குறை தீமையும் தீமையே

தேர்தல்களின் போது மட்டும் மக்கள் ஒரு சொட்டு அதிகாரத்தை உணர்ந்தனுபவிக்க முடிகிறது. ஆனாலும் அவர்கள் தாம் விரும்பியதை அடைய முடியாத எல்லைகளைச் சந்திக்கிறார்கள். வழங்கப்படும் தேர்வு பெரும்பாலும் மக்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது. மக்களைப் படுகொலை செய்த கோதாபய ராஜபக்சவுக்கு அல்லது அந்தப் படுகொலை பற்றி பெருமைப்படும் சஜீத் பிரேமதாசவுக்கு வாக்களிக்க கோருவது ஒரு தேர்வா? யாருக்கும் வாக்களிக்க முடியாத நிலையையே மக்கள் எதிர்கொள்கிறார்கள்.

மக்களுக்கான சரியான தேர்வு வழங்கப்படாத சூழ்நிலையில்தான் அவர்கள் அடுத்த கட்ட- யார் குறைந்த தீமை என்ற பார்வை நோக்கி நகர்கிறார்கள். யார் கூடுதல் உரிமை தருவதாக சொல்கிறார்கள் – யார் குறைந்த தீமை செய்பவராக இருக்கிறார் என பார்ப்பது நிகழ்கிறது.

இது தவிர மக்கள் சில சமயங்களில் ஆபத்தான முடிவுகளை எடுக்க கூடாது எனவும் பயப்பிடுகிறார்கள். பல்வேறு நெருக்கடிகளுக்குள் தள்ளப்படும் போது ஒரு சில சிக்கல்களில் இருந்தாவது தம்மை விடுவிக்கும் தீவிர கருத்துள்ள தலைமை நோக்கித் தள்ளப் படுகிறார்கள். அதி தீவிர வலது சாரிகள் – மக்களின் நலன்கள் மேல் பல்வேறு தாக்குதல்களைச் செய்பவர்கள் -ஒரு சில பொபுலிச சுலோகங்களை முன் வைத்து இவ்வாறுதான் அதிகாரத்தை பிடிக்க முடிகிறது. அத்தகையோருக்கு ஒடுக்கப்படும் மக்கள் பற்றி எந்த அக்கறையும் இருப்பதில்லை. ஒட்டு மொத்த மக்களின் ஆதரவும் இருப்பதில்லை. ஆனால் சமூகத்தில் இருக்கும் பிளவை பாவித்து தம்மை நிலைநாட்டிக் கொள்கிறார்கள். கிட்லரில் இருந்து டிரம்ப் ஈறாக இவ்வாறுதான் அதிகாரத்துக்கு வந்தார்கள்.

மக்கள் தூர நோக்குப் பார்வையுடன் – ஆய்ந்து அறிந்த அறிதலுடன் வாக்குச் சாவடிகள் நோக்கிச் செல்வதில்லை. தமது அன்றாடப் பிரச்சினை மற்றும் தம்மை உலுப்பும் சமூக நெருக்கடிகளை தாங்கிக் கொண்டே செல்கிறார்கள். தேர்தலின் பின் என்ன நடக்கும் – அல்லது இன்னும் ஒரு பத்தாண்டுகளில் என்ன நடக்கும் என்பதை எல்லாம் ஆய்வு செய்து அவர்கள் வாக்களிக்க செல்வதில்லை. இது தவிர பலமான தேர்தல் பிரச்சாரங்களாலும் அவர்கள் பாதிக்கப் படுகிறார்கள். இதனால்தான் தேர்தல் என்பது மக்களின் முழுமையான பிரஞ்சாபூர்வ வெளிப்பாடு என கருத முடியாது என நாம் கூறுகிறோம். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் குறுக்கு வெட்டு முகமொன்றைத் தேர்தல் காட்ட முடியும். ஆனால் அதுவே மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளின் பிரதிபலிப்பு எனப் பார்ப்பது தவறு. தம்மைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் சில சமயங்களின் எந்தப் பேய்க்கும் வாக்கு வழங்கத் தயாராகி விடுகிறார்கள். இதைப் பாவித்து அதிகாரத்தைப் பெறும் அந்தப் பேய்களோ தாங்கள்தான் மக்களின் பிரதிநிதிகள் எனப் பொய் பேசியபடி மக்களின் மிஞ்சி இருக்கும் உரிமைகளையும் பறித்தெடுத்து விடுகிறார்கள். தெரியாத பிசாசுக்கு வாக்களிப்பதை விட தெரிந்த பேய்க்கு வாக்களியுங்கள் என தமிழ் மக்கள் மத்தியில் ராஜபக்ச 2015 தேர்தலின் போது பிரச்சாரங்கள் செய்ததை நாம் அறிவோம். அவர்களுக்கும் தெரியும். தம்மை மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை அறிந்த அவர்கள் தமது எதிராளிகளிலும், தாம் திறம் என்பதை நிறுவுவதில் மட்டும் கவனம் குவிக்கிறார்கள். மக்களும் எவர் குறைந்த தீமை செய்பவர் என பார்த்து வாக்களிக்கும் நிலைமைக்கு தள்ளப் படுகிறார்கள்.

