ஐந்து முக்கிய தமிழ் கட்சிகள் இணைந்து பதின்மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி இடைக்கால ஒற்றையாட்சிக்கான அரசியலமைப்பை நிராகரிப்பது என்ற குறிப்பையாவது சேர்த்துக் கொள்ளவில்லை என்ற அடிப்படையில் மட்டும் இந்த உடன்படிக்கையில் இருந்து விலத்தி நிற்பதாகத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
தமிழ் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகள் ஒன்றும் புதியவை அல்ல. இக்கோரிக்கைகள் தமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினகான நிரந்தரத் தீர்வு சார்ந்த முழுமையான நிலைப்படும் இல்லை. இருப்பினும் இவற்றைக் கூட தெற்கின் முதலாளித்துவக் கட்சிகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை அல்லது சர்வதேச விசாரணை என்ற வார்த்தைகளை கோத்தபாய அல்லது சஜித் ஏற்றுக் கொள்வார்கள் ஏற்று எதிர்பார்ப்பது மிகத் தவறு.
அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக இந்தக் கோரிக்கைகளை கைவிட்டு விட முடியாது. மாறாக இக்கோரிக்கைகள் அடிப்படையில் அதை ஏற்றுக் கொள்வோர் அனைவரையும் ஒன்றுதிரட்டும் முயற்சியை இக்கட்சிகள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்களின் நலனுக்கு நேர்மையாக அரசியல் செய்வதாயின் இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொள்பவர்களுக்கு ஆதரவு வழங்கவும் அந்த அடிப்படையில் அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் ஓன்று திரட்டவும் இக்கட்சிகள் முன்வரவேண்டும்.
ஐக்கிய சோஷலிசக் கட்சி நீண்டகாலமாக இக்கோரிக்கைகளை முன்வைத்து வந்திருக்கிறது. ஐ.சோ.க சார்பாக சனாதிபத்தி தேர்தலில் போட்டி இடும் சிறிதுங்க ஜெயசூரிய இக்கோரிக்கைகளை உள்வாங்கிய தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலேயே தேர்தலில் நிற்கிறார். இக்கோரிக்கைகள் கூட போதாது என்பதைத் தவிர இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதில் எமக்கு எவ்வித தயக்கமும் இல்லை. இதேபோல் இக்கோரிக்கைகளுக்காக விடாது குரல் கொடுத்தும் போராடியும் வரும் எம்மை ஆதரிக்க இக்கட்சிகள் ஏன் முன்வரக்கூடாது?
அரசியல் கைதிகள் விடுதலைக்கான போராட்டங்களை ஒருங்கிணைப்பது முதற்கொண்டு காணிகளை விடுவித்தல் மற்றும் படையினர் வெளியேற்றம் ஈறாக ஐக்கிய சோஷலிச கட்சி உறுப்பினர்கள் முன்னணியில் நின்று வேலை செய்வது இக்கோரிக்கைக்ளில் கையெழுத்து வைத்திருக்கும் அனைவருக்கும் தெரியும். தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை சார்பாக நாம் கொண்டிருக்கும் கொள்கை நிலைப்படும் உங்களுக்கு தெரியும். நாம் தேர்தல் காலத்திற்கான கோரிக்கைகளாக இவற்றை பார்ப்பதில்லை என்பதும் இதற்கான தொடர் போராட்டங்களை செய்து வருகிறோம் – தொடர்ந்தும் செய்வோம் எனபத்தும் அறிவீர்கள். எமக்கான ஆதரவு என்பது மக்களின் போராட்டத்தை கட்டுவது சம்மந்தப் பட்டது.
இந்த அடிப்படையில் தமிழ் கட்சிகள் ஐ.சோ.க வேட்பாளருக்குத் தமது ஆதரவைத் தர வேண்டும் என கோரிக் கொள்கிறோம். அத்தோடு நிறுத்தாது ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை ஒருங்கிணைத்து கட்டுவதற்கு அவர்கள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
ஐக்கிய சோசலிசக் கட்சி
கட்சியின் வேட்பாளர்: சிறிதுங்க ஜெயசூரிய