கடப்பு 53ல் கவுண்ட தமிழ் டோரிகள்

1,213 . Views .

அந்தக் கட்சிக்கு பெயரே ‘ஒரு மாதிரி’. இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு திரிகிறார்களே – அதற்கு கொஞ்ச வாலுகள் ஆதரவும் இருக்கே -என எண்ணி ஆச்சரியப்பட வேண்டி இருக்கிறது.

பழமை வாதக் கட்சி – கன்சவேடிவ் கட்சி(டோரி கட்சி எனவும் அழைக்கப்படும்) – தனது பெயருக்கு ஏற்றமாதிரி இறந்த காலத்தில் வாழும் கட்சி. நடக்க இருக்கும் இங்கிலாந்துப் பொதுத் தேர்தலில் இந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் சொற்ப தமிழ் டோரிகள் ஒரு இக்கட்டுக்குள் மாட்டிக் கொண்டார்கள்.

இம்முறை கோர்பின் முன் வைத்திருக்கும் தேர்தல் அறிக்கையானது பல்வேறு சிறந்த கொள்கைகளுடன் முற்றிலும் மாறுபட்ட வெளிவிவகார உறவுமுறையையும் முன் வைத்துள்ளது. இலங்கை அரசுக்கு பாதுகாப்பு மற்றும் இராணுவ உதவிகள் வழங்குவதற்கு தாம் தடை விதிப்போம் எனவும் கோர்பின் தலைமையில் இயங்குவோர் சொல்லி உள்ளனர். இது தவிர இங்கிலாந்து வாழ் தமிழ் பேசும் மக்கள் முன் வைக்கும் அனைத்து முக்கிய கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்பவராக இருக்கிறார் அவர்.

கடந்த சனாதிபதி தேர்தலில் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து 13 கோரிக்கைகளை முன் வைத்ததும் அதை அனைத்து வலது சாரிய கட்சிகளும் ஏற்க மருத்திருந்ததும் நாம் அறிவோம். இடதுசாரிகள் மத்தியில் கூட சிறிதுங்க தலைமையிலான சோஷலிசக் கட்சி தவிர எந்த ஒரு கட்சியும் இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னுமொரு நாட்டில் – அதுவும் பலம் பொருந்திய மேற்குலக இங்கிலாந்தில் பிரதமராகும் வாய்ப்பு இருக்கும் ஒருவர் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்பவராக இருக்கிறார். அப்படி இருந்தும் சில தமிழ்த் ‘தேசிய செயற்பாட்டாளர்கள்’ அவரை ஆதரிக்கத் தயாரில்லை. தயவு செய்து இந்தப் போலித்தனத்தை விளங்கப் படுத்துங்கள்.

