வெள்ளை வேனில் கடத்தி முதலைக்கு  இரையாக்குவார்கள். சாட்சியங்களை  மூடி மறைத்த நல்லாட்சிகள்.

1,070 . Views .

இலங்கையில் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில்  வெள்ளை வான் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் கொலைகள்  நடந்திருக்கின்றன. இவ்வாறான செய்திகள் ஒன்றும் தமிழ் பேசும் மக்களுக்கு   புதிய விடயமல்ல. அவ்வாறான பாதிப்புக்களைக் கடந்து வந்த மக்கள் இப்போதும் பல சாட்சியங்களை வைத்து நீதிக்காக போராடிக் கொண்டிருக்குறார்கள் . அவ்வாறு இருக்கையில், இந்தக் கடதல் கொலைகள் எவ்வாறு நடந்துள்ளது என்பதை ‘நல்லாட்சி’ பதவியிலிருப்பவர்கள்  தேர்தல் காலங்களில் மட்டுமே  வெளிப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் கொழும்பில் அமைச்சர் ” ராஜித சேனாரட்னவின்” தலைமையில்  ஊடக சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அச்சந்திப்பில் கடத்தல்களில் ஈடுபட்ட சாட்சியாளர்களை அழைத்து வெள்ளைவேன் கடத்தல்களும், படுகொலைகளும்  கோத்தபாய தலைமையில்தான் நடை பெற்றன என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாட்சியங்கள்.

வெள்ளைவான்களில் சாரதியாக பணியாற்றியவர்களில் ஒருவரான அந்தோனி பெர்ணான்டோ மற்றும் கடத்தப்பட்டு விடுதலையான அத்துல மதநாயக்க ஆகியோர் கூறுகையில் வெள்ளை வான் கடத்தல்கள், மற்றும் சித்திரவதை முகாம்கள், சித்திரவதைகள், கோத்தபாய தலைமையில்தான் நடைபெற்றன என்பது வெளிவந்துள்ளது. தமக்குத்  தெரிந்தவரை 300 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என பல தகவல்களை அவர்கள் வெளியிட்டனர்.

மேலும் கூறுகையில், கடத்தல் தொடர்பில்  முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ‘கோத்தபாய’ தன் தலமையில் பிரிகேடியர் ஒருவருக்கும் மேஜர் ஒருவருக்கும் ஆலோசனை வழங்குவார். அவர்கள் அதை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள். கடத்துவதற்கு ஒரு வானும், மறைத்துவைத்து சித்திரவதை செய்வதற்கு மற்றுமொரு வானும் பயன்படுத்துவார்கள். கடத்தும் போது அடிக்கடி வானின் இலக்கத்தகடுகள் மாற்றப்படும்.

கடத்துவதற்கு பயன்படுத்திய வெள்ளை வான் ஒன்றில் சாரதியாகப் பணிபுரிந்தேன். கடத்துவதற்கு ஒரு குழுக்களும், சித்திரவதை செய்வதற்கு ஒரு குழுக்களும், கொலை செய்தவுடன் உடலை அகற்றுவதற்கு வேறு குழுக்களும் எனத் திட்டமிட்டு செய்வார்கள். கடத்தப்பட்ட நபர்களை விசாரணை செய்வார்கள், பற்களை பிடுங்குவார்கள், நகங்களை பிடுங்குவார்கள், கூரிய ஆயுதத்தால் தாக்கி சித்திரவதை செய்வார்கள். அதிகமானவர்களைச் சித்திரவதை செய்து கொல்வார்கள்.

கொலை செய்தவுடன் சடலத்தில் உள் உறுப்புகளை அகற்றிவிட்டு மொணராகலை – சீத்தாவக்கை காட்டுப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் போடுவார்கள். அந்த குளத்திலே 100 க்கும் அதிகமான முதலைகள் வாழ்கின்றன. இன்றும் கூட நீங்கள் அந்தக் குளத்தை சோதனையிட்டால் மனித எலும்புக் கூடுகள் கிடைக்கப்பெறும். நான் இவர்களுடன் இணைந்து செயற்பட்ட போது இருவர் இவ்வாறு கடத்தப்பட்டுக் கொலைச் செய்யப்பட்டனர் என அந்த சாரதி சாட்சியம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் இவ்வாறான கடத்தல்களுக்கு பொலிசார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுத்துறையாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் கூறினார்.

