கரூரில் நடந்த கோர சம்பவத்திற்கு பிறகு..

கரூரில் நடந்த கோர சம்பவத்திற்கு பிறகு தமிழக அரசியல் வட்டத்தில் பேசுபொருளாக இருப்பது இன்றைக்கு இந்த விடயமே . இறந்த உயிர்களைப் பற்றிய ஒரு குறைந்த பட்ச கண்ணீர் அஞ்சலிகள் கூட கண்ணில் படவில்லை . அது விஜய் தரப்பாகட்டும்; எதிர் நிலையில் நின்று பேசுபவர்கள் ஆகட்டும் ; சமூக வலை தளத்தில் ஆகட்டும்; இது தான் தருணம் என்று மாற்றி மாற்றி கேளிக்கைகள் மூலம் அரசியல் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது .
எவ்வித அரசியல் பார்வையும் அற்ற ஒரு நடிகன் முழுக்க முழுக்க தனக்கு இருக்கும் ரசிகர்களை வைத்து தானும் ஒரு #SAVIOUR ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் அரசியலில் குதித்து வேடம் கட்டிக்கொண்டு இருந்த தருணத்தில் கரூர் சம்பவம் அவரது வேடத்தை , தலைமை பண்பை; அரசியல் அறிவீனத்தை படம் பிடித்துக் காட்டி உள்ளது . இது சமூக வலய தளங்களில் பேசு பொருளாகி இருப்பது போல் Conspiracy/ திட்டமிட்ட அரசின் செயல் / விஜய் யின் நர்சிஸ்டிக் குணம் என்றெல்லாம் கிடையது. எந்த வித திட்டமிடலின்மை ; Power ஐ காட்டுவதற்கான ஒத்திகை; பொறுப்பற்ற போக்கு இத்தகைய கொடூரத்தில் வந்து முடிந்துள்ளது. ஆளும்கட்சி தரப்போ , விஜய்யோ எதிர்பர்த்திராத ஒன்று இது . ஆனால் அந்த கூட்டத்தில் அசம்பாவிதம் நடக்க தொடங்கிய நொடியில் இருந்து மரணங்கள் நிகழ்ந்தது முதல் இன்று வரை இதை வைத்து ஒரு கேவலமான அரசியல் நடந்து கொண்டிருப்பது அப்பட்டம்.
இதில் விஜய் பக்கம் நின்றும் அரசு பக்கம் நின்றும் ஆளும் கட்சி எதிர் கட்சி பக்கம் நின்றும் பல narrations காண முடிகிறது . ஆனால் இவை பற்றியெல்லாம் பெரிய ஆச்சர்யம் இல்லை . தங்களின் அரசியலுக்கு அழகாக அனைவரும் கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி களம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள் . இதனால் இறந்த குடும்பங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஒரு பிரியோஜனம் இல்லை .
தமிழ்நாட்டின் ‘அரசியல்’ சிந்தனைகளில் ஆழமாக வேரூன்றியிருந்த காலகட்டங்கள் இருக்கத்தான் இருந்தது . சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம் போன்ற சிந்தனைகளின் அடித்தளத்தால் அரசியல் அமைப்புகள்/கட்சிகளால் கட்டப்பட்டன . ஆனால் காலப்போக்கில், அந்தச் சிந்தனைகளை “நபர்கள்” சார்ந்ததாக மாறியது . பெரியாரின் தீவிர வேர்களை, அவரைத் தொடர்ந்து வந்த தலைவர்களின் கவர்ச்சி மெதுவாக புதைத்துவிட்டது. அரசியல் ஒரு நிகழ்ச்சியாக மாறியது; இயக்கங்கள் ரசிகர் மன்றங்களாக மாறின.
இன்றைய ஜென் Z தலைமுறை அதைத்தான் மரபாக பெற்றுள்ளது. ஒரு இளைஞன் சிறு வயதிலிருந்தே அரசியலின் முகமாக பெரிய கட்-அவுட்கள், ரசிகர் மன்றங்கள், நாயக வழிபாடு ஆகியவற்றை பார்த்து வளர்கிறான் . அப்படி வளர்ந்தவனிடம் திடீரென சிந்தனை அரசியலை எதிர்பார்ப்பது எப்படி சாத்தியம்? பல தசாப்தங்களாக திரைப்பட அடிப்படையிலான மக்கள் கலாச்சாரம் அவர்களை அவர்களது உணர்ச்சிகளை ஒரு கூட்டு சமூக பார்வையாக பார்கும் பண்பில் இருந்து புறம் தள்ளி ஒரு தலைவன் வருவான் அவன் எல்லா வற்றையும் தீர்ப்பான் அவனே தீர்வு …. என்று சுருக்கி விட்டது.
இன்றைய தலைமுறை ஏன் இத்தகைய பிம்ப அரசியலை எளிதாக நம்பி போகிறார்கள்; ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை அவதானிக்க வேண்டும். இளைஞர்களுக்கு இன்றைய நிலைக்கு இருக்கும் அழுத்தங்கள் எண்ணற்றவை. கல்வியில்; வேலை வாய்ப்பில் ; சமூக தளத்தில் ; குடும்பத்தில் ; உறவுகளில் என்று எண்ணற்ற சிக்கல்களுக்கு மத்தியிலேயே வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது. வேலை இழப்பு, ஒப்பந்த வேலை, வெளிநாட்டுப் புலம்பெயர்வு அழுத்தம், மற்றும் எதிர்காலம் குறித்த குழப்பம் இப்படி அடிக்கிக் கொண்டு போகலாம் . கல்வி கல்வி என்று பிள்ளைகளை துரத்திப் பிடித்து வைத்தாலும் நிலையான வாழ்க்கை உறுதி கிடையாது. அரசியல்/ அரசியல் தலைவர்களில் நம்பிக்கை இல்லை. இந்நிலையில் உணர்ச்சி சார்ந்த விசுவாசம் இவர்களுக்கு ஒரு எளிய தஞ்சமாக மாறுகிறது.