இந்த நடைமுறையை அரசியல் அடிப்படை இன்றி விளங்கிக் கொள்ள முடியாது. அந்த அரசியல் அடிப்படையைத்தான் நாம் ‘வர்க்க அரசியல்’ என சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம். இனம், மொழி, பால், சாதி எனப் பல அடையாளங்களைத் தாண்டி வர்க்க அடிப்படை வேலை செய்கிறது. முதலாளித்துவ அடிப்படை – மற்றும் ஒடுக்கப்படும் தொழிலாளர் அடிப்படை என இரு எதிர் தரப்புக்கள் மத்தியிலும் இது சாத்தியப் படுகிறது. லாப அடிப்படையில் இயங்குவார் – தமது சொந்த நலன்களை மட்டும் முதன்மைப்படுத்தி இயங்குவார் –தமது நட்புச் சக்திகளாக முதலாளித்துவ கட்சிகளை கருதுவதும் நெருக்கம் பாராட்டுவதும் இயற்கையாக நடக்கிறது. அந்த ‘இயற்கை உறவுக்கு’ பின் முதலாளித்துவ அமைப்பின் விதிமுறைகள் இயங்குகின்றன. இந்தச் சுயலநல – மக்கள் விரோத நடைமுறைகளை எதிர்போர் எதிர் நிலையில் நிற்கின்றனர் – அப்படி நிற்போரோடு நட்பை தேடுகின்றனர். தேசிய ஒடுக்குமுறைக்கும் – பல்வேறு தீவிர உரிமை மறுப்புகளுக்கும் உள்ளாக்கப்படும் சமூகம் போராட்ட அரசியலை நோக்கித் தள்ளப்படுவதால் அந்தச் சமூகத்தின் நம்பிக்கையை பெறுவது முதலாளித்துவ சக்திகளுக்கு கடினமாக இருக்கிறது. இதனால் தாமும் போராட்ட சக்தி எனவும் – தாமும் மக்கள் நலன் சார் அரசியலில் இருப்பதாகவும் அவர்கள் வேடங்களைத்து போட வேண்டி இருக்கிறது – பல்வேறு நடிப்புகள் நடிக்க வேண்டி இருக்கிறது. சமூகம் சார் விஞ்ஞானப் பார்வை உள்ளவர்கள் இதைத் தாண்டிப் பார்த்து விட முடியும். இத்தகைய வர்க்க அரசியலின் அடிப்படையில் தான் வலது சாரியத் தமிழ் தலைமைகள் எல்லாக் காலங்களிலும் சிங்கள மற்றும் ஏனைய வலதுசாரிகளோடு ஒன்றி விடுகிறார்கள். இதை இலகு படுத்திய முறையில் விளங்கிக் கொள்ளக் கூடாது. பலருக்கு தாம் என்ன செய்வது என தெரியாது தர்க்க அடிப்படையில்தான் இயங்குகிறார்கள். சிலர் தாம் செய்வது சரி என உண்மையில் நம்புகிறார்கள். தவிர அதிகாரம் சார் கவர்ச்சி – மற்றும் அதிகாரம் சாராது தீர்வு சாத்தியமில்லை என்ற தவறான பார்வை எனப் பல்வேறு காரணிகள் உண்டு. ஆனால் அடிப்படை வர்க்க உறவுமுறைதான் இந்த ‘இயற்கையாக’ நிகழ்வது போலிருக்கும் உறவுமுறைகளை தீர்மானிக்கிறது.

போராட்ட அரசியலை முன்னெடுப்பதாக சொல்லும் அமைப்புக்களுக்கு இம்முறை பிரித்தானியத் தேர்தலில் இலகுவான தெரிவு உண்டு. இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்து – அல்லது இங்கிலாந்து வாழ் மக்களின் நலன் சார்ந்து – என எவ்வகையில் பார்த்தாலும் கோர்பின் முன் வைக்கும் கொள்கைகள் முன்னணியில் நிற்கிறது. இதற்கு ஆதரவு வழங்காமல் இருக்க முடியுமா?

தமது சொந்த அரசியல் நலன்களை மட்டும் முன்னெடுப்போர் தங்களை மக்கள் நலன் சார்ந்தவர்களாக காட்டிக் கொள்வது இம்முறை சிரமமாகி விட்டது. தமிழ் டோரிகளுக்கு இம்முறை மக்கள் மத்தியில் ‘விற்பதற்கு’ எதுவும் கிடைக்கவில்லை. இம்முறை டோரி கட்சி முன்புபோல் பாசாங்குக்குக் கூட தமிழ் மக்கள் சார்பாக ஒரு கொள்கைகளையும் முன் வைக்கவில்லை. முன்பொரு காலத்தில் அவர்களின் பழைய தலைவர் டேவிட் கமரோன் யாழ்பாணம் சென்றார் என்றும் மகிந்தவுடன் கை குலுக்கவில்லை எனவும் பழைய பல்லவி ஒன்றை திரும்ப பாடுவதை தவிர அவர்களுக்கு பேசுவதற்கு வேறு எதுவும் இருக்கவில்லை. அந்த ‘பிற்போக்குப்’ பிரதமர் தான் சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சோகம் மாநாடு நடந்த பொழுது டேவிட் காமரோன் இலங்கை செல்லக் கூடாது என இங்கிலாந்தில் கடுமையான அழுத்தம் நடந்ததையும் அதை புறக்கணித்தே கமரோன் இலங்கை சென்றார் என்பதையும் மறைத்து இவர்கள் பெருமை பாரட்டுவதுபோல் பேசுவது கவலைக்கிடமானது. அந்தப் பழைய கதை மட்டும் எடுபடாது என்ற நிலையில் தமிழ் டோரிகள் புதிய ஒரு ஸ்டன்ட்டை கண்டு பிடித்தார்கள்.