மற்றைய சாட்சியாளர் கூறியாவை வருமாறு

வன்னியிலிருந்து பிரபாகரனின் பணம் மற்றும் தங்கநகைகளை எடுத்து கொழும்புக்கு கொண்டு வந்து  நகைக் கடைகளுக்கு எடுத்துச் செல்வேன்.  நான் இப்போது கடத்தியது தவறு என ஒத்துக்கொள்கிறேன்.

இந்த விசயம் நீதிமன்றத்தின் முன் எடுத்துச் சென்றிருக்கவேண்டும். ஆனால் கடத்திவர்கள் இன்னும் நாட்டில் பதவியில் உள்ளார்கள். ஈழத்திலிருந்து கடத்திய பல பெறுமதிமிக்க சொத்துக்கள் கடத்துவதற்கு உத்தரவிட்டவர்களே பதுக்கி வைத்துள்ளார்கள் என அந்த சாட்சியாளர் கூறினார்.

தேர்தல் முடிந்தவுடன் இது தொடர்பான வழக்கு குற்றப்புலனாய்வு போலிஸாரினால் எடுத்துக் கொள்ளப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன அந்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். எதற்கு தேர்தல் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றோ –அலல்து இதுவரை இந்த குற்றவாளிகளை ஏன் தாம் காப்பாற்றி வந்தார்கள் என்றோ அவர் விளக்கவில்லை.

தற்போதய ‘நல்லாட்சி’யிலிருப்பவர்களுக்கு இந்த சாட்சிகள் எல்லாம் புதிய விடயமல்ல. பல சாட்சிகள் இருந்தும் மூடிமறைத்துவிட்டார்கள். கடந்த காலங்களில் காணாமலாக்கப்பட்டவர்கள் விபரம் பற்றி ரணிலிடம் கேட்ட போது, யுத்தத்தில் இறந்திருக்கலாம் அல்லது வெளிநாடு சென்றிருக்கலாம் என்று கூறி- மறப்போம், மன்னிப்போம் எனத் தெரிவித்திருந்தார்.

வெள்ளை வான் கடத்தல்களுக்குச் சாட்சிகளிருந்தும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காதிருந்தமைக்கு அரசாங்கமும் அதன் பங்காளியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்பு எடுக்க வேண்டும். ஆனால் அரசுடன் இணைந்து வேலை செய்து கூட்டமைப்பும் மக்களை ஏமாற்றி உள்ளார்கள். 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பலவகையான முறைப்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்கள் மக்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் அரசாங்கம் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டது.

இலங்கையில் பல இடங்களில் மறைமுக சித்திர வதைமுகாம்கள் இருந்தும் விசாரணை நடாத்தாமல் வருடங்களைக் கடத்திவிட்டனர். தேர்தல் காலங்களில் மட்டும் எதிர்த்தரப்புக்கள் செய்த மோசமான வேலையைச் சுட்டிக் காட்டுவார்கள். அதன்பின் ஆட்சியமைத்ததும் அவர்கள் நீதி நியாயம் மற்றும் மக்கள் நலன்களை மறந்துவிடுவார்கள். கோத்தபாய மற்றும் சஜீத் போன்ற இனவாதிகள் தமது தேர்தல் பிரச்சாரங்களில், நாட்டில் யுத்தக் குற்றம் செய்த இராணுவத்தை தாம் விசாரணைக்குட்படுத்த மாட்டோம் எனக் கூறி வருகின்றனர்.

இவ்வாறான குற்றம் புரிந்தவர்களும் குற்றத்தை மறைப்பவர்களும் நடத்தும் ஆட்சிக்காலத்தில் இலங்கை மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மக்களுக்கு விரோதமான சக்திகள் என்று தெரிந்தும், தமிழ்த்தலைமைகள் – குறிப்பாக தமிழரசுக்கட்சி அவர்களுடன் இணக்க அரசியலில் செய்வது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகத்தனமே.

போராட்டச் சக்திகளைப் பலப்படுத்தாமல் எமக்கான நீதி மட்டுமல்ல – எந்த அடிப்படை உரிமை கோரிக்கைக்கும் தீர்வு காணமுடியாது.