அந்த மனநிலையில் ஒரு கவர்ச்சியான நபராக விஜய் தோன்றுகிறார். அவர் எந்தப் பெரிய அரசியல் மாற்றத்தையும் முன்வைக்காதிருந்தாலும், “நம்மை புரிந்துகொள்ளும் ஒருவன்” என்ற தோற்றத்தில் காணப்படுகிறார். அவரின் வார்த்தைகள் ஒரு பரிதாபமான உலகில் சிறிது ஆறுதலாக ஒலிக்கின்றன.
ஒருகாலத்தில் இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்கள் நேரடியாக ஏழை எளிய மக்கள்/ தொழிலாளர் வர்க்கத்தோடு இணைந்து பயணித்தனர் ஆனால் காலப்போக்கில், அவை மக்களின் வாழ்விலிருந்து, இளைஞர்களின் கால சூழலுக்கேற்ற வளர்ச்சிகளில் முனேற்றங்களில் இருந்து விலகியது .
இளைஞர்கள் இன்று இயக்கங்களுக்குப் பதிலாக திரைப்பட நட்சத்திரங்களிடம் மாற்றத்தை காண்கிறார்கள் / எதிர்பார்க்கிறார்கள் என்றால், அது அவர்களின் தோல்வி மட்டும் அல்ல; நம்முடையதும்தான். இடது சாரிகள் / முற்போக்காளர்கள் அவர்களோடு உரையாட / அவர்களை இத்தகைய அரசியல் பக்கம் ஈர்க்க தவறினோம், முக்கியமாக அவர்களின் மொழியிலும் அவர்களில் நவயுக வளர்ச்சிப் போக்கில் இருந்து அவர்களை அணுகுவது இல்லை / அரசியல் படுத்துவதில்லை . அவர்களின் ஆத்திரத்தை சமூகப் போராட்டத்தோடு இணைக்க முயற்சிக்கவில்லை ( அதற்கு சான்று கடந்த காலங்கலில் நடந்த பல போராட்டங்களை நாம் எப்படி அரசியல் மயமாக்காமல் கடந்து போனோம் என்று எண்ணிப்பார்தால் புரியும் ) .
இது தமிழ்நாட்டுக்கே மட்டும் அல்ல. உலகம் முழுவதும் ஜென் Z தலைமுறை ஒரு மாற்று அரசியலுக்கு தஞ்சமில்லாமல் தான் தவிக்கின்றது . மேற்கத்திய நாடுகளில் பழைய அரசியல் கட்சிகள் ஊழலாலும் பிரிவினையாலும் நம்பிக்கை இழந்துள்ளன. ஆசியா போன்ற பகுதிகளில் பொது மக்களின் விரக்தியில் இருந்து, சினிமா நட்சத்திரங்களும் இன்ஃப்ளூயன்சர்களும் “புதிய நம்பிக்கை” என்ற முகத்தில் எழுகின்றனர்.
இது இந்த சமூகத்தின் இந்த பொருளாதர கட்டமைப்பின் ஆழ்ந்த நெருக்கடியைக் காட்டுகிறது . உண்மையான ஜனநாயகம் வெளிப்புற வடிவமாக மட்டுமே மீதியாகியபோது, அரசியல் ஒரு காட்சியாக மாறுகிறது. மக்கள் அமைப்புகளை அல்ல, “ரட்சகரை” தேடத் தொடங்குகிறார்கள்.
இந்த ஜென் Z இளைஞர்களின்
ஆத்திரம், ஆற்றல், அமைதியின்மை இவை எல்லாம் பெரும் சக்திகள். அதை தனி நபர் / தலைவர் / கட்சி அரசியல்களுக்கு வீணாக்குவதை தடுத்து தத்துவர்த்தமான , மாற்றைத்தை நோக்கிய புரட்சிகரமான அரசியல் பாதை நோக்கி நகர்த்த வேண்டும்
ஒவ்வொரு தலைமுறையும் அதை உருவாக்கிய சமூகத்தின் பிரதிபலிப்பு. இன்றைய இளைஞர்கள் நாயக வழிபாட்டில் சிக்கியிருக்கிறார்கள் என்றால், அது அவர்களின் வெற்றிடமல்ல … நம்முடைய வழிகாட்டல் முறைகளின் தோல்வியே காரணம்.
இடதுசாரி இயக்கங்களின் பணி இன்று வெறும் பிரபல அரசியலை எதிர்ப்பது அல்ல; புதிதாக அரசியல் பொதிமுறைகளை மீண்டும் கட்டியெழுப்புவது.இந்த இளைஞர்களை குறைசொல்லுவதற்குப் பதிலாக, அவர்களை அரசியல் படுத்த முன்வர வேண்டும். அது வெறும் போதிப்பது/ ஒற்றை மாநாடு நடத்துவது , சமூக வலைதள சண்டைகள் மூலமல்ல ! உரையாடல், வாசிப்பு, கூட்டு செயல்பாடு, அரசியல் மயப்படுத்தல் , மக்கள் போராட்டங்களை கையிலெடுத்தல் ஆகியவற்றின் வழியே மட்டுமே சாத்தியம்.
– பொதுவுடைமை இயக்கம்