தமிழ் மக்கள் ஆங்கிலப் புலமை போதாதவர்கள் என்ற கற்பனையுடன் அவர்கள் டோரிக் கட்சி தேர்தல் அறிக்கையை புதிய முறையில் வாசித்துக் காட்டினார்கள். அந்தத் தேர்தல் அறிக்கையின் 53வது பக்கத்தில் ஒரு பந்தியில் ஒரு வசனத்தில் இலங்கையும் குறிப்பிடப் பட்டிருந்தது. சில நாடுகளில் நடக்கும் புனரமைப்பு நடவடிக்கைகளை தாம் தொடர்ந்தும் ஆதரிப்போம் என்பதற்கு உதாரணமாக அவர்கள் சைப்ரஸ், இலங்கை ஆகிய நாடுகளைக் குறிப்பிட்டிருந்தார்கள். தாம் மத்திய கிழக்கு சார்பாக இரு தேச நிலைப்பாட்டை தொடர்வதாகவும் ஒரு புள்ளி அதே வசனத்தில் இணைக்கப் பட்டிருந்தது. நமது தமிழ் டோரிகளுக்கு அது போதும். இலங்கை அரசியல் சார்பாக பழமைவாத கட்சி இரு தேச நிலைப்பட்டை முன் வைக்கிறது என்ற ஒரு புரளியைக் கிளப்பி விட்டார்கள்.

ஒட்டுமொத்த மத்திய கிழக்குக்கும் எப்படி இரு தேசக் கொள்கை முன்வைக்க முடியும்? இஸ்ரேல் பாலஸ்தீன் என்ற பெயர்களை கூட உச்சரிக்க மறுக்கும் டோரிகள் அதைத்தான் அவ்வாறு சுருக்கமாக குறிப்பிட்டிருந்தார்கள். அது கூட பொய்தான். உண்மையில் டோரி கட்சி பாலஸ்தீனிய போராட்டத்தை ஆதரிப்பவர்கள் அல்ல. மாறாக இஸ்ரேல் அரசுடன் நெருக்கத்தைப் பாதுகாப்பவர்கள். அவர்களின் மத்திய கிழக்கு கொள்கை நிலைபாடு இஸ்ரேல் அரசோடு பின்னிப் பிணைந்தது. இங்கிலாந்தில் எந்தக் கவுன்சிலாவது இஸ்ரேல் பொருட்களை புறக்கணிப்பு செய்வதை ஆதரிக்குமாயின் தாம் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்பதையும் இணைத்ததுதான் தற்போதைய டோரிகளின் தேர்தல் அறிக்கை. ஆனால் தமிழ் டோரிகளுக்கு இது பற்றிக் கவலை இல்லை. பச்சையான ஒரு பொய்யைச் சொல்லி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டார்கள் அவர்கள்.

லண்டனை மத்தியமாக வைத்து இயங்கும் மிகச் சிலர் மட்டும் சேர்ந்து இயங்கும் அமைப்பான பிரித்தனியத் தமிழ் கன்சவேடிவ்கள் (British Tamil Conservatives(BTC)) என்ற சிறு அமைப்பு இந்தப் பிரச்சாரத்தைச் செய்தது. இதைத் தமிழ் இளையோர் இணையத் தளங்களில் கிண்டலடிக்கத் தொடங்கியதும் அவர்கள் தமது நிலைபாட்டை கொஞ்சம் மாற்றிக் கொண்டார்கள். எப்படி மாற்றி இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? இதோ எழுதுகிறார்கள் பாருங்கள்.

“பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சி (கன்சர்வேட்டிவ்) தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையை பிரிந்த நாடுகளுடன் ஒப்பிட்டு இரு தேச கோட்பாட்டை வலியுறுத்தியது.

…இலங்கையை இரு தேச கோட்பாடு கொண்ட சைப்பிரஸ் மற்றும் பாலஸ்தீனியத்துடன் ஒப்பிட்டுள்ளனர். பழமைவாதக் கட்சிக்கான பிரித்தானிய தமிழர்கள் (BTC) ஊடகத் தொடர்பாளர் இது பற்றி பேசுகையில், “இலங்கையை பாலஸ்தீனத்துடன் ஒப்பிடுவதன் மூலம் கட்சி மேலிடம் இவ்விடயத்தில் தாம் கொண்டுள்ள எண்ணப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.”

ஐயகோ..! எனத் தலையில் கை வைத்து அழாதீர்கள். எங்கு இந்த ஒப்பீடு உவமானம் எல்லாம் நடந்து இருக்கிறது என நீங்கள் கேட்கக் கூடாது. தமிழ் டோரி தலைகளுக்குள் மட்டுமே நடந்த அதிசயம் அது. டோரி கட்சி ஒரு ‘சர்வதேச பொறிமுறையை’ உருவாக்கும் ஆதரவை வழங்கி உள்ளது என்ற பொய்யுடன் இணைத்து மேற் சொன்ன திரிபையும் அவர்கள் பரப்புகின்றனர்.

பழமைவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இப்படி ஆங்கிலத்தை புதிய வாசிப்பு செய்கிறார்கள் என்ற மலைப்பு மாறமுதல் பிரித்தானியத் தமிழர் பேரவையும் இதை வாசிக்க திணறி இருக்கிறது என்ற விடயம் எமக்கு தெரிய வந்தது. என்ன எழுதி இருக்கு என விளக்கம் தெரியாமல் திணறி அவர்கள் இங்கிலாந்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மந்திரிகளை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார்கள். அவர்களும் பொறுமையாக தாம் எழுதிய ஆங்கிலத்தை இவர்களுக்கு விளங்கப் படுத்தி இருக்கிறார்கள். இது மொழி அறிவு சார்ந்த பிரச்சினை இல்லை என்பதை இங்கு நீங்கள் கவனிக்க வேண்டும். ஆங்கிலம் தெரியாதது ஒரு குறை இல்லை. மற்றும் இவர்கள் நல்ல ஆங்கிலப் புலமை உள்ளவர்கள். ஆனால் இது அரசியல் வாசிப்பு. வாசிக்க முடியாததை வாசிக்கத் திணறும் அவலம் இது. அரசியல் வங்கிறோத்து.

மேற்சொன்னதை பிரித்தானிய தமிழர் பேரவை தாம் விட்ட அறிக்கையில் தாமே குறிப்பிட்டிருந்தார்கள். இந்த அமைப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க பக்கம் 53ல் இருக்கும் பந்தி பற்றிய விளக்கத்தை பழமைவாத கட்சி சேர்மன் ச்குல்லி தெளிவாக எழுதி அனுப்பி உள்ளார். அந்த வசனம் இலங்கையில் இரு தேசத்தை ஆதரிப்பது அல்ல, மாறாக நடந்து கொண்டு இருக்கும் நல்லிணக்க புனர்வாழ்வை தொடர்ந்து ஆதரிப்பது மட்டுமே என்பதை தெளிவு படுத்தி உள்ளார். இலங்கை சனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் உட்பட ஒட்டுமொத்த அதிகாரத்தையும் ராஜபக்ச குடும்பம் தமது கையில் எடுத்த பிறகும் இலங்கை அரசின் செயற்பாடுகளை தொடர்ந்தும் ஆதரிப்பதுதான் தமது நிலைப்பாடு என அவர்கள் தெளிவு படுத்தி உள்ளார்கள் என்பதைக் கவனிக்க.

