தமிழ் சொலிடாரிட்டியின் “இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ” குறித்த தீர்மானம் -AGM 2024

தமிழ் சொலிடாரிட்டியின் ஆண்டுப் பொதுக்கூட்டம் கடந்த 2024 பிப்ரவரி 18ஆம் தேதி லண்டனில் நடைபெற்றது. அதில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றிய தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தமிழாக்கம்.

 எந்தவிதமான இனவாத அல்லது வலதுசாரி கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை.

தமிழர்களின் ஜனநாயகக் கோரிக்கைகளையோ அல்லது அனைத்து தொழிலாள வர்க்கத்தின் பரந்த நலன்களையோ   தென்பகுதி வலதுசாரி அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (UNP), சமகி ஜன பலவேகய (SJB), ஸ்ரீலங்கா பொதுஜனதா பெரமுனா (SLPP), மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆகியன   பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இந்த காட்சிகள் அனைத்தும்  இலங்கை வாழ் அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை சிதைக்கும்  தாக்குதலிலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) போன்ற சர்வாதிகார நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதிலும், நாட்டில் மிக சிறிய பகுதியாக இருக்கும்  செல்வந்தர்களுக்கு மட்டுமே சேவை செய்யும் பொருளாதாரத் திட்டங்களைப் பின்பற்றுவதிலும் ஒன்றுபட்டுள்ளனர். இவர்கள் எவரும் தமிழர்களின் தேசியக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை. ‘அதிகாரப் பகிர்வு’ எனப்படும் நடவடிக்கைகள் அல்லது 13வது திருத்தத்தின் பல்வேறு பகுதிகளை நடைமுறைப்படுத்துவது என்பது கூட அவர்களால் நிறைவேற்றப்படாது. தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதும், அதன் பின் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இந்த அமைப்புகளின் வரலாறாகும். இந்தக் கட்சிகளை நிராகரித்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அவற்றிற்கு எதிராக அணிதிரட்டச் செயல்பட வேண்டும்.

இடதுசாரி மாற்று என்று சொல்லப்படுவது சாத்தியமான மாற்று அல்ல.

இலங்கையின் தற்போதைய அரசியல் வெளியில் தேசிய மக்கள் சக்தி (NPP) ‘முற்போக்கு’ அல்லது இடது மாற்றாக முன்வைக்கப்படுவது, மக்களுக்கான மாற்று அல்ல. இவர்களின் நிலைப்பாடு அடிப்படையில் வலதுசாரிக் கட்சிகளின் பொருளாதாரத் திட்டத்தில் இருந்து வேறுபடுத்த முடியாதது. இலங்கையின் கொலைகார ஊழல் அரசால் அனைத்து ஜனநாயக போராட்ட்ங்களையும், ஆர்பாட்டங்களை நசுக்குவதற்காக இயற்றப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களை நீங்குவது குறித்து அவர்கள் வெளிப்படையாக மௌனமாக உள்ளனர். மேலும், தமிழர்களின் தேசியக் கோரிக்கைகள் தொடர்பில் மிகவும் கேவலமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். அத்தோடு வடக்கு, கிழக்கு இணைப்பு, 13வது திருத்தம் அல்லது தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில சிறப்பு அதிகாரங்களை அவர்கள் தொடந்து எதிர்க்கின்றனர். பௌத்த மதகுருமார்களுக்கும் சிங்கள மொழியின் ஆதிக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இலங்கை தேசியவாதத்தையே முன்னெடுக்கின்றார்கள். தமிழ் பேசும் மக்களின் தேசிய உரிமைகளுக்காகப் போராடிய தமிழர்கள் அத்தகைய நிலைப்பாட்டை ஆதரிக்க முடியாது

தமிழ் தலைவர்களுக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ தானாக ஆதரவு இல்லை.

