ஊடகவியலாளர்களை வேட்டையாடுவதை உடனடியாக நிறுத்து –எதிர்ப்புக் கட்டும்படி ஐ.சோ.க கோரிக்கை.

ஆட்சிக்கு வந்து இரண்டு கிழமைக்குள் ஊடகவியலாளர்களைத் தாக்கும் வேலையில் இறங்கி விட்டது புதிய சனாதிபதி தலைமையிலான இலங்கை அரசு. பல இணையத்தள ஊடகவியலாளர்கள் இரகசியப் பொலிசாரால் அழைத்து விசாரிக்கப் பட்டுள்ளனர். VoiceTube என்ற இணையக் காணொளி தளத்தின் ஆசிரியர் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார். Dhanushka Sanjaya என்ற இணையத் தளத்தின் ஆசிரியர் எட்டு மணித்தியாலம் வரை தடுத்து வைக்கப் பட்டு விசாரிக்கப் பட்டுள்ளார். கடந்த 25ம் திகதி Newshub என்ற இணையத்தள ஊடக அலுவலகத்துக்குச் சென்ற இரகசியப் போலீசார் செல்லுபடியாகாத வாரண்டைக் காட்டி அலுவலகத்தில் தேடுதல் நடத்தி உள்ளனர். எழுநூறுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நாட்டை விட்டு வெளியேறும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

சுவிஸ்லாந்து தூதரகத்தில் வேலை செய்பவர் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப் பட்டு தகவல்கள் தரும் படி வற்புறுத்தப் பட்டுள்ளார். சமீபத்தில் யார் யார் சுவிஸ்லாந்தில் அகதிக் கோரிக்கை கோரி உள்ளனர் என்ற விபரங்களைத் தரும்படி அவர் வற்புறுத்தப் பட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவை தேர்தல் சமயத்திலும் அதற்கு முன்பும் எதிர்த்து பேசிய ஊடக வியலாளர்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகி உள்ளார்கள். ஊடக வியலார்களை பயமுறுத்தி மிரட்டல் வேலைகள் செய்வது ஊடக சுதந்திரம் – பேச்சு சுதந்திரம் ஆகியன மேலும் முடக்கப் படுவதற்கான சூல்நிலை உருவாக்கி வருவதையே காட்டுகிறது. தவிர தகவல் அறியும் உரிமைச் சட்டம் மாற்றப்பட்டு மக்கள் தகவல் அறியும் உரிமையும் மறுக்கப்படும் ஆபத்தே உருவாகி உள்ளது.

சுதந்திர விரும்பிகள் அனைவரும் இந்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்க முன் வரவேண்டும் என ஐக்கிய சோஷலிச கட்சி கேட்டுக் கொள்கிறது.
ஐக்கிய சோஷலிச கட்சி சார்பாக
சிறிதுங்க ஜெயசூரிய