முள்ளிவாய்க்கால் பேரழிவும் போராட்டமும் கண்காட்சி

பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் பயங்கரத்தின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் உள்ள தமிழ் சமூகம் போரின் பயங்கரத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தெளிவாகத் தெரிகிறது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஒரு போர்க்குற்றவாளி கூட தண்டிக்கப்படவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விட்டது. தமது அன்புக்குரியவர்கள் காணாமல் போனமைக்கு எதிராக தாய்மார்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருவதுடன், பல அரசியல் கைதிகள் இன்னமும் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா  அரசாங்கம் போரில் இழந்தவர்களை நினைவுகூருவதைக் கூட தடை செய்கிறது. அத்தோடு  போராட்ட வரலாறுகள்  மற்றும் அரசால் மேற்கொள்ளப்பட்ட  படுகொலைககளின் வரலாறுகளை அழிக்கின்றது. 

இருப்பினும், இது புதிய தலைமுறை தமிழர்களை-இளையோர் அல்லது முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு பிறந்தவர்களை- உண்மையைத் தேடுவதிலிருந்தும் நீதிக்காகப் போராடுவதிலிருந்தும் தடுக்கப்போவது இல்லை. இந்த தலைமுறையினர் போரின் வடுக்களை சுமந்துகொண்டு அந்த போரின்  பின்விளைவுகளோடு  வளர்கிறார்கள். அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்தை ஏற்க மறுப்பது அவர்களின்  பலவிதமான வெளிப்பாடுகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த புதிய தலைமுறையிலிருந்து வெளிவரும் கலை மற்றும் இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில்  பெரும்பாலும் கடந்த கால பயங்கரங்கள்   அல்லது அதன்  பிரதிபலிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றன. சொலிடாரிடியின்  புரட்சிகர இளையோர் (YRS) என்று தங்களை அடையாளப்படுத்தும் இளம் ஆர்வலர்கள் இந்த புதிய தலைமுறையின் உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்தனர்.

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஒரு வாரத்தைக் குறிக்கும் வகையில் மே 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெற்ற இக்கண்காட்சியானது சாரங்கனால் ஒழுங்கமைக்கப்பட்டு ரித்திகா மற்றும் YRS யினரால் நடத்தப்பட்டது. அதில் புகைப்பட கலைஞர் அமரதாஸின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அது முள்ளிவாய்க்காலின் பயங்கரத்தின் தனித்துவமான காட்சிகளை கண்முன்கொண்டுவந்தது. மேலும் உலகளாவிய எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் விரிவான காட்சி பதிவுகள் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வில் ஒரு புதிய ஆவணப்படமும்  திரையிடப்பட்டது. புகைப்படக்கலைஞர் சபேசன் நிகழ்வுகள் பற்றிய தனது பார்வையை தனது படங்கள் மூலம் முன்வைத்தார். யுத்தம் எவ்வாறு தினசரி யதார்த்தமாக இருந்தது, குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களுக்கு அது  தொலைதூர விவகாரம் அல்ல, வரலாறு எவ்வாறு கடினமானது என்பதை விமர்சிக்கும் கலைப்படைப்பு மற்றும் வெகுஜன படுகொலை வரலாறுகளை மௌனமாக்கும் பாசாங்குத்தனம், என பல கருத்துக்கள் இந்த படைப்புகளில் காணக்கூடியதாக இருந்தது. எதிர்ப்பு இயக்கங்களை முன்னிலைப்படுத்தும் மற்றொரு புதிய ஆவணமும் காட்சிப்படுத்தப்பட்டது. “நோ ஃபயர் சோன்(No Fire Zone)” ஆவணப்படமும் கண்காட்சியின் போது பார்வைக்கு வைக்கப்பட்டது.