அனைவருக்குமான ஜனநாயக உரிமைகளில் உறுதியாக நிற்கும், தமிழர்களுக்கான தேசிய உரிமைகளைக் கோரும் பொதுவான முற்போக்கு வேலைத்திட்டத்தில் உடன்படுவதற்கு துண்டு துண்டாக உடைந்து நிற்கும் தமிழ்த் தலைவர்கள் முன்வரப்போவதில்லை. தெளிவான வேலைத்திட்டமும் உத்தியும் இல்லாத ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் தமிழர்களின் போராட்டத்தை எந்த வகையிலும் முன்னெடுக்க மாட்டார். தற்போதுள்ள பிளவுகள் மற்றும் உட்கட்சி பூசல்களின் அடிப்படையில், தொலைநோக்கு வேலைத்திட்டத்துடன் ஒரு பொது வேட்பாளர் பற்றிய விவாதம் சாத்தியமில்லை. வரலாற்று ரீதியாக தேர்தல் வெற்றியைப் பெற்று, வரலாற்றில் முதன்முறையாக ஒரு தமிழ்த் தலைவரை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக்கிய வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு (VKR) நெருக்கமான ஒரு வேலைத்திட்டத்தை கூட யாரும் பரிந்துரைக்கவில்லை.

பொருளாதார வேலைத்திட்டங்களில், பெரும்பான்மையான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தெற்கில் உள்ள தமது வலதுசாரி சகாக்களுடன் அவர்களுக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். எவரும் மாற்றுத் திட்டத்தை முன்வைக்கவில்லை. தமிழ்த் தலைவர்கள் தமிழர்கள் என்பதற்காகவோ அல்லது தமிழ்த் தேசியக் கோரிக்கைகளை பேச்சளவில் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்காக தானாக ஆதரவு கொடுப்பது தவறு. அவர்களின் உறுதியான திட்டங்கள் மற்றும் செயல்களை நாம் ஆராய வேண்டும். எவரிடமும் விரிவான மாற்றுத் திட்டம் இல்லை. இலங்கைப் பாராளுமன்றத்தில் அவர்கள் வாக்களிக்கும் வரலாறும், கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்துடனான  கூட்டுச் செயற்பாடுகளும் தமிழ் மக்களின் அபிலாசைகளை  அவர்கள் காட்டிக் கொடுத்ததற்கான வரலாற்றுச் சான்றாக நிற்கின்றன.

தமிழ் சொலிடாரிட்டி ஒரு தொலைநோக்கு வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காண  விவாதத்தை  முன்னெடுக்க விரும்புகிறது. மற்றும் அத்தகைய திட்டத்தை வெளிப்படுத்த முன்வருபவர்களை  ஆதரிக்கவும், ஒத்துழைக்கவும், ஊக்குவிக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம். ஆனால் தமிழ் சொலிடாரிட்டி இனத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நிபந்தனை அற்ற   ஆதரவை வழங்க மறுக்கும்.

புறக்கணிப்பை நாங்கள் பரிந்துரைக்கிறோமா?

தமிழர்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க முடியாது என்பதை நாம் புறக்கணிப்பை வலியுறுத்த வேண்டும் என்று சொல்கிறோம் என அர்த்தப்படுத்தக்கூடாது. இந்த செயலற்ற நிலை விரக்தியைத்தான் அதிகரிக்கும், செயலற்ற தன்மையை ஊக்குவித்து, தமிழர்களை போராட்டத்தில் இருந்து விலத்தும் நடவடிக்கைய நாம் ஆதரிக்க முடியாது. தமிழ் வாக்குகள் இல்லாமை தெற்கில் இனவாத சக்திகளை பலப்படுத்தும். மாறாக, போராடும் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதை இலக்காகக் கொள்ள வேண்டும். இதன் பொருள், சரியான திட்டத்தை நோக்கி மக்களை அணிதிரட்டவும், அந்த அடித்தளத்தின் அடிப்படையில் ஒரு வெகுஜனக் கட்சியின் தேவையை பிரபலப்படுத்தவும் நாம் போராட வேண்டும்.