இதில் என்ன தவறு என கேட்பாரும் உள்ளனர். பேயோ அல்லது பிசாசோதான் அதிகாரத்தை பிடிக்கப் போகிறது. வேறு யாருக்கும் அது சாத்தியமில்லை. ஆக வேறு சில்லறைகளுக்கு வாக்குப் போட்டு ஏன் வாக்கை வீண் செய்வான். எது ஆட்சிக்கு வரக் கூடாது என நினக்கிறோமோ அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அவர்கள் வாதிடுவர். இது தவறான பார்வை. இவ்வகை தற்காப்பு ஒருபோதும் மக்களின் நலன்களைக் காத்துக் கொண்ட வரலாறு இல்லை. தற்காப்பு என்பது மக்களை மேலும் பின்னோக்கி தள்ளுவதாக இருக்காமல் ஒரு படியாவது முன்னேற்றும் என்ற அடிப்படையில் ஒருவகை நியாயம் இருப்பதாக தோன்றலாம். ஆனால் இதில் உண்மை இல்லை. சந்திரிகா குமாரதுங்க முதற்கொண்டு சரத் பொன்சேகா ஈறாக – மற்றும் கடந்த தேர்தலில் ரணில்-மைத்திரி உட்பட இவ்வாறுதான் தமிழ் பேசும் மக்களின் ஆதரவைப் பெற்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆதரவை இதுவரை தக்க வைத்திருப்பதும் இவ்வாறே. இதனால் எவ்வாறு மக்கள் நிலைமை முன்னேறியது? மக்கள் தமது எதிர்பை பதிவு செய்கிறோம் என இன்னொரு கிடங்கில் விழக் கூடாது. 2004 தேர்தலில் நடந்தது அதுதான்.

குறைந்த தீமைக்கு வாக்கு வழங்க கோருபவர்கள் வைக்கும் முதன்மை வாதம் எமக்கு வேறு வழியில்லை என்பதே. அதே சமயம் அவர்கள் முன் வைக்கும் தேர்வுகள் அனைத்தும் வலது சாரிகள் மத்தியில் ஒன்றை தேர்ந்தெடுங்கள் என்பதாகவே இருப்பதையும் கவனிக்க. மக்கள் சார் கொள்கையுடன் ஒரு இடது சாரி அதிகாரத்தை பிடிக்கும் சந்தர்ப்பம் வரும்போது இந்த வாதம் முன் வைக்கப் படுவதில்லை. இங்கிலாந்தில் ஜெரேமி கோர்பின் அதிகாரத்தை பிடிக்கும் சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் அவரது இடதுசாரி – மக்கள் சார் கொள்கைகளால் அவருக்கு வாக்கு வழங்க வேண்டும் என – குறைந்தே தீமை வாதம் முன் வைக்கப் படுவதில்லை. எந்த பிசாசு ஆட்சிக்கு வந்தாலும் கோர்பின் வரக்கூடாது என்ற நிலையே அங்கு முன் வைக்கப் படுகிறது. மக்களுக்கு தீமை செய்பவர்களை தாண்டி மக்கள் தம் அபிலாசைகளை நகர்த்த கூடாது என்பதில் நல்ல கவனமாக இருக்கிறார்கள் வலது சாரிகள். மக்களின் தேர்வை தமது சொந்த வர்க்க நலன்களுக்கும் முடக்கிப் பராமரிப்பதே அவர்கள் நோக்கம். இதை விட மக்களுக்கு வேறு வழி இல்லையா? இதற்கு மாற்றாக சிலர் பகிஸ்கரிப்பை முன்னிறுத்துகிறார்கள்.

மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அது மக்களை சமகால அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைப்பதாக இருக்கிறது. யாருக்கும் வாக்களிக்க முடியாது என்பதால் ஒதுங்கிப் போய் விடுங்கள் என நாம் மக்களுக்கு சொல்ல முடியாது. அரசியல் தெளிவான மக்கள் ஒதுங்கிப் போவதால் – வலது சாரிய அடக்குமுறை சக்திகள்தான் மேலும் வலுப் பெறுகிறார்கள். தமக்கு எதிரானவர்கள் வாக்களிக்காவிட்டால் அதில் முதற் சந்தோசப்படுவது இந்த அதிகாரச் சக்திகளே. ரினிடாட் அண்ட் தபக்ககோ நாட்டில் நடந்த தேர்தலின் போது கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா என்ற கம்பனி செய்த வேலைகளைப் பார்ப்பவர்களுக்கு தெரியும் எவ்வாறு மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள் என.

‘மக்கள் முட்டாள்கள்’ என முடிவெடுத்த கம்பனி அவர்கள் எதிர்வினையாற்றுவதைக் குறி வைத்து ஒரு பிரச்சரத்தை ஆரம்பித்தது. ‘join the gang’ என்ற போராட்ட முறை நடவடிக்கைக்கு இளையோரை கவர அவர்கள் வேலை செய்தனர். இந்த ‘இயக்கத்தில்’ இணையுங்கள் ‘இதை செய்வோம்’ என்ற பிரச்சாரத்தை இளையோர் மத்தியில் பரப்பினர். இதை செய்யுங்கள் என அவர்கள் சொன்னது ‘வாக்களிக்க வேண்டாம்’ என்பதையே. ஏனெனில் இந்தக் கம்பனிக்கு காசு வழங்கிய வேட்பாளருக்கு இளையோர் மத்தியில் – குறிப்பாக ஆபிரிக்க இளையோர் மத்தியில் ஆதரவு இருக்கவில்லை. அவர்கள் வாக்கு வழங்கினால் இவர் வெல்லும் சாத்தியம் குறையும் என்பதால் அவர்களை வாக்களிக்காமல் இருக்கச் செய்ய இந்த நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்தனர். யாரும் தெரிவில்லை – அதனால் வக்களிகாதீர்கள் என்பதை – ‘இதைச் செய்வோம்’ (do so)  என்ற ‘முற்போக்கு’ பிரச்சாரமாக அவர்கள் பரப்பினர். அரசுக்கும் – அரசியலுக்கும் எதிர்ப்பு என்ற மாயைக்குள் வீழ்த்தப் பட்ட இளையோர் இறுதியில் தோற்கடிக்கப் பட்டனர். அவர்கள் எதிர்த்த வேட்பாளர் வெற்றி அடைந்து ஆட்சியைப் பிடித்தார். இதை தமது திட்டமிடலின் பெரும் வெற்றியாக தமது பிரச்சார சாதனங்களில் பயன்படுத்திப் பெருமைப் பட்டுக் கொண்டனர் இந்த கம்பனி உரிமையாளர். இந்த விசயங்கள் வெளியில் தெரிய வந்து பெரும் பிரச்சினைகள் நடந்து இந்தக் கம்பனி இன்று திவாலாகிப் போய் விட்டது. ஆனால் அங்கு உருவான ஆட்சி மாறவில்லை. இளையோர் எதிர்ப் பார்த்தது நடக்கவில்லை. வாக்கு வழங்காமல் இருப்பது யார் நலனை பலப்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இதற்காக வாக்கு வழங்காமல் இருப்பது எக்காலத்திலும் எமது நலனில் இல்லை என நாம் வாதிடவில்லை. புறக்கணிப்பு திட்டம் எப்போதும் குறுகிய எல்லைகலையே தொட்டு நிற்கிறது. புறக்கணிப்பு – என்பது தொழிலாளர், இளையோர், மற்றும் ஏனைய ஒடுக்கப்படுவோரின் தனிப்பட எழுச்சியுடன் இணையும் போது அதற்கு மேலதிக பலன்கள் இருக்கலாம். ஆனால் மேற்சொன்ன உதாரணத்தில் பார்த்தது போன்ற மேலோட்டமான ‘வெற்று’ பிரச்சாரத்தால் எமக்கு எந்த லாபமும் இல்லை.