பி.த. பே யின் பல்வேறு முன்னணி உறுப்பினர்கள் டோரி கட்சி உறுப்பினர்கள் என்பது பலருக்கும் தெரியும் . ஆனால் எல்லோரும் அல்ல. இன்று பல உறுப்பினர்கள் நேரடியாகவே கோர்பினை ஆதரிக்க முன் வந்துள்ளனர். ஆனால் ஏன் அவர்களால் அத்தகைய முடிவை அமைப்பு சார்ந்து எடுக்க முடியவில்லை? தாம் ‘நடுநிலையில்’ இருப்பதாக அவர்கள் அறிவித்திருப்பது இன்னொருவகையில் வலது சாரியத்துக்கு ஆதரவான நிலைப்பாடாகவே இருக்கிறது.

எந்த ஒரு போராட்ட சக்தியும் ‘நடுநிலையில்’ இருக்க முடியாது. நடுநிலை என்பதை உச்சரிப்பவர்கள் வலதுசாரிகளே. தமது மக்கள் எதிர்ப்பு நிலைப்பாடு/நடைமுறைகளை மறைக்க அவர்கள் அச்சொல்லைப் பாவிக்கிறார்கள். கோர்பினை எவ்வாறு சிங்கள இனவாத அரச சக்திகள் எதிர்கின்றன எனப் பாருங்கள்.

கோர்பின் அரசு வந்த பிறகு அதனுடன் பேச வேண்டி இருக்கும் என்ற தயக்கம் அவர்களிடம் இல்லை. நாம் எல்லா அரசுடனும் பேசத் தயாராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடுநிலை எடுப்பது வெறும் போலித்தனம். கொள்கை அடிப்படையில் நிற்பதில் தயக்கம் தேவை இல்லை. பழமை வாதக் கட்சி அரசமைத்தாலும் ஏன் அவர்களுக்கு நாம் ஆதரவு தரவில்லை என அவர்களுக்கு தெரிய வேண்டும். தமிழ் மக்கள் நலன் சார் கொள்கைளை முன் வைக்க முடியாத கட்சி அதை எதிர் கொண்டுதான் ஆக வேண்டும். அவர்களுக்கு அதற்காக எதிர்ப்பு செய்தமைக்காக –அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் எம்மைப் பழிவாங்க கூடும் என்ற பயத்திலா நடுநிலைமை எடுக்கிறீர்கள்? அப்படியானால் அவர்களுக்கும் கோத்தாவுக்கும் என்ன வித்தியாசம்?

இத்தகைய நடுநிலை நிலைப்பாடு தமிழ் மக்கள் சார் நலன்களை காப்பாற்றும் நிலைப்பாடு அல்ல. மாறாக முதலாளித்துவ லாப நலன்களை காப்பாற்றும் நிலைப்பாடே. லொபி எனச் சொல்லி எவ்வவளவு மக்களின் காசு விரயம் செய்யப் படுகிறது. ஒரு பலமான அரசு இலங்கை அரசு மேல் ஒரு தடை கொண்டுவருவது செய்தால் அந்த லொபி செய்வார் எவ்வளவு மார் தட்டுவர். இன்று அப்படி ஒரு நிலைமை கோர்பின் மூலம் உருவாக வாய்ப்பு இருந்தும் நீங்கள் அதற்கு சார்பு நிலை எடுக்க மாட்டீர்கள் என்றால் அந்த அரசியல் நிலைப்பாடு என்ன? விளக்குங்கள்.

தமிழ் பேசும் மக்களை வேட்டை ஆடும் இலங்கை அரசு இது போன்ற நடுநிலை அரசியலைப் பார்த்து பயப்படப் போவதில்லை. உண்மையில் அவர்கள் அத்தகைய அரசியலை வரவேற்பார். இதற்கு பெயர் போராட்ட அரசியல் இல்லை. இத்தகைய போலி அரசியல் நடைமுறைகளை நாம் புறம் தள்ள வேண்டும். நாம் எமது கோரிக்கைகளை முன் தள்ளும் நட்புச் சக்திகளோடு ஒன்றிணைந்து எமது போராட்ட அரசியலைப் பலப்படுத்த முன்வரவேண்டும்.

-சேனன்