீண்டும் ‘பெரிய பேய்’ இனை வீழ்த்த தயாராகியது. இம்முறை உள்நாட்டு மாந்திரீகம் மட்டுமல்ல வெளிநாட்டு மாந்திரீகமும் சாணக்கிய பீடத்திற்கு வலு சேர்த்தது. ஆனால் இம்முறை ‘சின்ன பேய்க்குப்’ பதிலாக ‘நல்லிணக்க பேய்’ மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டார். 2015 இல் நடைபெற்ற அந்த சனாதிபதி தேர்தலில் 51 சதவீத வாக்குகளை பெற்று மைத்திரிபலா சிறிசேனா வெற்றி பெற்றார். தமது உள்நாட்டு, வெளிநாட்டு சாணக்கிய மாந்திரீகத்தால் தான் ‘பெரிய பேய்’ மாளிகையில் இருந்து அகற்றப்பட்டதாக தமிழ் கூட்டமைப்பு நம்புகிறது. விளைவு இன்று தங்களை முழுமையான பேய் விரட்டிகளாக அவர்கள் நம்புகிறார்கள்.

 2010ஆம் ஆண்டு 16 தேர்தல் மாவட்டங்களில் முன்னிலை பெற்று 58 சதவீத வாக்குகளை பெற்ற மஹிந்த 2015 ஆம் ஆண்டு 10 தேர்தல் மாவட்டங்களில் மட்டும் முன்னிலை பெற்று 47 சதவீத வாக்குகளை பெற்று தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார். தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், 2010 தேர்தல் முடிவுகளோடு ஒப்பிடுகையில் அன்று முன்னிலை பெற்ற 16 தேர்தல் மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் பின்னடைவை சந்தித்து  பெரும்பான்மை மக்களின் 17 சதவீத வாக்குகளை இழந்தார். சிங்கள, தமிழ் முஸ்லீம் மக்கள் என அனைத்து மக்களும் இந்த so called நல்லிணக்க அரசிற்கு வாக்களித்திருந்தனர்.

 இந்த நல்லிணக்க அரசு தாம் ஆட்சிக்கு வந்தால் நடத்த இருக்கும் செயற்திட்டமாக ஒரு 100 நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்திருந்தார்கள். ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குளேயே அப்படியொரு திட்டத்திற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்கள் சனாதிபதியும், பிரதமரும். மக்களை ஏமாற்றும் இந்த அரசினையும், அவர்கள் கொண்டுவரும் மக்கள் விரோத திட்டங்களையும் எதிர்க்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவரும் அவரின் சகபாடிகளும் பாராளுமன்றில் ஆக்குரோச உரைகளை ஆற்றி விட்டு அயர்ந்து தூங்கினார்கள். ஸ்ரீலங்கா பாராளுமன்ற வரலாற்றில் அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களுக்கும் எதிர்க்கட்சி ஆதரித்து வாக்களித்த வரலாற்று சம்பவத்தினை அரங்கேற்றி வைத்தார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். அலரிமாளிகையில் இருந்து அகற்றப்பட்ட பேய் தனது பங்களாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாகவும் வளர்ந்து கொண்டிருந்தது. அதைக் கேட்பார் இருக்கவில்லை.

 மஹிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை நல்லிணக்க அரசு தொடர்ந்து செயற்படுத்திய போது எதிர்பாராத விதமாக அதற்கு எதிர்ப்பை மஹிந்த மாத்தையாவே செய்தார். அதற்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தினார். விடுவிக்கப்படாத போராளிகளுக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதாக நீலிக்கண்ணீர் விட்டார். நல்லிணக்க அரசு நாட்டினைக் கூறு போட்டு மேற்குலகிற்கும், அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் என விற்றுக்கொண்டு மக்கள் விரோத திட்டங்களை நடைமுறைபடுத்தினர். இதனால் பாதிக்கப்படும் மக்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தினர் மஹிந்த ராஜபக்ச. பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியும் பலமான ஓர் எதிர் கட்சியாக தனது புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவை கட்டமைத்தார். புதிய கட்சியுடன் உள்ளூராட்சி தேர்தலை சந்தித்த மஹிந்த எல்லா காட்சிகளையும் பின்தள்ளி முன்னிலை பெற்றார்.

