போர் குற்றவாளி  பிரியங்கா பெர்னாண்டோ வழக்கும்,  லண்டன் போராட்டமும்.

2,861 . Views .

லண்டனில் கடந்த 2018ம் ஆண்டு இலங்கை தூதரகத்துக்கு முன் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தின் போது தூதரகத்துக்குள் இருந்து வெளியே வந்து கொலை அச்சுறுத்தல் விடுவித்த இலங்கை ராணுவ பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் கைது வாரண்டுக்கான வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அச்சுறுத்தல் விடுவித்த பெர்னான்டோ இலங்கைக்கு ஒளிச்சோடிச் சென்று உல்லாசமாக வாழ்கிறார்.

லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் 18-10-19 அன்று பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இருப்பினும் இதே நாளில் தீர்ப்பு வழங்கப்படுவது தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட மூன்று சாட்ச்சியாளர்களை மட்டும் விசாரணை செய்த நீதி மன்றம், மேலதிக விசாரனைகளைச்  19-11-19 அன்று செய்ய முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு சிக்கலான ஒரு வழக்கு அல்ல. வீடியோ, படம் என ஏராளமான ஆதாரங்கள் பிரிடிகேடியரின் கொலை மிரட்டலை பதிவு செய்துள்ளது. இருப்பினும் வழக்கு அரசியல் காரணத்தால் இழுத்தடிக்கப் படுகிறது. தமிழ் மக்களுக்கு மேலும் ஏமாற்றத்தை உருவாகியுள்ளது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் அங்கு செயற்பாட்டாளர்கள் கூடி போராட்டத்தை செய்து வருகிறார்கள். தமிழ் சொலிடாரிட்டி இந்த போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தமிழ் சொலிடாரிட்டி முன் வைக்கும் கோரிக்கைகள் பின்வருமாறு.

கோரிக்கைகள்:

#பிரிகேடியர் பெர்னாண்டோவிற்கு உடனடியாக பிடியாணையை வழங்கவும்.

 #போர்க்குற்றவாளிகளுக்கு ஆதரவு வழங்குவதை இங்கிலாந்து அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்.

 #இலங்கைக்கு வழங்கும் அனைத்து இராணுவ / பாதுகாப்பு உதவிகளையும் நிறுத்துங்கள்.

 #இலங்கைத் தூதரகமானது இங்கிலாந்தில் போராட்டத்தில் ஈடுபடுவோர் விபரங்களைத் திரட்டி வருகிறது. இது உடனடியாக நிறுத்தப் படவேண்டும். இதுவரை அவர்கள் சேர்த்த விபரங்கள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.

#போரடி கொண்டிருப்வர்களை அச்சுறுத்தி மிரட்டல்களை விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

எமது எதிர்ப்பைத் தெட்டத் தெளிவாக முன் வைக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என இந்த போராட்டத்தை ஒழுங்கமைத்த தமிழ் சொலிடாரிடி செயற்பாட்டாளர்கள் கூறினார்கள். எமக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்பதை நாம் உறுதியாக பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்கள்.

லண்டனில் தமிழ் பேசும் மக்கள் போராட்டங்களையும், புலம் பெயர் அமைப்புக்களின் செயல்பாடுகளையும் கண்காணித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல்களும் கொடுத்து வந்துள்ளார் பிரியங்கா பெர்னாண்டோ. இதற்காகவே அவர் இலங்கை அரசால் இங்கிலாந்து அனுப்பி வைக்கப்படுள்ளார். இவ்வாறான இனஅழிப்பு குற்றவாளிகளின் நடவடிக்கைகளை பிரித்தானியா அரசு எவ்வாறு அனுமதிக்கின்றது என்ற கேள்வியை மக்கள் முன் வைத்து வருகின்றனர்.

முன்பு இங்கிலாந்து நீதிமன்றம் அவருக்கு கைது வாரண்டை வழங்கியிருந்தது. இலங்கை அரசு இங்கிலாந்து அரசுடன் இணைந்து அந்தக் கைது வாரண்டை ரத்து செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்தது. டிப்லோமட்டுக்கு வழங்கும் தனி உரிமைகளை பாவித்து பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் சேர்ந்து இந்த யுத்தக் குற்றவாளியை காப்பாற்றும் வேலை செய்து வருகிறது இலங்கை அரசு. அது மட்டுமின்றி இலங்கை அரசாங்கம், இந்த ஜெனரலுக்கு கூடுதல் நிதி மற்றும் வசதிகளை வழங்கியதுயுள்ளது.  தண்டனைக்குப் பதில் வெகுமதி வழங்கும் வேலையே நடந்து வருகிறது. அறியப்பட்ட போர்க்குற்றவாளிகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் வேலையை செய்து வருகிறது இலங்கை அரசு. இதற்குப் பிரித்தானியா துணை போனால் புலம்பெயர் தேசத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கான நீதி யார் கையில்?

நாங்கள் ஒன்றிணைந்து ஒழுங்கமைத்து, குரல்களை எழுப்பி, எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாவிட்டால், எங்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை. இந்த வழக்கு தொடரும்வரை நாம் போரட்டங்களை நடத்தி எமது எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்வது மிக அவசியம். இந்தப் போராட்டங்களிள் தொடர்ந்து பங்கு பற்றும்படி அனைவரையும் நாம் கேட்டுக் கொள்கிறோம்.

தொடரும்

மதன்