யாருக்கும் வாக்கு வழங்கவும் முடியாது – அதே சமயம் வாக்களிக்காமல் இருப்பதும் தவறு – என்றால் என்னதான் செய்வது என்ற கேள்வி பலருக்கும் எழும். இங்குதான் அரசியற் தூரப் பார்வையின் அவசியத்தை நாம் வலியுருத்துகிறோம்.

குறுக்கு வழிகளால் எமது உரிமைகளை நாம் பெற்று விட முடியாது. ஒடுக்குமுறைகளுக்கு அடிபணிந்து – அதிகாரத்தின் சிறு சிறு சலுகைகளை மட்டும் குறிவைத்து – இயங்கி நாம் எமது உரிமைகளை வென்று விட முடியாது. ஒடுக்கப்படும் அனைத்து மக்களினதும் தனிப்பட்ட அதிகாரத்தை கட்டி எழுப்புவதை தவிர எமக்கு வேறு வழி இல்லை. தேர்தல் உட்பட எமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் அதற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்களை அரசியல் படுத்தவும் – மக்கள் நலன்களை முதன்மைப்படுத்தும் நகர்வுகளை முன்னெடுக்கவும் நாம் தொடர்ந்து இயங்க வேண்டும். தர்க்க முறை வாதங்களும் – முடிவெடுத்தலும் போதாது. சமூகத்தில் நிகழும் மாற்றம்/ நகர்வுகள் சார் அரசியல் மற்றும் சமூக விஞ்சான புரிதலில் இருந்து எமது திட்டமிடல் உருவாக வேண்டும். அந்த திட்டமிடலின் அடிப்படையில் தான் எமது தேர்தல் சார் நடவடிக்கைகள் பிரச்சாரங்கள் இருக்க வேண்டும்.

தேர்தல் சமயத்துக்கு என நாம் எமது கொள்கைகளை – கோரிக்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது. தேர்தல் அறிக்கைகளில் யார் யார் எமது கோரிக்கைகளை உள்வாங்குகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். எமது முடிவுகள் கொள்கை அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர ‘தனி நபர்கள்’ அலது ‘குறைந்த தீமை’ என்ற அடிப்படையில் குறுகிப் போய்விடக்கூடாது. நாம் தேர்தலில் நின்று – மக்கள் நலன்களை முதன்மைப் படுத்தும் கோரிக்கைகளை நோக்கி அவர்களை வென்றெடுக்க முயல வேண்டும். அனைத்துப் பிரச்சாரங்கள் – சிக்கலான அரசியல் நிலவரங்கள் எம்மை சிறுபான்மையாக நிறுத்தி வைத்திருப்பது –நிறைய வாக்கு எடுக்க முடியாமல் இருப்பது பற்றி நாமே கவலைப்பட்டுக் கொள்ள முடியாது. வாக்கு வங்கியை வளர்ப்பதை மட்டும் ஒற்றை நோக்காக கொண்டு இயங்காமல் – சரியான அரசியல் அடிப்படையில் மக்கள் வாக்கை பெருக்குவது பற்றியே நாம் சிந்திக்கிறோம். இவ்வாறு தேர்தலில் நிற்க முடியாத பொழுது எமது கொள்கைகளுக்கு சார்பானவர்களுடன் இணைவது எவ்வாறு என நாம் சிந்திக்கிறோம். அத்தகையோரோடு –ஒடுக்கப்படும் மக்கள் நலன் சார்ந்தவர்களோடு – ஒரு கூட்டாக இயங்குவது பற்றி சிந்திகிறோம். நாம் தனித்து போராடுவதில் குளிர் காய்பவர்கள் இல்லை. அதே சமயம் கொள்கைகளை சமரசம் செய்து இணக்க அரசியலில் நுழைய மறுப்பவர்களாகவும் இருக்கிறோம். இதனால் எமது நட்புச் சக்திகளை அரசியல் ரீதியாக அடையாள படுத்தி இணைக்க முயல்கிறோம். அதிகாரத்தை உடைப்பதும் – அதற்கு எதிரானவர்களை சரியான கொள்கை – திட்டமிடல் அடிப்படையில் இணைப்பதும் எமது நோக்கம்.

மக்களை சரியான போராட்டத்தை நோக்கி திருப்ப வேண்டும் என நினைப்பவர்கள் இந்த தூரப் பார்வை உள்ள நடவடிக்கைகளோடு இணைந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்படும் நாம் எமது பலத்தை தனிப்பட்ட முறையில் கட்டி நிமிர்த்தாமல் முழுமையான வெற்றி சாத்தியமில்லை. இதில் உடன்படுவோர் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.