கிழக்கிலோ, மலையகத்திலோ அல்லது இடதுசாரிகளிலோ விதிவிலக்குகள் உள்ளதா?

கிழக்கிலும் மலையகத்திலும் செயற்படும் அனைத்துக் கட்சிகளும் தற்போது தென்னிலங்கைக் கட்சிகளின் துணைக் கட்சிகளாகச் செயற்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் அல்லது தமிழர்களின் பரந்த நலன்களைக் காட்டிலும் தமது சொந்த நலனுக்காகவே அனைத்துத் தேர்தல்களிலும் அரச சக்திகளுடன் இவர்கள் “ஒப்பந்தங்களை” செய்து கொள்கிறார்கள். இந்த விதிக்கு இலங்கையில் விதிவிலக்குகள் இல்லை. இதில் ஏதேனும் விதிவிலக்கைக் குறிப்பிட முடியுமானால், ஜனநாயக உரிமைகளுக்காக குறைந்தபட்சம் நிற்கத் தயாராக இருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) ஐ குறிப்பிட முடியும். தெற்கில் உள்ள சிலர் TNPF ஐ புலிகளின் பினாமி என்று தாக்குகிறார்கள். ஒரு நாடு, இரு தேசம் என்ற அவர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாக “உள்ளக சுயநிர்ணயம்”  என்பதை கோருகின்றார்கள். இவை குழப்பமான சொற்தொடர்கள், இதற்கு அதிகமாகச் சொன்னால் அரசு அவர்களைத் தாக்கக்கூடும் என்பதால், அவர்கள் இந்த  தெளிவற்ற மொழியைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. TNPF பல பொருளாதாரக் கொள்கைகளையும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயல்களையும் எதிர்க்கிறது. இருப்பினும், அவர்கள் ஒரு விரிவான திட்டத்தையும் உத்தியையும் முன்வைக்கவில்லை. மற்ற தமிழ்க் கட்சிகளைப் போலவே, அவர்களும் இந்திய அரசு மற்றும் மேற்கத்திய நிறுவனங்களைப் பற்றிய மாயைகளை உருவாக்கி, அவற்றை நம்புவது எப்படியாவது தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என்கிறார்கள். இலங்கையின் தெற்கிலும், தெற்காசியாவிலும், அதற்கு அப்பாலும் தங்களின் உண்மையான கூட்டாளிகள் யார் என்பதை அடையாளம் காணவும் அவர்கள் தவறிவிடுகிறார்கள். முக்கியமாக, அவர்களால் கிழக்கிலோ அல்லது மலைநாட்டிலோ தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த முடியவில்லை, வடக்கின் குறுகிய நடுத்தர வர்க்கத்துடன்  தங்களை மட்டுப்படுத்திக் கொள்கிறார்கள்.