அந்த இரண்டு நாட்களில் கண்காட்சியை பார்வையிட்ட 300 பங்கேற்பாளர்களில் 2009 இல் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த தனிநபர்களும் பிரிட்டனில் போராட்டங்களில் பங்கேற்றவர்களும் அடங்குவர். பல இளம் பார்வையாளர்கள் கண்காட்சியை வெகுவாகப் பாராட்டினர். போரின் இறுதிக் கட்டத்தின் பயங்கரத்தை சித்தரிக்கும் “நோ ஃபையர் சோன்” புகைப்பட பகுதியில் இறுதி வாரத்தில் எவ்வாறு மக்கள் மீதான தாக்குதல்கள் கொடூரமாக்கப்படடன என்பது காட்சிப்படுத்தப்பட்டது. இந்தப்பகுதி சிறுவர்களுக்கு பார்வையிடுவதற்கு மறுக்கப்பட்டபோதும்  பல பார்வையாளர்கள் நிகழ்வுகளை நேரில் கண்டு அனுபவிப்பதற்காக விடாமுயற்சியுடன் இருந்தனர். போரின் கடைசிக் கட்டத்தில் வேறு உணவு எதுவும் கிடைக்காதபோது, மக்கள் சாப்பிட அரிசி கஞ்சியை   கலந்துகொண்ட அனைவருக்கும் ஒரு தமிழ் குடும்பம்  வழங்கியது. இச்செயல் இலங்கையிலும் புலம்பெயர் தமிழர்களிடையேயும் ஒரு பாரம்பரியமாக மாறியுள்ளது. இது பலரின் துன்பங்களை நினைவுகூரும் ஒரு வழியாகும். மே 12 ஆம் தேதி, கிழக்கு இலங்கையின் சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தை நிறுத்துவதற்கு சிறிலங்கா காவல்துறை பலவந்தமாகத் தலையிட்டு,  கஞ்சி வழங்கியவர்களைக்  கைது செய்து தடுப்பு காவலில் வைத்திருக்கின்றது. அதனையடுத்து, வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில் கஞ்சி விநியோகம் செய்வதற்கு கிழக்கில் உள்ள நீதிமன்றம் தடை விதித்தது. இந்த அடக்குமுறையானது, இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும்  நீதி மறுப்பை  அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவர்கள் அந்த மாதத்தை “வெற்றி மாதம்” என்று தொடர்ந்து விளம்பரப்படுத்தி, தமிழர்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலை போரை  பயங்கரவாத எதிர்ப்பு முயற்சி என்றும் “மீட்பு நடவடிக்கை” என்றும் கதை பரப்புகிறார்கள்.

இந்தக் கதையை மீறி, இந்தப் போலித்தனத்தையும், நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறையையும் அம்பலப்படுத்த புதிய தலைமுறை இளைஞர்கள் அணிதிரளுகிறார்கள். இலங்கை இராணுவத்திலும் அரசாங்கத்திலும் இருக்கும் அறியப்பட்ட போர்க்குற்றவாளிகளை இலக்காகக் கொண்டு இளைஞர்கள் தலைமையிலான ஒரு புதிய முயற்சியான Project Ahenam இன் காட்சிப் பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இக்கண்காட்சியில் தமிழ் சொலிடாரிட்டி உறுதுணையாக இருந்தது. அனைத்து அமைப்பாளர்களும் இப்பணியை ஆண்டுதோறும் தொடர வேண்டும் என்ற வலுவான விருப்பத்தை வெளிப்படுத்தினர். ஒரு புதிய தலைமுறை ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் பலதரப்பட்ட வெளிப்பாடுகளை ஒன்றிணைத்து இறந்தவர்களைக் கௌரவிப்பதற்காகவும், முக்கியமாக, உயிருடன் இருப்பவர்களுக்கான போராட்டத்தை உருவாக்குவதே அவர்களின் குறிக்கோள். இந்த நிகழ்வின் வெற்றியானது முக்கிய செயற்பாட்டாளர்களின் ஆதரவின் மூலம் சாத்தியமானது. மேலும் இந்த உதவிக்கு தமிழ் சொலிடாரிட்டி மற்றும் YRS நன்றி தெரிவிக்கின்றன. இத்தகைய ஆதரவு இந்த முக்கியமான திட்டத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவது மிகவும் முக்கியமானது.