மஹிந்த தரப்பும் அவர் குடும்பமும் அவர்கள் ஆட்சி காலத்தில் செய்த ஊழல், கொலைகள், கொள்ளைகள் போன்ற பல குற்றங்களுக்காக அவர்களை தண்டிக்க நல்லிணக்க அரசு முயற்சி செய்யவில்லை. போர் முடிவுக்கு வந்து 6 வருடங்களின் பின் ஆட்சிக்கு வந்த இந்த அரசு, சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளை முடக்க எந்தவித முயற்சிகளையும் எடுக்க இல்லை. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மேல் கட்டமைக்கப்பட்ட சிறீலங்கா அரசாகவே நல்லிணக்க அரசும் செயற்பட்டது.

அது பேரினவாதிகளையும், கொலைகாரர்களையும்,கொள்ளைக்காரர்களையும் பாதுகாத்து பௌத்த பேரினவாதத்துக்கு சேவை செய்தது. தொடர்ந்த முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை வேடிக்கை பார்த்தது நல்லிணக்க அரசு. நல்லிணக்கம் என்ற சொல்லை நக்கல் செய்வதாக இருந்தது அவர்தம் ஆட்சி.

இவை எல்லாம் நடைபெற்று கொண்டிருக்க, அடுத்த தீபாவளிக்கு தமிழ் மக்களுக்கு தீர்வு காண அரசியலமைப்பு சட்ட மாற்றத்தினை இந்த நல்லிணக்க அரசு கொண்டுவரும் என ஒவ்வொரு வருடமும் எதிர்வு கூறினார் எதிர்க்கட்சி தலைவர். அவருடைய சாத்திரங்களும் மந்திரங்களும் ஒருபோதும் பலிக்கவில்லை. அதைப்பற்றி யார் கவலைப்பட்டார். இறுதிவரையும் இந்த நல்லிணக்க அரசினை காப்பாற்றி வருவதில் மட்டும் குறியாக இருந்தது கூட்டமைப்பு. மஹிந்தவும் அவர் குடும்பமும் ஆட்சியில் இருந்து அக்கற்றப்பட்ட பின்னரும் பலம் பொருந்தியவர்களாக மீண்டு எழ அவர்களை தண்டிக்காமல் காப்பாற்றிய நல்லிணக்க அரசும் அதற்கு எதிராக செயற்படாமல் பாராளுமன்ற கதிரைகளில் உறங்கி கிடந்த எதிர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புமே காரணம் ஆகும். ஆம் பேய் விரட்டிகளுக்கு பேய்கள் இல்லாவிட்டால் பிழைப்பு ஏது.

இவ்வாறாக கதை நடந்து கொண்டிருக்க ‘பெரிய பேய்’ மீண்டும் அலரி மாளிகையில் குடியேறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டது. அந்த வித்தை எப்படி நடந்தது என எந்த விக்கிரமாதித்தனுக்கும் தெரியவில்லையாம். அவர்கள் இருந்த குளுகுளுப்பில் – கிடைத்த விசேட கமாண்டோ பாதுகாப்பில் மெய்மறந்து இருந்து விட்டார்கள். இனி என்ன மீண்டும் வேப்பிலை எடுப்பர். அதற்கு முண்டு குடுக்க கொஞ்சப் பேர் பிரதட்டைகள் செய்வர். மார்ச் மாதம் வந்தவுடன் ஐ நா வுக்கு அலறி அடித்து ஓடுவர். எந்தப் பேய் வந்தாலும் உங்கள் காட்டில் என்றும் மழைதான். பாவம் மக்கள் மட்டும் ஆடையின்றி வாடையில் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளராய் என்றும் கிடப்பர். அதை ஆமென்று கேட்டு அமைதியாய் கிடவாதீர். அனைத்து பேய்களுக்கும், பேய் விரட்டுவாருக்கும் சேர்த்து ஒன்றாய் ஒரு சமாதி கட்ட வேண்டிக் கிடக்கு வாரீர்…