இலங்கை மற்றும் தெற்காசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கூட்டணிகளைக் கட்டியெழுப்புவதற்கும், ஐக்கியப் போராட்டத்தை கட்டியெழுப்பக்கூடிய தொலைநோக்கு வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கும் ஒரு மூலோபாயம் உருவாக்கப்பட வேண்டும். இந்த பணி எளிதானது அல்ல என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். முக்கியமாக தெற்கில் இயங்கும் பல்வேறு இடதுசாரிக் கட்சிகள் குறிப்பாக தேசியப் பிரச்சினையில் தமிழர்கள் விரும்புவதை வழங்குவதில்லை. எவ்வாறாயினும், சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை ஏற்றுக்கொள்வதை உள்ளடக்கிய சரியான பொருளாதார மற்றும் ஜனநாயக வேலைத்திட்டத்திற்காக நிற்கத் தயாராக இருப்பவர்களுடன் ஒன்றிணைந்து அணிதிரள்வதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் நிற்பவர்களுடன் தமிழ் சொலிடாரிட்டி  தொடர்ந்து இயங்குகிறது. இந்த அடிப்படையில், தமிழ் சொலிடாரிட்டி கடந்த காலத்தில் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சிக்கு (USP) ஒத்துழைப்பை வழங்கியது. மற்றும் அவர்கள் முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளித்தது. USP குறைந்த வளங்களைக் கொண்டிருந்தாலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வேலை செய்கிறது. ஒவ்வொரு முக்கிய தருணத்திலும் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்று நிரூபித்த வரலாற்றை USP கொண்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு வேட்பாளராக சோசலிச கட்சியின் வேட்பாளரான சிறிதுங்க ஜயசூரிய இருந்ததால், தமிழ்த் தலைவர்களில் ஒரு பகுதியினர் அவருக்கு ஆதரவை வழங்கினர். பிரிந்து செல்லக்கூடிய  சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பது அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். நிச்சயமாக, அத்தகைய திட்டத்தை ஆதரிக்கும் இன்னும் சிலரும் உள்ளனர். ஆனால், அதில் உறுதியாக நின்று அதை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த யாரும் தயாராக இல்லை. மாறாக, அவர்கள் வாதிடுவதை எதிர்த்து நிற்கும் மற்ற கட்சிகளுக்கு ஒப்புதல் அளிக்கும் ஒரு சமரச நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இந்த திட்டமிடல் பிழையானது போராடும் மக்களின் ஒரு சுயாதீனமான வெகுஜன அமைப்பைக் கட்டியெழுப்புவதில் தாமதத்திற்கு பங்களித்துள்ளது.

குறைதீமை நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது.

ராஜபக்சே கூட  கடந்த தேர்தல்களில் தமிழர்கள் தெரியாத பிசாசை விட தெரிந்த பிசாசனா தன்னை  தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழர்களுக்கும், போராடும் அனைத்து மக்களுக்கும் கொடுக்கப்பட்ட தேர்வு உண்மையான தேர்வு அல்ல. பேய்க்கும் பிசாசுக்கும்  இடையே ஒன்றை தேர்ந்தெடுப்பது ஒரு தேர்வு அல்ல. எமது கையையோ அல்லது காலையோ  தியாகம் செய்ய வேண்டும் என முடிவெடுக்க வேண்டும் எம்மை நிபந்திப்பது என்ன நியாயம். அத்தகைய தேர்வு நியாயமற்றது. சரியான தெரிவுகளாக முன்வைக்கப்படாத அனைத்து தெரிவுகளையும் நாம் நிராகரிக்க வேண்டும். எனவே, எமது மக்களின்  கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை முன்னெடுப்பதற்கு – நமது சொந்த விருப்பத்தை – ஒரு சுயாதீனமான நிலையை உருவாக்குவதற்கு நாங்கள் போராடுகின்றோம் . இது எளிதான காரியம் அல்ல, ஆனால் இந்த நிலையில் சிறுபான்மையினராக இருந்தாலும் பலவீனமாக இருந்தாலும் பணி தொடர வேண்டும். நாம் எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாட்டை  சுய பலவீனம் மற்றும் வளங்கள் போதாமை என்பன தீர்மானிக்க கூடாது. அத்தகைய சக்தியைக் கட்டியெழுப்ப தேர்தல் உட்பட அனைத்து வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். தமிழ் சொலிடாரிட்டி இதுபோன்ற பணிகளைச் செய்ய விரும்பும் அனைவருடனும் ஒத்துழைக்க விரும்புகிறது.

தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு என்ன?

நாங்கள் USP உடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம், மேலும் ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்துமாறு அவர்களிடம் கேட்டுள்ளோம் (தயவுசெய்து திட்டத்தைப் பார்க்கவும்). எவ்வாறாயினும், இந்த திட்டத்துடன் ஒத்துப்போகக்கூடியவர்களுடன் நாங்கள் கலந்துரையாடல்களையும் அதிகபட்ச ஒத்துழைப்பையும் நாடுகிறோம்.