பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர் பிரியங்கா பெர்னாண்டோ இன்று(06/12/2019) வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
2018ல் தூதரகத்துக்கு முன் நடைபெற்ற போராட்டதில் போராட்டக்காரர்களை எதிர்கொண்டு பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ போராட்டக்காரர்களை கொலை செய்வதாக அச்சுறுத்திய சைகை ஒன்றைச் செய்தார். இலங்கை சுதந்திர தினம் என்று கூறப்படும் நாளை கருப்பு நாளாகக் குறிக்கும் வகையில் 2018 பெப்ரவரி மாதம் தமிழ் சொலிடாரிட்டி இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்த போராட்டத்தில், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
பிரிட்டன் மண்ணில் சாதாரண எதிர்ப்பாளர்களைக் கொலை செய்வதாக வெளிப்படையாக மிரட்டியதற்காக பெர்னாண்டோ முன்னர் இங்கிலாந்து நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். எவ்வாறாயினும், தெளிவான வீடியோ ஆதாரங்கள் வழங்கப்பட்ட போதிலும் அனைத்து உண்மைகளும் ஆராயப்படவில்லை என்று இலங்கை சார்பான சட்டக் குழு கூறியதால் இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தமது பிரிகேடியரை காப்பாற்றுவதற்கான செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டது. அவரது குடும்பத்திற்கு பணத்தை வழங்கியது மற்றும் அவரை காப்பாற்றுவதற்காக மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் சென்றது.
பிரிட்டன் வெளியுறவு அமைச்சும் இதில் ஈடுபட்டதுடன், இராஜதந்திர சிறப்புரிமையை மதிக்கும்படி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது. இருப்பினும், இன்றைய தீர்ப்பு அவர் இராஜதந்திர சிறப்புரிமையால் பாதுகாக்கப்படாது என்றும் அவர் செய்த செயலில் அவர் குற்றவாளி என்றும் தீர்ப்பளித்தது.
இலங்கை மற்றும் வலதுசாரி ஊடகங்கள் அனைத்து போராட்டக்காரர்களையும் “பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்த முயன்றன. 2009 ல் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த பிரிகேடியரைப் பாதுகாப்பதற்காக. தற்போதைய ஜனாதிபதி கோட்டபயா – இப்போது இந்த பிரிகேடியர் மற்றும் பல போர்க் குற்றவாளிகளை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.கோட்டபாயா இறுதிபோர் நடைபெற்ற போது பாதுகாப்பு செயலாளராக இருந்தவர்.
பிரிட்டனில் போராட்டக்காரர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய அளவுக்கு இருக்கும் இவர்கள் இலங்கையில் எது வேண்டுமானாலும் செய்வார்கள் குறிப்பாக அவர்களின் மனித உரிமை மீறலகளை எதிர்ப்பவர்களை என தமிழ்சொலிடாரிட்டி முன்பு சுட்டிக்காட்டியது.
இந்த போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான எதிர்ப்பைக் குறிக்கும் வகையில் விசாரணை நடத்தப்பட்ட ஒவ்வொரு முறையும் தமிழ் சொலிடாரிட்டி மற்றும் பிற செயற்பாட்டாளர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தனர். மேலும் இங்கிலாந்திலும் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க விடக்கூடாது என்று கோரியுள்ளனர்.
குற்றவாளி தீர்ப்பு வந்த போதிலும், போராட்டக்காரர்கள் வழங்கப்பட்ட தண்டனை குறித்து மகிழ்ச்சியடையவில்லை. இந்த பிரிகேடியருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் சொலிடாரிட்டி கோருகிறது. அவர் இலங்கைக்கு வெளியே காலடி எடுத்து வைக்கும் தருணத்தில் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இந்த குற்றத்திற்காக மட்டுமல்லாமல், 2009 ல் போரின் போது அவர் செய்த அனைத்து குற்றங்களுக்கும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அனைத்து போர்க்குற்றவாளிகளும் கட்டாயம் அடையாளம் காணப்பட வேண்டும். மற்றும் உலகில் எங்கும் பதவிகளை வகிக்க அனுமதிக்கக்கூடாது என்று தமிழ் சொலிடாரிட்டி கோருகின்றது.
போராட்டக்காரர்கள் இன்று நீதிமன்றத்திற்கு வெளியே கூடி நீதி, மனித உரிமைகள் மற்றும் அனைத்து ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தைத் தொடருவதாக உறுதியளித்தனர். எங்கள் உரிமைகளை வென்றெடுக்க நடாத்தும் போராட்டத்தில் இந்த வழக்கு ஒரு சிறிய, ஆனால் முக்கியமான வெற்றி மட்டுமே.